புதன், 9 ஆகஸ்ட், 2023

கதம்பம் - ஆடிப்பெருக்கு - National Handloom Day - அத்திப்பழம் செவப்பா - நட்பு தினம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு; ஒவ்வொரு நாளின் முடிவிலும் ஒரு அனுபவம் - அவ்வளவு தான் வாழ்க்கை.


******



ஆடிப்பெருக்கு:



ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி பயிர்பச்சைகளை எல்லாம்  செழிப்படைய வைத்து மக்களை வளமோடு வாழ வைக்கட்டும்! 


பொங்கி வரும் காவிரியைப் போல மக்கள் மனதில் என்றும் மகிழ்ச்சி பொங்கவும், இன்றளவும் உணவளித்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லி இன்றைய நாள் இனிதானது!


அந்நாளில் ஆற்றங்கரைக்கு குடும்பத்தோடு கலந்த சாதங்களை எடுத்துச் சென்று உண்டு மகிழ்வார்களாம்! அதை வழிவழியாக பின்பற்றும் விதமாக இன்றும் கலந்த சாதங்களை செய்து தான் நிவேதனம் செய்கின்றோம்! 


எலுமிச்சை, தேங்காய் மற்றும் தயிர்சாதமோடு இனிப்பில்லாமல் பண்டிகைகள் சிறப்பு பெறுவதில்லையே! அதனால் சிறுதானியங்களோடு, பயத்தம்பருப்பும், ஜவ்வரிசியும் இனிப்பு கூட்ட  நாட்டுச்சர்க்கரையும்  சேர்த்து செய்த பாயசமுமாக ஆடிப்பெருக்கு அன்று செய்த உணவு!


&*&*&*&**&*&*


அவளும் நானும் - National Handloom Day



Monday அன்னிக்கு National Handloom day! அன்னிக்கு எல்லாரும் காட்டன் சாரி தான் கட்டிட்டு வரணும்னு சொல்லியிருக்காங்க! என்றாள்!


என்கிட்ட இருக்கிற புடவைல எது ஓகேன்னு பார்த்து சொல்லு கண்ணா! ப்ளவுஸ் ரெடி பண்ணிக்கலாம்! என்றேன்.


ஏனோ அந்தப் பொழுதில் சட்டென்று வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்ட உணர்வு...🙂


இன்று இருவரும் மலைக்கோட்டை வரை சென்று வரும் வேலை இருந்தது! நான் தான் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டேனே! நாள் கிழமையில் எனக்கேற்ற பக்குவத்துக்கு உடை உடுத்தி பண்பாட்டை பின்பற்ற வேண்டாமா..!!


கடையில் குறிப்பிட்ட செக்‌ஷனுக்குச் சென்று, அண்ணே! 10 1/2 கஜம் இருக்குமா?? என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.


கலர் அழகா இருக்கு! இருங்க உயரம் வெச்சு பார்த்துக்கறேன்! அது தான் எப்பவும் பிரச்சனை! ஆங்! இது தாராளமா இருக்கு! பில் போட்டுடுங்க! என்றேன்.


அப்புறம் அவளுக்கு ஒன்று வாங்காமலா..🙂


உயரத்தில் தொங்க விட்டிருந்த புடவைகளில் ஒன்றைக் காண்பித்து அம்மா! இது எப்படி இருக்கு! என்றாள்.


சூப்பரா இருக்கு கண்ணா! உனக்கு அழகா இருக்கும்! இது கட்டிக்க ஒருநாள் எனக்கும் சான்ஸ் கிடைக்குமா!! என்றேன்..🙂


என்னை நினைத்து எனக்கே ஆச்சர்யமாய் இருந்த நாள் இன்று..🙂


அன்றாட வாழ்வில் நமக்குள் தான் எத்தனை உணர்வுகள், புரிதல்கள்!


&*&*&*&**&*&*


அத்திப்பழம் செவப்பா இந்த அத்த மக செவப்பா...



இருவரும் ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு பேருந்துக்காக சற்று நேரம் நின்று கொண்டிருந்து விட்டு பின்பு ஒருவழியாக திருவரங்கம் செல்லும் பேருந்து வரவே அதில் ஏறினோமா...!! அங்கே தான் எங்களுடன் வந்த விதி சதி செய்யத் துவங்கி விட்டது!


நான் ஹேண்ட் பேகை மாட்டிக் கொண்டு ஒரு கையில் ஷாப்பிங் செய்த பையை பிடித்துக் கொண்டிருக்க, மகளும் என்னைப் போலவே ஒரு கையில் பையை வைத்துக் கொண்டிருந்தாள்!


