ஞாயிறு, 29 நவம்பர், 2020

போன மச்சான் திரும்பி வந்தான்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த ஞாயிறில் உங்கள் அனைவரையும் இந்தப் பதிவு வழி மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம் வாருங்கள்.  

காலம் தாழ்த்தி எடுக்கக் கூடிய சரியான முடிவு கூட தவறானது தான். வாழ்க்கை என்பதே நேரத்தைப் பொறுத்தது.


*****

1954-ஆம் வருடம். ஸ்ரீராம் நடித்த திரைப்படமான போன மச்சான் திரும்பி வந்தான் என்கிற தமிழ் திரைப்படம் வெளிவந்தது! அதை தயாரிச்சது வேற யாருமில்லை! வெங்கட் தான் - அட… இருங்க! ஒரு மாசம் கழித்து வந்து ஏனிந்த விளையாட்டுன்னு சண்டைக்கு வந்துடாதீங்க!  நான் இங்கே சொல்வது எங்கள் பிளாக் ஸ்ரீராமோ இல்லை, உங்கள் வெங்கட் நாகராஜையோ அல்ல!  அவங்க வேற! நாங்க வேற!  மெர்க்குரி ஃபில்ம்ஸ் வெங்கடசாமி தயாரிப்பில் வெளிவந்த “போன மச்சான் திரும்பி வந்தான்” திரைப்படத்தில் ஸ்ரீராம், தங்கவேலு, டி.கே. ராமசந்திரன், அங்கமுத்து என நிறைய பேர் நடிச்சு இருக்காங்க! இசை எம்.எஸ்.வி - கூடவே இருந்தது சி.என். பாண்டுரங்கன் எனும் இசையமைப்பாளர்! 


சரி இப்ப எதுக்கு இந்த கதையெல்லாம்? ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு போன மச்சான் திரும்பி வந்தான் கதையாக நானும் பதிவுலகம் பக்கம் திரும்பி வந்திருக்கிறேன். கடந்த அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி தான் கடைசியாக ஒரு பதிவினை எழுதி இருந்தேன். நவம்பர் மாதத்தில் நேற்று வரை எந்தப் பதிவும் எழுதவில்லை.  தமிழகம் வந்திருந்த போது தொடர்ந்து பதிவுகள் எழுதவில்லை.  தலைநகர் தில்லி திரும்பி வந்தாலும் பதிவுகள் எழுதும் சூழல் இல்லை.  வீட்டு வேலைகள், அலுவலக ஆணிகள் என தொடர்ந்து கொண்டிருந்ததால் பதிவுகள் எழுத இயலவில்லை.  நண்பர்கள் எழுதும் பதிவுகளையும் கடந்த நான்கைந்து நாட்களாகத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். 


இந்த இடைவெளியில் பதிவர் கோமதிம்மாவின் கணவர் இறைவனடி சேர்ந்தது பற்றி தெரிந்தது. மனதுக்கு மிகவும் வேதனை அளித்தது.  தலைநகர் தில்லியிலும் தமிழகத்தில் அவரது வீட்டிலும் சந்தித்து இருக்கிறேன்.  இறைவன் தனது தொண்டரை அழைத்துக் கொண்டார் என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.  பழகிய நமக்கே மனதைத் தேற்றிக் கொள்ள கடினமாக இருக்கும்போது அவரது குடும்பத்தினருக்கு இன்னும் கடினமாகவே இருக்கும்.  தலைவரை இழந்து தவிக்கும் கோமதி அம்மாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.  


நாட்கள் வேகவேகமாக ஓடுகின்றன.  இந்த வருடம் இப்போது தான் ஆரம்பித்த மாதிரி இருக்கிறது.  அதற்குள் நவம்பர் மாதம் முடிவிற்கு வந்து விட்டோம்.  டிசம்பர் மாதமும் இதே வேகத்தில் சென்று விடும்.  திநுண்மி நாட்களிலிருந்து விடுதலை கிடைக்கும் வழி தெரியவில்லை.  மார்ச் மாத கடைசியிலிருந்து இதோ வருட இறுதி வந்து விட்டாலும் அதிலிருந்து விடுபடும் வழி இல்லை.  கொஞ்சம் கொஞ்சமாக அதன் அலை அடங்கும் என்று பார்த்தால் அலை ஓய்ந்தபாடில்லை.  இந்த மாதத்தின் கணக்குப்படி, தில்லியில் ஒவ்வொரு மணி நேரத்திலும் தீநுண்மி காரணமாக ஐந்து பேர் இறக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.  குளிர் காலம் ஆரம்பித்து விட்டதால் தீநுண்மியின் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என சிலர் பீதியைக் கிளப்புகிறார்கள்.  அலுவலகத்திலும் பலருக்கு தொற்று வருவதும், சிலர் குணமடைந்து திரும்புவதும், சிலர் தொற்றின் காரணம் இறைவனடி சேர்வதும் நடந்து கொண்டிருக்கிறது.  ஆனாலும் தொடர்ந்து அலுவலகம் சென்று வர வேண்டிய சூழல்!  தீநுண்மி எனது சில நண்பர்களையும் தொற்றி, சிலர் மீண்டிருக்கிறார்கள்.  சிலர் இன்னமும் சிகிச்சையில்!  விரைவில் இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. சில சோக நிகழ்வுகள், சில சந்தோஷ நிகழ்வுகள் என இந்த இடைவேளையில் சந்தித்திருக்கிறேன்.  சந்தோஷ நிகழ்வாக, எனது மின்னூலான “என் இனிய நெய்வேலி”-ஐப் பற்றி நண்பர், ஆசிரியர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் ”அபிராமி, அபிராமி” என்ற தலைப்பில் ஒரு பதிவினை அவரது வலைப்பூவில் எழுதி இருக்கிறார்.  அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.  மின்னூலுக்கான அவர் பாணி விமர்சனம் மிகவும் சிறப்பாக இருந்தது.  நமது எழுத்திற்கான இப்படியான வாசிப்பனுபவங்களை படிக்கும் போது நமக்கு மேலும் உற்சாகம் வருகிறது - தொடர்ந்து எழுதுவதற்கும் இந்த மாதிரியான விமர்சனங்கள் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  கடந்த ஏப்ரல் மாதத்தில் அமேசான் தளம் வழியாக மின்னூல்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறேன் - இந்த எட்டு மாதங்களில் எனது மின்னூல்களுக்கான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலேயே இருக்கிறது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும் - குறிப்பாக இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதி அளிக்கும் சமயங்களில்! :) 


