செவ்வாய், 28 மே, 2013

அபரஞ்சி பொன்னும் ரங்கராட்டினமும்



நண்பர் பால கணேஷ் அவர்கள் சில மாதங்கள் முன்னர் தனது மேய்ச்சல் மைதானம் பக்கத்தில்காலச் சக்கரம்திரு நரசிம்மா அவர்கள் எழுதிய இரண்டாவது புத்தகமானரங்கராட்டினம்பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அதைப் படித்தபோதே இப்புத்தகத்தினைப் படிக்கும் ஆர்வம் வந்தது. சென்ற சென்னைப் பயணத்தின் போது என்னை திரு நரசிம்மா அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். சந்திப்பின் போது திரு நரசிம்மா அவரதுரங்கராட்டினம்புத்தகத்தினை கையொப்பமிட்டு கொடுத்தார். நண்பர் பால கணேஷுக்கும் திரு நரசிம்மா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

ஏற்கனவே படித்திருந்த அவரது புத்தகங்களானசங்கதாராமற்றும்குபேரவனக் காவல்பற்றி சற்று நேரம் உரையாடிவிட்டு வந்தோம். அலுவகலத்திற்குச் செல்ல வேண்டிய அவசரத்திலிருந்தாலும் எங்களுடன் நீண்ட நேரம் அளவளாவி எங்களை உபசரித்த அவருக்கும் அவரது துணைவியாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.



திருவரங்கத்திற்கும் எனக்கும் சற்றே தொடர்பு இருப்பதால், ரங்கராட்டினம் புத்தகம் படிக்கும்போது என்னால் அதிகமான ஈடுபாடுடன் படிக்க முடிந்தது. அதிலும் கதையில் வரும் பல இடங்களை கோவில் செல்லும்போது பார்க்க முடிவதால் கதையை ஒன்றி படித்தேன். அரங்கனின் சன்னதியிலிருந்து தாயார் சன்னதிக்கு வரும் வழியில்ஐந்து குழி மூணு வாசல்என ஒன்று உண்டு. ரங்கன் வருகிறானா என தனது ஐந்து விரல்களை தரையில் ஊன்றி ரங்கநாயகி தாயார் பார்த்த இடம் இது எனச் சொன்னாலும் இதற்கு உண்மையான அர்த்தம் வேறு.

பஞ்ச இந்திரியங்கள் என்ற படுகுழிகளை அடக்கி, ‘சித், அசித், ஈஸ்வரன்என்கிற மூன்று தத்துவங்களைப் புரிந்து கொண்டால், பரமனடி அடையலாம்என்பதைக் குறிப்பது தான் இந்தஐந்து குழி மூணு வாசல்! இந்த இடத்தின் வழியே கதாசிரியர், திருவரங்கம் கோவில் வரலாற்றில் பின்னடைவான, இருண்ட காலம் வந்ததை விவரமாகச் சொல்கிறார்.

ஹொய்சாள மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம். ஒரு சூரியகிரகணத்தின் போது சோமளாகிரி மலைத் தொடர் பிளந்தது. அடுத்த நாள் பார்த்தால் மலையில் பிளவுகளுக்கிடையே பாளம் பாளமாய் பொற்படிமங்கள் கதிரவனின் ஒளியில் தகதகவென மின்னிக்கொண்டிருந்தன. அத்தனையும் அபரஞ்சிப் பொன். இந்த அபரஞ்சிப் பொன்னால் நாட்டுக்கு நல்லது நடக்கப் போகிறதா இல்லை கெடுதல் நடக்குமா…..   மேலும் படியுங்களேன்.

அபரஞ்சி பொன் கொண்டு ஹொய்சாள மன்னனான வீரசோமேசன் தான் கட்டிக்கொண்டிருக்கும்போசலேஷ்வரம்சிவன் கோவில் முழுவதையுமே பொன்னால் கட்டி திருவரங்கம் கோவிலை விட அதிக புகழ் பெற வேண்டுமென ஆசைப்படுகிறார். அபரஞ்சி பொன் கிடைத்த விஷயம் பாண்டிய மன்னரான சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குத் தெரிந்தால் ஆபத்து என மறைக்கப் பார்க்கிறார்கள் ஹொய்சாள மன்னர். ஆனாலும் பாண்டிய மன்னனுக்கு விஷயம் தெரிந்து அபரஞ்சி பொன்னை அடைய போர் மூள்கிறது. ஹொய்சாள மன்னன் வீரசோமேசன் மாண்டு போகிறான். இது முதலாம் குழி.

நடுவிலே சுந்தரபாஹுமதுரவேணிசமந்தகமணி என்கிற மூவரின் முக்கோணக் காதலும் உண்டு. அபரஞ்சி பொன் பெற்றுக்கொண்டு மதுரவேணியின் தாத்தா அப்ரமேயர் சில தீய செயல்களைச் செய்யப் போக அப்ரமேயரும் மதுரவேணியும் மாண்டு போவது இரண்டாம் குழி. 

