வியாழன், 27 அக்டோபர், 2016

தவாங்க் – பிரம்மாண்ட புத்தர் சிலை - அழகிய ஓவியங்கள்.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 61

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


பிரம்மாண்ட புத்தர் சிலை.....


தவாங்க் மோனாஸ்ட்ரி - வெளிப்புறத் தோற்றம்...

PTSO Lake-ல் சிறிது நேரம் இயற்கையை ரசித்தபடி இருந்த பிறகு தவாங்க் நகர் நோக்கி பயணத்தினைத் தொடர்ந்தோம். தங்குமிடம் செல்வதற்கு முன்பாக தவாங்க் நகரின் புகழ்பெற்ற Monastery பார்க்க வேண்டும் என்பது எங்கள் திட்டம்.  ஓட்டுனர் ஷம்புவும் புத்த மதத்தினைச் சேர்ந்தவர் என்பதால் அங்கே சென்று வர வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருந்தார்.  ஏரியிலிருந்து தவாங்க் Monastery வந்து வாகனத்தினை நிறுத்தி உள்ளே சென்றோம்.  அழகிய தோரண வாயிலைக் கடந்து உள்ளே வந்தோம். 


புத்தர் சிலை – வேறு கோணத்தில்.....


பிரார்த்தனை செய்தபடி நடக்கும் புத்தபிக்கு.....

மிகவும் பழமையான புத்த மதத்தின் வழிபாட்டுத் தலம் இது. இந்தியாவில் இருக்கும் புத்த மத வழிபாட்டுத் தலங்களில் மிகப் பெரியது இது தான். ஆசியாக் கண்டத்தில் இரண்டாவது பெரிய புத்த மத வழிபாட்டுத் தலமும் இது தான். முதலாம் இடத்தில் இருப்பது திபெத்தின் லாசா. கடல் மட்டத்திலிருந்து 3300 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் சுமார் 700 புத்தபிக்குகளும், 450 லாமாக்களும் வசிக்கிறார்கள். புத்தமதக் கொள்கைகளை பரப்பும் விதமாக பல்வேறு செயல்பாடுகள் இங்கே உண்டு. 17-ஆம் நூற்றாண்டில் Mera Lama Lodre Gyatso என்பவரால் அமைக்கப்பட்டது இந்த Monastery.  எப்படி அமைக்கப்பட்டது என்பதைப் பார்க்கலாமா.....


வெளிப்புறத்தில் பிரார்த்தனை உருளை.....

இப்படி ஒரு Monastery இந்தியாவில் அமைக்கப்பட வேண்டும் என்பது ஐந்தாம் தலாய் லாமாவின் விருப்பம். அந்த விருப்பத்தினை நிறைவேற்ற Mera Lama முடிவு செய்தார். ஆனால் எந்த இடத்தில் இந்த Monastery அமைப்பது என்பதை அவரால் முடிவு செய்ய இயலவில்லை.  பல இடங்களுக்குச் சென்று பார்வையிட்டாலும், இந்த இடத்தில் கட்டலாம் என்று அவரால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சரி ஆண்டவன் விட்ட வழி – எங்கே கட்டவேண்டும் என்பதை ஆண்டவனே நமக்கு உணர்த்தட்டும் என முடிவு செய்து ஒரு குகைக்குள் சென்று அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.  நீண்ட நேரத்திற்குப் பிறகு குகையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், வெளியே நிறுத்தி வைத்திருந்த அவர் குதிரை காணாமல் போயிருந்தது!


மோனாஸ்ட்ரி வெளியே நண்பர்களுடன்.....