தமிழகம் வந்திருந்த போது இரண்டு நிகழ்வுகள் - இரண்டுமே தவிர்க்க முடியாத சஷ்டியப்த பூர்த்தி நிகழ்வுகள் - ஒன்று தஞ்சையை அடுத்த களஞ்சேரி கிராமத்தில்! மற்றது சென்னையில்! களஞ்சேரி கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்று வந்தோம் - வாடகைக்கு டெம்போ ட்ராவலர் எடுத்து!  சென்னை பயணம் தவிர்க்க முடியாத காரணத்தினால் தனியாக - இரயில் மூலம்! பயணங்களில் கிடைத்த அனுபவங்கள் தனிப்பதிவுகளாக வந்தாலும் வரலாம் என்ற எச்சரிக்கையும் இங்கே செய்து விடுகிறேன்! சென்னை வந்தாலும் நண்பர்களையோ, உறவினர் குடும்பத்தினர்களையோ சந்திக்க வில்லை.  தீநுண்மி காலத்தில் யாருடைய வீட்டிற்கும் செல்லாமல் இருக்கவே நினைத்தேன்.  நம்மால் அடுத்தவர்களுக்கு ஏதும் தொல்லை இருக்கக் கூடாதல்லவா!  சென்னை பயணத்தில் கிடைத்த அனுபவங்களை விட, தில்லி திரும்பும்போது விமானத்தில் கிடைத்த அனுபவங்கள், சமீபத்தில் பிரபலமாக இருக்கும் சொற்தொடர் போல - “வேற லெவல்!”  அதுவும் எழுதுவேன்.  


இப்போதைக்கு, “போன மச்சான் திரும்பி வந்தான்” கதையைச் சொல்லியாயிற்று!  இனி தொடர்ந்து நேரம் எடுத்து, பதிவுகள் எழுதுவதோடு, நண்பர்களின் பதிவுகளையும் படித்து விடுவேன். தொடர்ந்து சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

34 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான மீள் தொடக்கம்.  நடிகர் ஸ்ரீராம் பற்றி அறிந்திருக்கிறேன்.  தயாரிப்பாளர் வெங்கட் பற்றித் தெரியாது.  ஆனால் வெங்கட் எனும் பெயரில் ஒரு நாடக அல்லது சினிமா கதை  ஆசிரியர் உண்டு என்று அறிவேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீள் தொடக்கம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. வருத்தமான சம்பவங்கள் இந்த வருடம் தொடர்கதை ஆகிவிட்டது.  மோசமான வருடம்.  சரியாகவேண்டும் எனும் பிரார்த்தனைகள் பிரார்த்தனை லெவலிலேயே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்கதையாகி விட்ட வருத்தம் தரும் சம்பவங்கள் - வேதனை தான்.

   பிரார்த்தனைகள் பிரார்த்தனை லெவலிலேயே இருக்கிறது - உண்மை தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கரந்தையாரின் தளத்தில் விமர்சனம் நானும் படித்தேன்.  வாழ்த்துகள்.  பயண அனுபவங்கள் பற்றி சுவாரஸ்யப் பதிவுகள் வரும் என்று நானும் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண அனுபவங்கள் பற்றிய பதிவுகள் - விரைவில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. தொடர்ந்து புத்தகங்கள் வெளிவர வாழ்த்துகள். பயண அனுபவங்களை விரைவில் பகிர்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட திரைப்படம் வந்திருக்கா? தெரியலை. ஸ்ரீராம் என்னும் நடிகர் இருந்திருக்கார் என்பதும் ஆச்சரியமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து புத்தகங்கள் வெளிவர வேண்டும் - வெளியிட வேண்டும்!