நான் பேருந்தில் ஏறியவுடன் மேலே உள்ள கம்பியை பிடிப்பதற்குள் அந்தப் பேருந்தை வேகமாக ஓட்டுனர் எடுத்து விடவே என்னால் பேலன்ஸ் பண்ண முடியாமல் மகளின் மேல் சாய்ந்து அவளையும் தள்ளிக் கொண்டு சற்று தூரம் வரை போய் இருவருமே பேருந்துக்குள் விழுந்து விட்டோம்!


சற்று நிதானிப்பதற்குள் மகளையும் தள்ளி விட்டுக் கொண்டு இருவருமே கீழே விழுந்து கிடக்கிறோம். அந்த நிமிடம் என்னால் எழுந்திருக்கவே முடியாது என்று தோன்றி விட்டது! அக்கம் பக்க இருக்கைகளில் இருந்தவர்களும் நடத்துனரும் சேர்ந்து தான் என்னை எழுப்பி விட்டார்கள்!


இருக்கையை ஒருவர் விட்டுக் கொடுக்க, ஒருவர் தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்த, என்னை நினைத்து நானே சிரித்துக் கொண்டேன்..🙂 அப்பாவிடம் சொன்னால் என்ன சொல்வார்! என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திருவரங்கம் வந்ததும் பேருந்தை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.


சில மாதங்களாகவே கடவுள் என்னை வலிகளோடு பிஸியாக வைத்திருக்கிறார்! வாராவாரம் ஏதேனும் ஒன்று! டெல்லி பயணத்திலும் படிகளில் வழுக்கி விழுந்தேன்! ஹரித்வாரில் குளியலறையில் விழுந்தேன்! அதுபோல அதில் இதுவும் ஒன்றென நினைத்துக் கொண்டேன்...🙂


இன்றைய காலைப்பொழுதில் ஷாப்பிங்கும் சந்தோஷப் பேச்சுகளுமாய் சென்றது என்றால் மதியப் பொழுதிலிருந்து வலிகளோடு நேரம் கடக்கின்றது!! இதுவும் கடந்து போகும்!


அதெல்லாம் சரி! தலைப்பில் உள்ள வரிகளுக்கும் இந்த பதிவுக்கும் என்னம்மா சம்பந்தம்? கீழே விழுந்ததில் எதாவது ஆயிடுச்சா என்று நினைக்க வேண்டாம்..🙂


பேருந்தில் நாங்கள் ஏறிய போது 'அத்திப்பழம் செவப்பா இந்த அத்த மக செவப்பா' என்ற பாடல் தான் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது...:))


&*&*&*&**&*&*


நம்பிக்கை மனிதர்கள்!



ஒரு மனிதர் தன் உடலைச் சுற்றி பல வண்ணங்களில், தன்னை விட நாலு மடங்கு பருமன் உள்ள பொதிகளைச் சுமந்து கொண்டு உச்சிவெயில் உடலை வருத்த நாள்முழுவதும் நின்று கொண்டே இருக்கிறார்! 


எதன் அடிப்படையில்???


நேற்றைய பொழுதில் நான் கண்ட இந்த மனிதர் கடைவீதியில் பல வண்ணங்களில் துப்பட்டாக்களை வைத்துக் கொண்டு விற்றுக் கொண்டிருந்தார்! 


எந்தக் கலர் வேணும்மா? என்றார்.


பச்சைன்னா எந்த பச்சைன்னு சொல்லுங்க!


என்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக தன்னைச் சுற்றி சுற்றி திருப்பி திருப்பி காண்பிக்கிறார். இதுவும் போக தன் காலடியில் வைத்திருந்த பெரிய கவர் ஒன்றிலும் நிறைய விதமான துப்பட்டாக்கள் வைத்திருந்தார்!


எங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு அவர் உழைப்பிற்கான என்னுடைய சிறு பங்களிப்பை தந்து விட்டு நகர்ந்தேன்!


வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வேறு வேறு வண்ணங்களிலும், விதங்களிலும் தான் அமைந்து விடுகிறது! 


நம்பிக்கை என்னும் ஒளியைக் கொண்டு தீட்டினால் நிச்சயம் அது நல்லதோர் அழகோவியமாக மாறி விடும் என்பது உண்மை!


உங்களைச் சுற்றி நம்பிக்கையான மனிதர்களால் கூடு அமைத்துக் கொள்ளுங்கள்! வாழ்க்கை இன்னும்  சுவாரசியமாகும்!


