புதன், 3 ஜனவரி, 2018

ப்ரெட் சாண்ட்விச்-உம் வெங்காய சாம்பாரும்!ப்ரெட் சாண்ட்விச் கூட வெங்காய சாம்பாரா? என்னய்யா காம்பினேஷன் இது! இட்லிக்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு சாப்பிட்ட மாதிரி – ஓ நார்த் சவுத் காம்போவா என்று கேட்கப் போகிறார் ஒரு சாப்பாட்டுப் பிரியர்! விஷயத்துக்கு வருகிறேன்! நேற்று கிடைத்த ஒரு அனுபவம் பற்றி தான் இன்று சொல்லப் போகிறேன்! எங்கம்மா அடிக்கடி ஒரு வசனம் சொல்வார்கள் – “காணாத கண்ட கம்பங்கூழ, சிந்தாத குடிடா சில்லி மூக்கா!” என்பது அந்த வசனம்! அதற்கு அர்த்தம் நேற்று நடைமுறையில் பார்க்கக் கிடைத்தது!


பெரும்பாலான நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தின் share-களை வாங்கி வைத்திருப்பவர்களை அழைத்து AGM – Annual General Body Meeting நடத்துவார்கள்! வருபவர்களை போட்டு தாக்கு தாக்குன்னு தாக்குவார்கள் – எங்க கம்பெனி இத்தனை வளர்ச்சி கண்டிருக்கு, உங்களுக்கு இவ்வளவு லாபம் தந்திருக்கு, Pie Chart, Flow Chart, Table நு என்னன்ன உண்டோ அத்தனையும் போட்டு ட்ராமா காட்டுவார்கள். வந்தவர்களுக்கு கம்பெனி பெயர் போட்ட ஒரு கீ செயினோ, பையோ கொடுப்பார்கள் – அத வாங்க ஒரு அடிதடி நடக்கும்! இப்பவும் அம்மா சொல்லும் ஒரு வசனம் தான் நினைவுக்கு வருகிறது – “ஒன்றையணா பெறாத விஷயத்துக்கு” அத்தனை அடிதடி! அக்கப்போர்! அதற்குப் பிறகு High Tea என ஒரு சமாச்சாரம் நடக்கும்! அங்கே தான்  இன்னிக்கு சொல்லப் போற Combo Pack!இந்த இங்க்லீஷ் காரன் டீ குடிக்கறதுக்குக் கூட விதம் விதமா பேர வச்சு இருக்கான்! – Afternoon tea, High tea, Morning Tea ந்னு வித்தியாசம்! இந்த Afternoon tea-க்கு Low Tea-ன்னு கூட பெயர் உண்டு! மத்தியானம் குடிக்கிறது Low Tea, சாயங்காலம் ஐந்து மணிக்கு குடிக்கிறது High Tea! High tea-ல கொடுக்கற உணவும், Low Tea-ல கொடுக்கற உணவும் வேறு வேறு! நம்மாளுங்க அந்த பெயரை மட்டும் வைத்துக் கொண்டு கொடுக்கற விஷயம் இந்தியாவின் உணவுகள்! அதுவும் டெல்லியில் High Tea சமயத்துல, கொடுக்கற உணவு பார்த்தா மயக்கமே வரும்! நேற்று சென்றிருந்த இடத்தில் இருந்த மெனு உங்கள் பார்வைக்கு!

ப்ரெட் சாண்ட்விச் – Brown [Wheat] Bread மற்றும் White Bread, அதற்கு தொட்டுக்கொள்ள Sauce! - யாராவது ஹிந்தி லேடிக்கிட்ட போய் சாஸ் குடுங்கன்னு கேட்டுடாதீங்க, நல்லதா போச்சுன்னு அவரோட மாமியார உங்க வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பிடுவாங்க! ஹிந்தில சாஸ் அப்படின்னா மாமியார்!

ரவா இட்லி – தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, வெங்காய சாம்பார்

முருகலா காலிஃப்ளவர் பக்கோடா

முந்திரி திராட்சை, ஆலு போட்ட சமோசாபக்கோடாவுக்கும் சமோசாவுக்கும் தொட்டுக்கொள்ள கொத்தமல்லி சட்னி!

