புதன், 10 ஜனவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – விருந்தாவன் தோட்டத்தில் மதிய உணவு

இரு மாநில பயணம் - பகுதி - 3


இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

நான் காலையிலேயே ஆம்தாவாத் வந்து நண்பரின் நண்பர் வீட்டினர் தந்த காலை உணவை ஒரு கை பார்த்திருக்க, திருவனந்தபுரத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்ட நண்பர்கள் காலை உணவு கூட ஒழுங்காகச் சாப்பிடாமல்/சாப்பிட முடியாமல் இருந்தார்கள். அதனால், எங்கள் திட்டப்படி பயணத்தினைத் துவக்க முடியாமல் மதிய உணவு தான் முதலில் என்ற முடிவு எடுத்தோம். எங்கள் குழுவில் வந்த ஒருவருக்கு வயது 58 – சர்க்கரை நோய் வேறு உண்டு என்பதால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்ல, வழியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்த என் திட்டத்தினை மாற்ற வேண்டியிருந்தது. அதனால் ஓட்டுனர் முகேஷ்-இடம் நகருக்குள்ளேயே ஏதேனும் உணவகத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறினேன்.



உணவகத்தின் வெளிப்புறத் தோற்றம்

முகேஷ் எங்களை அழைத்துச் சென்று வாகனத்தினை நிறுத்திய இடம் ஏர்போர்ட் காந்திநகர் சாலையிலிருந்த விருந்தாவன் கார்டன் ரெஸ்டாரெண்ட்! வாகனத்தினை நிறுத்திய பிறகு நாங்கள் இறங்கி, முகேஷ்-ஐயும் சாப்பிட அழைக்க அவர் எனக்கு இப்போது வேண்டாம் – வழியில் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். வாகனத்திலிருந்து உள்ளே செல்ல முற்படும் போது ஒரு பெரிய அறிவிப்பு பலகை – “பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது – Credit/Debit Card மூலமாகவும் பணம் வாங்கிக் கொள்ள மாட்டோம்” என்பதை முன்னெச்சரிக்கை உணர்வோடு எழுதி வைத்திருந்தார்கள்.  என்னிடம் இருந்ததோ பழைய நோட்டுகள் மற்றும் அட்டைகள்! நண்பர்களிடம் புதிய நோட்டுகளும், 20/10 ரூபாய் கட்டுகளும் இருக்க, தைரியமாக உள்ளே நுழைந்தோம்.

500/1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட 8-ஆம் தேதியிலிருந்து நான்கு நாட்கள் கழித்து – அதாவது 12 நவம்பர் 2016 தான் இந்த நிகழ்வு! பயணம் முழுவதிலும் இப்படி எல்லா இடங்களிலும் இந்தப் பதாகைகள் பார்க்க முடிந்தது. எங்களிடம் இருந்த பழைய நோட்டுகள், புதிய நோட்டுகள், அட்டை என அனைத்தும் வைத்து சமாளிக்க முடிந்தது.  இந்த விருந்தாவன் கார்டன் ரெஸ்டாரெண்ட்-இலும் நாங்கள் உள்ளே சென்று அமர்ந்த பிறகு கழுத்தில் டை அணிந்த இளைஞர் பவ்யமாக வந்து வணக்கம் சொல்லி, எங்களை வரவேற்று, என்ன சாப்பிடுகிறீர்கள் எனக் கேட்பதற்கு முன்னர் சொன்ன விஷயம் – ”பழைய நோட்டுகள் செல்லாது, அட்டை மூலம் பணம் செலுத்த முடியாது!” – அதன் பிறகு தான் மெனு கார்டை எங்களுக்கு அளித்தார்! முன் ஜாக்கிரதையாக இருப்பது அவருக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது தானே!

செல்லாக் காசு வைத்திருந்து, நாங்கள் உணவு உண்ட பிறகு தெரிந்தால் கஷ்டம் தானே – நம் ஊர் போல இருந்தால் ஆட்டுரலில் தோசை மாவு அரைக்கச் சொல்லலாம்! தண்ணீர் கஷ்டம் இருந்தால் குடம் குடமாக தண்ணீர் கொண்டு வரச் சொல்லலாம்! அங்கே தண்ணீர் கஷ்டம் இல்லை! ஒரு வேளை சப்பாத்திக்கு மாவு பிசைந்து தரச் சொல்வார்களோ என்று நினைத்தபடியே கொடுத்த மெனு கார்டைப் பார்த்தால் – எல்லாவற்றிலும் ஷாக் அடித்த உணர்வு – எதை எடுத்தாலும் ஷாக் என்று தான் முடிகிறது – படாடா நு ஷாக், டெண்ட்லி படாடா நு ஷாக், கோபி நு ஷாக் இப்படி பல ஷாக் – “ஷாக் அடிக்குது சோனா”ன்னு பாடாத குறை தான்! வேறொன்றுமில்லை – குஜராத்தியில் ஷாக் என்றால் சப்ஜி தான்!


படாடா நு ஷாக்!

