திங்கள், 17 ஜூன், 2013

ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி திருக்கோவில்






ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி




திருவரங்கம் 194, கீழ உத்திர வீதியில் உத்திர மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி திருக்கோவில் இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட மிகவும் பழமையான கோவில். கோவில் என்றதும் பெரிய கோபுரங்களோ, கொடிமரம், பலிபீடம் என்றெல்லாம் இருக்கும் என நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு வீடு போலவே தோற்றம் அளிக்கிறது. கோவிலின் வரலாற்றினைச் சற்றே பார்க்கலாம்…..




கோவிலின் வெளிப்புறத் தோற்றம்




மத்வாச்சாரியர்களில் ஒருவர் திருக்கோவிலூர் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் [1537-1595] என்பவர். ஸ்ரீ உத்தராதி மடத்தின் 13-ஆவது மடாதிபதி. திருவரங்கத்தில் அரங்கனின் கோவில் அருகிலேயே இருந்து ஐந்து பாவபோத கிரந்தங்களை எழுதினார். அவை ப்ருஹதாரண்ய பாவபோத, ந்யாய விவரண பாவபோத, கீதாபாஷ்ய பாவபோத, விஷ்ணுதத்வநிர்ணய பாவபோத மற்றும் தத்வப்ரகாஷிக பாவபோத என்பவை.




ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி ஓவியம் 




திருவரங்கம் கோவிலின் ப்ரணவாகார விமானத்தினைப் பார்த்தபடியே ஒவ்வொரு கிரந்தங்களை எழுதும்போதும், ஆஞ்சனேயர் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரின் பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டிருக்க, தான் எழுதுவது சரியா என ஆஞ்சனேயரிடம் கேட்டு அவர் சரியென தலையை அசைத்து ஆமோதித்தபின்னரே மேலே எழுதுவாராம். அதனாலேயே, இந்த இடத்தில் ”பாவபோத ஆஞ்சனேயர்” எனப் பெயரிட்டு ஒரு ஆஞ்சனேயர் சிலையை பிரதிஷ்டை செய்தாராம் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர். பாவபோத க்ரந்தங்களை எழுதும்போது சாக்ஷியாக ஆஞ்சனேயர் இருந்தமையால் இவருக்கு ”க்ரந்த சாக்ஷி ஆஞ்சனேயர்” என்ற பெயரும் உண்டு.




ஸ்ரீ பாவபோத ஆஞ்சனேய ஸ்வாமி





சாதாரணமாக ஆஞ்சனேயர் சிலைகள் கையில் சஞ்சீவி மலையைத் தூக்கியபடியோ, இரு கைகளைக் கூப்பியபடியோ இருப்பதைப் பார்த்திருக்கிறோம். இங்கே இருக்கும் பாவபோத ஆஞ்சனேயர் ஒரு கையை மேலே தூக்கியபடி இருக்க, மற்றொரு கையில் ஒரு மலரைப் பிடித்தபடி இருக்கிறார். உத்திர மடத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இருக்கும் இந்த கோவில் ஒரு வீட்டிற்குள் இருக்கிறது.

கீழ உத்திர வீதியிலிருந்து பார்க்கும்போது பழைய கால வீடுகளில் இருக்கும் நீண்ட அறைகள் தெரிகிறது. அவற்றை கடந்து சென்றால் உள்ளே தோட்டம். தோட்டத்தில் பல மரங்கள் உள்ள இயற்கைச் சூழல். ஒரு பக்கத்தில் பெரிய துளசிமாடம். தினம் அங்கே பூஜை செய்யப்படுவது அதன் பராமரிப்பிலேயே தெரிகிறது. தோட்டத்தினைச் சுற்றி பல அறைகள். அதிலே சில கன்னடக் குடும்பங்கள் வசிக்கிறார்கள். வீட்டிற்குள் நுழைந்து தோட்டத்தின் வழியே சென்றபின் பத்து-பன்னிரண்டு படிகள் மேலேறிச் சென்றால் ஒரு அறையில் ஆஞ்சனேயர் கோவில் கொண்டிருக்கிறார்.




ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் க்ரந்தம் எழுத 
பக்கத்திலே நின்றிருக்கும் ஆஞ்சனேயர் ஓவியம்




அந்த அறையிலேயே ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் கிரந்தங்களை எழுத, பக்கத்திலே ஹனுமான் இருந்தது போலே ஒரு ஓவியத்தினை வரைந்து வைத்திருக்கிறார்கள். பாவபோத ஆஞ்சனேயரின் சிலையையும் ஓவியமாக வடித்து வைத்திருக்கிறார்கள். கோவிலில் காலை நேரத்தில் மட்டும் பூஜைகள் செய்துவிட்டு அர்ச்சகர் சென்று விட மற்ற நேரங்களில் கோவில் பூட்டியே இருக்கிறது. அறையின் உள்ளே சென்று, பூட்டியிருக்கும் கம்பிக் கதவுகளின் வழியே ஆஞ்சனேயரை தரிசிக்க முடியும். ராமநவமி, ஹனுமத் ஜெயந்தி போன்ற விசேஷ தினங்களில் சிறப்பான பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறதாம்.




