வெள்ளி, 17 ஜூன், 2011

நானும் மரங்களும்…


மோகன்ஜி சமீபத்தில் ஒரு பதிவு எழுதி இருந்தார்.  அவரும் நானும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ தெரியவில்லை, அவரின் பல பகிர்வுகள் என்னுடைய நெய்வேலி நினைவுகளைத் தூண்டி விடுகின்றனஅது போலவே ஒரு வருடமும் காய்க்காத பலா மரத்தின் கதையைச் சொல்ல தூண்டில் போட்டு இழுத்தது மோகன்ஜியின் அம்மா மரம்.

நெய்வேலியில் எங்கள் வீட்டில் இருந்த தோட்டத்தில் 6 மா, 2 பலா, 1 புளிய மரம், 1 அறிநெல்லிக்காய் , எலுமிச்சை, வாழை, பம்ப்ளிமாஸ், சாத்துக்குடி, சீதா போன்ற பழம் தரும் மரங்களும், மல்லி, நந்தியாவட்டை, டிசம்பர் பூ, சாமந்தி போன்ற பூச்செடிகள், இதோடு முருங்கை. கல்யாண முருங்கை, சவுண்டல், சவுக்கு என்று பல வகையான மரங்களும்  இருந்தது

மா வகைகளில், பங்கனப்பள்ளி, ஜலால் போன்ற வகைகளும், ஓட்டை மரம் என்று நாங்கள் அழைக்கும் ஒரு மா மரம் என்று விதவிதமாய் இருக்கும்இரண்டு பலா மரங்களில் ஒரு மரத்தில்தான் வருடா வருடம் காய் காய்க்கும்மற்றொன்றில் காய் காய்க்காமலேயே இருந்தது

எல்லா மரம்-செடிகளுக்கும் வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது, தோட்ட வேலை செய்வது என்று எங்களையும் ஈடுபடுத்துவார் அம்மாஅப்போதெல்லாம் ”நீ ரொம்ப நல்ல மரம்.. எவ்வளோ பழம் கொடுக்கற, நிறைய உனக்குத் தண்ணீரும், உரமும் போடுறோம்என்றெல்லாம் மரம் செடிகளோடு பேசுவோம்.

ஒரு நாள் என் கையில் ஒரு அருவாளைக் கொடுத்து, பலா மரத்தின் பக்கத்தில் அழைத்துச் சென்றார் என் அம்மா.

அந்த மரத்திடம் அம்மா சொல்லிக் கொடுத்து நான் பேசியது  “நானும் உன்னைப்  பார்த்துட்டே இருக்கேன், நிறைய தண்ணி ஊத்துறேன், உரம் போடறேன். ஆனாலும் நீ பழமே கொடுக்க மாட்டேங்கிற, உன்னை என்ன பண்ணலாம்? ...ம். இந்த வருஷம் பார்ப்பேன்பழம் கொடுக்கலைன்னா உன்னை இந்த அருவாளாலே இப்படி வெட்டிடறேன் பாருன்னுஇரண்டு மூன்று இடங்களில் வெட்டினேன்!

எனக்கும் சகோதரிகளுக்கும் அதன் பிறகு தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையே அந்த பலா மரத்தை அண்ணாந்து பார்த்து ஏதாவது பூ வைத்திருக்கிறதா என்று பார்ப்பது தான். என்ன ஓர் ஆச்சரியம்அந்த வருடம் அந்த மரத்தில் 10-15 பூக்கள் மலர்ந்து பிஞ்சாகி பின்னர் பெரிய காய்களானது.

பலாப் பிஞ்சுகள் வந்த அன்றே பார்த்து, மரத்தினை ஆரத் தழுவி, “அட உன்னை வெட்டிடலாம்னு சொல்லிட்டேனே, நீ நல்ல மரம், உன்னை இன்னும் கவனமா பார்த்துக்கிறேன்என்று சொல்லவும் சொன்னார்

தவறு செய்யும் குழந்தையை நல்வழிப்படுத்த அதட்டுவது போல காய்க்காத மரத்தோடும் பேச அதுவும் அதனை செவிமடுத்தது. அந்த வருடமே நிறைய சுவையான கனிகள் கொடுத்தது.  வயல்வெளியில் விதை விதைத்து அறுவடை செய்யும் அத்தனை தானியங்களும் அந்த விவசாயிக்குப் பிள்ளைகள் தானே.