தஹி Bபல்லா பாப்டி

ஆலு டிக்கி

கேசரி

குலாப் ஜாமூன்
                        
இது தவிர, காப்பி, டீ, ஆப்பிள் ஜூஸ் [Tetra Pack-ல்]! Of course தண்ணீர் உண்டு!

காலங்கார்த்தால இப்படி சாப்பாட்டு ஐட்டம் சொல்லி பசியைக் கிளப்பறன்னு சிலர் மைண்ட்வாய்ஸ்-னு நினைச்சு சத்தமா பேசியது கேட்டுடுச்சு! Mind your words ladies and gentlemen!

இப்படி ஒரு மெனு இருந்தா எல்லாத்தையும் உங்களால சாப்பிட முடியுமா? என்னால சர்வ நிச்சயமா முடியாது! Saucer-ஐ விட கொஞ்சம் பெரிய ப்ளேட் தான் வைத்திருந்தார்கள்! அதில் ஒன்றிரண்டு Item வைத்து சாப்பிடுவார்கள் என நினைத்தால், பலரும் இருக்கும் எல்லா சாப்பாட்டு சமாச்சாரங்களையும் அள்ளி அள்ளி வைத்துக்கொள்ள Saucer மூச்சுவிடத் திணறியது! இடமே இல்லாமல் குவிந்து இருந்தன சாப்பாடு ஐட்டங்கள்!

ரவா இட்லி சாஸ்-உடன் கொஞ்சிக் குலாவ, ப்ரெட் சாண்ட்விச் சாம்பாருடன் சல்லாபம் கொள்ள, கேசரி கொத்தமல்லி சட்னியுடன் உறவு கொள்ள “சம்போகம்!” தான் அங்கே! “காய்ஞ்ச மாடு கம்பங்கொல்லைல புகுந்த மாதிரி ஒரே அதகளம்! இத்தனையும் சாப்பிடுவது அவரவர் Capacity பொறுத்தது! ஒத்துக் கொள்கிறேன்! ஆனால் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் போட்டுக்கொண்டு அனைத்தையும் கலந்து கட்டி அடிப்பது நன்றாகவா இருக்கிறது! எல்லாமும் சாப்பிட வேண்டும் என்றால் மெதுவாக, ஒவ்வொன்றாக சாப்பிடலாம் அல்லவா? கொடுக்க மாட்டேன் எனச் சொல்லப் போவதில்லை! ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் போட்டுக்கொள்வது எதற்கு என்று கேட்டால், வாய் நிறைய உணவை வைத்துக்கொண்டு, வெத்தலை போட்டவர் பேசுவது போல சொன்னார் ஒருவர் – சீஹ்கொஜொஇகொஹ் – என்னது? தீர்ந்துடுமாம்!

விதம் விதமாய் உணவு இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் உண்ண முடியாது! எல்லாவற்றையும் கலந்து அவ்வுணவுப் பொருட்களின் உண்மையான சுவையை விடுத்து, குப்பைக்கூடைக்குள் குப்பை போடுவது போல எல்லாவற்றையும் வயிற்றின் உள்ளே தள்ளுகிறார்கள்! இதற்கு மேல் தஹிபல்லா – தயிர் சேர்த்தது – மேலே காபி! சிறிது நேரம் கழித்து ஆப்பிள் ஜூஸ்! “ஒண்ணையும் விட மாட்டோம்ல!” என்று கலக்கிக் கொண்டிருந்தார்கள்!

வந்தவர்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் அல்ல! கிடைச்சப்ப எல்லாத்தையும் சாப்பிட வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களும் அல்ல! ஆனாலும் தங்கள் நிலை மறந்து இப்படிச் சாப்பிடுபவர்களை என்ன சொல்ல! ஓசியில் கிடைக்கிறது என்பதற்காக ஒன்பது வகை சாப்பிட முடியுமா! முடியும்! எனச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்!

அதெல்லாம் சரி, மத்தவங்களை வேடிக்கை மட்டும் தான் பார்த்தீங்களா, நீங்க சாப்பிடலையா? என்று கேட்பவர்களுக்கு, ஒரு ப்ரெட் சாண்ட்விச் with சாஸ், காலி ஃப்ளவர் பக்கோடா, மற்றும் சுடச் சுட ஒரு குலாப் ஜாமூன்! தனித்தனியாக! High Tea என்று சொன்னாலும் நான் குடித்தது காஃபி! மறத்தமிழன் காஃபி தான் குடிப்பான்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.