ஷாக்-லிருந்து விடுபட்ட என்னையே நண்பர்கள் தேவையானதைச் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டார்கள். இந்த முறையும் என்னுடன் வந்திருந்தவர்களில் சிலர் அசைவ பிரியர்கள். ஆனால் இப்போது சைவமே போதும் என என்னிடம் விட்டு விட, Butter Roti, Plain Roti, Batata Nu Shaak, Kadai Paneer, Raita போன்றவற்றை கொண்டு வரச் சொன்னேன். கூடவே சலாட்-உம். வட இந்திய உணவு சாப்பிடும்போது பச்சையாக வெங்காயம், முள்ளங்கி, பச்சை மிளகாய், கேரட் என அனைத்தையும் சாப்பிடுவது நல்லது. எல்லாம் கலந்து சாப்பிடுவது இங்கே உள்ள பழக்கம்.  நாங்கள் சொன்ன அனைத்தும் வர, அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக உணவினை ரசித்து உண்டு முடித்தோம்.  உணவுக்கான தொகையைக் கொடுத்து கல்கண்டு-சோம்பு ஆகியவற்றை வாயில் போட்டுக்கொண்டு வெளியே வர, முகேஷ் காத்திருந்தார்.

இந்தப் பயணத்தில் முதல் நாள் பாதி வரை சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏதுமில்லை – மாலைக்குள் ஒரு இடத்திற்குச் சென்று சேர வேண்டும் என முடிவு செய்திருந்தாலும், அந்த இடத்திற்குச் செல்லும் வழியிலும் முக்கியமான ஒரு சுற்றுலாத் தலம் உண்டு. அந்த இடத்தினை நோக்கித் தான் எங்கள் பயணம் அமையப்போகிறது. பயணத்திற்காக திட்டமிட்ட போதே எங்களுடைய முழு திட்டத்தினையும் நண்பர் பிரமோத் தயாரித்து எனக்கு அனுப்பி வைக்க, நான் ஆம்தாவாத் நண்பருக்கு அனுப்பி வாகனம் ஏற்பாடு செய்தவருக்கும் இந்தத் திட்டம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அடுத்து அந்த இடத்திற்குத் தானே என முகேஷ் கேட்க, பரவாயில்லையே எல்லாம் சரியாச் சொல்லி இருக்காரே தர்ஷன் பாய் [ட்ராவல்ஸ் நடத்துபவர்] என நினைத்துக் கொண்டேன். 

ஆம்தாவாதிலிருந்து சுமார் 96 கிலோமீட்டர் பயணம் செய்து தான் நாங்கள் செல்ல நினைத்திருக்கும் இடத்திற்குச் செல்ல முடியும். அந்த இடம் என்ன இடம், அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…. அதுவரை காத்திருங்கள்.

தொடர்ந்து பயணிப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.



22 கருத்துகள்:

  1. பணமதிப்பிழப்பு நடந்த நேரத்தில் நடந்த பயணமா? சமாளிக்கக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே திட்டமிட்ட படியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லாம் சமாளித்துக் கொள்ளலாம் என்ற ஒரு தைரியமும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஆஹா! டிமானிட்டைசேஷன் போது பயணம்...சமாளித்துள்ளீர்கள் போலும்...

    சாப்பாடு நாவூறுது...நீங்க சொன்ன ஐட்டெம்ஸ்...

    ஆம் ஷாக் சப்ஜி என்பதை நான் நெட்டில் பல குஜராத்தி ரெசிப்பிஸ் பார்த்த போது அறிந்தேன்...அவர்கள் உணவு எல்லாமே நன்றாக இருக்கிறது...சாப்பிட்டதும் உண்டு...

    அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறோம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எங்களால் சமாளிக்க முடிந்தது! பழைய, புதிய நோட்டுகள், அட்டை என சமாளித்து விட்டோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  4. மாவு அரைப்பது போன்ற சிக்கலில் மாட்டாமல் தப்பித்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. பயணம் என்றால் வெங்கட்டா!!!! தொடர்க மேலும் மேலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் என்றால் இன்னும் சிலரும் உண்டு ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. இரண்டு தொடரிலும் உணவுக் குறிப்புகள். பணமதிப்பிழப்பின்போது, கஷ்டத்தைவிட பயம்தான் ஜாஸ்தி இருந்தது. அவசரத்துக்குப் பணம் கிடைக்காதோ என்று. ஆலு சப்ஜி, குஜராத்தி ரெஸ்டாரன்டில் ஸ்டேண்டர்டு . தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலு சப்ஜி - பெரும்பாலான வட இந்திய நகரங்களில் இதே தான்.

      கஷ்டத்தினை விட பயம் அதிகம் - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே!

    ஷாக் அதிகம்தான் ரசித்தேன்..:)
    பயணம் இன்னுமொன்றும் பயங்கரமாகவில்லை...

    வருகிறேன் பின்தொடர்ந்து!....

    நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  8. இந்த ஷாக்குகளை நாங்கள் ராமேஸ்வர பயணத்தில் ஒருகுஜராத்தி உணவகத்தில் உண்ட நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. ஷாக் அடிக்குது சோனா.....


    தல பாட்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  10. பதிவை படிக்கும்போது ஷாக் அடித்தது ஜி
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  11. குஜராத்திகள் வர்த்தகத்தில் சிறந்தவர்கள். 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது எவ்வாறு தங்கள் வர்த்தகத்தை உஷாராக நடத்தினார்கள் என்று கவனித்தேன். வெளிநாடுகளில் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் இவர்களின் வர்த்தகங்க நிறுவனங்கள் புகழ்பெற்றவை. சுவையான உணவு! சுவையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அவர்கள் வர்த்தகத்தில் திறமைசாலிகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....