திங்கள், 30 நவம்பர், 2020

களஞ்சேரிக்கு ஒரு பயணம் - தீநுண்மியிலும் வேலை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். சற்றே இடைவெளிக்குப் பிறகு நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒவ்வொரு வெற்றியும் ஒரு பரிசு! ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம்! ஒவ்வொரு விடியலும் ஒரு வாய்ப்பு!  நமக்கு தினம் தினம் கிடைக்கும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம்.


******


நேற்றைய பதிவில் சொன்னது போல, இந்த முறை தமிழகம் வந்தபோது பெரும்பாலும் வீட்டினை விட்டு வெளியே வரவில்லை.  குடும்பத்துடன், திட்டமிட்டிருந்த பயணங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. தஞ்சையை அடுத்த களஞ்சேரி கிராமத்திற்கு ஒரு டெம்போ ட்ராவலர் வைத்துக் கொண்டு குடும்பத்துடன் எங்கள் இல்ல விழா ஒன்றிற்குச் சென்று வந்ததோடு சரி.  களஞ்சேரி கிராமத்தில் இருக்கும் ஒரு குருகுலத்தில் எனது மூத்த சகோதரி மற்றும் அவரது கணவரின் சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றது. அதற்கு எங்கள் வீட்டினர் அனைவரும் சென்று வந்தோம்.  வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள அழகான கிராமம் களஞ்சேரி. முதல் நாளை மாலை சென்று அடுத்த நாள் மாலை திருச்சி திரும்பினோம்.  இல்ல விழா என்பதால் வேலைகள் அதிகம்! அதனால் கிராமத்தில் சுற்றி வரவோ, படங்கள் எடுக்கவோ இயலவில்லை என்பதில் வருத்தம் உண்டு. ஒரே ஒரு முறை வெண்ணாற்றங்கரை வழியே சென்று ஒரு கிராமத்துப் பெண்மணியின் பூக்கடையில் பூ வாங்கிக் கொண்டு, அப்படியே சாலையோர கடையில் தேநீர் அருந்தி திரும்பியதோடு சரி!  


அந்தப் பூக்கடையில் ஒரு சம்பவம்!  மல்லிகைப் பூ வர தாமதமாகும் என்று சொன்னதால், ”சரிம்மா, சாமந்திப் பூவில் ஒரு முழம் கட்டி வைத்து விடுங்கள்” என்று சொல்லி விட்டு சாலையோரக் கடையில் தேநீர் அருந்தச் சென்று விட்டோம். திரும்பி வந்தபோது கட்டிய பூ தயாராக இருந்தது.  அந்தப் பூ போதுமா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் “எவ்வளவு இருக்கிறது?” என்று காண்பிக்கச் சொன்னபோது, அந்தப் பெண்மணி “அப்படி எல்லாம் ஏமாத்த மாட்டோங்க! சரியாகவே இருக்கும்” என அளந்து கொண்டே கோபமாகச் சொல்ல, எங்கள் கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்பதை உணர்ந்தோம். எங்கள் கேள்விக்கான தேவையைச் சொன்னபோது, புன்னகை புரிந்ததோடு, பையில் சில ரோஜாக்களையும் சேர்த்துக் கொடுத்தார்!  சின்னச் சின்ன கேள்விகள் கூட வேறு அர்த்தங்களைத் தந்து விடக்கூடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.  அவருக்கு நன்றி சொல்லி திரும்பினோம்.  பூவிற்கு உண்டான தொகையும் கொடுத்த பிறகு தான்! 


இல்ல விழா நன்றாகவே நடைபெற்றது. குருகுலத்தில் நாற்பது குழந்தைகள் படிக்கிறார்கள்.  வட மாநிலங்களிலிருந்து தமிழகத்தின் சில மாவட்டங்களிலிருந்தும் வந்து குருகுலத்தில் தங்கி வேதம் படிக்கும் மாணவர்கள்! சின்னச் சின்ன மாணவர்கள் வேதம் சொல்வது, கேட்க  நன்றாக இருந்தது. பொதுவாக சஷ்டியப்த பூர்த்தி இரண்டு நாட்கள் நடத்துவதுண்டு.  தீநுண்மி காலம் என்பதால் ஒரே நாளில் செய்து முடித்து விட்டோம்.  எங்கள் வீட்டினர் மட்டுமே தான் விழாவில் என்பதால் தீநுண்மி பயமும் இன்றி இருந்தோம். விழாவினை முடித்துக் கொண்டு வீடு திரும்பி விட்டோம்.  திருச்சியிலிருந்தே ஒரு டெம்போ ட்ராவலர் அமர்த்திக் கொண்டு சென்றதால், சமூக இடைவெளியுடன் சென்று வர முடிந்தது. டெம்போ ட்ராவலர் ஓட்டுனர் - அவரே முதலாளியும் கூட! - தீநுண்மி காலத்தில் தான் வண்டியை வாங்கி இருக்கிறார்.  வண்டியை அட்டகாசமாக அலங்கரித்து இருக்கிறார்.  கேரளத்தில் பாடி பில்டிங் செய்திருக்கிறார்.  வழக்கம் போல எனக்கு ஓட்டுனருக்கு அடுத்த இருக்கை - அவருடன் பேசிக் கொண்டே வந்தேன்.


