வியாழன், 30 மே, 2013

தில்லியில் திருப்பதி

[தலைநகரிலிருந்து பகுதி – 21]




கோவில் ஒரு தோற்றம்



திருமலா திருப்பதி தேவஸ்தானம் தலைநகர் தில்லியில், கடந்த பல வருடங்களாக கல்யாண உற்சவம் நடத்துவது வழக்கம். இந்த வருடம் கூட வரும் ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தில்லியில் உள்ள வேங்கடேஸ்வரா கல்லூரியில் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திருப்பதி ஏழுமலையானின் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்ய முடிந்த தில்லிவாசிகளின் சௌகரியத்திற்காக தில்லியிலேயே ஏழுமலையானுக்கு ஒரு கோவில் கட்ட சில வருடங்களுக்கு முன் திருமலா திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.



திரு நிர்மல் சேதியா எனும் பக்தர் இக்கோவிலுக்காக இடத்தினையும் பொருளுதவியையும் செய்ய, செய்த முடிவினை செயல்படுத்தி 1.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு இடத்தில் கோவிலும் மற்ற வசதிகளும் கிட்டத்தட்ட 11.5 கோடி ரூபாய் செலவில் இப்போது தயாராகி இருக்கிறது.  கோவில் கட்டப்பட்டிருக்கும் இடம் ஜே-ப்ளாக், உத்யான் மார்க் [மந்திர் மார்க் அருகே], கோல் மார்க்கெட், புது தில்லி.




சயனாதி வாசத்தில் ஸ்ரீ வேங்கடேச பெருமாள்





தாயார்




ஆண்டாள்





கருடாழ்வார்
 
வேங்கடேச பெருமாள் [பாலாஜி], தாயார் மற்றும் ஆண்டாளுக்கு தனி சன்னதிகளும், பெருமாளுக்கு நேர் எதிரே பெரிய திருவடி என அழைக்கப்படும் அவரது வாகனமான கருடாழ்வாருக்கு தனி சன்னதியும் அமைத்து மிகச் சிறப்பாக கோவில் கட்டி, நேற்றைய தினம் [29.05.2013] மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 25-ஆம் தேதி முதல் மஹாகும்பாபிஷேகத்திற்கு முன்பான நிகழ்ச்சிகள் ஆரம்பித்து நேற்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.



ராஜகோபுரம்


திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வந்திருந்த ஆகம சாஸ்திர நிபுணர்கள் பலரும் சேர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்தி வைத்தார்கள். கோவில் மட்டுமல்லாது ”தியானமந்திரம்” எனப் பெயரிடப்பட்ட ஒரு மிகப் பெரிய தியானமண்டபமும் இங்கே கட்டப்பட்டிருக்கிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மையம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சொல்லும் நூலகம், திருமலா திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகங்கள் விற்பனை நிலையம், இளைஞர்களுக்கு பாரம்பரிய நடனம் மற்றும் சங்கீதம் கற்றுத்தரும் வசதிகள் என அனைத்து வசதிகளும் இந்த தியான மண்டபத்தின் முதல் மாடியில் அமைக்க இருக்கிறார்கள். இரண்டாவது மாடியில் தியானம் செய்ய வசதிகள் இருக்கும்.



உற்சவ மூர்த்திகள்


வேங்கடேச பெருமாள் சன்னதியில் ஸ்வாமி சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு முன்னர் ஜலாதி வாசம், தான்யாதி வாசம், [ச்]சாயாதி வாசம், க்ஷீராதி வாசம், சயனாதி வாசம் என அனைத்து நிகழ்ச்சிகளையும் யாஹங்களையும் ஆகம முறைப்படி நடத்தினார்கள்.



கும்பத்திற்கு அபிஷேகம்


கும்பாபிஷேகம் அன்று திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவர் திரு எல்.வி. சுப்ரமணியம் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு Kanumuri Bapi Raju அவர்களும் கலந்து கொண்டனர். ஆயிரம் பேருக்கு மேல் இந்தக் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வேங்கடேச பெருமாளின் ஆசியைப் பெற்றனர். தில்லியில் வசிக்கும் பலருக்கு இந்தக் கோவில் பற்றிய விஷயம் இன்னும் தெரியாததாலோ என்னமோ கும்பாபிஷேகம் அன்று திரளான மக்கள் வரவில்லை. எனினும், வரும் நாட்களில் இக்கோவில் மக்கள் வருகை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.



திருப்பதி என்றதுமே நம் எல்லோருக்கும் அங்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை ஒரு வித பயத்தையும், வரும் பக்தர்களின் அதீத எண்ணிக்கையின் காரணமாக ஒரு நிமிடம் கூட ஆண்டவனைக் கண்ணாரக் காண முடியவில்லையே எனும் ஏக்கத்தினையும் அளிக்கும். திருப்பதியில் பக்தர்கள் எழுப்பும் கோவிந்தா கோஷத்திற்கு இணையாக “ஜருகண்டி” கோஷமும் கேட்கிறதோ என எனக்குத் தோன்றும். சிறு வயதில் பல முறை சென்றிருந்தாலும், கல்லூரி காலத்திற்குப் பிறகு இது வரை செல்ல முடியாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!  இப்போது தில்லியிலேயே திருப்பதி பாலாஜியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது! அதுவும் எனது இல்லத்திலிருந்து பத்து நிமிட நடையில் ஆலயம் அமைந்திருப்பதால் தினமுமே அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் ஆண்டவனை தரிசிக்க செல்ல ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஒருவேளை இதற்காகவே தான் திருப்பதி செல்ல வாய்ப்பு எனக்கு அமையாமல் போய்விட்டதோ!



தில்லி வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் லக்ஷ்மி நாராயண் மந்திர் எனப்படும் பிர்லா மந்திர் வருவது வழக்கம். இனி அவர்கள் இக்கோவிலின் வெகு அருகிலேயே இருக்கும் இந்த வேங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சென்று அவரது அருளுக்குப் பாத்திரர் ஆகப்போவது நிச்சயம்.



மீண்டும் தலைநகர் பற்றிய வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....



நட்புடன்



வெங்கட்.

புது தில்லி.





இதற்கு முந்தைய பதிவு - அபரஞ்சி பொன்னும் ரங்கராட்டினமும். இப்பதிவினைப் படிக்காதவர்கள் படிக்கலாமே!