மனிதனுக்குத் தான் ஆறறிவு என்றில்லை, மரங்களும் மிருகங்களும் நம்மை போலவே உணர்ச்சிகள் மிக்கவை என்பதை ஏனோ  நாம் உணர்ந்து கொள்ள தவறிவிடுகிறோம்.

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கிறேன்.

வெங்கட்  
புது தில்லி.



42 கருத்துகள்:

  1. Voted 2 to 3 in Indli.

    தங்களின் பழமையான, மரத்துடனான் பேச்சுக்களும் உறவுகளும் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. உண்மை தான். நாம் வளர்க்கும் செடி, கொடி, மரம், செல்லப்பிராணிகள் போன்ற அனைத்துமே நமது குழந்தைகள் போலவே தான். அதை அனுபவித்தவர்களுக்கே புரியும்.

    பதிவுகு நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அப்படி தாவரங்களுடனும் விலங்குகளுடன்
    பேசிப் பழகினால் அவைகளுக்கு
    புரிகிறதோ இல்லையோ
    அதில் நமக்கு கிடைக்கும்
    ஒரு மன அமைதி...
    அது அனுபவவிப்பவர்களுக்குத்தான் புரியும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. # கவிதை வீதி சௌந்தர்: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    # வை. கோபாலகிருஷ்ணன்: மரங்களும், செடிகளும், செல்லப்பிராணிகள் தானே... உண்மை தான்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    # ரமணி: நிச்சயம்.... அப்படிப் பேசும்போது நமக்கு கிடைக்கும் அமைதி, சந்தோஷம் அப்பப்பா... நிச்சயம் அனுபவித்தவர்களுக்குப் புரியும்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. செடி மரங்களுடன் பேசுவது சில மனிதர்களுடன் பேசுவதை விட நல்லதுதான்!
    திருப்பித் திட்டாது.. சொன்னா கேட்டுக்கும்..பலனும் கொடுக்கும்..

    பதிலளிநீக்கு
  5. இருந்தாலும் அதுக்கு கொஞ்சம் கோபம் போல. அந்த பலாப் பழத்து மேல பார்த்தீங்களா, முள்ளு முள்ளா...?

    பதிலளிநீக்கு
  6. மரங்களுடன் பேசும் பழக்கம் கிராமங்களில் உண்டு.
    எங்கள் தாத்தா, வள்ளிக் கிழங்கு நடும் பொழுது எங்களை முதுகில் தொங்கச் சொல்வார். அப்படித் தொங்கினால் ஒன்றோடு ஒன்றாக நிறையக் கிழங்குகள் விளையும் என்பார் தாத்தா.

    எங்கள் தாத்தாவிடம் இருந்த விவசாய ஆர்வம் அப்பொழுது எங்கள் அப்பாவிடம் இல்லை. ஆனால், இப்பொழுது எங்கள் அப்பாவிடம் இருக்கும் விவசாய ஆர்வம் என் தம்பிகளிடம் இல்லை(நமக்கு வசிக்குமிடத்தில் நிலமில்லை)

    நிச்சயம் நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அருமை வெங்கட்ஜி .. மரங்களோடு பேசி அதை கேட்டு அவை பலன் தரவும் வைத்திருக்கிறிர்கள் .. நிச்சயம் அவை மனிதர்கள் பேசுவதை கேட்கும் நமக்குத்தான் அதன் பாஷை தெரிவதில்லை ..

    பதிலளிநீக்கு
  8. //செடி மரங்களுடன் பேசுவது சில மனிதர்களுடன் பேசுவதை விட நல்லதுதான்!
    திருப்பித் திட்டாது//

    truee

    பதிலளிநீக்கு
  9. வேரில் காய்த்த பலாவாக, தேனில் ஊறிய பலாச்சுளையாக மலர்ந்த அருமையான நினைவுகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. மரங்களோடு மனிதர்கள் பேசுவது ஒரு உயர் உன்னத பண்பு அதை அழகாய் உங்களுக்கு சொல்லித்தந்த உங்களின் அம்மாவுக்கு ஒரு அன்பான வணக்கம்

    பதிலளிநீக்கு
  11. மரங்களும் குழந்தைகள் போலத்தான் அதன் நிறைகளைப்பற்றி நிறையா பேசினால் நிறைவாகவும் , குறைகளை குறைவாக பேசினால் அது குறையவும் செய்யும் என்று நினைக்கிறன்
    நல்ல பதிவு அன்பரே.

