சனி, 18 செப்டம்பர், 2010

அந்த இரண்டு பேர்


“ஐயோ அம்மா யாராவது காப்பாத்துங்களேன்... பக்கத்திலேயே நிறைய பேச்சுக்குரல்கள் கேட்கிறதே, ஆனாலும் யாருக்கும் என்னோட குரல் கேட்கலையா என்ன?” வலியோடு அரற்றினான் கோபி.

என்ன நடந்தது எனக்கு? ஆட்டோவில் சக ஓட்டுனர் மாரியுடன் முன்னால் உட்கார்ந்து சவாரி ஏற்றிக்கொண்டு வந்தோம். எதிரே அசுர வேகத்தில் வந்த பேருந்துடன் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது ஆட்டோ. அதன் பிறகு நடந்தது நினைவில் இல்லை. எத்தனை நேரமாக இந்த இடத்தில் கிடக்கிறோம்? தெரியவில்லை. வெளியே பேச்சுக்குரல்கள்….

“என்னவொரு கோரமான விபத்துப்பா? ஆட்டோ முற்றிலும் உருத்தெரியாமல் மாறிவிட்டது. டிரைவர் மாரிக்கு உடம்பு, தலை முழுவதும் அடிபட்டு ரத்தம் ஆறாய் ஓடிச்சுப்பா. பின்னால் உட்கார்ந்திருந்த இரு பயணிகளுக்கும் பலத்த அடி. நல்ல வேளையா பின்னாலே வந்த ஒரு ஜீப்பில் அடிபட்டவங்களை மருத்துவமனைக்கு அழைச்சுக்கிட்டு போயிருக்காங்க.”

யாரோ பேசியது முதலில் அவனுக்குக் கேட்டது. இப்போது ஒரு சில குரல்களே கேட்டது. ஒவ்வொருவராக அங்கிருந்து விலகிச் செல்கின்றனர் போலும். ஆனால் யாருக்குமே அவனின் முனகல் சத்தம் கேட்கவில்லையா? “யாருங்க அங்கே, இங்க பாருங்க, என்னைக் காப்பாத்துங்க!” சற்று முயன்று குரலை உயர்த்தி சொல்லிப் பார்த்தான் கோபி.

வெளியேயிருந்து, “சரிடா கிளம்பு, நானும் வீட்டுக்கு போய் அலுவலகத்துக் கிளம்பணும்!” என்று சொல்லும் ஓசை.

”ஏன் நம்ம குரல் கேட்கவில்லை இவர்களுக்கு?” கழுத்தில் கையை வைத்துக்கொண்டு கடைசி முயற்சியாய் “என்னைக் காப்பாத்துங்க!” என்று அலறியபடி சாய்ந்தான்.

"என்னைக் காப்பாத்துங்க!”--குரல் கேட்டு கிளம்பிய இருவரும் நின்றனர். சுற்று முற்றும் பார்த்தால் ஒருவரும் இல்லை. ஒருவேளை பிரமையோ? இல்லை “காப்பாத்துங்க! என்ற ஈனஸ்வரம் கேட்டதே. பக்கத்திலே உள்ள பள்ளத்தில் சலசலப்பு. உள்ளே பார்த்தால் செடிகளுக்கிடையே ரத்த வெள்ளம். கிடுகிடுவென கீழே இறங்கி பார்த்தால் கழுத்திலிருந்து தலை பாதி அளவு துண்டித்த நிலையில் காக்கி உடையிலிருந்த கோபி.

அவனிடமிருந்து மெலிதாக ஸ்வாசம் வந்து கொண்டு இருந்தது. வெளியே கொண்டு வந்து அந்த வழியே வந்த அடுத்த வாகனத்தில் போட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஒரு வார கடும் முயற்சிக்குப் பிறகு பிழைத்தெழுந்த கோபி, தனக்கு உயிர் கொடுத்த அந்த இரண்டு நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறிக் கொண்டு இருந்தான்.

இந்த நிகழ்ச்சி நெய்வேலியில் பல வருடங்கள் முன்பு உண்மையாக நடந்த ஒன்று. இன்றும் கோபி நெய்வேலியில் ஆட்டோ ஓட்டி தன்னுடைய குடும்பத்தினைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.

18 கருத்துகள்:

  1. மனித நேயம் செத்துவிடவில்லை என்பதற்கு அடையாளம். அருமை தல!

    பதிலளிநீக்கு
  2. இன்னும் ஈரமான இதயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கத்தான் செய்கின்றன. வழமைபோல அருமையான பகிர்வு!

    பதிலளிநீக்கு
  3. நிஜமா குலை நடுங்குது.. நல்ல வேளை.. அவருக்கு ஆயுசு கெட்டி.

    பதிலளிநீக்கு
  4. நினைக்கவே பயங்கரமா இருக்கு.. காப்பாத்தினவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்...

    பதிலளிநீக்கு
  5. தங்க நேரம் எனப்படும் அந்த நேரத்தில் செய்யப்படும் உதவி எவ்வளவு முக்கியமானது

    பதிலளிநீக்கு
  6. நெகிழ்வான பதிவு. வலைச்சர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அந்த இரண்டு நபர்களின் உதவி மிகவும் போற்றுவதற்கு உரியது.

    பதிலளிநீக்கு
  8. ஒரு ஓட்டுனர் இருக்கையில் இரு ஓட்டுனர்கள். அசுர வேகத்தில் ஓட்டும் பேருந்து ஓட்டுனர்கள். பெரும்பான்மையான விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.

    பதிலளிநீக்கு
  9. இரண்டு நல்ல உள்ளங்கள் கூட நின்றதால் இன்று ஒரு குடும்பம் நடக்கிறது

    பதிலளிநீக்கு
  10. மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

    பதிலளிநீக்கு
  11. அருமையான படைப்பு பின்னி பெடல் எடுதிடிங்க

    பதிலளிநீக்கு
  12. அட.. ஆச்சர்யம்தான்! அந்த மனிதருக்கு கடவுள் போல் வந்த அந்த இருவரும் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்!!

    பதிலளிநீக்கு
  13. கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    இண்ட்லியில் வாக்கு அளித்த எல்லாருக்கும்..... டாங்ஸ் பா....

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  14. அன்பின் வெங்கட்

    உதவுவதற்கு மனிதர்கள் இருக்கிறார்கள் - சரியான நேரத்தில் அவர்கள் அங்கு இருப்பத்ஹு அவர்கள் கையில் இல்லை. ம்ம்ம்ம்

    ஒரு நிகழவொஇனை இடுகையாக மாற்ரியது நன்று

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....