அபரஞ்சி பொன் கொண்டு பொன் வேய்ந்த பெருமாள்என்று தனது விக்ரகத்தினையே திருவரங்க கோவிலுள் வைக்க ஆசைப் படுகிறான் பாண்டிய மன்னன். திருவரங்க வாசிகள் அதனை ஏற்க மறுக்க, பிரச்சனை வெடிக்கிறது. கோவிலுக்குள் தனக்கிருக்கும் மரியாதைகளைப் பார்த்த மன்னன் மனது மாறி அபரஞ்சிப் பொன்னால் செய்யப்பட்ட தனது உருவத்தை அழித்து அந்த பொன்னால் ஒரு விஷ்ணு சிலையை வடிவமைத்து அதை ஹேமச்சந்தன ராஜாஎன்கிற பெயரோடு சந்தன மண்டபத்தில் வைக்கிறார். பின்னர் அங்கே பாதுகாப்பு குறைவென்பதால் கருவூல மண்டபத்திற்கு போகிறது சிலை! பாண்டிய மன்னர் துறவியாக, அவரது வாரிசுகள் சண்டை போட்டு பாண்டிய மன்னர்களின் ஆட்சியும் போகிறது. இது மூன்றாம் குழி!

சுல்தான்கள் படையெடுப்பினால் ரங்கநாதர் கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் மறைந்துறைய வேண்டிய அவசியம் நேரிட்டதும், பொன் வேய்ந்த பெருமாளின் பின்னைய நிலையும், சுல்தான்களின் அழிவும் நான்காவது குழியாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். படிக்கப் படிக்க அத்தனை ஒரு விறுவிறுப்பு. படித்துதான் தெரிந்து கொள்ளுங்களேன்.



சுல்தான் படையெடுப்பின் போது தனது உயிரைப் பணயம் வைத்து போரிட்ட 12000 திருவரங்க வாசிகள், அபரஞ்சி பொன் சிலையை எடுத்துச் செல்ல வந்த படைத்தளபதியை தந்திரமாக கோபுரத்தின் மேல் அழைத்துச் சென்று கீழே தள்ளிவிட நினைத்து அழைத்துச் சென்ற வெள்ளாயி, அவரது தியாகம் என அனைத்தும் சொல்லியிருக்கிறார். இன்றும் வெள்ளாயி பெயராலேயே ஒரு கோபுரம் - வெள்ளை கோபுரம் இருக்கிறது திருவரங்கத்தில்.

நான்கு குழிகளைப் பற்றிச் சொல்லி விட்டு, ஐந்தாவது குழியாகச் சொல்லி இருக்கும் விஷயம் மிக நன்று. பல வருடங்கள் முன்பு நிகழ்ந்த சூரிய கிரகணம் போலவே நிலநடுக்கத்தினை உண்டு பண்ணக்கூடிய ஒரு முழு சூரிய கிரகணம் வரும் 2081-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி புதன் கிழமை நிகழப் போகிறது. அப்போதும் அபரஞ்சிப் பொன் வரலாம். ஆனாலும் இதனால் இத்தனை ஆபத்துகளும் பிரச்சனைகளும் ஏற்பட்டதைப் படித்த பிறகு அதன் மேல் ஆசை கொள்வீர்களா என்ன!

நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்தும் அருமை! அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதை உணர முடிகிறது. நான் இங்கே சொல்லி இருப்பது நாவலின் ஒரு பகுதி தான். முழுதும் படித்து ரசிக்க புத்தகத்தினை வாங்கி படியுங்களேன். கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 17.

மீண்டும் வேறொரு புத்தகம் பற்றிய விவரங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

32 கருத்துகள்:


  1. திருவரங்கத்திற்கும் எனக்கும் சற்றே தொடர்பு இருப்பதால், ரங்கராட்டினம் புத்தகம் படிக்கும்போது என்னால் அதிகமான ஈடுபாடுடன் படிக்க முடிந்தது. அதிலும் கதையில் வரும் பல இடங்களை கோவில் செல்லும்போது பார்க்க முடிவதால் கதையை ஒன்றி படித்தேன். அரங்கனின் சன்னதியிலிருந்து தாயார் சன்னதிக்கு வரும் வழியில் ”ஐந்து குழி மூணு வாசல்” என ஒன்று உண்டு. ரங்கன் வருகிறானா என தனது ஐந்து விரல்களை தரையில் ஊன்றி ரங்கநாயகி தாயார் பார்த்த இடம் இது எனச் சொன்னாலும் இதற்கு உண்மையான அர்த்தம் வேறு...

    விறுவிறுப்பாக படித்த கதை ..!

    நினைவில் மலரவைத்த
    பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. நல்ல விமர்சனம்.

    அருமையான, விறுவிறுப்பைத் தரும் புத்தகம். ஒன்னரை நாளில் படித்து முடித்தேன்.