நாமாக இருந்திருந்தால், ஆஹா, எவனோ குதிரையை ஆட்டையப் போட்டுட்டான் போல இருக்கே, என்று நினைத்திருப்போம்.  Mera Lama இதுவே ஆண்டவன் நமக்குத் தரும் ஒரு வித Signal – குதிரையைத் தேடுவோம் என முடிவு செய்து மலைப்பிரதேசம் முழுவதும் தேடியபடி அலைந்தார். குதிரையும் கிடைத்தது. அவரது குதிரை ஒரு மலை உச்சியில் நின்று கொண்டிருந்தது. குதிரை வழியாக Monastery அமைக்க தகுந்த இடத்தினை கடவுள் நமக்கு காட்டிக் கொடுக்கிறார் என, Mera Lama குதிரை நின்று கொண்டிருந்த அந்த மலை உச்சியை தேர்ந்தெடுக்கிறார்.  Tawang Monastery அங்கேயே அமைகிறது.  Tawang Monastery என்பதற்கு Horse Chosen என்ற அர்த்தமும் உண்டு!


ஒரு ஸ்தூபி.....

Tawang Monastery-க்கு திபெத்திய மொழியில் Gaden Namgyal Lhatse என்ற பெயரும் உண்டு.  இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? தேவலோக சுவர்க்கம்..... சுவர்க்கம் எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. என்றாலும் இது தான் சுவர்க்கம் என நாம் சொல்ல முடியுமா.....   அவர்கள் மொழியில் அவர்கள் அழைப்பதையும் நாம் ஏற்றுக் கொள்வோம்! இந்த இடம் புத்த மத குருவாக இருக்கும் தலாய் லாமாக்களின் வாழ்வில் முக்கியமான இடம் பெற்ற ஒன்று.  14-வது தலாய் லாமா திபெத்தில் இருந்து வெளியேறியபோது இந்த இடத்தில் தான் பாதுகாக்கப்பட்டார் என்பதும் செய்தி.




சுவர் ஓவியங்கள்.....

சுற்றியுள்ள கிராமத்து மக்களின் உதவியுடன் இந்த தவாங்க் Monastery மிக அழகாக உருவாக்கப்பட்டது. இயற்கைச் சீற்றங்களிலும் அன்னியப் படையெடுப்புகளிலும் சில பகுதிகள் அழிந்துவிட்டாலும் இன்றைக்கும் அழகாக இருக்கிறது இந்த Monastery. உள்ளே மிகப் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. Mural என அழைக்கப்படும் சுவர் ஓவியங்கள் கோவிலின் பக்கச் சுவர்களில் அமைத்திருக்கிறார்கள். மிக அழகான ஓவியங்கள் அவை.  ஒவ்வொரு ஓவியத்தினையும் ரசித்து ரசித்து வரைந்திருக்க வேண்டும். ஒவ்வொன்றையும் படம் எடுத்துக் கொண்டோம். 


நான் அழகா இருக்கேனா.....

Monastery-க்கு சுற்றுலாப் பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் நிறையவே வருகிறார்கள். அப்படி வந்தவர்களின் ஒருவர் சிறு குழந்தையுடன் வந்திருக்க, அக்குழந்தை அழகழாக அலைபேசி மூலம் அம்மா எடுக்கும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.  அக்குழந்தையையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்!




சுவர் ஓவியங்கள்.....

ஆனால் சமீப காலமாக இந்த Monastery இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து விடுமோ என்ற அபாயம் இருந்து வருகிறது.  மலையுச்சியில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் பல முறை மலைச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.  அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஏரியும், மலைப்பகுதிகளில் அரிப்பு ஏற்படுத்தி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பராமரித்தால் மட்டுமே இந்த வழிபாட்டுத் தலத்தினை காப்பாற்ற முடியும் என்று தோன்றுகிறது.




அருங்காட்சியகத்தில் இருந்த சில பொருட்கள்.....
17-ஆம் நூற்றாண்டு சமையல் பாத்திரங்கள்...

