திங்கள், 17 ஜனவரி, 2011

வலை ராஜா – மழலை மொழி


ஒரு நாட்டோட முக்கியமான ஆளுன்னா அவரை ராஜான்னு சொல்வாங்க.  எந்த ஒரு துறையா இருந்தாலும் அதில் சிறந்த ஆளை அந்தத் துறைக்கே ராஜான்னு சொல்வாங்க. அது மாதிரி என் மகள் என்னைச் செல்லமாய் கூப்பிடுவது “வலை ராஜா”!  அதுக்குன்னு என்னை ஏதோ வலை வீசி மீன் பிடிப்பதிலோ, மீன் பிடிக்கும் வலை பின்னுவதிலோ பெரிய ஆள்னு நினைச்சுடாதீங்க.

பெரும்பாலான நாட்களில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மடிக்கணினி முன் உட்கார்ந்து வலையுலகில் புகுந்தால் வெளியே என்ன நடக்குதுன்னு கூட தெரியாமல் அந்த உலகத்திலேயே  இருந்து விடுவேன்.  விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம் – பெரும்பாலான நாட்கள் கணினி முன் என்றாகிவிடுகிறது இப்போதெல்லாம்.  இது எல்லாம் சேர்ந்து எனக்கு இந்த ”வலை ராஜா” என்ற பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது [எங்க வீட்டு அம்மணிதான் சொல்லிக் கொடுத்திருப்பாங்க!].   நீங்க எப்படி? “வலை ராஜாவா, ராணியா?”

புத்தாண்டில் வாங்கிய பல்பு:


புத்தாண்டு அன்று என் பெண்ணிடம்  என் மனைவி  “அப்பாவை நமஸ்காரம் பண்ணும்மா, காசு தருவாங்க!” என்று சொல்ல என் பெண்ணும் குளித்து விட்டு வந்து என்னை நமஸ்கரிக்க, நானும் அவளுக்குக் காசு கொடுத்தேன்.  அடுத்து அவள் அம்மாவைப்  பார்த்து, ”அம்மா நீயும் அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணு, உனக்கும் அப்பா காசு கொடுப்பாங்க!” என்று சொல்லி, என் சட்டைப் பையின் கனத்தினைக் குறைக்க வழி செய்தாள்.  அப்பவாவது நான் சும்மா இருந்து இருக்கலாம், சும்மா இல்லாம, “உங்களுக்கு எல்லாம், புது வருடத்தில், முதல் நாளிலேயே காசு கிடைக்குது, எனக்கு யாரு கொடுப்பாங்க!” என்று கேட்க, அதற்கு என் பெண் அளித்த பதில் – “நீங்க எனக்கு நமஸ்காரம் பண்ணுங்க, நான் உங்களுக்குக் காசு கொடுக்கிறேன்!”- இது எப்படி இருக்கு?

உங்கள் மடிக்கணினி ஜாக்கிரதை: 


உங்கள் வீட்டில் இருப்பது மடிக்கணினியா? உங்கள் வீட்டில் இரண்டு குட்டி வாண்டுகள் இருக்கிறதா?  அப்படி என்றால் இந்த விஷயம் உங்களுக்காகத்தான்.  என் நண்பர் சொன்ன விஷயம் இது.  என் நண்பரின் நண்பருக்கு இரண்டு சிறு குழந்தைகள்.  பெரிய வாண்டு மடிக்கணினி வீட்டுக்கு வந்ததிலிருந்து அதிலேயே உட்கார்ந்து விளையாடுவதிலேயே நிறைய நேரம் செலவழித்ததால் முன்பு போல தன் தம்பியுடன் விளையாடுவது குறைந்து விட்டது.  தம்பி அண்ணனை விளையாடக் கூப்பிட்டுப்  பார்த்து அவன் வருவது குறைந்து கொண்டே இருந்திருக்கிறது.  ஒரு நாள் தம்பி பார்க்கும்போது கணினி முன் யாரும் இல்லாமல் இருக்கவே, நேராக சமையலறையில் இருந்து ஒரு கரண்டி கொண்டு வந்து மடிக்கணினியில் இருக்கும் அத்தனை பட்டன்களையும் பிடுங்கி, மொத்தமாய் அண்ணனிடம் கொடுத்து, “இந்தா வைச்சுக்கோ, இது இருக்கறதுனால தான என் கூட விளையாட மாட்டேங்கற! இப்ப அதுல எப்படி விளையாடுவ, நான் பார்க்கிறேன்” என்று சொல்லி இருக்கிறான் .  அதனால, நீங்க மடிக்கணினி வைத்திருந்தால் ஜாக்கிரதை!

மீண்டும் இன்னுமொரு பதிவில் சந்திப்போம்…

திங்கள், 10 ஜனவரி, 2011

பெயர்க் குழப்பங்கள்



இந்தியா பலவிதமான மொழிகள்  பேசும் மனிதர்களால் பிரிக்கப்பட்டு இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே!  அதைப் பற்றி பெரிதாய் நான் என்ன சொல்லி விடப்போகிறேன்?