   திரைப்படம் வந்திருக்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 5. அலுவக வேலையாக டூர் சென்று திரும்பி வந்தவுடன் கொடுக்கும் டூர் ரிப்போர்ட் போன்று உள்ளது.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டூர் ரிப்போர்ட் - ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 7. வெல்கம் பாக் வெங்கட்.
  உங்கள் பயணம் தொந்தரவு இல்லாமல் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
  ரோஷ்ணியும் ஆதியும் மிக ஆனந்தம் அடைந்திருப்பார்கள்.
  நிதானமாகப் பதிவிடுங்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.
  இந்த ஊரிலும் ஒன்றும் ரசிக்கும்படியாக இல்லை. நீங்கள் கவனம் எடுத்தது மிகவும் நல்லது.

  பாராட்டுகள் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுமுறை முடிந்து தில்லி திரும்பியாயிற்று! அலுவலக பணிகளும், வீட்டு வேலைகளும் தொடங்கி விட்டது. ஜாக்கிரதையாகவே இருக்கிறேன் வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வருக ஜி தங்களது வரவு தொடரட்டும் கலக்குங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்தாயிற்று கில்லர்ஜி. இனி தொடர்ந்து பதிவுலகம் வழி இணைந்திருப்போம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. எழுத்த்தொடங்குங்கள். வாழ்த்துகள்.

  இரயிலில் செல்ல தனித் தைரியம் வேணும், இந்தச் சமயத்தில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரயிலில் செல்ல தனி தைர்யம் வேண்டும் - உண்மை நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. இங்கே அலை என்பதைவிட புயல் என்று சொல்லலாம் The United States suffers one death every minute as the global coronavirus cases reach nearly 60 million. According to a tally by the Johns Hopkins University, 1,448 people died, in the US on November 20.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலையல்ல புயல் - உண்மை தான் மதுரைத் தமிழன். அங்கே நிறைய இறப்பு என்பதை படித்துக் கொண்டிருந்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. போன மச்சான் திரும்பி வந்தான் என்ற தலைப்பை விட  ரஜனி டைலாக் "வந்துட்டேன், நான் திரும்ப வந்துட்டேன் னு சொல்லு"  பொருத்தமாக இருக்கும். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வந்துட்டேன்னு சொல்லு! இந்தத் தலைப்பினை ஏற்கனவே வைத்திருக்கிறேன் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. பழகிய நமக்கே மனதைத் தேற்றிக் கொள்ள கடினமாக இருக்கும்போது அவரது குடும்பத்தினருக்கு இன்னும் கடினமாகவே இருக்கும். //

  மிகவும் சரியே வெங்கட்ஜி. அவங்களுக்கும் அவங்க குடும்பத்தாருக்கும் இந்த வேதனையிலிருந்து மீண்டு வந்திட இறைவன் அருள வேண்டும் என்று பிரார்த்திப்போம் வேறு என்ன சொல்ல? என்று தெரியவில்லை.

  வெங்கட்ஜி தலைப்பு வெகு பொருத்தம்.

  உங்கள் அனுபவங்களை எழுதுங்க ஜி. பிரயாணமே இப்போது கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கிறது. திருச்சி டு சென்னை ரயில் இருப்பது பரவாயில்லையே. இங்கு பங்களூர் டு சென்னை ரயிலில் கூட்டமே இல்லை என்று ரத்து செய்துவிட்டதாகச் செய்தி.

  இங்கு இன்னும் முதல் அலையே முடியவில்லை அதற்குள் 2 வது அலை சில நாடுகளில் தொடங்கிவிட்டது என்று சொல்கிறார்கள். இந்த வருடம் முழுவதும் நிறைய சோகங்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருச்சி சென்னை ரயிலிலும் கூட கூட்டம் இல்லை - நான் சென்ற போதும் மூன்று இருக்கைகளில் நான் மட்டுமே!

   திநுண்மி அலை தரும் சோகங்கள் - விரைவில் முடியவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 13. திரும்பவும் பதிவிட வந்துள்ள உங்களுக்கு நல்வரவேற்பு!
  மறுபடியும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இனிமையான பயண அனுபவங்களும் களை கட்டட்டும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து பதிவுகள் எழுத வேண்டும் - எழுதுவேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோம்மா.

   நீக்கு
 14. பதில்கள்
  1. முடிந்த வரை கவனமாகவே இருக்கிறேன் கரந்தை ஜெயக்குமார் ஐயா. தங்கள் அன்பிற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. எழுத்தைக் காணக் காத்திருக்கிறோம்.
  கவனமாக இருக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த வரை கவனமாகவே இருக்கிறேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. தங்கள் அன்பிற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. சிந்திக்க வைக்கும் வாசகம். திரைப்படம் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். பயணம் இனிதாக முடிந்தது அறிந்து மகிழ்ச்சி. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. புத்தக வெளியீடு வாழ்த்துகள். பயண அனுபவங்கள் படிக்க காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தக வெளியீடு - வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....