38 கருத்துகள்:

 1. தயிர் மேல காபியா! தொப்பையை குப்பைக்கூடை ஆக்கிவிட்டார்களா! ஹா... ஹா... ஹா... சுவாரஸ்யம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலருக்கு தொப்பை குப்பைக் கூடை தான் ஸ்ரீராம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. ஆமாம், இந்த பஃபே விருந்து முறையில் நானும் இப்படிப் பலரைப்பார்த்திருக்கேன். மெதுவா ஒவ்வொண்ணா ரசிச்சுச் சாப்பிட வேண்டாமோ! தினசரி சாப்பிடும்போது கூட நான் கொஞ்சம் கொஞ்சமாத் தான் சாதம் போட்டுப்பேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசிச்சு சாப்பிட வேண்டாமோ? அதே தான். கலந்து கட்டி உள்ளே தள்ளுவதில் என்ன அர்த்தமிருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 4. //மறத்தமிழன் காஃபி தான் குடிப்பான்!// Liked the post particularly this line! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   நீக்கு
 5. இலவசம் என்றாலே அடித்துப்பிடித்து அள்ளும் கூட்டம் எல்லாத்தரப்பிலும் இருக்கிறது போலும். சாப்பாடு விஷயத்தில் உடனிருப்பவர்கள் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்வதைப் பார்க்கும் நமக்கு சாப்பிடவே தோன்றாது. ஆனால் மெனு சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களைப் பார்த்தால் நமக்குச் சாப்பிடத் தோன்றாது - உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 6. ஹா ஹா ஹா ஹா ஹா ஜி பலரையும் இப்படிச் சாப்பிட்டுப் பார்த்திருக்கேன்! ஐட்டங்கள் நல்லாத்தான் இருக்கு ஆனா இத்தனையும் எப்படிச் சாப்பிட முடியும்? ஆனா பஃபே சிஸ்டத்தில் இப்படித்தான் எல்லாத்தையும் வைச்சுடுவாங்க. கலந்து கட்டி அடிக்கும் போது எப்படிச் சுவை தெரியும் ஜி?!!!! ஆச்சரியம் தான்...

  ஒவ்வொண்ணா நம்ம வயிற்றின் கப்பாசிட்டிக்கு ஏற்ப எடுத்துச் சுவைத்து ரசித்து சாப்பிடாம என் இப்படிக் கலந்து கட்டி அடிக்கறாங்க அதுவும் வாயில வைச்சுக்கிட்டுப் பேசிக்கிட்டே என்று நினைப்பதுண்டு இப்படியான விருந்துக்குச் செல்லும் போது...

  இப்பலாம் கல்யாண விருந்தே இபப்டித்தான் ஆகிவருகிறது....நம் வயிறு குப்பைக் கிடங்காய் ஆகி வருகிறதுதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயிறு குப்பைக் கிடங்காய் - உண்மை! பலர் கண்டதையும் வயிற்றுக்குள் தள்ளுவதை நிறுத்துவதில்லை. இன்று கூட அலுவலகத்தில் ஒருவர் மதியம் ஒன்றரை மணிக்கு ஐந்து சப்பாத்தி, இரண்டு சப்ஜி என சாப்பிட்டவர் மூன்று மணிக்கு ஏதோ தின்பண்டம் தின்று கொண்டிருந்தார். என்னால் நிச்ச்சயம் முடியாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. என் சாப்பாடு அளவெல்லாம் ரொம்பவே அளவுப்படிதான்....குறைச்சல்... கொஞ்சம் தான் எடுத்துக் கொள்வேன் ஆனால் ரசித்துப் புசிப்பது வழக்கம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்துப் புசிப்பது - நல்ல விஷயம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 8. எனக்கு இம்மாதிரி சாப்பிடுபவர்களைக்கண்டால் குஷிதான் நமக்கு முடியாது முடிந்தவர்கள்ரசிப்பதையாவது பார்க்கலாமில்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பின்னூட்டத்தை ரசித்தேன். எல்லோருக்கும் இந்த நல்ல மனநிலை வாய்ப்பதரிது. பாராட்டுக்கள் ஜிஎம்பி சார்.