    அதுவும் அடுத்த பத்து நாட்களில் பலன் தந்தது என்றால் மிகவும் ஆச்சர்யம் தான் , மரங்களுக்கும் உயிர் உண்டு .

    பதிலளிநீக்கு
  12. நான் பேசுவேன்னு சொன்னா பைத்தியமான்னு கேக்கறாங்க. நீங்க எழுதினா பாராட்டுறாங்க. எ.கொ.சார் இது.

    பதிலளிநீக்கு
  13. //மனிதனுக்குத் தான் ஆறறிவு என்றில்லை, மரங்களும் மிருகங்களும் நம்மை போலவே உணர்ச்சிகள் மிக்கவை//
    முற்றிலும் உண்மை!உங்கள் அம்மா ஒரு நல்ல விஷயத்தை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தி ருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  14. ஆம்....வெங்கட்ஜி....உங்களின் மர அனுபவத்தை நான் மரப்பூர்வமாக ஆதரிக்கிறேன். ஏனெனில், நான் அடிக்கடி மரங்களுடன் பேசுபவன். என் சந்தோஷங்களை,துக்கங்களை,ஆச்சர்யங்களை, வினோதங்களை,பாவமன்னிப்பு தேடல்களை எல்லாம் மரங்கள் அறியும்...என்னை ஆஸ்வாசபடுத்துவதும் அவையே!!

    பதிலளிநீக்கு
  15. @ ரிஷபன்: //திருப்பித் திட்டாது….// அதே அதே… தங்கள் வருகைக்கும் மேலான கருத்திற்கும் நன்றி.

    @ கே.பி.ஜனா: அதானே, ஒரு முள்ளா, இரண்டு முள்ளா? தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

    @ அமைதி அப்பா: எனது இந்த பகிர்வு, உங்கள் நினைவுகளை கிளறிவிட்டது போலும்… தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே….

    @ அனாமிகா துவாரகன்: வருகைக்கு நன்றி.

    @ பத்மநாபன்: நிச்சயம் அவற்றிற்கும் மொழி இருக்கும்… நமக்குத் தான் புரிந்து கொள்ள அறிவில்லை… உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பத்துஜி!

    @ எல்.கே: நன்றி கார்த்திக்.

    @ இராஜராஜேஸ்வரி: தேனில் ஊறிய பலாச்சுளை… வாவ்…. நாவில் நிஜமாகவே அதன் சுவை…. தங்கள் வருகைக்கும் இனிக்கும் கருத்திற்கும்
    நன்றி.

    @ A.R. ராஜகோபாலன்: உண்மை தான் நண்பரே. ஒவ்வொரு படைப்பிற்கும் உயிர் உண்டு. அதனை உணரத்தான் நம்மால் முடிவதில்லை… தங்களது வருகைக்கும் நல்ல கருத்திற்கும் மிக்க நன்றி.

    @ அனாமிகா துவாரகன்: அடடா… அப்படி சொல்லிட்டாங்களா! இரண்டாம் முறை வந்து கருத்துரைத்தமைக்கு நன்றி.

    @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    @ எல்லென்: என்னை விட நீங்கள் ஒரு படி மேல்… எல்லா விஷயங்களையும் பகிர்ந்து இருக்கீங்களே… வருகைக்கும் நற்கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே…

    பதிலளிநீக்கு
  16. உண்மை தான் மரங்களுக்கும் உயிர் இருக்கு...உணர்வும் இருக்கு....

    பதிலளிநீக்கு
  17. மனிதம் மரத்தையும் மனிதனையும் வேறுபடுத்திப் பார்க்காதுன்னு சொல்றீங்க.. ;-))

    பதிலளிநீக்கு
  18. இங்க ஒரு நெல்லி மரம் இப்படித் தான் இருக்கு..ட்ரை பண்ணிப் பார்க்கட்டுமா, வெங்கட்?

    பதிலளிநீக்கு
  19. வெங்கட்! என் 'அம்மா மரம்' பதிவு இன்னொரு சுவையான பதிவையும் கூட்டி வந்திருப்பது மகிழ்ச்சியே! மரங்கள் மனித மனவோட்டத்தைக் கூட அறியும் வல்லமை படித்தவை என்று சில கருத்துகளும் உண்டு. மரங்களின் மௌனங்கள் அர்த்தமுள்ளவை.