தீநுண்மி காலம் எப்படி இருந்தது? பிரச்சனைகள் என்ன என்பதெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். தீநுண்மி இருந்தாலும் தன்னைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசம் இல்லை என்று சொல்லிக் கொண்டு வந்தார். தமிழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பீஹார் மாநிலத்தவர்களை அவரவர் ஊர்களில் இறக்கி விட இவரது வாகனத்தில் சென்ற போது கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.  தமிழகத்திலிருந்து புறப்படும்போதே அடுப்பு, அரிசி பருப்பு, மளிகை என அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்று ஆங்காங்கே சமைத்து சாப்பிட்டு பயணிகளை இறக்கி விட்டு திரும்ப வேண்டும்!  தமிழகத்தின் திருச்சி எங்கே, பீஹாரின் தலைநகர் பட்னா எங்கே?  கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர் தொலைவு - ஒரு பக்கத்திற்கு! ஒரு முறை சென்று திரும்பினால் 5000 கிலோமீட்டர் சாலை வழி பயணம்! திருச்சியிலிருந்து சென்னை, விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், வாரணாசி வழியே பட்னா!


இந்த தீநுண்மி காலத்தில் நான்கு முறை சென்று வந்திருக்கிறேன் என்று ஓட்டுனர் சொல்லும்போது மனது 20000 கிலோமீட்டர் சாலை வழிப்பயணம் என்று கணக்குப் போட்டு வியந்தது! என்னதான் 80-100 கிலோமீட்டர் வேகம் போக முடியும் என்று சொல்லிக் கொண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது மணிக்கு 60 கிலோமீட்டருக்கு மேல் செல்ல முடியாது! ஒரு வழிப்பாதைக்கே இரண்டு நாள் ஆகியிருக்கும் - அதாவது 35-40 மணி நேரம்!  மொத்தம் எட்டு முறை இப்படி போக வர!  நினைக்கும்போதே ஓட்டுனருக்கு எத்தனை உடல் வலி வந்திருக்கும் என்று மனதில் தோன்றுகிறது!  சாலைப் பயணங்கள் பிடித்தமானவை என்றாலும் இப்படி பயணித்துக் கொண்டே இருப்பது கடினமான விஷயம் என்பதையும் ஒத்துக் கொள்ளத்தானே வேண்டும்!  அவருக்கு மொழி ஓரளவு தெரியும்/புரிந்து கொள்ள முடியும் என்றாலும், அங்கே சந்தித்த சில பிரச்சனைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார். உணவு, குறிப்பாக தென்னிந்திய உணவு மட்டுமே வேண்டும் என்று அடம் பிடித்தால் கடினமாகவே இருக்கும் என்பதையும் சொன்னார்.  அதனால் அவராகவே சமைத்து சாப்பிட்டு வந்ததைச் சொல்லிக் கொண்டு வந்தார்.  


நெடுஞ்சாலைப் பயணங்களில் பல இடங்களில் காவலர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயணம் செய்யாத பயணிகள் இருக்கிறார்களா என்பதைப் பார்த்து அபராதம் விதிப்பதையும், சில காவலர்கள் அத்து மீறியதையும் சொல்லி, நாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக இருந்தாலும், வண்டியில் இருக்கும் பயணிகளின் அலட்சியத்தால் அபராதம் கட்ட வேண்டியதைச் சொல்லி வருத்தப் பட்டார்.  நகர எல்லைகள் வரும்போது மட்டுமாவது முகக் கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சொன்னபோது, பயணத்தின் போது முழுவதுமே முகக் கவசம் அணிந்து இருப்பதே நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.  இந்த கொரோனா நாட்கள் பல விஷயங்களை நமக்குச் சொல்லித் தந்திருக்கிறது.  ஆனாலும் இந்த பாடங்களை எத்தனை உணர்ந்திருக்கிறோம் என்பது கேள்விக்குறி தான்!  பலரும் சாலைகளில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஏதோ கடமைக்கு முகக் கவசத்தினை காதில் மாட்டி தாடையில் தொங்கவிட்டுக் கொண்டே அலைகிறார்கள்.  அவர்களுக்கும் ஆபத்து, அடுத்தவர்களுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து கொள்வதே இல்லை என்பது தான் வேதனை. 


