செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

கதம்பம் - டிராகன் ஃப்ரூட் - பேபிகார்ன் - எலுமிச்சை - நெல்லிக்காய்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


லட்சியம், அலட்சியம் இரண்டிற்கும் ஒரே ஒரு எழுத்து மட்டுமே வித்தியாசம். லட்சியம் உங்களை முன்னே கூட்டிச் செல்லும்; அலட்சியம் உங்களை பின்னே தள்ளிச் செல்லும்.


******


டிராகன் ஃப்ரூட்!



முன்பு மெக்ஸிகோவிலும், அமெரிக்காவிலும் மட்டுமே விளைந்து கொண்டிருந்த இந்தப் பழம் தற்போது எல்லா இடங்களிலுமே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நம்ம ஊர்களில் மாடித் தோட்டத்திலும் கூட பயிரிடப்பட்டு எளிதாக கிடைக்கின்றது! இது ஒரு காக்டஸ் வகையைச் சேர்ந்ததாம்!


உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல விஷயங்கள் இந்த பழத்தில் இருப்பதாக படித்து தெரிந்து கொண்டேன்! Fibre, Antioxidants, Anticancer, Low calorie, Low insulin என்று பல குணங்கள் கொண்டதாம்! இதில் மூன்று விதமான ரகங்கள் இருக்கின்றது! நேற்றைய வாரச்சந்தையில் ஒரு  பழம் 80 ரூக்கு கிடைத்தது! 


உள்ளே வெள்ளை நிறத்தில் கறுப்பு நிற விதைகள் கொண்ட ரகம் இது! உள்ளே பிங்க் நிறத்தில் இருப்பது விலை கூடுதல் என்பதால் அந்த வியாபாரி எடுக்க வில்லையென சொன்னார்! இந்தப் பழம் கிவி போன்றும் பேரிக்காய் போன்றும் இருக்குமாம்!


முன்பு ஒருமுறை இந்த சந்தையில் Kiwi கூட கிடைத்தது! ஒரு டப்பாவில் இரண்டே இரண்டு பழங்கள் பேக் செய்யப்பட்டு இருந்தன! முதன்முறையாக வாங்கி சுவைத்தோம்! அதன் விதைகள் வாயில் கடிபடும் போது 'கஷ்க் முஷ்க்' என வித்தியாசமான உணர்வைத் தந்தது...🙂


&*&*&*&**&*&*



பேபிகார்ன்!


டிராகன் ஃப்ரூட் வியாபாரியிடமே டப்பாவில் பேக் செய்யப்பட்ட  பேபிகார்னும் கிடைத்தது! 50ரூ எனக் கொடுத்தார்! இதை வைத்து பஜ்ஜி தான் செய்யலாம் என்று இருக்கிறேன். கொஞ்சம் பிரெட் துண்டுகளும் இருக்கிறது! இரண்டையும் காலி செய்ய பஜ்ஜி ஒன்றே வழி!


&*&*&*&**&*&*



எலுமிச்சை!


தட்டு 20 ரூ என்று விற்றுக் கொண்டிருந்த எலுமிச்சைகளில் இரண்டு தட்டு வாங்கிக் கொண்டேன்! மொத்தம் 26 பழங்கள்! காலையில் வெறும் வயிற்றில் குடித்துக் கொண்டிருக்கும் Lemon honeyக்காக 6 பழங்களை வைத்து விட்டு 20 பழங்களை நறுக்கி உப்பில் போட்டு வைத்திருக்கிறேன்! டெல்லி பயணம், மகளின் கல்லூரி அட்மிஷன் போன்ற காரணங்களால் இந்த வருடம் ஊறுகாய், வடாம் என்று எதுவுமே போடவில்லையே! கைவசம் ஊறுகாய் எதுவும் இல்லை! கடையில் வாங்கி உபயோகிக்கும் பழக்கமில்லை! 


&*&*&*&**&*&*


நெல்லிக்காய்!


