செவ்வாய், 9 ஜனவரி, 2018

சாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி



ஷல்கம் சப்ஜி

அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எடுத்து வருவார். இனிப்பும் காரமும் சேர்ந்து நன்றாகவே இருக்கும். குளிர் காலத்தில் இதை வாரத்திற்கு ஒரு முறையேனும் சாப்பிடுவது ரொம்ப நல்லது என்று சொல்வதோடு, “ஜோ காவே ஷல்கம், உசே நஹி ஆவே Bபல்கம்” என்றும் சொல்வார்.  ”அட, வர வர, இந்தத் தளத்தில் இந்தித் திணிப்பு ரொம்பவே அதிகமா இருக்கு!” என்று நீங்கள் நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை! ஷல்கம் – எந்தக் காய்கறி என்பதை கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன்னர் இந்த சப்ஜி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்!


தேவையான பொருட்கள்:


ஷல்கம் - துண்டுகளாக...

ஷல்கம் – 250 கிராம்
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
சீரகம் – ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
தனியா பொடி - ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீ ஸ்பூன்
சர்க்கரை – 1 டீ ஸ்பூன் [அ]
வெல்லம் – சிறு கட்டி. குளிர்காலத்தில் வெல்லம் நல்லது!
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தனியா இலை – அலங்கரிக்க!

எப்படிச் செய்யணும் மாமு?

ஷல்கம் நன்றாக சுத்தம் செய்து, தோலை நீக்கிக் கொள்ளவும், பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

துண்டுகளாக்கிய தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

Pressure Pan-ல் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், ஜீரகத்தினை போடவும் – பட படவென பொரிந்த பிறகு, துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் ஷல்கம்-ஐ போடவும். 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், தனியா பொடி, மிளகாய் பொடி, சர்க்கரை [அ] வெல்லம், தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் வதக்கவும்.

அடுத்ததாக, அரைத்து வைத்திருக்கும் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 3-4 நிமிடங்கள் வரை வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, Pressure Pan-ஐ மூடி, 4-5 விசில் வந்த பிறகு தீயைக் குறைத்து சில நிமிடங்கள் வைத்திருக்கவும்.

அடுப்பை அணைத்த பிறகு, சில நிமிடங்கள் கழித்து Pressure pan-ஐ திறந்து, ஷல்கம் சப்ஜியை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்! மேலே கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கலாம்! சுவையான ஷல்கம் சப்ஜி தயார்! சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் தொட்டுக்கொள்ள இந்த சப்ஜி நன்றாக இருக்கும்!

அது சரி ஷல்கம் என்பது என்ன, ஹிந்தியில் ஒரு வாக்கியம் சொன்னீர்களே அதன் அர்த்தம் என்பவர்களுக்கு….  ஷல்கம் – முள்ளங்கி வகையைச் சார்ந்தது. நூல்கோல் என்பதன் ஹிந்தி பெயர் தான் ஷல்கம். ஆங்கிலத்தில் Turnip! குளிர் காலத்தில் இதைச் சாப்பிடுவது நல்லது, சளி பிடிக்காது!


இது தான் ஷல்கம்

என்ன நண்பர்களே இந்த ஷல்கம் வாங்கி செய்து பார்க்கப் போகிறீர்கள் தானே! செய்து பார்த்து, ருசித்து, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

44 கருத்துகள்:

  1. ​நாங்க turnip சாம்பார், கூட்டு, பொரிச்ச குழம்பு தான் செய்வோம். இங்கு கிலோ 40/-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி JK22384 ஐயா.

      நீக்கு
  2. நூல்கோல்! இது வீட்டில் வாங்குவதும் இல்லை, சமைப்பதும் இல்லை. இந்த ரெஸிப்பி நன்றாய் இருக்கும் போல. குறித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ஊரில் இருந்த வரை நூல்கோல் சாப்பிட்டதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. நூல்கோல் வெள்ளை அதிகம் இங்கே கிடைக்கிறது. ஷல்கம் கிடைப்பதில்லை. நூல்கோல் சாம்பார் முள்ளங்கி சாம்பார் மாதிரியே இருக்கும். ஷல்கமோடு ராஜ்மாவும் சேர்த்துப் பண்ணுவேன். ஜீரா ரைஸுக்குத் தொட்டுக்க நல்லா இருக்கும். நூல்கோல் வெள்ளை எனில் அதோடு பட்டாணி! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் - இதில் வெங்காயம் போடலையே. இங்கு நூல்கோல், ஷல்கம் (இது என்னா பேரு) போன்ற எல்லாம் இன்னும் 2 மாதங்கள் வரை புத்தம் புதிதாகக் கிடைக்கும் (இங்கயே விளையுது). ஆனா எனக்கு இந்த சப்ஜி அப்பீலிங்கா இல்லை, கீதா சாம்பசிவம் மேடம் பின்னூட்டம் பார்க்கும்வரை. ஜீரா ரைசுக்கு நிச்சயம் தொட்டுக்க நல்லா இருக்கும். அதைப் பாராட்டும் விதமாத்தான், என் பின்னூட்டத்தை அவங்க பின்னூட்டத்துக்குக் கீழே கொடுத்திருக்கேன்.