    பதிலளிநீக்கு
  20. @ கீதா ஆச்சல்: நிச்சயமாக உண்மை.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதா…

    பதிலளிநீக்கு
  21. @ ஆர்.வி.எஸ்.: வாங்க மைனரே. //மனிதம் மரத்தையும் மனிதனையும் வேறுபடுத்திப் பார்க்காதுன்னு சொல்றீங்க.. ;-)) // அதே அதே சபாபதே……

    பதிலளிநீக்கு
  22. @ ஆர்.ஆர்.ஆர்.: ”முயற்சி திருவினையாக்கும்…” கண்டிப்பா முயற்சி செய்து பாருங்களேன்… உங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. @ மோகன்ஜி: //மரங்களின் மௌனங்கள் அர்த்தமுள்ளவை// உங்களுடைய இந்த எழுத்தும் அர்த்தம் பொதிந்தவை மோகன்ஜி! உங்கள் வருகையும் கருத்தும் என்னை இன்புறச் செய்தது….

    பதிலளிநீக்கு
  24. மரம், செடிகளுடன் பேசலாம் என்பதை அறிவியல் பூர்வமாகவும் நிருபித்துள்ளனர். நாம் எல்லோரும் சிறுவயதில் மரம் செடிகளுடன் பேசியிருக்கிறோம்.....

    பதிலளிநீக்கு
  25. நெய்வேலி காரருக்கு மரங்கள் மேல் பாசம் இயற்கை தான்

    பதிலளிநீக்கு
  26. @ கலாநேசன்: அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்ட ஒன்று என்பதும் படித்த நினைவிருக்கிறது. சிறு வயதில் எல்லோருக்குமே இந்த செடிகளோடு பேசிய நினைவு இருக்கும் போல இருக்கு! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவணன்..

    பதிலளிநீக்கு
  27. @ மோகன்குமார்: அதானே… பச்சைப் பசேலன மரங்கள் சூழ வாழ்ந்த நெய்வேலிக் காரர்களுக்கு நிஜமாகவே அவற்றின் மேல் பாசம் கொஞ்சம் அதிகம் தான்…. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  28. ஒரு புயற்காற்றில் எங்கள் வீட்டு வாழைமரமும், பப்பாளி மரமும் சாய்ந்த போது அம்மா அழுதார். அதைப் பார்த்து நாங்களும் அழுதோம்.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வல்லளாரை நினைவுபடுத்தியது பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  29. மரங்களுடனும் செடி கொடிகளுடனும் பழகிய நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்களின் பதிவைப்படிக்கப் படிக்க, நானும் அந்தத் தோட்டத்தினூடே உலவுவது போலவே இருந்தது! ஒரு நல்ல விஷயத்தை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த உங்கள் அம்மாவிற்கு ஒரு சல்யூட்!

    பதிலளிநீக்கு
  30. @ சிவகுமாரன்: நாம் பாதுகாத்து வளர்த்த மரமோ, செடியோ இயற்கையின் சீற்றத்தாலோ, வேறு காரணங்களாலோ அழியும்போது நமக்கு சொல்லொணா வருத்தம் வருவது இயல்புதான் நண்பரே... வள்ளலார் - மிகப் பெரியவர்..... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

    @ மனோ சாமிநாதன்: ஆஹா எங்கள் தோட்டம் எப்படி இருந்தது... நிச்சயம் நன்றாகத்தான் இருந்திருக்கும்... தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றிம்மா..

    @ அமுதா கிருஷ்ணா: உண்மை... தங்களது வருகையும், கருத்தும் என்னை மகிழ்வித்ததும்.. உண்மை...

    பதிலளிநீக்கு
  31. //தோட்டத்தில் 6 மா, 2 பலா, 1 புளிய மரம், 1 அறிநெல்லிக்காய் , எலுமிச்சை, வாழை, பம்ப்ளிமாஸ், சாத்துக்குடி, சீதா போன்ற பழம் தரும் மரங்களும், மல்லி, நந்தியாவட்டை, டிசம்பர் பூ, சாமந்தி போன்ற பூச்செடிகள், இதோடு முருங்கை. கல்யாண முருங்கை, சவுண்டல், சவுக்கு என்று பல வகையான மரங்களும் இருந்தது. //

    ஏங்க, வீடா, தோப்பா அது? பொறாமையா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  32. அம்மான்னா அம்மாதான்! ம‌ர‌ங்க‌ளுக்கும் உண‌ர்வுக‌ளுண்டு என்ப‌தை நானும் உண‌ர்ந்த‌துண்டு ச‌கோ...

