சென்னையோ, தில்லியோ எந்த ஊராக இருந்தாலும் சரி, நிறைய ஆட்டோக்களை நாம் இப்போது பார்க்கிறோம். சிறிய தூரங்களைக் கடக்க அதனை பயன்படுத்தவும் செய்கிறோம். பெரும்பாலும் இந்த ஆட்டோ பயணங்களில் நமக்குக் கிடைப்பது கசப்பான அனுபவங்களே. ஆனால் மும்பையில் தனக்குக் கிடைத்த சுகமான அனுபவத்தினைப் பற்றி முகப்புத்தகத்தில் ஒருவர் பகிர்ந்திருக்கிறார். அதன் தமிழாக்கம் கீழே.
ஒரு ஞாயிறு அன்று நானும், எனது மனைவி மற்றும் மகனுடன் அந்தேரியிலிருந்து பாந்த்ரா செல்ல ஒரு ஆட்டோவினை நிறுத்தினோம், இது ஒரு வித்தியாசமான பயணமாக இருக்கப் போகிறது என்பதை அறியாமலே.
நிறுத்திய ஆட்டோவில் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் எதிரே ஒரு சிறிய தொலைக்காட்சிப் பெட்டி. அதில் தூர்தர்ஷன் ஓடிக்கொண்டிருந்தது. நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டோம். பக்கத்தில் ஒரு முதலுதவிப் பெட்டி. பஞ்சு, டெட்டால் மற்றும் சில மாத்திரைகளும். நிச்சயம் இது வித்தியாசாமான ஒரு ஆட்டோ எனப் புரிந்தது.
சுற்று முற்றிலும் பார்த்தேன். மேலும் இருந்தவை: ரேடியோ, தீயணைப்பு சாதனங்கள், நேரம் காட்டி, நாள்காட்டி, எல்லா மதக்கடவுள்களின் படங்கள். இவை மட்டுமா, பம்பாய் ஹீரோக்கள், காம்தே, சாலாஸ்கர், கர்கரே மற்றும் உன்னிகிருஷ்ணன் அவர்களுடைய புகைப்படங்களும் இருந்தன.
ஆட்டோ மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுனரும் வித்தியாசமானவராகத் தான் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவர் பணி புரிந்து கொண்டிருந்த அலுவலகம் மூடியபின் கடந்த 8-9 வருடங்களாக ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்.
பள்ளி செல்லும் இரு குழந்தைகளுக்குத் தகப்பன் இவர். காலை 8 முதல் இரவு 10 மணி வரை ஆட்டோவையும் தனது வாழ்க்கையையும் திறம்பட ஓட்டும் இவர் சொன்னது, “சார், வீட்டுல உட்கார்ந்து டி.வி. பார்ப்பதால் என்னைப் போன்றவர்களுக்கு பெரிதாக என்ன பயன் வந்துடப் போவுது? நாலு காசு சம்பாதித்தா எதிர்காலத்துக்குப் பயன்படுமே!" உண்மைதானே!
இது மட்டுமில்லாமல், தன்னிடம் எப்போதெல்லாம் சற்று அதிகமாக பணம் சேர்கிறதோ, அப்போதெல்லாம், அந்தேரியில் இருக்கும், வயதான பெண்களுக்கான ஒரு இல்லத்தில் இருக்கும் பெண்களுக்கு, பல் துலக்கி, பற்பசை, சோப், எண்ணெய் என தேவைப்படும் பொருட்களை வாங்கித் தருகிறாராம். ஆட்டோவில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடியும், பார்வை இல்லாத நபர்களுக்கு 50 ரூபாய் வரையான தொலைவெனில் இலவசமாகவும் அழைத்துச் செல்வாராம்.
இப்படி ஒவ்வொன்றும் தெரிந்துகொண்ட நானும், எனது மனைவியும் 45 நிமிட பயணம் முடிந்தபோது ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம்.
நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய நபர்தான் சந்தீப் பச்சே என்ற இந்த ஆட்டோ ஓட்டுனர். மும்பையில் அவர் ஓட்டும் ஆட்டோ எண். MH-02-Z-8508.
ஒரு நல்ல மனிதரைப் பற்றித் தெரிய வந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.
மீண்டும் சந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.