இங்கே ஒரு அருமையான அருங்காட்சியகமும் இருக்கிறது. பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள், சிலைகள், புத்தர் விக்கிரகங்கள் என பலவும் இங்கே காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பத்து ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு நம்மை அனுமதிக்கிறார்கள். புகைப்படக் கருவிகளுக்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை என்பதில் மகிழ்ச்சி!


வித்தியாசமாய் மூன்று முகங்களுடன் ஒரு கூஜா.....

எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்து, சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு தங்குமிடம் நோக்கி பயணித்தோம்.  அன்றைய தினத்தில் பலவித அனுபவங்கள் – அனைத்தையும் ஒரு முறை மனக்கண்ணில் மீண்டும் பார்த்தபடியே அமர்ந்திருக்க, தங்குமிடம் வந்திருந்தது. அடுத்த நாள் தவாங்கிலிருந்து புறப்பட வேண்டும் – வரும்போது கரடு முரடான சாலை வழியாக வந்ததில் உடல் முழுவதும் வலி! கௌஹாத்தி திரும்ப ஹெலிகாப்டரில் செல்வது என்பது எங்கள் திட்டமாக இருந்தது. அது செயல்படுத்தமுடிந்ததா இல்லையா என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

புதன், 26 அக்டோபர், 2016

அதிகாலை சுப வேளை!



அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து, பல் துலக்கும் போது சில்லென்ற தண்ணீர் பட, பல் மட்டுமல்லாது உடம்பும் கூசியது! சரி குளிக்க வென்னீர் தான் தேவைப்படும் போல என வென்னீரில் குளித்து ரெடியாகவும் சொல்லி இருந்த நான்கு சக்கர வாகனத்தின் ஓட்டுனர் அழைக்கவும் சரியாக இருந்தது! வீட்டைப் பூட்டிக் கொண்டு முதுகுச் சுமையோடு கீழே இறங்க, என் காலணியின் ஓசை நித்திரையில் இருந்த இரு பைரவர்களை தொந்தரவு படுத்தியது போலும்! அதில் ஒன்று தன் எதிர்ப்பை  சிம்மக் குரலில் காட்டியது, உடனே மற்றதும் பக்கவாத்தியம் வாசித்தது – பைரவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியபடியே நடந்தேன். வாசல் கேட் திறந்திருக்க, அதன் அருகே காவலாளி நல்ல தூக்கத்தில் இருந்தார் – அவரைத் தொந்தரவு செய்யாது வெளியே வந்து வண்டியில் அமர்ந்தேன்.

அதிகாலை நேரத்து தில்லி சாலைகள் ஒரு வித மயான அமைதியில் இருக்கும். பகல் நேர கும்பலோ, வாகன நெரிசலோ இல்லாது அமைதியான அந்த நேரத்தில் பயணிப்பது ஒரு சுகானுபவம்.... நான்கு மணிக்கு மந்திர் மார்க் சாலையில் ஒரு பெரியவர் நடக்கிறாரா, Jogging செய்கிறாரா எனச் சொல்ல முடியாத ஒரு நடை/ஓட்டம்....  அவரின் சுறுசுறுப்பை மனதுக்குள் பாராட்டியபடி பயணத்தினைத் தொடர்ந்தேன். மதர் தெரசா க்ரெஸெண்ட் சாலையில் வண்டி தொடர்ந்து பயணித்தது. எங்கள் வண்டியின் முன்னர் ஒரு DTC சிவப்பு நிற பேருந்து – அதாவது குளிரூட்டப்பட்ட பேருந்து சென்று கொண்டிருந்தது. இரவு நேரப் பேருந்து - அதிகாலை நேரமாக இருந்தாலும் நல்ல கும்பல். 