      நீக்கு
    2. ஹாஹாஹா, நெ.த. வெங்காயம்போட்டும் பண்ணலாம்! வெங்காயம், தக்காளியை அரைச்சு விட்டும் பண்ணலாம். போடாமலும் செய்யலாம்.:))) மடர் ரைஸ், ஜீரா ரைஸுக்குத் தொட்டுக்க நல்லா இருக்கும்.

      நீக்கு
    3. ஷல்கம் - ராஜ்மா சேர்த்து செய்ததில்லை. மற்றபடி வெள்ளை நூல்கோல் இங்கேயும் கிடைக்கிறது.

      சில சமயம் வெங்காயம் சேர்த்தும் செய்வதுண்டு. ஆனால் அதன் சுவை வேறுபடும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    4. ஆமாம் நெல்லைத் தமிழன் - நூல்கோல், ஷல்கம் எல்லாமே இங்கே குளிர் காலத்தில் மட்டும் அதிகம் கிடைக்கும். குளிர் காலத்தில் தான் நிறைய காய்கறிகள் ஃப்ரெஷ்-ஆகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.

      வெல்லம் போட்டு இந்த மாதிரி சப்ஜி, சப்பாத்தி/பூரி கூட சாப்பிட்டு பாருங்க. இல்லைன்னா கீதாம்மா சொல்ற மாதிரி ஜீரா ரைஸ் கூடவும் சாப்பிடலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    5. சில சமயம் வெங்காயம் சேர்த்தும் செய்வேன் - க்ரேவி என்றாலே இங்கே வெங்காயம், தக்காளி, பூண்டு மூன்றும் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. வெங்கட்ஜி இது தில்லியில்/குர்காவன் இல் பார்த்திருக்கேன்...ரெசிப்பி குறித்துக் கொண்டேன்..நான் தக்காலியுடன் வெங்காயம் வதக்கி பூண்டு சேர்த்து செய்வதுண்டு..இங்கு கிடைக்கும் நூல்கோலில்.உங்கள் ரெசிப்பி என்ன மாமியாருக்கு ஏற்ற ஒன்று.. செய்யறேன்...இங்கு இளம் பச்சை கலர் நூல்கோல்.. டர்னிப் கிடைக்கிறது...ஆனால் இது இங்கு பார்த்ததில்லை..கிடைக்குதான்னு பார்க்கணும்...

    கோஸிலும் ரெண்டு கலர் உண்டே...இளம் பச்சை/க்ரீம் கலர் மற்றும் வயலட்...அது போல்...இதுவும்..நூல்கோல் டேஸ்ட் தான் இதிலும் வருமோ....அல்லது வேறு மாதிரி இருக்குமா

    மிக்க நன்றி ரெசிப்பிக்கு..ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியாவில் மட்டும் தான் இந்த ஷல்கம் பார்த்திருக்கிறேன். நம் ஊரில் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.

      கோஸ் வயலட் கலர் இங்கேயும் கிடைக்கிறது. ஆனால் வாங்கி சமைத்ததில்லை. எதுக்கு வேண்டாத வம்பு என்று ஒரு எண்ணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. இந்த காயை பார்த்து இருக்கிறேன் ஆனால் இது வரை வாங்கி சமைத்தது இல்லை சமைத்து பார்த்துவிட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைத்தால் செய்து பாருங்கள் மதுரைத் தமிழன். நன்றாகவே இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  6. முள்ளங்கியில் இந்த மாதிரி செய்வேன் - வெல்லம் போடாமல்..

    எப்படியோ -
    ஷல்கம் சப்ஜிக்கு வெல்கம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முள்ளங்கியில் இப்படி செய்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. ஹாஹா... பிரிக்கமுடியாது எது ? பஞ்சாபியும் ஷல்கமும் .நவம்பர் டிசம்பர் களில் ஆபீசில் பாதி பஞ்சாபிகள் இதுதான் லஞ்சுக்குk கொண்டுவருவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரிக்க முடியாதது எதுவோ? ஹாஹா... உண்மை தான். வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் இது உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  8. ஹிந்தியை திணிக்கும் வெங்க்ட்ஜி தமிழகம் வரும் போது கறுப்பு கொடிகாட்டப்படும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குப் பதிலா, அவருக்கு கறுப்பு எள்ளுருண்டை பாக்கெட் கொடுக்கப்படும் என்று சொன்னீங்கன்னா, எதிர்ப்பைத் தெரிவிச்சா மாதிரியும் ஆச்சு, அவருக்கு உபயோகமான ஒன்றைக் கொடுத்தா மாதிரியும் ஆச்சு.