    பதிலளிநீக்கு
  33. பச்சைப் பசேலன மரங்கள் சூழ வாழ்ந்த நெய்வேலிக் காரர்களுக்கு நிஜமாகவே அவற்றின் மேல் பாசம் கொஞ்சம் அதிகம் தான்…. //

    இப்போது கூட‌ ஜ‌வ‌க‌ர் சிபிஎஸ்இ ப‌ள்ளியின் ப‌தினோராம் வ‌குப்பு மாண‌வ‌ன் திவாக‌ர‌ன் 'கிரீன் நெய்வேலி' என்ற‌ த‌லைப்பில் காலை ஆறு ம‌ணி முத‌ல் மாலை ஆறு ம‌ணி வ‌ரை நெய்வேலியை சுற்றிலும் சுமார் 1555 ப‌ட‌ங்க‌ள் எடுத்து அவ‌ற்றில் 500 புகைப்ப‌ட‌ங்க‌ளை க‌ண்காட்சியாக‌ த‌ம் ப‌ள்ளியில் வைத்து லிம்கா சாத‌னைப் புத்த‌க‌த்தில் இட‌ம்பெற‌ முய‌ன்றுள்ளான்.

    பதிலளிநீக்கு
  34. ஒவ்வொரு வீட்டையும் தோப்பாக‌ வைத்திருந்த‌, வைத்திருக்கும் ந‌ம‌க்கெல்லாம் பெருமித‌ம் தான் ந‌ம் ஊர்.இல்லையா ச‌கோ...

    பதிலளிநீக்கு
  35. ஒரு மன அமைதி...
    அது அனுபவவிப்பவர்களுக்குத்தான் புரியும்
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் நாகராஜ்.. உஙகளுடைய பதிவை பார்ததும் என்னுடைய சிறு வயதில் கோடை விடுமுறைகளை நெய்வேலியில் கழித்தது நினைவிற்கு வருகிறது. சென்னையில் தண்ணிர் கஷ்டம் என்பதால் என் அம்மா எங்களை( நான்,என் தம்பி தங்கை முவரையும்)ஓவ்வொரு கோடை விடுமுறைக்கும் என் பெரியம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுவர்கள்.அவர்கள் வீடு town club க்கும், jawahar school என்று நினைக்கிறேன் அவற்றிற்கும் அருகில் இருந்தது. பலாபழம்,மாங்காய்,கொய்யாபழம் எல்லாம் சாப்பிட்டது,மரத்தின் மெலே ஏறி விளையடியது எல்லாம் நினைவிற்க்கு வருகிறது.
    அந்த விடுமுறைகளை பற்றி எழுதவேண்டுமானல் நிறைய பதிவுகள் எழுத வேண்டும். ரொம்ப நன்றி சார், அந்த நினைவுகள் திரும்ப வருகிர மாதிரி உஙகள் பதிவு அமைந்ததற்க்கு.

    பதிலளிநீக்கு
  37. @ ஹுசைனம்மா: வீடுதான்... எங்கள் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டிற்கும் இவ்வளவு பெரிய தோட்டம் இருந்தது... இப்பொழுது அந்த வீட்டையும், தில்லி அடுக்குமாடி குடியிருப்பினை நினைத்தால் தினம் தினம் கஷ்டம்தான்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    @ நிலாமகள்: அம்மான்னா அம்மாதான்... அதானே.. Green Neyveli நல்ல விஷயம்தான்... புகைப்படங்கள் நெட்டில் இருக்கிறதா.... தங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

    @ மாலதி: தங்களது முதல் வருகை.... அந்த மன அமைதி அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்... உண்மை சகோ. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    @ ராம்வி: வணக்கம் சகோ. தங்களது முதல் வருகைக்கும் நல்ல கருத்திற்கும் நன்றி. ஓ நீங்களும் நெய்வேலியினை ரசித்து இருக்கீர்களா? நல்லது... உங்கள் நெய்வேலி அனுபவங்களை எழுதுங்களேன்... சுவாரசியமாக இருக்கும் எங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  38. http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  39. # இராஜராஜேஸ்வரி: வலைச்சரத்தில் அடியேனையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் வலைச்சர அறிமுகங்கள்...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....