என் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, August 24, 2016

பலூக்பாங்க்கிலிருந்து சிங்ஷூ – வரவேற்பும் கொஞ்சம் ஓய்வும்.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 40

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகள் ஒரு Drop Down Menu ஆக என் வலைப்பூவின் வலப்பக்கத்தில் ”ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழ் சேர்த்திருக்கிறேன்..........


பலூக்பாங்க்கிலிருந்து சிங்ஷூ...

வரைபடம்: இணையத்திலிருந்து....

அப்பர் பலூக்பாங்க்-ல் எங்களது மதிய உணவைச் சாப்பிட்ட பிறகு தொடர்ந்து மலைப்பாதையில் பயணித்தோம்.  இரண்டு பக்கங்களிலும் மலைகள் சூழ, ஆங்காங்கே நீரோடைகளூம், ஆறுகளும் இருக்க, பயணம் சுகமானதாக இருந்தது. சாலைகள் மட்டும் ஒழுங்காக இருந்தால் இன்னும் சுகமாக இருந்திருக்கும். மலைப்பகுதி என்பதால் நிறைய மரங்களும் இருந்தன என்றாலும் இது பாறைகள் நிறைந்த மலை அல்ல, பெரிய மண் மேடுகள் போலவே காட்சியளிக்கும் மலைகள். நிறைய காட்டு வாழை மரங்களைப் பார்க்க முடிந்தது. அதில் வாழைப்பழங்கள் காய்த்துத் தொங்கினாலும் அவற்றை யாரும் பறிப்பதும் இல்லை, உண்பதும் இல்லை! ஒவ்வொரு மரமும் 20 அடி உயரமாவது இருக்கும்!


கீழே வீழ்ந்து கிடக்கும் காட்டு வாழை....

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மேகக்கூந்தலோபாடல் ஏனோ மனதுக்குள் வந்து போனது....  அந்தப் பாடல் போல இல்லாது, இங்கே அனைவரும் ஆண்கள்! ஆனாலும் பாதையையும் பயணத்தினையும் மிகவும் ரசிக்க முடிந்தது. ஆங்காங்கே சில சிறு கிராமங்கள் – கிராமத்தின் மொத்த வீடுகளே பத்துக்குள்.....  வீடுகள் பெரும்பாலும் மூங்கில் தட்டிகளும், மூங்கில்களும் கொண்டு அமைக்கப்பட்டவை. சிறு வீடுகளாக இருந்தாலும், டாடா ஸ்கை வைத்திருந்தார்கள்! தொலைக்காட்சி இல்லாமல் இருக்க முடியாது!


சாலையோர வீடுகள்....

சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு வழியில் இருக்கும் சிறு கிராமத்தில் கொஞ்சம் தேநீர் குடித்தோம். சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை என்றாலும் தேநீர் சுமாராகவே இருந்தது. தொடர்ந்து பயணித்த போது பார்த்த காட்சிகள் மனதை மயக்கின.  பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில் பயணிப்பது, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்தப் பயணத்திலும் அப்படியே ரசித்த படி பயணித்தோம். சூரியன் மறையத் துவங்கி இருந்தான். இரவுக்குள் எங்கள் தங்குமிடம் சேரவேண்டும் என்ற எண்ணத்தோடு நாங்கள் இருக்க, இரவுக்குள் தனது குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓட்டுனர் டோர்ஜியும் இயன்ற அளவு வண்டியை வேகமாகச் செலுத்தினார்.


மூங்கில் தட்டிகளில் வீடுகள்....

இந்த மலைப்பாதைகள் பெரும்பாலான இடங்களில் நன்றாக இல்லை என்பதால் மணிக்கு இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல முடியாது.  பொறுமையாகத் தான் செல்ல வேண்டும். மேலும் எதிரே வாகனம் வந்துவிட்டால் இரண்டும் ஒரே சமயத்தில் பயணிப்பது கடினம். கீழே வரும் வாகனம் கொஞ்சம் ஒதுங்கி நிற்க, மேலே பயணிக்கும் வாகனம் ஊர்ந்து அவ்வாகனத்தினைக் கடந்து செல்கிறது. வழி விட்டதற்கு நன்றி சொல்லும் விதமாய் இவர் ஒரு முறை ஹாரன் அடிக்க, பதில் சொல்லும் விதமாய் அவரும் ஒரு முறை ஒலி எழுப்புகிறார். நல்ல பழக்கம்!


பக்கச் சுவர்கள் இல்லாத மலைப்பாதை....

