
காலையில் கண் விழித்ததும் அறையை விட்டு வெளியே வந்து பால்கனியில் நின்று பார்வையை சுழற்றினால் எங்கெங்கும் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போல வீடுகள், வீடுகள், மேலும் மேலும் வீடுகள். கான்க்ரீட் காடுகளில் இருந்து கொண்டு பழைய நினைவுகளைப் பற்றிய கனவுலகில் சஞ்சரிக்கத்தான் முடிகிறது.
காலையில் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் மரம் செடி கொடிகளைப் பார்க்கலாம் என்றால் இந்த நகர வாழ்க்கையில் முடிவதில்லை. பால்கனியில் வைத்துள்ள பூந்தொட்டிகளில் உள்ள சின்னஞ்சிறு செடிகளை பார்த்தே மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பெரும்பாலான தினங்களில் நெய்வேலியில் வாழ்ந்த இனிய வாழ்க்கை நினைவில் வராமல் இருப்பதில்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணியாளர்களுக்கான தனித்தனி குடியிருப்புகள் – ஒவ்வொரு வீட்டிற்கும் தனியாக தோட்டம். காலையில் வெளியே வந்தால் சில்லென்று முகத்தில் படும் வேப்ப மரக்காற்று, காதுக்கு இனிமை தரும் குயில்,மைனா,மற்றும் சிட்டுக் குருவிகளின் இனிய சத்தங்கள் என ரம்மியமான விடியல் ஒவ்வொரு நாளும்.
தோட்டத்தில் பங்கனபள்ளி, ஜலால், ஒட்டு மாம்பழம் என ஆறு விதமான மாமரங்கள், பலா, எலுமிச்சை, அறிநெல்லிக்காய், வாழை, முருங்கை, புளிய மரம், வேப்ப மரம், கல்யாண முருங்கை ,சீதாப் பழம்,மாதுளை என விதவிதமான மரங்கள் செடிகள். வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டது போக மீதி எல்லா பழங்களும் தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் வினியோகம். விலைக்கு விற்பதில்லை.
வீட்டின் வராந்தாவிலிருந்து வாசல் வரை ஒற்றை மல்லி, அடுக்கு மல்லி, முல்லை, கனகாம்பரம், டிசம்பர் பூ என விதவிதமாக பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசம்.
வீட்டில் இருக்கும் பெண்கள் சூடிக்கொண்டது போக மீதமிருக்கும் மல்லிகைப் பூவினை என் அம்மா அழகாகத் தொடுத்து வைத்து பக்கத்திலிருக்கும் என்.எல்.சி. பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளின் கூந்தலைப் பார்த்தவாறு காத்திருப்பார். எந்தச் சிறுமி தலையில் பூ வைக்காமல் செல்கிறதோ அதை அழைத்து பூவைக் கொடுத்து கூடவே கூந்தலில் சூடிக்கொள்ள ஹேர்பின் வேறு தருவார்.
இப்போது தில்லியில் மல்லிகை என்ற பெயரில் வெள்ளை நிறத்தில் வாசமில்லா ஒரு மலர் தருகிறார்கள். கைவிரல் அளவுள்ள ஒரு துண்டு பூவின் விலை 10 ரூபாய்.
”பசுமை நிறைந்த நினைவுகளே!..” என்று பாடி மனதைத் தேற்றிக் கொள்ளதான் வேண்டும். வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை!