எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, August 1, 2012

ஒற்றனின் காதலி


தில்லி புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஒன்று திரு கண்ணன் கிருஷ்ணன் அவர்கள் எழுதி “சாந்தா பதிப்பகம்” வெளியிட்ட “ஒற்றனின் காதலி”. வாங்கி சில மாதங்கள் ஆகிவிட்டாலும் ஏனோ படிக்காது விட்ட பல புத்தகங்களில் இதுவும் ஒன்று.  சில நாட்கள் முன்பு இரவு ஒன்பது மணிக்கு கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தவுடனே, ”இத்தனை நாள் படிக்காது விட்டேனே” என்று என்னையே திட்டிக்கொண்டபடியே படித்தேன் – அத்தனை விறுவிறுப்பு. முழுதும் படித்து முடித்தபோது இரவு மணி ஒன்று.

இந்தப் புத்தகம் ஒரு ஒற்றனின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.  சில உண்மைச் சம்பவங்கள், சில கற்பனைக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, தீவிரவாதம் ஓங்கிய நாகலாந்து மாநிலத்தினை கதைக்களமாகக் கொண்டு திரு கண்ணன் கிருஷ்ணன் உருவாக்கியுள்ள புதினம்.

இந்திய உளவுத் துறையிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற மணிவண்ணன் கொடைக்கானல் நகரில் தனது காலத்தினை தனியே கழித்து வருகிறார்.  காலை மாலை உடற்பயிற்சி, நல்ல உழைப்பு என தன்னுடைய ஓய்வுகாலத்தினை செம்மையாகப் பயன்படுத்தி வருபவர்.  ஒரு நாள் காலை மலைப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் போது பின்னாலே வந்த ஜீப் ஒன்று வேண்டுமென்றே மணிவண்ணனை மோதி மலைப்பாதையிலிருந்து தள்ளி விடுகிறது.  அந்த வழியே வரும் முட்டைக்காரரின் உதவியோடு மேலே ஏறி வந்து விடுகிறார் மணிவண்ணன்.  அன்று மாலையே “தப்பித்தேன் என்று சந்தோஷமடையாதே, உன் சாவு என் கையில்” என்று ஆங்கிலத்தில் தொலைபேசி மூலம் சொல்கிறான் ஒருவன். 

இங்கிருந்து ஃப்ளேஷ் பேக் தொடங்குகிறது – மணிவண்ணன் தொலைபேசியில் வந்த குரல் கேட்டு யோசிக்கிறார் – ஒற்றர் வேலை பார்த்ததில் குரலை வைத்தும், அவர் பேசும் முறை வைத்தும் குரல் நாகாலாந்து மாநிலத்தவரைச் சேர்ந்தது என்று புரிகிறது.  தான் இந்திய அரசின் ஒற்றர் துறையில் பணியில் சேர்ந்த நாகாலாந்து நோக்கிப் பயணிக்கிறது மணிவண்ணனின் மனம்.  இங்கிருந்து கதை சரசரவென வேகம் பிடிக்கிறது.  இராணுவத்தில் நல்ல நிலையில் இருந்த தனது அண்ணன் அருண்குமார் இறந்து போகுமுன் இருந்த நாகாலாந்து மாநிலத்திற்கே தன்னையும் பணிக்காக செல்ல நியமித்தது ஒருவகையில் மணிவண்ணனுக்குப் பிடித்தமே.  தன் அண்ணனின் இறப்பிற்குக் காரணமானவர்களைப் பழிவாங்கவும் துடித்தது அவர் மனம். 

பணி நிமித்தம் ஏரோபாமி கிராமத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ”வேசாய் சாக்கசாங்” என்பவரை அவரது வீட்டில் சந்திக்கிறார் மணிவண்ணன்.  அவரது மகள் அதோனியை அறிமுகம் செய்து வைத்தது மட்டுமல்லாது தனது இன்னொர் மகள் அதிலி பற்றியும், நாகர் படையில் இருக்கும் மகன் பற்றியும் சொல்கிறார்.  இரண்டாம் நாளே கொஹிமாவில் படிக்கும் அதிலி விடுமுறைக்கு வர, அவளைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் மணிவண்ணன்.  நாட்கள் போகப் போக, அவர்களது காதலும் வளர்கிறது. அதிலியின் திறமைகளைக் கண்ட மணிவண்ணன் அவளை ஐ.ஏ.எஸ். பரீட்சைக்குத் தயார் செய்யச் சொல்கிறார்.  அதோனியிடமும் அவ்வப்போது பேசும்போது தான் தெரிகிறது அவள் தனது அண்ணன் அருண்குமாரின் காதலி என.

அதோனியிடம் பேசுவதில் தனது அண்ணன் அருண்குமார் எப்படி இறந்தான் எனத் தெரியவருகிறது.  நாகர் இனத்தினைச் சேர்ந்த அதோனியிடம் ஒரு வெளி ஆள் காதல் கொள்வதைத் தாங்கிக் கொள்ள முடியாத யாரோ ஒருவர் தான் அண்ணனின் கொலைக்குக் காரணம் எனப் புரிந்து கொள்கிறார் மணிவண்ணன்.  வெடாய் என்ற அதோனியின் உறவினரும் அவள் மேல் மையல் கொண்டதையும் அவனை அதோனி கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததும் தெரிய வருகிறது. 

இதற்கிடையே நாகர் படை இந்தியாவுடன் பெரிய தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு படை சேர்க்கிறது.  சீனாவிற்குச் சென்று தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்கள் சேகரித்து வரும் பணிக்கென ஆட்கள் தயாராக்கப்படுகிறார்கள்.  அதில் அதோனியும் இருக்கிறாள்.  ஒற்றர் பணி மூலம் பல விஷயங்களைக் கண்டறிந்து நாகர்களின் இம்முயற்சியை முளையிலேயே முடக்குகிறார்.  அப்போது நடந்த அடக்குமுறையில் அதோனி குண்டடி பட்டு இறக்கிறார்.  அதோனி இறந்ததற்கு மணிவண்ணனும் காரணமென நினைத்து அதிலி அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார்.  காதலியை நினைத்து நினைத்து கஷ்டப்படுகிறார் மணிவண்ணன்.  இதற்கிடையில் அதோனியைக் காதலித்த வெடாய், அதிலியையும் காதலிப்பதாகச் சொல்ல, அதிலி அவரைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்து ஐ.ஏ.எஸ். படித்து மாவட்ட ஆட்சியாளர் ஆவதுதான் தனது ஒரே லட்சியம் எனச் சொல்கிறார்.   [படம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதல்ல!  உதவி: கூகிள்]காதலியின் வெறுப்பு தாங்காது நாகாலாந்திலிருந்து தில்லிக்கு மாற்றலாகி வந்து சில வருடங்கள் பணியிலிருந்து பல சிறப்புகளைப் பெற்ற பிறகு மணிவண்ணன் கொடைக்கானல் வந்து விடுகிறார்.  இத்தனையும் ஃப்ளாஷ்பேக்-ல் நமக்குச் சொல்லும் கதாரிசியர் நடுநடுவே நாகர்களின் பண்பாடு, நாகலாந்து நாட்டின் சூழல் என அழகாய் விவரித்துக் கொண்டு போகிறார்.  நினைவுகளில் இருந்து மீண்ட மணிவண்ணன் நிகழ்காலத்திற்கு வருகிறார். 

தன் மீது மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கும் என யோசிக்கும் மணிவண்ணன் தனது ஒற்றர் வேலையை ஆரம்பிக்கிறார்.  பக்கத்து மாவட்டமான திருச்சியில் சில மாதங்களுக்கு முன் அதிலி மாவட்ட ஆட்சியராகப் பணியேற்றிருப்பது தெரிய வருகிறது.  அவரை நேரடியாகச் சந்தித்து தன் மீது தாக்குதல் நடப்பதாகச் சொல்ல அவரோ மணிவண்ணனை அவமதித்து அனுப்புகிறார்.  தடாலடியாக அவரது வீட்டில் நுழைந்து அதிலியின் வீட்டில் இரண்டு நாகலாந்து நபர்கள் சமீபத்தில் வந்து தங்கியிருப்பதைத் தெரிந்து கொள்கிறார்.  ஒருவர் வெடாய் மற்றொருவர் ஒரு இளைஞர். இளைஞர் யாரென்பது சஸ்பென்ஸ்!   

மீண்டும் கொடைக்கானல் வந்து தன் மீது தாக்குதல் நடந்தால் சமாளிக்க ஏற்பாடுகளைச் செய்கிறார்.  தாக்குதல் நடத்த வெடாய்-உம் அந்த இளைஞரும் வரும்போது, இளைஞரை மடக்கிப் பிடித்து விட வெடாய் வேகமாய் ஓடி மலைமுகட்டிலிருந்து கீழே விழுந்து விடுகிறார்.  அதிலிக்குத் தகவல் தெரிவிக்க, அவர் அதிர்ச்சியுடன் வந்து சேர்கிறார்.  அந்த இளைஞர் யார், அதிலியும் மணிவண்ணனும் சேர்ந்தார்களா என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? 

சாந்தா பதிப்பகத்தின் “ஒற்றனின் காதலி” விறுவிறுப்பான நல்ல புத்தகம். நிச்சயம் வாங்கிப் படிக்கலாம்.  ரசிக்கலாம்!

மீண்டும் வேறொரு புத்தகம் பற்றிய அறிமுகத்தில் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புதுதில்லி. 

48 comments:

 1. சரசரவென வேகம் பிடிக்கும் அருமையான கதைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. இது வரை படித்ததில்லை சார்...
  நல்லதொரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி...

  (த.ம. 2)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. தங்கள் நூல் விமர்சனம் இயல்பான நடையில் குழப்பம் இல்லாமல் இருக்கிறது ( சிலர் நூலின் கதைச் சுருக்கம் என்று குழப்பி விடுவார்கள்)

  //அந்த இளைஞர் யார், அதிலியும் மணிவண்ணனும் சேர்ந்தார்களா என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறதா? சாந்தா பதிப்பகத்தின் “ஒற்றனின் காதலி” விறுவிறுப்பான நல்ல புத்தகம். நிச்சயம் வாங்கிப் படிக்கலாம். ரசிக்கலாம்! //

  அந்த காலத்து பழைய தமிழ் திரைப் பட பாட்டுப் புத்தகத்தில் "விடை வெள்ளித் திரையில் காண்க” என்று சொல்வது போல
  நன்றாகவே முடித்து இருக்கிறீர்கள். அந்த புத்தகத்தை ஒருமுறை படித்தவுடன் மீண்டும் உங்கள் விமர்சனம் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வெள்ளித்திரையில் காண்க! :)

   தங்களது வருகைக்கும் மகிழ்ச்சியூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. சுவாரஸ்யமாகப் போகிறது கதை
  தாங்கள் சொல்லிச் சென்றவிதம்
  மிகமிக அருமை

  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. அந்த நபர் மணிவண்ணனின் அண்ணனாக இருக்கலாம் என்பது என் ஊகம்...

  நூலகத்தில் தேடிப் பார்க்கிறேன்.

  நல்ல அறிமுகம்.

  ReplyDelete
  Replies
  1. உன் ஊகம் தவறானது சீனு... :(

   நூலகத்தில் கிடைக்கவில்லையெனில் சொல், அடுத்த முறை சந்திக்கும்போது தருகிறேன்...

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 7. மிக வித்யாசமான கதை களன் போல் தான் தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் வித்தியாசமான கதை தான் மோகன். முடிந்தால் படியுங்கள்.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மோகன்!

   Delete
 8. நானும் வாங்கணும் என்ற ஆவலைத் தூண்டும் விமரிசனம்.

  சென்னைப்பயண புத்தக லிஸ்ட் கூடிக்கொண்டே போகிறது!

  ReplyDelete
  Replies
  1. என் கிட்டேயும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு! தூக்கிட்டு வரவே பயமா இருக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 9. சாந்தா! உன் பதிப்பக வெளியீடான “ஒற்றனின் காதலி” யை கைபிடிக்க ஸாரி! படிக்க ஓடோடி வந்து விட்டேன், சாந்தா!

  ReplyDelete
  Replies
  1. //சாந்தா! உன் பதிப்பக வெளியீடான “ஒற்றனின் காதலி” யை கைபிடிக்க ஸாரி! படிக்க ஓடோடி வந்து விட்டேன், சாந்தா!//

   அடி காந்தா! சுசீந்திரத்துக்கு ஒரு போட்டுக் கொடும்மா! :)

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]!

   Delete
 10. தங்கள் பதிவு படித்ததும் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது . நிச்சயம் படிக்கிறேன். பதிவு அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு!

   Delete
 11. நல்ல விறு விறுப்பன கதைதான். நல்லா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 12. ம்ம்ம்... அந்த இளைஞர் அதிலியின் (+ மணிவண்ணனின்) மகனாய் இருக்கலாம் என்பது என் யூகம். விறுவிறுப்பான என்று வேறு உறுதி கொடுதது விட்டீர்கள். அவசியம் வாங்கிப் படித்து விடுகிறேன் வெங்கட். நல்ல அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இல்லை உங்கள் ஊகம் தவறு கணேஷ்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 13. விறுவிறுப்பான தொடர் என்றதும் சுறுசுறுப்பா படிக்கத்தோனுதுங்க.

  ReplyDelete
  Replies
  1. படியுங்கள் சகோ.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 14. அநியாயமா இருக்கே... கதை பூராவும் சொல்லிட்டு கடைசியில என்ன ஆகுதுங்குற ஒரு வரிய சொல்லாம இருப்பாங்களோ...

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை சந்திக்கும்போது உங்களுக்கு புத்தகமே தரேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 15. படித்ததை விறுவிறுப்பு குறையாமல் பகிர்ந்துள்ளது சிறப்பான விசியம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆச்சி!

   Delete
 16. தங்கள் எழுத்து நடையிலேயே உணர்கிறேன் நிச்சயம் கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பர் வரலாற்று சுவடுகள்!

   Delete
 17. புத்தக விமர்சனம் அருமை, வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.

   Delete
 18. இந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள் நன்றி...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 19. ennanga sir ippadi paathiyileye...
  vittuteenga....


  nalla viru viruppu!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 20. நல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளீதரன்.

   Delete
 21. விறுவிறுப்பாக இருக்கின்றது. படிக்கவேண்டுமென்ற ஆவலைத்தருகின்றது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. நல்ல அறிமுகம் வெங்கட். பரிந்துரைக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி VajraSoft Inc

   Delete
 23. மிக விறுவிறுப்பாகக் கூறியுள்ளீர்கள்.
  அருமை. வாசிக்கும் ஆவலும் எழுகிறது.
  நன்றி.
  எழுத்தின் நடைக்கு நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 24. நல்ல புத்தகம்.விறுவிறுப்பாக இருக்கின்றது
  இனிய பரிந்துரை
  புத்தகம் வேண்டுமா?
  http://orathanadukarthik.blogspot.ae/2015/07/blog-post_82.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி கண்ணன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....