தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து பொங்கலை முன்னிட்டு இந்த வருடமும் பொங்கல் விழா 22-23.01.2011 ஆகிய இரு தினங்கள் நடத்தியது. இந்த பொங்கல் விழாவில் ”தென்னக கலாச்சார பண்பாட்டு மையம், தஞ்சாவூர்” வழங்கிய கிராமிய நடனம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகளும், தில்லித் தமிழ்ச் சங்கம் வழங்கிய தில்லி மாணவர்கள் பங்கேற்ற திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன.
சிறப்பு நிகழ்ச்சிகளாய் சனி [22.01.2011] அன்று புஷ்பவனம் டாக்டர் குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சியும், ஞாயிறு [23.01.2011] அன்று திண்டுக்கல் லியோனி குழுவினரின் பட்டிமன்றமும் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் சிறப்பு அம்சங்களாய் கோ-ஆப்டெக்ஸ், பூம்புகார், ஆவின் போன்ற நிறுவனங்களின் விற்பனை நிலையங்களும் ஹோட்டல் ராம் பிரசாத் நடத்திய உணவகமும் இருந்தன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் கிடைக்கும் தேனீர் போலவே தேனீர் கிடைத்தது. கடன் அன்பை முறிக்கும் என்று பல கடைகளில் எழுதி இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். இங்கே வித்தியாசமாய் கவிதையாய் எழுதி இருந்தார்கள்.
கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து கடன்
கேட்காதீர்!
நான் சனிக் கிழமை அன்று புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். முதலில் பிள்ளையார் பாட்டில் ஆரம்பித்து, இரண்டாவதாய் தை மகளை வரவேற்று, மூன்றாவதாக அவரது மிகப் பிரபலமான பாடலான “தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு” பாடலைப் பாடினார். பிறகு விறுவிறுப்பான கும்மிப் பாட்டு, மாடு பாட்டு, கோழிப் பாட்டு, ஜல்லிக்கட்டுப் பாட்டு, குழந்தைகளுக்கான பாட்டு என்று எல்லா மக்களும் ரசிக்கும்படி பல பாடல்களை பாடினார்கள். அவரின் இரு பாடல்களின் ஒலி வடிவம் கீழே [தில்லியில் பதிவு செய்யப்பட்டது அல்ல! மோகனன் என்ற நபர் தனது வலைப்பூவிலும் Muziboo-விலும் தரவேற்றம் செய்து உள்ளார். அவருக்கு எனது நன்றி].
Thamizha Nee Pesuvathu | Upload Music
தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு..! | Upload Music
நடுநடுவே நல்ல நகைச்சுவை உணர்வோடு பேசவும் செய்தார். கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பாடலான ”விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி” பாடலையும் பாடினார். மொத்தத்தில் நல்ல தமிழிசைப் பாடல்களைப் பாடி தில்லி தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல இசைவிருந்தினை நல்கினர் புஷ்பவனம் குப்புசாமி தம்பதிகள். அவர்களும், குழுவில் இருந்த மற்ற கலைஞர்களும் தில்லியின் கடும் குளிரிலும் இங்கே வந்திருந்து, அதுவும் ஒரு திறந்த வெளி அரங்கிலிருந்து மக்களை மகிழ்வித்ததற்காகவே பாராட்டலாம்!
இந்த இடுகையை நிறைவு செய்யுமுன் ஒரு சிறிய போட்டி – நமது ஊரில் பல உணவகங்களில் “டிபன் ரெடி! சாப்பாடு தயார்!!” என்று விளம்பரப் பலகைகள் வைத்திருப்பதை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதில் "தயார்" என்ற சொல் தமிழ்ச் சொல்லே இல்லை எனச் சொல்லி அதற்கான சரியான தமிழ்ச் சொல் என்ன என்று டாக்டர் குப்புசாமி அவர்கள் கேட்டார். நிகழ்ச்சியின் நடுவே அதன் பதிலையும் சொன்னார். “தயார்” என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை, நமது இலக்கியங்களில் இருந்த அந்த வார்த்தையை, பின்னூட்டத்தின் மூலம் சொல்பவர்களுக்கு ஒரு பொற்கிழி பரிசு!! – மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்!!