திருவரங்கம் கோவில் பிரணவாகார விமானம்






வெள்ளை கோபுரம்




கோவிலின் வெளியே வந்து, இன்னும் சில படிகள் மேலே ஏறிச் சென்றால், அங்கிருந்து இப்போதும் வெள்ளை கோபுரத்தினையும், அரங்கனின் பிரணவாகார விமானத்தினையும் நன்றாக பார்க்க முடிகிறது.

கீழே ஒரு வீட்டில் குடியிருக்கும் நபர் ஒருவர் கோவிலின் பழமையைப் பற்றிச் சொன்னது மட்டுமல்லாது மிகவும் பழமையான ஒரு புகைப்படத்தினையும் தந்தார்.  தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் இருந்த ஒரு வீடு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலமாக பூட்டப்பட்டு கிடக்க, சமீபத்தில் அந்த வீட்டினை திறந்து சுத்தம் செய்தபோது அங்கே இருந்த புகைப்படங்களை அருகில் உள்ள வீடுகளில் கொடுத்து இருக்கிறார்கள். அதில் ஒரு புகைப்படம் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தருடையது. அந்தப் புகைபடத்தினை எடுத்து வந்து மீண்டும் சில நகல்கள் எடுத்து வைத்து எல்லோருக்கும் தருவதாகவும் சொன்னார் அந்த நபர். அந்தப் படம் தவிர வெள்ளிக் கவசம் அணிந்த பாவபோத ஆஞ்சனேயர் படமும் இன்னும் சில படங்களும் அளித்த அந்த நல்ல மனதுக்கு நன்றி கூறி அங்கிருந்து விடைபெற்றேன்.

இக்கோவில் பற்றிய தகவல் அளித்து நான் அங்கே சென்று வர காரணமாகயிருந்த திரு கோபாலகிருஷ்ணன், தில்லி அவர்களுக்கு என மனமார்ந்த நன்றி.

மீண்டும் வேறொரு கோவில் பற்றிய பகிர்வுடன் உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



குறிப்பு 1: படங்கள் எடுத்தது.....  நாந்தேன்!
குறிப்பு 2: இப்பகிர்வு இந்த வருடத்தின் நூறாவது பதிவு. தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.

ஞாயிறு, 16 ஜூன், 2013

பிள்ளையார்பட்டி ஹீரோ.....



நம்மில் பலருக்கு பிள்ளையார் ஒரு ஹீரோ தான். அரசமரத்தடியோ, ஆற்றங்கரையோ எங்கே வேண்டுமானாலும் பிள்ளையாரைப் பார்த்து விட முடியும். அது மட்டுமல்ல, எல்லாப் பொருட்களிலும் பிள்ளையாரை உருவகப் படுத்தி விட முடியும். அப்படி நான் பார்த்த சில பிள்ளையார் சிலைகள் இன்றைய ஞாயிறில் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு.....



இவர் கடுகுப் பிள்ளையார்.
அட உருவத்தில் இல்லீங்க, செய்தது கடுகில்!


நிலாவில் அமர்ந்தபடி.....


படகுப் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாருங்க என் வாகனமான மூஞ்சூறுக்கும் பிடிச்சுருக்கு!


மரத்தடியில் ஓரப் பார்வை பார்த்தபடி!


ஒய்யாரமான படுக்கை!


நவதானியத்தில் செய்த பிள்ளையார்....


நான் வாசமா இருப்பேன் –
ஏன்னா என்னை வெட்டிவேர்ல செஞ்சு இருக்காங்க!


அன்னப் பறவையில் பறந்து போகப்போறேன்....




கையில் செல்ஃபோன், குடையோட எங்கே கிளம்பிட்டீங்க!

 


சரி அவருக்கு நேரமாச்சுன்னு ஃபோன் சகிதம் கிளம்பிட்டாரு....  எனக்கும் நேரமாச்சு.... கடமை அழைக்கிறது. அடுத்த பதிவில் பார்க்கலாம்!

அடுத்த ஞாயிறன்று வெறு சில புகைப்படங்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


வெள்ளி, 14 ஜூன், 2013

ஃப்ரூட் சாலட் – 49 – ஏழைகளின் வக்கீல் – என்னை மறந்துடு - ராணி



இந்த வார செய்தி:

1983:  கோபிந்த் மோகன் [G]கோஷ் – ஒரு இசையில் ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞர்.  இசையில் சாதிக்க வேண்டிய ஆர்வத்துடன் இருந்த இவருடன் விதி விளையாடியது. இரண்டு பேரைக் கொன்ற பழி. தன் மீது தவறில்லை என இவர் சொன்னாலும் கிடைத்தது சிறைத் தண்டனை. வக்கீல்களின் மூலம் தனது வழக்கினை நடத்தும் போது சந்தித்த விஷயங்கள் இவரை சட்டம் படிக்க உந்து கோலாக இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்து சட்ட கல்லூரியில் சேர்ந்தார். 1986-ஆம் ஆண்டு LLB படித்து முடித்தார்.