      நீக்கு
    2. கறுப்பு கொடி காட்டுபவர்க்கே எள்ளுருண்டை என்னா எனக்கும் எள்ளுருண்டை பிடிக்கும் வெங்கட் ஜீ ஒரு டீல் எள்ளுண்டை கொடுத்தால் கறுப்பு கொடி உங்களுக்கு காட்டப்படாது சரியா

      நீக்கு
    3. ஆஹா நாம போறதே கஷ்டம் - அதுல போராட்டம் வேறயா? கிழிஞ்சது கிருஷ்ணாவரம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
    4. பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு!

      அதான் எள்ளுருண்டை டீலிங் நெல்லைத் தமிழன். சின்ன வயதில் நிறைய சாப்பிட்டு இருக்கேன். இங்கே Ghajak-னு வெள்ளைக்கலர்ல எள்ளு மிட்டாய் [தட்டையாக] கிடைக்கும். ஆனால் நம்ம ஊர் டேஸ்ட் வராது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    5. ஆஹா எனக்கு எள்ளுருண்டை கிடைக்கும்னு பார்த்தா, கிடைக்காது போல இருக்கே! இந்த டீலிங் சரி வராது! சரி போனா போது, இரண்டு கிடைச்சா ஒண்ணு உங்களுக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  9. அது தானே கறுப்புக்கொடி தான்!..

    ஆனாலும்,
    அன்றைக்கு தீபிகாவுக்கு வெல்கம் ஆடல் பாடலுடன்...அழகோ அழகு!..
    இன்றைக்கு சப்ஜிக்கு வெல்கம் கட்டா மிட்டாவுடன்...சுவையோ சுவை!..

    அப்போ - கறுப்புக் கொடி!?..

    அதைத்தான் காக்கா வெரட்டுறதுக்கு....ன்னு மாடிக்கு எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நல்ல வேளை கறுப்பு கொடியை காக்கா ஓட்ட எடுத்துட்டு போயிட்டாங்க... நான் தமிழகத்துக்கு போக பயந்துட்டு இருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. இதே மாதரி நான் சொரக்காய் போட்டு செய்வேன்.....

    நூல்கோல் என்பதன் ஹிந்தி பெயர் தான் ஷல்கம்.பையனு பாட புத்தகத்தில் படிக்கும் போது கேட்டு இருக்கேன்...


    குளிர் காலத்தில் இதைச் சாப்பிடுவது நல்லது, சளி பிடிக்காது!......நல்ல தகவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  12. ஓ அதென்ன சல்கம் என நினைச்சேன் .. கிசாக்கா சொன்னதுபோல் நோக்கிள்...:)..

    கறி பார்க்க மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா....

      நீக்கு
  13. முள்ளங்கிக் கூட்டு (ஷல்கம் சப்ஜி) பற்றிய பதிவு சுவையாக இருந்தது. சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்து என்று ஊடகங்கள் சொல்லப்போய் டர்னிப் இப்போது ராக்கெட் விலையேற்றம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷல்கம் வேறு முள்ளங்கி வேறு - அதே குடும்பத்தினைச் சேர்ந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு
  14. முள்ளங்கியில் செய்வது எல்லாமிந்த ஷல்கமிலும்செய்யலாம்போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. எங்க ஊரில் இதுலாம் கிடைக்காது. அதனால் ஷல்கம் வாங்கி எனக்கு அனுப்பவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுப்பிட்டா போச்சு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    ஷல்கம் சப்ஜி நன்றாகவிருந்தது. நீங்கள் கட் செய்து வைதத்திருக்கும் காயை பார்த்ததும் முள்ளங்கி என நினைத்தேன் நூல்கோலுக்கு இப்படி ஒரு பெயரா? இளம் பச்சைநிற நூல்கோலில் அடிக்கடி கறி,கூட்டு, சாம்பார் என செய்துள்ளேன். வெள்ளை கலரிலும் பயன்படுத்தியிருக்கிறேன். வெங்காய கலரில் இப்போதுதான் பார்க்கிறேன். இங்கும் எங்காவது இருக்கலாம்! இனி தென்படுகிறதா என பார்க்க வேண்டும்.தங்கள் செய்முறையை குறித்து வைத்துள்ளேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைத்தால் செய்து பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  17. Good receipe.but Turnip and knolkhol(Kohlrabi) is not same,but the same root family.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி JAI.

      நீக்கு
  18. தலைப்பும் படமும் பதிவுக்கு விரட்டி வந்தன. கடைசி வரை சஸ்பென்ஸ் வேறு! :)) நம்ம செவ்வாய் சந்தையிலே பார்த்திருக்கேன். இனி வாங்கிடலாம். சகோ சொல்வதால்.
    வயலெட் கோஸ் இன்று பொரியல் செய்தேன். நன்றாகத் தான் இருந்தது. சொல்லப் போனால் கோஸின் வாடை கூட இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயலட் கோஸ் இதுவரை வாங்கியதில்லை. ஏனோ ஒரு தயக்கம்.... வாங்கிப் பார்த்துட வேண்டியதுதான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....