   நீக்கு
  2. முடிந்தவர்கள் சாப்பிடட்டும் என ரசிப்பது நல்ல விஷயம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
  3. நல்ல மனநிலை வாய்ப்பதரிது.... உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. எல்லாம் கிடைக்கிறது என்பதற்காக எப்படி சாப்பிடுவது எதை சாப்பிடுவது என்பது கூட பலருக்கும் தெரிவதில்லை. நான் இப்படிபட்ட விருந்திற்கு போனால் நம் வீட்டில் அடிக்கடி சாபிடாதது எது என்று பார்த்து அதை செலக்ட் செய்து அதை ரசித்து சாப்பிடுவேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டில் செய்ய முடியாததை, கிடைக்காததை சுவைப்பது நல்ல விஷயம் - அது நமக்குப் பிடித்ததாக இருந்தால்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 10. வணக்கம் சகோ!

  .... :))

  என்னவெனச் சொல்ல இதனை!....
  இப்படியும் சில அல்ல பல மனிதர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 11. "தங்கள் நிலை மறந்து இப்படிச் சாப்பிடுபவர்களை என்ன சொல்ல!" - அங்க, காசுக்கு வாக்கை விற்பதைப் பற்றி. எப்போ இது மாதிரி, அதீதமான ஆசை இருக்கோ, அப்புறம் மற்றவர்களின் தவறை யார்தான் திருத்துவது?

  எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, அதை மட்டும்தான் நான் எடுத்துப்பேன். (ஆனா, சில சமயம் சதாப்தில போகும்போது, சில குப்பைகளும் வயிற்றுக்குள் செல்வது உண்மை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சதாப்தியில் சில குப்பைகள் - பெரும்பாலும் தவிர்த்து விடுவேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 12. எனக்கும் காஃபிதான். சர்க்கரை தூக்கலா ஸ்ட்ராங்கா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 13. பதிவு சிரிக்க வைக்கிறது.. சுவாரஷ்யம்..

  //ஹிந்தில சாஸ் அப்படின்னா மாமியார்!//
  ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 14. High Tea பற்றி படித்துள்ளேன். பிற வகையினை உங்கள் பதிவு மூலமாகத்தான் அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 15. எங்கள் நிறுவன பவ்வே நேரங்களில் நான் நேரடியாக உணரும் சம்பவங்கள் தான் இவைகள். சாப்பாடு என்பது பசிக்கு மட்டுமல்ல ருசிக்கும் என அறியாமையுடன் காணும் அனைத்தினையும் தட்டில் அள்ளிச்செல்லும் பலர் இங்குமுண்டு. எதெதுக்கு அததுடன் பொருந்தும் என தெரியாமல் தட்டில் போடுவார்களா என யோசிப்பேன். சில பல தடவை நான் சொல்வேன். இதனுடன் இதை எடுத்து சென்று சாப்பிட்டு விட்டு மீண்டும் வாருங்கள் என்பேன். பலருக்கும் புரியாது. சிலருக்கு புரியும். எனக்கெல்லாம் பவ்வே வகையில் நூறு வெரைட்டி இருந்தாலும் அந்த நேரம் மன்சுக்கு பிடித்தது இருந்தால் பசித்தால் தான் பசியின் அளவுக்கு மட்டுமே தட்டில் எடுத்து கொள்வேன். தேவையெனில் மீண்டும் எடுத்து கொள்ளலாம் தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு இந்த விஷயம் அடிக்கடி பார்க்கும் ஒரு விஷயமாக இருக்கும். சில சமயத்தில் நானும் சொல்வதுண்டு - கேட்டால் தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 17. நீண்ட நாட்களுக்கு முன்பு ஆவடியில் கனரக வாகன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த சமயம். 1978 ஆம் ஆண்டு சென்னையை புயல் புரட்டிப்போட்ட சமயம். ஏரிகளில் உடைப்பு.. சாலைகள் துண்டிப்பு... மின்சாரம் இல்லை, பஸ் போக்குவரத்து இல்லை, கடைகள் திறந்திருக்கவில்லை. சாப்பிட ஒன்றும் கிடைக்காத சூழ்நிலையில் நான் சாப்பிட்டுவந்த மெஸ்ஸில் பிரட் ஸ்லைசும் சாம்பாரும் பரிமாறினார்கள். தேவாம்ருதமாயிருந்தது. உங்கள் பதிவு அந்த நாளை நினைவு படுத்தியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி. எனது பதிவு உங்கள் நினைவலைகளை மீட்டியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஜி!

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....