இல்ல விழாவினை சிறப்பாக முடித்துக் கொண்டு திருச்சி திரும்பினோம்.  அடுத்த நான்கு நாட்களுக்குள் சென்னைக்கும் பயணிக்க வேண்டும்! அங்கேயும் ஒரு சஷ்டியப்தபூர்த்தி தான்!  தில்லி நண்பர் ஒருவருக்கு!  குடும்பத்துடன் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தாலும் நான் மட்டுமே செல்ல நேர்ந்தது!  அங்கே சென்ற போது கிடைத்த அனுபவங்கள் பிறிதொரு நாளில் சொல்கிறேன். இப்போதைக்கு களஞ்சேரி சென்று வந்த அனுபவம் மட்டும்! மீண்டும் நாளை வேறு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… சந்திப்போம்… சிந்திப்போம்!


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


30 கருத்துகள்:

 1. களஞ்சேரி வெண்ணாற்றங்கரையின் போட்டோக்கள் எடுக்க முடியாதது எங்களுக்கும் குறைதான்.   இல்ல விழா சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துகள்.  சுவாரஸ்யமான அனுபவங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்ல விழா என்பதால் அதற்கே நேரம் சரியாக இருந்தது. வெளியே சென்று படங்கள் எடுக்க முடியவில்லை என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. நானும் நீங்கள் சொன்ன டிரைவர் ஒட்டின மாதிரி 3 தடவை ( new jersey to kansas )1 408.8 miles ஒட்டி சென்று இருக்கிறேன். நானும் என் பெண்ணும் நாய்குட்டியும் வேனில் சென்றோம் மனைவி மட்டும் முதுகுவலி காரணமாக விமானத்தில் பயணித்தார் இங்கே ஒட்டுவது எளிது ஆனால் அங்கே மிகவும் கஷ்டம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கே இப்படி தொடர்ந்து பயணிப்பது சுலபம் என்பதையும் சொன்னதற்கு நன்றி. இங்கே கடினம் தான் - நிறைய முன்னேற்றங்கள் இருந்தாலும் இன்னும் முன்னேற வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 3. சின்னச் சின்ன கேள்விகள் கூட வேறு அர்த்தங்களைத் தந்து விடக்கூடும் என்பதற்கு இது ஒரு உதாரணம். //
  ஆமாம் சில சமயம் வார்த்தைகள் இடம் மாறியிருந்தாலும் கூட அர்த்தம் மாறிவிடும்..

  இல்ல விழா சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி.
  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பயணம் அருமை. புகைப்படங்கள் மிஸ்ஸிங்.

  வெண்ணாற்றங்கரை - இது ஏதோ சரித்திர நிகழ்வு சம்பந்தப்பட்ட இடம். சட் என்று நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் எடுக்க முடியவில்லை என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு.

   வெண்ணாற்றங்கரையில் நிறைய கோவில்கள் உண்டு. பார்த்திப சோழன் வெண்ணாற்றங்கரை இறுதிப் போர் என்று நினைவு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. களஞ்சேரி அழகான கிராமம்... பெரிதான நெற்களம் கண்ட ஊர்களுள் அதுவும் ஒன்று.. அறுவடையின் போது நெற்கதிர்களை அடித்துத் தூற்றி குவித்து வைக்கும் இடம்.. நெல்லை உலர்த்துமிடமும் களமே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான ஊர் - வயல்வெளிப் பக்கமும், ஆற்றுப் பக்கமும் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்பதில் வருத்தமுண்டு. அடுத்த முறை முடிந்தால் நிதானமாக சென்று வர வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 6. //இந்த கொரோனா நாட்கள் பல விஷயங்களை நமக்குச் சொல்லித் ////
  தந்திருக்கிறது. ஆனாலும் இந்த பாடங்களை எத்தனை உணர்ந்திருக்கிறோம் என்பது கேள்விக்குறி தான்//