அவருடைய வழக்கும் கீழ்கோர்ட், மேல் கோர்ட், உச்ச நீதிமன்றம் என இழுத்துக் கொண்டிருந்தது. தானே சட்டம் படித்ததால் தனது வழக்கினை தானே நடத்த யோசித்தபோது மூத்த வக்கீல்கள் தடுக்க, உச்ச நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைத்தது. தான் படித்த சட்டப் படிப்பு மற்ற ஏழை கைதிகளுக்கு உதவியாக இருக்கட்டுமே என சிறைக்குள்ளேயே உதவி செய்து வந்தாராம்.  

ஆயுள் தண்டனையாக 14 ஆண்டுகள் ஒன்பது மாதம் கழித்து விடுதலை பெற்ற பிறகு முழு நேர வக்கீல். ஏழைக் கைதிகள் எவரிடமும் கட்டணம் வாங்காது சட்ட உதவிகள் செய்து வருகிறார். தனது வருமானத்திற்கு அவர்களுடைய குடும்பத்தின் உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. அதனால் தான் நான் இவர்களிடம் எந்தவித கட்டணமும் வாங்குவதில்லை எனச் சொல்லும் இவர் தற்போது கொல்கத்தா உயர் நீதி மன்றத்தின் அருகே அலுவலகம் வைத்து இருக்கிறார்.

சட்டத்தின் பிடியில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டபின் தளர்ந்து விடாது, சட்டம் படித்து மற்றவர்களுக்கு உதவும் இவருடைய தன்னம்பிக்கையும் முயற்சியும் பாராட்டுக்குரியது. தொடரட்டும் இவரது சேவைகள்.  திரு [G]கோஷ் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து......
    
இந்த வார முகப்புத்தக இற்றை:

PATIENCE IS NOT AN ABILITY TO WAIT, BUT THE ABILITY TO KEEP A GOOD ATTITUDE WHILE WAITING.

 அடுத்த முறை எங்கேயாவது காத்திருக்க வேண்டியிருந்தால் இதை நினைத்துக் கொள்ளுங்கள்!

இந்த வார குறுஞ்செய்தி: 

அம்மா தனது மகனுக்குச் சொன்ன பாடம்: “LOVE YOUR FRIENDS…  NOT THEIR SISTERS AND LOVE YOUR SISTER, NOT HER FRIENDS….”  ஆனா பாதி பசங்க பண்றது எப்பவுமே உல்டா தான்! :)

ராஜா காது கழுதை காது: 

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு பெண் கை கொண்டு காது மூடிக் கொண்டிருந்தாள். நான் அவளைக் கடக்கும் போது கேட்டது – “நமக்குள்ள இதுவரைக்கும் என்ன நடந்ததோ, அதெல்லாம் போகட்டும். இனிமே நமக்குள்ள ஒண்ணும் கிடையாது. எனக்கு கல்யாணம் ஆகப்போகுது. கல்யாணம் ஆனபிறகு எனக்கு எல்லாமே என் கணவர் தான். அதனால என்ன மறந்துடு!.  தொந்தரவு பண்ணாதே!”.

நமக்குள்ளே ஒண்ணுமே நடக்கலையேன்னு கேட்க நினைத்தேன் – பிறகுதான் புரிந்தது அப்பெண் பேசியது என்னுடன் அல்ல! அலைபேசியில் :)

ரசித்த காட்சி:

எல்லா வீட்டுலயும் பெண்ணுக்கு தலை வாரி விடும்போது ஒரு மஹாபாரத யுத்தமே நடக்கும் – அம்மாவுக்கும் பெண்ணுக்கும். இங்க பாருங்க ஒரு அப்பா தலை வாரி விடறார் பெண்ணுக்கு. எவ்வளவு சந்தோஷமா பொண்ணு தலை வாரிக்கிறா....  



ஆனா நிச்சயம் இது மாதிரி பண்ணக் கூடாது. ஆபத்து நிறைந்த விஷயம். யாரும் முயற்சிக்காதீங்க. பார்க்க மட்டுமே.....  முயற்சி செய்ய அல்ல.

T-Shirt வாசகம்:

சென்ற ஃப்ரூட் சாலட் பகுதியில் ஒரு T-Shirt வாசகம் வெளியிட்டது நினைவிருக்கலாம். அதற்கு நேர் மாறான இன்னுமொரு வாசகம். இதுவும் ஒரு கணவனின் T-Shirt-ல் தான் எழுதப்பட்டிருந்தது என்பதை கவனிக்கவும்!

ALL GIRLS ARE DEVIL BUT MY WIFE IS QUEEN......

. . . . . . . OF THEM..:-

படித்ததில் பிடித்தது:

சமையல் செய்து கொண்டிருக்கும் மனைவி: “என்னங்க....  ஷெல்ஃப்ல இருந்து உப்பு எடுத்துக் கொடுங்க.....

பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவன், முனகிக் கொண்டே வந்து, ஷெல்ஃப் முழுவதும் தேடிய பிறகு:  ‘இங்கே இல்லையேம்மா.....’

மனைவி:  சரியான குருடு. உங்களுக்குக் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். அதனால நான் முன்னாடியே எடுத்து வைச்சுக்கிட்டேன்!

கணவன்:  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... 

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.