ஒரு நாட்டோட முக்கியமான ஆளுன்னா அவரை ராஜான்னு சொல்வாங்க. எந்த ஒரு துறையா இருந்தாலும் அதில் சிறந்த ஆளை அந்தத் துறைக்கே ராஜான்னு சொல்வாங்க. அது மாதிரி என் மகள் என்னைச் செல்லமாய் கூப்பிடுவது “வலை ராஜா”! அதுக்குன்னு என்னை ஏதோ வலை வீசி மீன் பிடிப்பதிலோ, மீன் பிடிக்கும் வலை பின்னுவதிலோ பெரிய ஆள்னு நினைச்சுடாதீங்க.
பெரும்பாலான நாட்களில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மடிக்கணினி முன் உட்கார்ந்து வலையுலகில் புகுந்தால் வெளியே என்ன நடக்குதுன்னு கூட தெரியாமல் அந்த உலகத்திலேயே இருந்து விடுவேன். விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம் – பெரும்பாலான நாட்கள் கணினி முன் என்றாகிவிடுகிறது இப்போதெல்லாம். இது எல்லாம் சேர்ந்து எனக்கு இந்த ”வலை ராஜா” என்ற பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது [எங்க வீட்டு அம்மணிதான் சொல்லிக் கொடுத்திருப்பாங்க!]. நீங்க எப்படி? “வலை ராஜாவா, ராணியா?”
புத்தாண்டில் வாங்கிய பல்பு:
புத்தாண்டு அன்று என் பெண்ணிடம் என் மனைவி “அப்பாவை நமஸ்காரம் பண்ணும்மா, காசு தருவாங்க!” என்று சொல்ல என் பெண்ணும் குளித்து விட்டு வந்து என்னை நமஸ்கரிக்க, நானும் அவளுக்குக் காசு கொடுத்தேன். அடுத்து அவள் அம்மாவைப் பார்த்து, ”அம்மா நீயும் அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணு, உனக்கும் அப்பா காசு கொடுப்பாங்க!” என்று சொல்லி, என் சட்டைப் பையின் கனத்தினைக் குறைக்க வழி செய்தாள். அப்பவாவது நான் சும்மா இருந்து இருக்கலாம், சும்மா இல்லாம, “உங்களுக்கு எல்லாம், புது வருடத்தில், முதல் நாளிலேயே காசு கிடைக்குது, எனக்கு யாரு கொடுப்பாங்க!” என்று கேட்க, அதற்கு என் பெண் அளித்த பதில் – “நீங்க எனக்கு நமஸ்காரம் பண்ணுங்க, நான் உங்களுக்குக் காசு கொடுக்கிறேன்!”- இது எப்படி இருக்கு?
உங்கள் மடிக்கணினி ஜாக்கிரதை:
உங்கள் வீட்டில் இருப்பது மடிக்கணினியா? உங்கள் வீட்டில் இரண்டு குட்டி வாண்டுகள் இருக்கிறதா? அப்படி என்றால் இந்த விஷயம் உங்களுக்காகத்தான். என் நண்பர் சொன்ன விஷயம் இது. என் நண்பரின் நண்பருக்கு இரண்டு சிறு குழந்தைகள். பெரிய வாண்டு மடிக்கணினி வீட்டுக்கு வந்ததிலிருந்து அதிலேயே உட்கார்ந்து விளையாடுவதிலேயே நிறைய நேரம் செலவழித்ததால் முன்பு போல தன் தம்பியுடன் விளையாடுவது குறைந்து விட்டது. தம்பி அண்ணனை விளையாடக் கூப்பிட்டுப் பார்த்து அவன் வருவது குறைந்து கொண்டே இருந்திருக்கிறது. ஒரு நாள் தம்பி பார்க்கும்போது கணினி முன் யாரும் இல்லாமல் இருக்கவே, நேராக சமையலறையில் இருந்து ஒரு கரண்டி கொண்டு வந்து மடிக்கணினியில் இருக்கும் அத்தனை பட்டன்களையும் பிடுங்கி, மொத்தமாய் அண்ணனிடம் கொடுத்து, “இந்தா வைச்சுக்கோ, இது இருக்கறதுனால தான என் கூட விளையாட மாட்டேங்கற! இப்ப அதுல எப்படி விளையாடுவ, நான் பார்க்கிறேன்” என்று சொல்லி இருக்கிறான் . அதனால, நீங்க மடிக்கணினி வைத்திருந்தால் ஜாக்கிரதை!
மீண்டும் இன்னுமொரு பதிவில் சந்திப்போம்…