  நிதர்சனமான உண்மை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. உங்கள் சகோதரியின் சஷ்டியப்த பூர்த்தி நன்றாக நடந்தமைக்கு வாழ்த்துகள் வெங்கட் ஜி.சிறிய கிராமம் பற்றிய உங்கள் அனுபவங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 8. விழா அனுபவம் சிறப்பு.
  சின்னச் சின்ன கேள்விகள் கூட வேறு அர்த்தங்களைத் தந்து விடக்கூடும் என்பது முற்றிலும் உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. சகோதரியின் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 10. ஓட்டுநர் பாராட்டிற்கு உரியவர்
  தாங்கள் களஞ்சேரி வந்தது தெரியாமல் போய்விட்டது,
  கரந்தையைத் தாண்டித்தான் சென்றிருப்பீர்கள்,
  தெரிந்தால் சந்தித்திருப்பேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீநுண்மி காலம் என்பதால் யாரிடமும் தெரிவிக்கவில்லை. நேரமும் சரியாக இருந்தது. அடுத்த பயணத்தில் நிச்சயம் சந்திப்போம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. களஞ்சேரி! வடுவூருக்குப் பக்கத்தில் இருப்பதுதானே.. உறவினரின் வீடு அங்கிருக்கிறது. போயிருந்தேன் பல வருடங்களுக்கு முன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. களஞ்சேரி சாலியமங்கலம் பக்கம்! வடுவூர் சுமார் 20 கிலோமீட்டர் இருக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏகாந்தன் ஜி.

   நீக்கு
 12. அன்பு வெங்கட்,
  மீண்டும் தங்கள் பதிவுகளைப் படிப்பதில் மகிழ்ச்சி.

  எந்தப் பயணத்திலும் சுவை சேர்க்கும் வண்ணம்
  தங்கள் எண்ணங்கள்.
  டெம்போ ட்ராவலர் ட்ரைவரை நினைத்தால்
  ஆச்சர்யமாக இருக்கிறது.
  உழைப்பின் உச்சம். நன்றாக இருக்கட்டும்.
  அறுபது கண்ட தங்கள் சகோதரி கணவருக்கு வாழ்த்துகள். தங்கள் சகோதரிக்கும் வாழ்க்கை
  இனிதே தொடர ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா. சற்றே இடைவெளிக்குப் பிறகு பதிவுகள் எழுத முடிகிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. தங்கள் பயண அனுபவங்கள் குறித்து படிக்கும் பொழுது நாமே பயணம் செய்து வந்தது போல் தோன்றும். பார்க்க கிராமம் நன்றாக இருக்கும். வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றவர்களுடன் interact செய்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்வீர்கள். Very Verynice quality. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். நிறைய பேர் பலன் அடைகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து நீங்கள் அனைவரும் தரும் உற்சாகமும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 14. சஷ்டி அப்த பூர்த்தி நன்கு நடந்தது குறித்து மகிழ்ச்சி. அங்கே இதெல்லாமும் ஏற்பாடு செய்வார்கள் என்பதையும் இப்போதே அறிந்தேன். எங்களுக்கு அரிசி களஞ்சேரியிலிருந்து குருகுலத்தில் இருந்து தான் வருகிறது சுமார் ஏழெட்டு மாதங்களாக! களஞ்சேரி போனதில்லை. வெண்ணாற்றங்கரை என்றதும் அங்கே நிகழ்ந்த பிரபலமான போர் நினைவில் வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. களஞ்சேரி - நானும் இப்போது தான் முதல் முறை சென்று வந்தேன் கீதாம்மா. களஞ்சேரி வருவதற்கு முன்னர் அவர் தலைநகர் தில்லியில் தான் இருந்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஆமாம், அதுவும் தெரியும். களஞ்சேரிக்கு வந்து சில வருடங்கள் ஆகி இருக்குமே! ஏனெனில் நாங்கள் நாலைந்து வருடங்களாகத் தொடர்பில் இருக்கோம். அவர் தம்பியும் கும்பகோணத்தில் பாடசாலை நடத்துகிறார். அவர் எங்கள் தாயாதியின் மாப்பிள்ளை! ஆகவே நன்றாகத் தெரியும்.

   நீக்கு
  3. ஆமாம் சில வருடங்கள் ஆகிவிட்டன கீதாம்மா. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....