நிறுத்தம் ஒன்றில் ஒரு DTC ஜீப் நின்று கொண்டிருந்தது. பயணச் சீட்டு பரிசோதகர்கள் இரண்டு பேர், அங்கே நின்று இரவு நேரப் பயணம் செய்பவர்களின் பயணச் சீட்டுகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். பகல் நேரத்திலேயே தில்லி பேருந்துகளில் பலர் பயணச்சீட்டு வாங்குவதில்லை! அந்த இரவு நேரத்தில் யார் சோதனை செய்யப் போகிறார்கள் என சிலர் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தார்கள் போலும். அவர்களை ஜீப்பில் ஏற்றிக் கொண்டிருந்தார் இன்னுமொருவர். “உங்க கடமைக்கு ஒரு அளவே இல்லையாடா” என நினைத்துக் கொண்டேன்.  

இப்படியாக யாருமில்லா சாலைகளில் பயணித்து விமான நிலையத்தினை சமீபத்தபோது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. நிலையத்திற்குள் நுழைய பெரிய வரிசை. தீபாவளியை வரவேற்கும் விதமாக பல விளக்கு அலங்காரங்கள் செய்திருந்தார்கள். உள்ளே நுழைந்தால் ஒவ்வொரு விமான சேவை நிறுவனங்களின் சேவை மையங்களிலும் பெரிய வரிசை.  ஒவ்வொரு வரிசையாகக் கடந்து சோதனைகளை முடித்துக் கொண்டு உள்ளே நுழைய தூக்கம் கண்களைச் சொக்கிற்று. உட்கார இடம் கிடைக்கிறதா எனப் பார்த்தால், கிடைத்த இடம் The Cellar என அழைக்கப்படும் சரக்கு விற்கும் இடத்திற்கு அருகே....

அந்த அதிகாலை நேரத்திலும் பல பயணிகள் சரக்கு வாங்கிக் கொண்டிருந்தார்கள்.  சரக்கு விற்பனை செய்யும் அந்தக் கடையில், ஒரு இளம்பெண்ணையும்  பார்க்க முடிந்தது. விற்கும் சரக்குகளையும் அதன் விலையையும் ஒவ்வொரு குப்பியாக எடுத்துப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.  பக்கத்திலேயே Punjabi Grill என இன்னுமொரு கடை – அதில் உணவு தவிர சரக்கும் இருந்தது! மிகப் பெரிய பாட்டில் ஒன்றில் சரக்கு இருக்க அதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து விற்பனை செய்கிறார்கள்! சரக்கு விற்பனையைக் கவனித்தபடியே இருந்த எனக்கே கொஞ்சம் மயக்கம் வந்தது! சற்றே கண்ணசர, பக்கத்தில் விசும்பும் ஓசை. அதுவும் ஒரு பெண் அழும் ஓசை என்றவுடன் கண்களைத் திறந்தேன்.

பக்கத்தில் ஒரு பெண் – அலைபேசியில் பேசியபடியே அழுது கொண்டிருந்தார். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். துடைக்கக்கூடத் தோன்றாமல் அழுது கொண்டிருக்க, மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. என்ன ஆயிற்றோ பாவம் என யோசித்தபடியே கவனித்தேன். “அம்மாவுக்கு சொல்லிட்டீங்களா? அவங்களை நினைத்தால் தான் பாவமா இருக்கு, அப்பாவின் இழப்பை எப்படித் தாங்குவாங்களோ?” என்று சொன்னபோது தான் தெரிந்தது அவரின் அப்பா இறந்து விட்டார் என....  இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய மனதிலேயே பிரார்த்தனை செய்து, விட்ட தூக்கத்தினை தொடர நினைத்தேன்.

மீண்டும் பேச்சுச் சத்தம் – இம்முறை தமிழில் பேச்சு.... கண்களைத் திறந்து கவனிக்க, ஒரு பதினைந்து வயது சிறுவன் தன்னுடைய Tab-ல் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் அம்மா அவனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு தான் நான் முழித்திருந்தேன். என்னதான் பேசுகிறார் என காது கொடுத்துக் கேட்டால், “டேய், எவ்வளவு நேரம் விளையாடுவே, கொஞ்சம் நேரம் நிறுத்தி வைடா” என்று சொல்ல, அடுத்ததாய் சொன்னது கொஞ்சம் சிரிப்பை வரவைத்தது! “டேய், சீக்கிரம் போய் மூச்சா போயிட்டு வாடா, உள்ளே போறதுக்குள்ள மூச்சா போயிட்டு வந்துடுடா!”  என்று மூச்சாவுக்கு ஒரு போராட்டம்.... வந்தா போகமாட்டானா என்று கேட்கத் தோன்றிற்று!