பலவிதமான மொழி பேசும் மனிதர்கள், ஒவ்வொரு மொழி பேசும் மனிதர்கள் வைத்துக்கொள்ளும் பெயர்கள்தான் , ஆஹா எத்தனை எத்தனை?  வட இந்தியர்கள் நரேஷ் குப்தா, ராகுல் பஜாஜ், உஜாஹர் சிங் விர்மானி போன்ற பெயர்கள் வைத்துக்கொள்ள, நம் ஊரிலோ  கந்தசாமி, ராமசாமி, சுப்ரமணியன், வெங்கடராமன் என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்கிறோம்.

அந்தந்த ஊரில் இருக்கிற ஆட்கள் ஊர் ஆட்களின் பெயரை ஒழுங்காக உச்சரித்து விடுகின்றனர்.  ஆனால் தில்லி போன்ற பெருநகரில் எல்லா மாநில மக்களும் வேலை நிமித்தமாகவோ, வியாபார விஷயமாகவோ, சேர்ந்து வசிக்கும்போது ஏற்படும் பெயர் குழப்பங்களை சொல்லி முடிக்க, இந்த ஒரு வலைப்பதிவு பற்றாது… 

நம்ம ஆளுங்க பெயரை எப்படி வட இந்தியர்கள் கெடுத்துக் குட்டிச்சுவராக ஆக்கறாங்களோ அதே மாதிரி வட இந்தியர்களோட பெயரை நம்ம ஆளுங்க ஒரு வழி பண்ணிடுவாங்க. ஆங்கிலத்தில் Arora என்று எழுதி இருப்பதை இந்த ஊர்க்காரர்கள் அரோடா என்று படிக்கின்றனர். நாம் அரோகரா எனச் சொல்வதுபோல அரோரா என்றே சொல்வோம். 

நம்ம தமிழ் மொழியோட சிறப்புன்னு சொல்லக்குடிய “ழ” மட்டும் உங்க பெயரில் இருந்ததுன்னு வெச்சுக்கோங்க, உங்க பெயரை நாறடிச்சுடுவாங்க இந்த வட இந்தியர்கள், ஏன்னா ஹிந்தி மொழியில “ழ” கிடையாது.  எழில்மலை, எழிலரசு, தமிழரசி, கனிமொழி இந்த மாதிரி பேரையெல்லாம் இந்த வட இந்தியர்கள் எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா, எஜில்மலாய், எஜிலரசு, தமிஜரசி, கனிமொஜின்னுதான் கூப்பிடுவாங்க. 

திருவனந்தபுரம் என்ற பெயரை அப்படியே சொல்ல முடியாம, நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் அதை Trivandrum-னு மாத்திட்டாங்க.  அதைக்கூட தப்புத்தப்பா தான் இந்த ஊர் மக்கள் சொல்லுவாங்க.  நான் சும்மா இல்லாம அந்த ஊரோட முழு பேர் ”திருஅனந்தபத்மநாபபுரம்”னு அவங்ககிட்ட சொல்லி வைக்க, அந்த பெயரை ஒரு வழி பண்ணிட்டாங்க.

தில்லில வேலைக்குச் சேர்ந்த புதுசுல என் பெயரை யார் கேட்டாலும் முழுசா ”வெங்கடராமன்” அப்படின்னு சொல்லிட்டு இருந்தேன். அதை அவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு வழி பண்ணிட்டதால, சில மாதங்களுக்குப் பிறகு யார் கேட்டாலும் “வெங்கட்” அப்படின்னு சுருக்கிச் சொல்ல ஆரம்பித்தேன்.   

இந்த பெயர்க் குழப்பங்களை எல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தது.  என்னோட பெயர் போட்ட முத்திரை செய்யணும்னு ஒரு கடைல போய் பேரு, விலாசம் எல்லாம் சரியா பெரிய எழுத்துல எழுதிக்  குடுத்துட்டு வந்தேன். இரண்டு நாள் கழித்து கடைக்குப் போய், நல்லா வளைச்சு வளைச்சு எழுதிய எழுத்துக்கள்ல போட்டு இருந்த என் முத்திரையை வாங்கிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்து பேப்பர்ல முத்திரை போட்டா, அறை நண்பர்கள் எல்லாம் படிச்சுட்டு, விழுந்து விழுந்து ஒரே சிரிப்பு, “டேய் உனக்கு சரியாதான் பெயர்  வச்சுருக்கான்” அந்த முத்திரைக்காரன்னு சொல்லி.  என்னடான்னு புரியாம படிச்சா, “Venkataraman” அப்படின்னு எழுதும்போது, T போடறதுக்கு பதிலா Y போட்டு வைச்சுடுச்சு பயபுள்ள.