கரணம் தப்பினால் மரணம் தான் இந்தப் பாதைகளில் – பக்கவாட்டில் எந்தவித தடுப்புகளும் கிடையாது என்பதால் கொஞ்சம் அசந்தாலும் அதளபாதாளத்தில் விழ வாய்ப்புண்டு. அதனால் இப்பாதைகளில் வண்டியோட்டும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகவும் ஜாக்கிரதையாகத் தான் ஓட்டுகிறார்கள். இருந்தாலும் நொடி நேரத்தில் சில விபத்துகளும் நடந்து விடுவதுண்டு...  அதனால் இந்த சாலைகளில் இரவு நேரம் பயணிப்பதை தவிர்த்து விடுவது நல்லது.


மலைப்பகுதிகள் – ஒரு காட்சி....

பலூக்பாங்க்கிலிருந்து நாங்கள் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடமான சிங்ஷூ [ஆங்கிலத்தில் Singchung] சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவு. பயணிக்க எடுத்துக் கொண்ட நேரம் மூன்றரை மணி நேரம்.  சாரிதுவார் – தவாங்க் சாலையில் தொடர்ந்து மலைப்பாதையில் பயணித்து வழியில் இருக்கும் “நாக் மந்திர்எனும் இடத்தில் டோர்ஜி தனது வாகனத்தின் ஒலிப்பானை எழுப்பி நாக தேவதைக்கு தனது வருகையைத் தெரிவிக்கிறார். பயணம் நல்லபடியே இருக்க ஒரு சிறு பிரார்த்தனையும்..... 


சாலையும் சாலையின் பக்கத்தில் வரும் டேங்கா ஆறும்...

வழி நெடுக சாலையின் ஓரத்திலிருந்து பார்த்தால், கீழே டேங்கா ஆறு ஓடுவதைப் பார்க்க முடிகிறது. ஆங்காங்கே ஆற்றின் குறுக்கே சாலை பயணிக்கிறது – அந்த இடங்களில் BRO என அழைக்கப்படும் Border Roads Organization எனும் ராணுவ அமைப்பு இரும்புப் பாலங்களை அமைத்து வாகனப் போக்குவரத்திற்கு வழி செய்கிறது. அனைத்து சாலைகளுமே பராமரிப்பது இந்த வீரர்கள் தான். அவர்களது கடின உழைப்பு காரணமாகவே வாகனங்கள் செல்ல முடிகிறது.  என்னதான் சாலை அமைத்தாலும், இயற்கைச் சீற்றங்களுக்குத் தாங்குவதில்லை என்பதால் பராமரிப்புப் பணிகள் அதிகம்....


மலைப்பாதைகள் ஒரு கழுகுப் பார்வை...

இப்படி பயணித்து சிங்ஷூ நகருக்கு அருகே மீண்டும் ஒரு முறை டேங்கா ஆற்றினைக் கடக்கிறோம். அந்த ஆற்றின் குறுக்கே அங்கே கட்டப்பட்டிருக்கும் பாலத்திற்குப் பெயர் – சைத்தான் பிரிட்ஜ்! எண்பது கிலோமீட்டர் தூரத்தினை இப்படிக் கடந்து சிங்ஷூவிலிருக்கும் அருணாச்சல் அரசாங்கத் துறையொன்றின் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்தத் துறையிலும் சில மலையாளிகள் பணிபுரிவதால் அவர்கள் மூலம் இந்த அறைகளை ஏற்பாடு செய்திருந்தார் தாமஸ்..... 


பூத்துக் குலுங்கிய மரம் - தங்குமிடத்தில்...

மூன்று அறைகள் ஒதுக்கி இருக்க, அறைக்கு இருவராய் எடுத்துக் கொண்டு ஒரு குளியல் போட்டு, கொஞ்சம் ஓய்வெடுத்தோம்.  மாலை நேரம் வந்துவிட்டது என்றாலே எங்கள் குழுவில் மூவருக்கு மனது கொந்தளிக்க ஆரம்பித்து விடும்! இதில் நான்காவதாகச் சேர்ந்தவர் தாமஸ். தங்குமிடம் ஏற்பாடு செய்த மலையாளிகள் இருவரும் சேர்ந்து கொள்ள சோமபானம் பருகும் நபர்களின் எண்ணிக்கை ஆறைத் தொட்டது! அவர்கள் பாட்டிலைத் திறக்க நாங்கள் தேநீர் அருந்தியபடி, புதிய நண்பர்களிடம் அறிமுகம் செய்து கொண்டோம்.  உலகம் மிகச் சிறியது என்று உணரச் செய்த ஒரு விஷயமும் நடந்தது! அது என்ன என்பது அடுத்த பகுதியில்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.