இதுவும் தட்டு 20 ரூ தான்! நறுக்கி உப்பு, மஞ்சள் சேர்த்து வைத்திருக்கிறேன்! அப்படியே கூட  சாப்பிடலாம் அல்லது தேவைப்படும் போது மோரில் நெல்லிக்காய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து அரைத்தும் குடிக்கலாம்! நான் தினமும் ஒரு பிடி கறிவேப்பிலை மென்று சாப்பிடுவேன் என்பதால் உடன் நெல்லியும் சேர்த்துக் கொள்ளலாமே என்று நினைத்து செய்திருக்கிறேன்...🙂


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


14 கருத்துகள்:

  1. டிராகன் ஃப்ரூட் - வெள்ளை, சிவப்பு உள்பக்கம் இருக்கும் ரொம்ப நல்ல பழம். ஆமாம் காக்ட வகை. சென்னையில் இருந்தப்ப ஒரு பழம் 40 ரூ வெள்ளை அது. இங்கு இப்ப சிவப்பு கிடைத்தது ஒரு பழம் ரூ 60 என்று. இது சென்னையில் முதன்முதலில் கண்ணில் தென்பட்டதுமே வாங்கிச் சுவை பார்த்துவிட்டோம்.

    Milk Shake அடிக்கலாம். மற்ற பழங்களில் செய்வது போல் எல்லாமே செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பேபி கார்ன் ஆமாம் டப்பாவில் அல்லது தெர்மகோல் தட்டில் pack தான் வருகிறது. இங்கு சில க்டைகளில் ரூ 40 சில க்டைகளில் 30.

    பஜ்ஜி!! ஆஹா....பேபிகார்ன் மஞ்சூரியனும் செய்யலாமே ஆதி, பிடிக்கும் என்றால். சூப்பும் பிடிக்கும் என்றால் செய்யலாம்.

    பேபிகார்ன் பருப்பு உசிலி கூட நன்றாக இருக்கும். இதை நெல்லை பார்க்கறதுக்குள்ள நான் Take off!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. எலுமிச்சை செம விலை குறைவு, ஆதி உங்க ஊர்ல!!! ஊறுகாய் - ஜமாய்ங்க! நெல்லியை பத்தி சொல்லியிருப்பதும் Yummy!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரி

    இன்றைய வாசகம் அருமையாக இருந்தது. . பதிவும் நன்றாக உள்ளது. பழங்களில் இதை இன்னமும் சுவைக்கவில்லை.பேபிகார்ன் பஜ்ஜி, நன்றாக இருக்கும். ஊறுகாய்கள் மலிவாக கிடைக்கும் போதே வாங்கிப் போட்டது நல்ல விஷயம். சமயத்தில் பயனுள்ளதாக இருக்கும். அனைத்தையும் பற்றிய தகவல்கள் சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான பதிவு. வாசகம் அருமை.

    எலுமிச்சை, நெல்லி ஊறுகாய் போட்டது நன்றாக இருக்கிறது.

    டிராகன் ஃப்ரூட் இரண்டு தடவை சாப்பிட்டு இருக்கிறேன். உறவினர் வாங்கி வந்தார்.

    பதிலளிநீக்கு
  6. டிராகன் நான் வாரம் ஒருமுறை சாப்பிடுவதுண்டு.
    தமக்கைக்க்ு மிகவும் பிடிக்க்ும், எனக்கு அதன் புளிப்புசுவை பிடிப்பதில்லை என்றாலும், ஆரோக்கியத்திற்காக சாப்பிடுகிறேன்.
    சுவையான கதம்பம் மேடம்.

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள பழத்தகவல்கள் நன்று

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள தகவல்கள்..
    சிறப்பு..
    வாழ்க நலம்.. 

    பதிலளிநீக்கு
  9. டிராகன் ஃப்ரூட்டை சுவைக்கும் துணிவு வந்ததில்லை. எலுமிச்சை ஊறுகாய் என் மகனுக்கு பிடிக்காது என்பதால் போடுவதேயில்லை.

    பதிலளிநீக்கு
  10. டிராகன் புரூட்..இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ட்ராகன் பழமே கேள்விப்படலை. ஊறுகாய் மாவடுவில் இருந்து மஞ்சள் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், மாங்காய்த் தொக்கு, ஆவக்காய் மாங்காய் எனப் போட்டு வைத்தேன். குழந்தைகள், அடுத்தடுத்து விருந்தினர் வந்ததில் ஆவக்காயும், தொக்கும் தீர்ந்து விட்டது. எலுமிச்சையும், மாவடு, மஞ்சள் ஊறுகாயும் இருக்கு,

    பதிலளிநீக்கு
  12. கதம்பம் சுவை.
    எங்கள் வீட்டிலும் ஊறுகாய் நாங்கள் செய்வதுதான்.

    ட்ராகன்,கிவி, பியஸ் ,இங்கு கிடைக்கும் சற்று விலை அதிகம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....