எல்லா நண்பர்களும், ”வெங்கடராமன்”னு கூப்பிடறதுக்கு பதிலா ”வெங்காயராமன்”னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. பேசாம இந்த ஊர்ல இருக்கற வரைக்கும் இந்த ஊர்க்காரங்க வாய்ல நுழையறமாதிரி வேற பெயர் எதையாவது வச்சிக்கலாமான்னு யோசனையா இருக்கு!  நீங்க என்ன சொல்றீங்க?

வியாழன், 6 ஜனவரி, 2011

மனச் சுரங்கத்திலிருந்து...(ஊஞ்சலாடிய பேய்)



நெய்வேலியில் எங்கள் வீட்டின் வாசலிலேயே ஒரு பெரிய புளிய மரம்.  பக்கத்து வீட்டு வாசலிலும் அதை விட பெரிய புளிய மரம் இருந்தது. அதனால் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் நிறைய பேர் வாசலில் புளியமரம் இருக்கு, “காத்து, கருப்பு அண்டும்” என்றெல்லாம் சொல்லி பீதியைக் கிளப்பிவிடுவார்கள்.  சுவையான புளியைக் கொடுக்கும் மரமென்பதால் அதை வெட்ட எங்களுக்கு மனமில்லை. 

அம்மா எப்போதுமே அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து, கோலமிட்டு, பூ பறித்து, கீழே விழுந்திருக்கும் புளியை எடுத்து வீட்டின் திண்ணையில் வைத்துவிட்டு, மற்ற காலை நேர வேலைகளில் ஆழ்ந்து விடுவார். 

எனக்கு பள்ளி காலை நேரத்திலே என்பதால் நானும் சீக்கிரமே எழுந்து 10 நிமிட நடைப் பயணத்தில் இருக்கும்  08.00 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு, 07.15க்கே கிளம்பிவிடுவேன்.  மதியம் 12.10 வரைதான் பள்ளி. அதன் பிறகு இல்லை.  அதனால் மதிய நேரத்தில் தூக்கம், அரட்டை, விளையாட்டு தான்.

எதிர் தெருவான ”திருகாணி தெருவில்” என்னுடன் படித்த ஒரு பையனின் வீடு இருந்தது.  அவனுடைய  அம்மாஒரு நாள் எங்கள்  வீட்டுக்கு நடுங்கியபடியே  வந்து எங்கள் வீட்டு புளிய மரத்தில்  ஊஞ்சலாடிய பேயின் கதையைச் சொன்னார்.  பேய் கதை என்றதும் நானும் மற்ற நண்பர்களும் ஆர்வத்துடன் கதை கேட்க ஆரம்பித்தோம். 

“நட்ட நடு ராத்திரி திடீர்ன்னு  முழிப்பு வந்துடுச்சா , மாடு வேற கத்துது, சரி மாட்டுக்கு பசி போல  வைக்கோல் போடலாம்னுட்டு  வெளியே வந்தேன். வைக்கோல் போட்டுட்டு பார்க்கிறேன், உங்க வீட்டு வாசல்ல வெள்ளையா ஒரு உருவம், கால் இருக்கான்னு பார்க்கிறேன், இல்லை.  மிரண்டு போய், யாரையாவது கூப்பிடலாம்னா, எனக்கோ வாய் குளறுது!  அந்தப் பேய்  உங்க வீட்டுப்  புளிய மரத்திலிருந்து பக்கத்து வீட்டு புளியமரத்துக்கு அப்படியே தாவுது,  கிளையைப்  பிடிச்சு ஊஞ்சலாடுது! அதுக்கு மேலே என்னால நிக்க முடியல, கிடுகிடுன்னு வீட்டுக்குள்ளே போய், ஒரு சொம்புத்   தண்ணியை மடக் மடக்குன்னு  குடிச்சுட்டு நடுங்கியபடியே  படுத்துட்டேன்.  அத்தோட  காலைல அஞ்சு மணிக்கு எழுந்து பார்க்கிறேன், அந்த பேயைக் காணல!” என்றார். 

கதையைக் கேட்ட எங்களுக்கெல்லாம் ஒரே  பயம்,  பேய் ஊஞ்சலாடியதை, உடல் நடுங்க நாங்களும் மனசுக்குள்  படம் ஓட்டிப் பார்த்தோம்.  ஆனா எங்கம்மா சிரிச்சுட்டு இருந்தாங்க.  “அட போங்கடா பயந்தாங்குள்ளிகளா! நேத்து  வீட்டு வாசலில் உள்ள மரத்துக்கும், விளக்குக் கம்பத்துக்கும் கட்டி இருந்த கொடில உங்கப்பா  வேட்டியை காயப் போட்டிருந்தேன், ராத்திரி எடுக்க மறந்துட்டேன். அது இரவு அடிச்ச காத்துல இந்த மரத்துக்கும் அந்த மரத்துக்கும் ஆடிட்டு இருந்துருக்கும். அதிகாலையிலேயே  எழுந்த நான் வேட்டியை எடுத்து மடிச்சு வச்சுட்டேன்! அதான் பேயைக் காணல "என்று சிரித்துக்கொண்டே சொன்னார். 

”கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்"