விமானத்திற்கான அழைப்பு வர, பணிப்பெண்களின் பொய் புன்னகைகளை ஏற்றுக்கொண்டு பேருந்தில் ஏறி விமானத்தின் அருகே அவர்கள் இறக்கிவிட, விமானத்திற்குள் உள்ளே நுழைந்து எனக்கான ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். எனக்கு அடுத்த இருக்கையும், அதற்கடுத்த இருக்கையும் ஒரு சிறுமி, மற்றும் அவருடன் வந்த ஒருவருக்கானது. சரி தூங்க ஆரம்பிக்கலாம் என முயற்சித்தபோது அந்த சிறுமி என்னைத் தாண்டி ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ”ஜன்னலோர இருக்கை” வேண்டுமா எனக் கேட்க, தலையை ஆட்டினார் சிறுமி! எனது இருக்கையை அவருக்குக் கொடுத்து நடு இருக்கைக்கு வந்து தூங்க ஆரம்பித்தேன். சற்று நேரத்தில் நல்ல உறக்கம். தோளில் ஏதோ அழுத்தம் – எடை அதிகரித்தது போல ஒரு உணர்வு. முழித்துப் பார்த்தால் அந்தச் சிறுமி என் தோள் மேல் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அவர் உறக்கம் கலைக்காது நானும் உறங்க முயற்சித்தேன்.

சென்னை விமான நிலையத்தில் நடராஜர் சிலை.....

விமானப் பணிப்பெண்கள் உணவு விற்பனை, பொருட்கள் விற்பனையைத் துவங்கி இருக்க, தூங்க முடியவில்லை. சிறிது நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்க, சென்னை என்னை வரவேற்றது! திருச்சிக்கு பேருந்தில் தான் பயணிக்க வேண்டும். பேருந்தில் புறப்பட, ஒரு பயணிக்கும் பேருந்தின் நடத்துனர்/ஓட்டுனர் இருவருடனும் தகராறு! வழியிலேயே நிறுத்தி விடுவார் எனத் தோன்றியது! என்ன பிரச்சனை – ஒன்றுமில்லை! ஓட்டுனர் மிகவும் மெதுவாக வண்டியை ஓட்டுகிறார் என்று பயணி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அரசுப் பேருந்தினை 100-120 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த வேண்டும் எனச் சொல்ல, நடத்துனருக்கும், பயணிக்கும் பயங்கர வாக்குவாதம். 60க்கு மேல் ஓட்டினாலே பாகங்கள் உதிர்ந்து கீழே விழுந்து விடும் போல ஒரு சத்தம்! இதை 100-120-ல் ஓட்டினால் என்னாவது! எங்காவது முட்டி அனைவரையும் மேலே அனுப்பச் சொல்லுகிறாயா என்று அவர் வாதம்.