    துளப மாலை, மகர நெடுங் குழை காதர், ஸ்வேதலதா, சிந்தனைக்கினியான், விளாஞ்சோலையார்....பெயர்கள் மனதில் நின்றன...


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாமா.... இனிமையான பெயர்கள் தான்..... மேலும் சில பெயர்களை இங்கே எழுதியமைக்கு Thanks!

      நீக்கு
  3. திருவரங்கம் வலைப்பதிவர்கள் என்றாலே நினைவுக்கு வருபவர்களில் நீங்களும் ஒருவர். எனவே திருவரங்கம் வரலாறு ஒட்டிய கதை கொண்ட நூலுக்கு உங்கள் விமர்சனம், அந்த நூலை படிக்கத் தூண்டியது. நூலைப் படித்தவுடன் எழுதுகிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்.

      உங்கள் மின்னஞ்சல் பார்த்தபிறகு திரு நரசிம்மா அவர்கள் இப்பதிவினைப் படித்து எனக்கும் மின்னஞ்சல் மூலம் கருத்தினைச் சொல்லி இருக்கிறார். உங்கள் மூலம் தான் இவரது நட்பு எனக்கும் கிடைத்தது என்பதால் உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவரது வரப்போகும் நாவல்களுக்கான காத்திருப்புடன் உங்களைப் போலவே நானும்!

      நீக்கு
  5. //“பஞ்ச இந்திரியங்கள் என்ற படுகுழிகளை அடக்கி, ‘சித், அசித், ஈஸ்வரன்’ என்கிற மூன்று தத்துவங்களைப் புரிந்து கொண்டால், பரமனடி அடையலாம்” என்பதைக் குறிப்பது தான் இந்த ‘ஐந்து குழி மூணு வாசல்! // ;)

    நல்லதொரு நூல் அறிமுகம். பாராட்டுக்கள் வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  6. கமென்ட் போகலை! :(( இங்கே உங்க வீட்டிலே புத்தகம் இருக்கா? இருந்தால் படிச்சுட்டுத் திரும்பக் கொடுத்துடறேன். ஆவலைத் தூண்டுது உங்கள் விமரிசனம்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமெண்ட் வந்துடுச்சே! :) அங்கே தான் இருக்கு.... கொடுக்க சொல்றேன் கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  7. விரைவில் படிக்கப் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  8. மிகவும் அருமையான விமர்சனம். புத்தகம் படிக்கும் ஆவலை தூண்டிவிட்டது. மிக்கநன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  9. நானும் படித்தேன். சங்கதாரா அளவு கவரவில்லையாயினும் நன்றாக இருந்தது. இதில் படித்த விவரங்களை வைத்துதான் கீதா மேடத்துக்கு ஒரு புத்தகத்தின் பெயர் சொல்லி, 'படித்திருக்கிறீர்களா' என்று கேட்டிருந்தேன். அவர்களின் ஆன்மீகப் பயணம் பதிவுக்கு. ஸ்ரீரங்கம் பற்றி எழுத உதவியாய் இருக்கும் என்று தோன்றியதால் கேட்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். சங்கதாரா - அதுவும் மிகவும் ரசித்த புத்தகம்.

      நீக்கு
  10. எங்க ஊர்ப் பக்கம் வண்டி மாடு வழியில் படுத்து விட்டால் வண்டிக்காரர் அதை எழுப்ப முதலில் வாலைக் கடிப்பார். அப்படியும் எழுந்திருக்கவில்லை என்றால் குச்சியின் முனையில் அடித்து வைத்திருக்கும் ஆணியால் மாட்டின் பட்டறையில் ஒரு குத்து குத்துவார். அதைப்போல என் போன்ற சண்டி மாடுகள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மறந்து வழியில் படுத்து விட்டோம். ஆனால் நீங்கள் விட மாட்டீர்கள் போலிருக்கிறதே! ‘குபேர வனம்’ விமர்சனம் எழுதி உசுப்பேற்றினீர்கள். இப்போது ‘ரங்கராட்டினம்’ விமர்சனம் எழுதி மீண்டும் உசுப்பி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு குச்சியோட வந்தாதான் படிப்பீங்கன்னு அடம் பிடிக்காதீங்க அண்ணாச்சி!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  11. படிக்கத்துாண்டும் விமர்சனம் அருமை.
    வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  12. அருமையான விமர்சனம் வெங்கட்.. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தியானா.

      நீக்கு
  13. கதைச் சுருக்கத்தையே விறுவிறுப்பாக எழுதி ஆவலை தூண்டி விட்டுவிட்டீர்கள்.
    ஸ்ரீரங்கம் என்பதால் கட்டாயம் படித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      முடியும்போது நிச்சயம் படியுங்கள்!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. பகிர்வே விறுவிறுப்பாக இருக்கிறதே. கதையின் மூலம் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே சிலிர்க்கிறது.அருமையான பகிர்வு. நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் நீங்கள் ரசிப்பீர்கள்.....

      படித்து விடுங்களேன்!....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....