அனைவருக்கும் நட்பு தின வாழ்த்துகள்! 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. இப்போது எப்படி இருக்கீங்க ஆதி? வலி எதுவும் ரொம்ப இல்லைதானே? ஊமைக்காயங்கள் Check செய்து கொண்டீங்களா? பேருந்துகள் டக்கென்று brake போடுவது வண்டி எடுப்பது, நிறுத்துவது எல்லாம் ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கிறது. எனக்கும் கம்பியில் அடிபட்டு...அதை ஏன் கேக்கறீங்க..

    ஆடிப் பெருக்கு ஆற்றங்கரை, கடற்கரை செல்லும் கொண்டாட்டாம் எல்லாம் ஊரோடும் திருவனந்தபுரத்தோடும் முடிஞ்சு போச்! உங்கள் ஆடிப்பெருக்கு ஐட்டம்ஸ் நல்லாருக்கு.

    Handloom Cotton ஆ அது. நிறங்கள் துப்பட்டாக்கள் கலர் எல்லாம் பளிச் கவர்ச்சியாக இருக்கின்றன அழகாவும் இருக்கு.

    நம்பிக்கைதானே வாழ்க்கை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு நாட்களுக்கு வலி இருந்தது. இப்போது பரவாயில்லை! டாக்டரிடமெல்லாம் செல்லவில்லை!

      துப்பட்டாக்கள் இணையத்திலிருந்து எடுத்தது!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  2. மகள் - நான் வளர்கிறேன் மம்மி என்று வளர்ந்துகொண்டு வருகிறார். ஒவ்வொரு பருவமும் காலகட்டமும் நமக்கு ஒவ்வொரு விதமான உணர்வுகளைத் தரும். நான் இப்பவும் எங்கள் மகனின் ஒவ்வொரு பருவத்தையும் காலத்தையும் நினைத்து அசைபோடுவதுண்டு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். வருடங்கள் அதிவேகமாக கடந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணர்வுகளோடு பயணிக்கிறது!

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  3. பேருந்தில் ஜாக்கிரதையாக செல்லுங்கள் மேடம். கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டுனரின் அதிவேகம். இங்கே பேருந்துகளிடையே போட்டி வேறு நடக்கின்றது..:(

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் அரவிந்த் சார்.

      நீக்கு
  4. அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. அருமையான பதிவு. சிறுவயதில் ஆடிப்பெருக்கு அன்று ஆற்றில் குளித்த அனுபவம் நினைவுக்கு வருகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு திருச்சி திருப்பராய்த்துறை காவிரியில் தான் முதன்முதலில் ஆற்றில் குளித்த அனுபவம் கிடைத்தது! பின்பு விஜயவாடா சென்ற போது கிருஷ்ணாவிலும் ஹரித்வாரில் கங்காவிலுமாக அனுபவங்கள் கிடைத்தன! உங்களின் சிறுவயது நினைவுகளை மீட்டுக் கொள்ள உதவியதில் மிக்க மகிழ்ச்சி சார். வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ராமசாமி ஜி.



      நீக்கு
  6. //நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து//


    Grrrrrr...  ஆகஸ்ட் ஒன்றாம் தேதி என்றிருக்க வேண்டும்!  என்னாச்சு?  ஏனிந்த இடைவெளி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். நேற்று நானும் அவரிடம் சொல்ல வேண்டுமென நினைத்து மறந்து விட்டேன். அலுவலக ஆணிகளால் பிஸி..!

      நீக்கு
  7. இந்தமுறை ஸ்ரீரங்கம் ட்ரிப்பில் நான் பார்க்க நேரமில்லாமல் போன கோவில் உச்சிப்பிள்ளையார் கோவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை வரும் போது பார்த்து விடுங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  8. சுவையான கதம்பம்.  பேருந்துகளில் ஜாக்கிரதையாக இருங்கள்.  அந்தப் பதிவையும் வண்ண நிற துப்பட்டா விறபனையையும் முகநூலிலேயே படித்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓட்டுனரின் வேகம்! அந்த இடத்தில் அவர்களால் சற்று நேரம் நிற்கவும் முடியாது! உடனே எடுத்து விடுவார்கள். இனி கவனமாக இருக்கணும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  9. எல்லாவற்றையும் முகநூலில் படித்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. வளரும் மகள் மகிழ்ச்சி காலம் விரைகிறது ....சாறிகள் அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....