காசு திருப்பிக் கொடு நான் வேறு பேருந்தில் போகிறேன் என விழுப்புரம் அருகே வரும்போது பயணி சொல்ல, தரமுடியாது எனச் சொன்னார் நடத்துனர். காலையிலே சாப்பிட்ட தோசையை அப்படியே தோசையா வயத்துல இருந்து வெளியே கொண்டு வா, அப்படி உன்னால் முடிந்தால், நீ கொடுத்த காசை திரும்பிக் கொடுக்கிறேன் என்கிறார் நடத்துனர்! ஓட்டுனரோ, இவர்களின் சண்டையை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வாகனத்தை செலுத்த எந்த நேரமும் விபத்து ஏற்படும் நிலை! மற்ற பயணிகள் யாருமே வாயைத் திறக்கவில்லை. அரை மணிக்கு மேல் இதே மாதிரி இருக்க,  நானே களத்தில் இறங்க வேண்டியிருந்தது. ”சண்டை போட்டு மற்றவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் எனச் சொல்லி சமாதானம் செய்து, ஒரு வழியாக திருச்சி வந்தாயிற்று! வீட்டுக்கு வந்தால், வீட்டிலே விருந்தாளி! அட நம்ம பதிவுலகத்திலிருந்து தாங்க....  வலைப்பதிவாளர் துளசி கோபாலுடன் வந்திருந்தார்.

இரண்டு வருடத்திற்குப் பிறகு இந்த வருடம் குடும்பத்துடன் தீபாவளிக் கொண்டாட்டம்.....  அனைவருக்கும் இனிதாகவே அமையட்டும் இந்த தீபாவளி! அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்... கொஞ்சம் முன்னரே வாழ்த்து சொல்றேனோ?......

மீண்டும் ச[சி]ந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.....



சனி, 22 அக்டோபர், 2016

ராஜஸ்தானி உணவு – கேர் சாங்கர் – பேசன் Gகட்டா


கேர் சாங்கர்/சாங்க்ரி......

தில்லியில் தற்போது இரண்டாவது தேசிய கலாச்சார விழா நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல நடன நிகழ்ச்சிகள், கச்சேரிகள் என அமர்க்களப்படுத்துகிறார்கள். காலை முதல் இரவு பத்து மணி வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நிகழ்ச்சிகள். மாலை முக்கியமான நிகழ்வுகள்.  பல மாநிலங்களில் இருந்தும் வந்திருக்கும் கலைஞர்கள் தவிர பல கைவினைப் பொருட்கள் செய்பவர்களும் வந்திருக்கிறார்கள், உணவுக் கடைகள் ஏற்பாடும் உண்டு.

அலுவலகத்தில் இந்த நேரம் பார்த்து அதிக வேலைகள்….. தினம் மாலை நேரம் அங்கே செல்ல முடியவில்லை.  இரண்டு நிகழ்ச்சிகள் – ஒன்று உஷா உதூப் அவர்களின் கச்சேரி, மற்றொன்று மனோஜ் திவாரி கச்சேரி – மட்டும் போக முடிந்தது. அங்கே பார்த்த நிகழ்ச்சிகள், நடனங்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.  இன்றைக்கு சில உணவு வகைகள் பற்றி மட்டும் பார்க்கலாம்! முதல் நாள் அங்கே சென்றபோது ஒன்றும் சாப்பிடவில்லை. இரண்டாம் நாள் சென்றபோது உணவுக்கடை பக்கம் செல்ல, அங்கே பல மாநிலங்களிலிருந்தும் கடைகள், பல்வேறு உணவுகள் இருக்க, ராஜஸ்தானி உணவுக்கடைக்குச் சென்றேன்.

முதலில் கச்சோடி மட்டும் சாப்பிடலாம் என நினைத்து 50 ரூபாய்க்கு டோக்கன் வாங்கியபிறகு, அது மட்டும் சாப்பிட்டால், வீட்டிற்கு வந்த பிறகு சமைக்க வேண்டுமே என 50 ரூபாய் டோக்கனைத் திருப்பிக்கொடுத்து ”ராஜஸ்தான் தாலி” வாங்கிக் கொண்டேன்! தாலி என்றால் தட்டு! தட்டு முழுவதும் ராஜஸ்தானிய உணவு! பாஜ்ரா ரொட்டி, மிஸ்ஸி ரொட்டி, பேசன் Gகட்டா, தால், கடி, சூர்மா லட்டு, பயத்தம்பருப்பு ஹல்வா மற்றும் கேர் சாங்கர் என நிறைய வகை உணவுகளோடு ஒரு தட்டு – ரூபாய் 200 மட்டும்!


