முன்பெல்லாம் பொங்கல் சமயத்தில் கண்டிப்பாய் ஒரு ஐந்து நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும். நாங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் எல்லோரது வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டியெல்லாம் கிடையாதல்லவா, அதனால் வானொலியில் வரும் நேரடி வர்ணனைதான் எங்களுக்கெல்லாம். காலை 08.55 மணிக்கே வானொலியை இயக்கி தமிழில் கிரிக்கெட் போட்டியின் வர்ணனை கேட்க எங்கள் வீட்டிலோ நண்பர்கள் வீட்டிலோ எல்லோரும் கூடி விடுவோம்.
திரு ராம மூர்த்தி, திரு கூத்தபிரான் மற்றும் சிறப்பு வர்ணனையாளர் ரங்காச்சாரி ஆகியோரது குரல்களைக் கேட்ட நம்மில் பலரால் இவர்களை மறக்க முடியாது என்பது சர்வ நிச்சயம். இப்படி எல்லாம் கேட்டுக் கேட்டு கிரிக்கெட் கற்றுக்கொண்டு விளையாடவும் ஆரம்பித்தோம். நெய்வேலியில் மைதானத்திற்கா பஞ்சம்?
பந்து எல்லாம் காசு கொடுத்து வாங்கி பழக்கம் இல்லை. சைக்கிள் ட்யூபினை சிறிது சிறிதாய் வெட்டி, நிறைய சேர்த்துக்கொள்வோம். நோட்டில் இருந்து ஒரு பேப்பர் கிழித்து சிறு சிறு கற்களை அதனுள் வைத்து பேப்பரைச் சுருட்டி அதன் மேல் வெட்டி வைத்த சைக்கிள் ட்யூப் ரப்பர் பேண்டுகளை ஒவ்வொன்றாய் போட்டுக்கொண்டே வந்தால், நல்லதோர் பந்து ரெடி. கிரிக்கெட் மட்டைக்கு கீழே விழுந்த தென்னம்பாளையை சீவினால் அதுவும் ரெடி. இதையெல்லாம் வைத்துக்கொண்டு விடுமுறை நாள் முழுதும் வெயில் என்று கூட பாராமல் விளையாடியிருக்கிறோம்.
இப்போது கிரிக்கெட் விளையாட்டு என்பதே புளித்துப் போகவைப்பது போல டெஸ்ட் கிரிக்கெட், ஒன் டே கிரிக்கெட், 20-20, உலகக்கோப்பை இதெல்லாம் பத்தாது என கடந்த நான்கு வருடங்களாய் ஐ.பி.எல். வேறு. தினம் தினம் ஏதோ இரண்டு அணிகள் மோதிக் கொள்கின்றன. அதை வைத்து வியாபாரம் கண ஜோராய் நடந்து கொண்டு இருக்கிறது. லட்சங்களிலும் கோடிகளிலும் அள்ளிக் குவிக்கிறார்கள்.
உலகக்கோப்பையினை இந்தியா ஜெயித்ததில் சந்தோஷம் தான். அதன் பின்னர் ஒவ்வொரு மாநில முதல்வர்களும் மற்றவர்களும் கோடிகளில் அறிவிக்கும் பரிசுத்தொகை, வீட்டுமனைப் பட்டாக்கள் என்று இத்தனை நடக்கிறது கிரிக்கெட் விளையாட்டிலும் அது சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும். ஆனால் அந்தோ பரிதாபம் – நமது தேசிய விளையாட்டான ஹாக்கி, கால்பந்து, கூடைப்பந்து, தடகள வீரர்கள் போன்றவர்களுக்கு பரிசுத்தொகைக் கூட தரவேண்டாம் ஒருவித மரியாதையாவது இருக்கிறதா நம் அரசியல்வாதிகளிடம் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது!
நேற்று தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் 1960-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற கால்பந்து வீரர்களை வரவழைத்து ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் ஒன்றரை லட்சமும், பட்டயமும் வழங்கி கௌரவித்து இருக்கிறார்கள். நல்ல விஷயம் தான். நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் இரவு சாப்பாட்டிற்கான கட்டணத்தினையும் அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என அவர்களிடமிருந்து புகார் வந்திருக்கிறது. அரசு கௌரவிப்பதற்காய் கூப்பிட்டு இருக்கிற நிலையில் இதற்குக் கட்டணம் வசூலித்துச் சிறுமைப்படுத்த வேண்டுமா எனக்கேட்ட பின்னரே விளையாட்டுத் துறை அமைச்சர் மன்னிப்புக் கேட்கிறார். வருத்தமாய் இருக்கிறது.
ஆனாலும் எத்தனை கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும், அத்தனை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஆதரவு இருக்கிறது என்பது தற்போது நடந்து கொண்டு இருக்கிற ஐ.பி.எல் போட்டிகளைப் பார்த்தாலே தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன் மும்பை இண்டியன்ஸ் அணி பங்கு பெற்ற ஒரு போட்டியினைப் பார்த்த போது, ”இந்தியத் தொலைக்காட்சியில் முதன் முறையாக” போடப்பட்ட ஒரு தமிழ்த் திரைப்படத்தினைப் பார்க்கமுடியாத தங்கமணி சொன்னது – “ஒரு ப்ளேட் நூடுல்ஸை தலையில் கவுத்த மாதிரி ஒரு தலை! அவன் ஓடிவந்து மாங்கா அடிக்கிறமாதிரி இருக்கு! அதைப் பார்க்கிறதுக்கு உங்களுக்கு போரடிக்கல!”
எத்தனை நடந்தாலும் கிரிக்கெட் பைத்தியம் நம்மை விட்டுப் போகப் போவதில்லை. மன்னிக்கணும் நாங்க வழக்கமா விளையாடற கிரவுண்ட்ல இன்னிக்கு மேட்ச் இருக்கு. அதுக்கு போகணும். வர்ட்டா...
மீண்டும் சந்திப்போம்.
வெங்கட்.
சாப்பாட்டுக்கு காசு வாங்கியவர் ஊறிப்போன அரசு அதிகாரியாய் இருப்பார். அவரவர்கள் சாப்பாட்டுச் செலவு அவரவர்களுடையது என்று மீட்டிங்கில் தீர்மானித்திருப்பார்கள்.
பதிலளிநீக்குவிளையாட்டை.. விளையாட்டாக எடுத்துக் கொண்டால் தான் நல்லது.
பதிலளிநீக்குசூப்பரா எழுதியிருக்கீங்க.
பதிலளிநீக்குநெய்வேலி விளையாட்டு நல்ல நகைச்சுவையாக இருந்தது.
பாராட்டுக்கள்.
//பந்து எல்லாம் காசு கொடுத்து வாங்கி பழக்கம் இல்லை. சைக்கிள் ட்யூபினை சிறிது சிறிதாய் வெட்டி, நிறைய சேர்த்துக்கொள்வோம். நோட்டில் இருந்து ஒரு பேப்பர் கிழித்து சிறு சிறு கற்களை அதனுள் வைத்து பேப்பரைச் சுருட்டி அதன் மேல் வெட்டி வைத்த சைக்கிள் ட்யூப் ரப்பர் பேண்டுகளை ஒவ்வொன்றாய் போட்டுக்கொண்டே வந்தால், நல்லதோர் பந்து ரெடி. கிரிக்கெட் மட்டைக்கு கீழே விழுந்த தென்னம்பாளையை சீவினால் அதுவும் ரெடி. இதையெல்லாம் வைத்துக்கொண்டு விடுமுறை நாள் முழுதும் வெயில் என்று கூட பாராமல் விளையாடியிருக்கிறோம்.// very interesting!
பதிலளிநீக்குஸேம் ஸேம் நினைவுகள்...வால்வு செட்டில் பச்சை லைட்டை முட்ட வைத்து தமிழில் வர்ணனை கேட்ட சுகம்... சொந்த தயாரிப்பு பந்தும் தென்னை மட்டை கைப்பிடி செதுக்கி ஆடிய ஆட்ட சுகம் ...இப்பொழுது ஐ.பி.எல்.. நேரில் பார்த்தால் கூட வருவதில்லை ...நல்ல நினைவுப் பதிவு
பதிலளிநீக்குஅருமையாய் மலரும் நினைவுகள். பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குஅப்துல் ஜப்பாருக்கும் ரங்காச்சாரிக்கும் இடையே நடந்த ஒரு வாக்குவாதமும் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஏதோ ஒரு கமெண்டை ரங்காச்சாரி சொல்லத் துடிக்கிறார் என்று ஜப்பார் சொல்ல வாழ்க்கையில் எதற்குமே நான் துடித்தது கிடையாது ஜப்பார் என்று ரங்காச்சாரி சொல்ல மேட்சை விட அந்த விவாதம் நினைவில் தங்கிவிட்டது.
1983 உலகக் கோப்பை இறுதிஆட்டமும் அப்படித்தான்.இந்தியா 183 ஆல் அவுட்டானதுமே அழுதுகொண்டே தூங்கப்போய்விட்டேன். மறுநாள் காலையில் பால்வாங்கச்செல்லும் போதுதான் தெரியும் இந்தியாவின் சாதனை.
நினைவுகளைக் கீறும் பதிவு வெங்கட்.
பந்து தயாரிப்பு பிரமாதம்!என் பள்ளி நாட்களில்,ஆங்கில வர்ணனைதான். ஆனந்தராவ்,சக்ரபாணி,விஜயநகர் மஹாராஜா(விஃஜி) இப்படிப் பலர்.அதன் பின்னர் ஆரம்பித்ததுதான் தமிழ் வர்ணனை!
பதிலளிநீக்குசுவாரஸ்யமான நினைவுகள்!
அருமையான மலரும் நினைவுகள்!
பதிலளிநீக்குசில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்,முதலில் கிரிகெட் மற்ற விளையாட்டுகள் கவனிக்கப்படாமல் இருக்க காரணம் இல்லை. கால்பந்தில் இந்தியா எப்ப சாதித்தது கடைசியா ? கிரிக்கெட் தனியாரிடம் இருப்பதால், நல்ல கோச் வைக்க முடிகிறது. முதலில் அரசிடம் இருக்கும் விளையாட்டு துறைகள் தனியாரிடம் ஒப்படைக்க படவேண்டும். பிறகு பாருங்கள் ரிசல்ட்டை
பதிலளிநீக்குஇன்னும் சொல்லப் போனால், ஒலிம்பிக் / காமன்வெல்த் கேம்ஸ் போட்டிகளில் பங்கெடுத்த வீரர்களின் பயிற்சிக்கு பி சி சி ஐ ஒரு குறிப்பிட்ட தொகை குடுத்தது
பதிலளிநீக்குhttp://www.hindu.com/2006/04/10/stories/2006041006451900.htm
good or bad, as of now, Cricket craze rules!
பதிலளிநீக்குஇப்படி இனிய நினைவுகள் நம்மில் நிறையபேருக்கு இருக்கும். நல்பதிவு.
பதிலளிநீக்குஇன்னுமா நீங்க கிரிக்கெட் ஆடுறீங்க (கடைசி வரி..) ஒரு வேளை ஜோக்குக்காக அப்படி முடிதீர்களோ?
பதிலளிநீக்குஎங்க வீட்டிலயும் அண்ணாக்கள் இப்படி
பதிலளிநீக்குபந்து தயாரிப்பாங்க.அதுல என்னமோ பெரிய
எஞ்சினியரிங் டெக்னலாஜி கணக்கா ஒரு நெனப்பு வேற அப்பல்லாம்.
வானொலி வர்ணனை பழைய நினைவுகளுக்கு அழைக்கிறது
மற்ற விளையாட்டுகள் விஷயத்தில் எல் கே சார் சொல்வது சரிதான்
//இப்போது கிரிக்கெட் விளையாட்டு என்பதே புளித்துப் போகவைப்பது போல டெஸ்ட் கிரிக்கெட், ஒன் டே கிரிக்கெட், 20-20, உலகக்கோப்பை இதெல்லாம் பத்தாது என கடந்த நான்கு வருடங்களாய் ஐ.பி.எல். வேறு//
பதிலளிநீக்குபன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து உள்ளூர் ஆட்கள் நம் தலையில் காஞ்ச மிளகாய், பச்சை மிளகாய் எல்லாம் அரைப்பது தெரிந்தும் மணிக்கணக்கில் கிரிக்கெட் பாக்குற மக்களை...என்ன சொல்ல.
ஹஹஹா..
பதிலளிநீக்குஇங்க என் பையன் தான் தோனியாம்..
நான் தான் அந்த நூடுல்ஸ் தலையாம்.. கிரிக்கெட் விளையாடரோம்.:)
உங்கள் எழுத்தின் எளிமையும் சரளமும் வியப்பூட்டுபவை. நானும் என் கடலூர் நாட்களுக்குப் போய் வந்தேன். தொடர்ந்து எழுதுங்கள் வெ.நா!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு!
பதிலளிநீக்குபழைய கிரிக்கெட் நினைவுகள் அலை மோதின மனதுக்குள்! ஷார்ஜாவில் தொடர்ந்து பல வருடங்கள் இந்தியா மண்ணைக்கவ்வுவதும் நாங்களும் அசராமல் சாண்ட்விச் சகிதம் ஸ்டேடியத்தில் போய் உட்கார்ந்து கொண்டு இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவதும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கும்! இந்திய விக்கெட்டுகள் சரிய சரிய பாகிஸ்தானியர்கள் தட்டுகளில் கேக் வைத்துத்தந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள். கண்களை துடைத்துக்கொள்ள கைக்குட்டைகளை மடியில் போட்டுச் செல்வார்கள். எப்படித் தோற்றாலும் இந்த நாட்டுப்பற்று மட்டும் போகாது. இப்போதோ, கிரிக்கெட் வியாபாரமானதில் அந்த பழைய சுவாரஸ்யம் வெகுவாகக் குறைந்தே போனது.
டுயூப் பால் கிரிக்கெட் நானும் விளையாடியிருக்கிறேன். ஒரு சின்ன தட்டுக்கே நான்குக்கு பறக்கும் பந்து அது. ;-))
பதிலளிநீக்கு\\\“ஒரு ப்ளேட் நூடுல்ஸை தலையில் கவுத்த மாதிரி ஒரு தலை! அவன் ஓடிவந்து மாங்கா அடிக்கிறமாதிரி இருக்கு! அதைப் பார்க்கிறதுக்கு உங்களுக்கு போரடிக்கல!”///
பதிலளிநீக்கு--இதை என் பையன்கிட்ட காட்டனும். அவனுக்கு மலிங்காவை பிடிக்காது. சச்சினும் மலிங்காவும் சேர்ந்து விளையாடுறது அவனால ஜீரணிக்கவே முடியலை. எல்லாம் காசுக்காகத்தான்னு இப்பத்தான் உணர்கிறான்.
கிரிக்கெட் என்றாலே எல்லோருக்கும் கிரேஸ் தான் ,,,
பதிலளிநீக்குகருத்தளித்து, தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@@ DrPKandaswamyPhD: இருக்கலாம் :(
## வேடந்தாங்கல் - கருண்: உண்மை நண்பரே.
@@ வை. கோபாலகிருஷ்ணன்: உங்களிடமிருந்த கிடைத்த பாராட்டு மகிழ்ச்சியை உண்டாக்கியது.
## கே.பி. ஜனா: Thank You Sir.
@@ பத்மநாபன்: உண்மை தான். தில்லியில் ஒரு போட்டி நேரில் பார்க்கப் போய் பாதியிலேயே திரும்பலாமா என்ற எண்ணத்துடனேயே இருந்தேன்...
## இராஜராஜேஸ்வரி: மிக்க நன்றி.
@@ சுந்தர்ஜி: அப்துல் ஜப்பாருக்கும் ரங்காச்சாரிக்கும் வாக்குவாதம் - சுவையான நிகழ்வினைப் பற்றி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி!
## சென்னை பித்தன்: விஃஜி - புதிய பெயர்கள் - நான் கேட்டதில்லை :)
@@ அமைதி அப்பா: மிக்க நன்றி.
## எல்.கே.: கருத்திற்கு நன்றி கார்த்திக். கிரிக்கெட் காரணம் என்று சொல்லவில்லை. அதற்குத் தரும் முக்கியத்துவத்தினை மற்ற விளையாட்டுகளுக்கு பொதுவாய் தருவதில்லை என்கிறேன்...
@@ சித்ரா: Ofcourse.
## கலாநேசன்: உண்மைதான் சரவணன். கருத்துக்கு நன்றி.
@@ மோகன் குமார்: பார்ப்பதற்கே தடா! இதில் விளையாட முடியுமா? Added Just for fun!
## ராஜி: சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்த வயதில் அது ராக்கெட் சயின்ஸ்தானே சகோ!
@@ சிவகுமார்: ஒன்றும் சொல்வதிற்கில்லை.
## முத்துலெட்சுமி: மயூர்விஹாரில் தோனி என்று நாளைக்கு ஒரு பேட்டி எடுக்கலாம் நான் :) சபரிக்கு வாழ்த்துகள்....
@@ மோகன்ஜி: மிக்க நன்றி ஜி! அவ்வப்போது இது போன்று சென்று வந்தால் சுகமாய்த்தான் இருக்கிறது.
## மனோ சாமிநாதன்: ஷார்ஜா போட்டிகள் நடக்கும்போது அப்படி ஒரு உற்சாகமாய் இருக்கும்! தோற்றவுடன் காற்றிரங்கிய பந்து போல் ஆனாலும்.... உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
@@ ஆர்.வி.எஸ்.: சின்ன தட்டுக்கே பறக்கும் - உண்மை. அது போல வந்த பந்தை காட்ச் பிடிக்கும் போது கையும் வலிக்கும் :))))
## சிவகுமாரன்: நூடுல்ஸ் தலையன் - உங்கள் மகனுக்கும் பிடிக்காதா? :)))
## ஜலீலா கமல்: உண்மை.