பேசன் Gகட்டா......

கேர் சாங்கர் என்பது என்ன என்று கேட்க, அது ராஜஸ்தானி ஸ்பெஷல் உணவு என்று சொல்ல, குச்சி, குச்சியாக இருப்பது பார்க்கும் போது இது சைவமா அசைவமா என ஒரு சந்தேகம். ஏற்கனவே விளக்குகளைச் சுற்றி இருந்த பூச்சிகள் சில பேசிக்கொண்டிருக்கும்போது வாய்க்குள் சென்று விட கொஞ்சம் அசைவமாக மாறி இருந்த நாள்! இதில் இதுவும் சாப்பிட்ட பிறகு கேட்பதை விட முன்பே கேட்டுவிடலாம் என கேட்க, மீசை முறுக்கிய சிப்பந்தி, ”சைவ உணவு தான்” என்று சிரித்தார்! நன்றி சொல்லி தட்டுடன் மேஜைக்கு நகர்ந்தேன்!

ஒரு பாஜ்ரா ரொட்டி, ஒரு மிஸ்ஸி ரொட்டி ஆனால் தொட்டுக்கொள்ள நிறைய சப்ஜி – மூன்று விதமான சப்ஜி! பாஜ்ரா என்றால் கம்பு – கம்பு மாவில் சப்பாத்தி செய்தால் அது பாஜ்ரா ரொட்டி! மிஸ்ஸி ரொட்டி என்பது கோதுமை மாவுடன் கடலை மாவு மற்றும் ஓமம் சேர்த்து செய்யும் ரொட்டி – அதாவது சப்பாத்தி! பேசன் Gகட்டா என்பதும் கடலை மாவில் உருளை வடிவில் செய்து சப்ஜியில் சேர்ப்பார்கள் – பிறிதொரு சமயம் அதன் குறிப்பு எழுதுகிறேன் – ஒன்றிரு முறை செய்ததுண்டு…..  கடி என்பது மோர்க்குழம்பு மாதிரி ஒரு சப்ஜி வகை.

இவை எல்லாம் முன்னரே ருசித்திருந்தாலும் இந்த கேர் சாங்கர் இது வரை சாப்பிட்டதில்லை. சைவ உணவு எனத் தெரிந்துவிட்டது – எப்படி இருந்தாலும் சாப்பிட்டு பார்ப்போம் என சாப்பிட நன்றாகவே இருந்தது. கேர் என்பது பாலைவனப் பகுதிகளில் காண்ப்படும் முட்செடி ஒன்றின் புளிப்பான பெர்ரி வகை பழம். சாங்கர் என்பது வன்னி மரத்தின் பீன்ஸ்! இரண்டும் சேர்ந்து மசாலாக்களுடன் தயார் செய்வார்களாம்…. பார்க்க கருப்பு/பிரவுன் நிறத்தில் இருக்க, முதலில் கொஞ்சம் எடுத்துச் சுவைக்க, புளிப்பும் காரமும் சேர்ந்து நன்றாகவே இருந்தது.  முழுவதும் முடிக்கும் அளவிற்குப் பிடித்திருந்தது!

நன்றாகவே இருக்கிறது இந்த கேர் சாங்கர்….. சிலர் கேர் சாங்க்ரி என்றும் அழைக்கிறார்கள்.  ராஜஸ்தானிய உணவுக் கடைகளில் கிடைத்தால் இதை மட்டுமாவது சாப்பிட்டுப் பாருங்களேன்…..

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


வெள்ளி, 21 அக்டோபர், 2016

ஃப்ரூட் சாலட் 180 – மழை நீர் சேகரிப்பு - பேரம் - சின்னத் தாயவள்



இந்த வார செய்தி:

மழை நீர் சேகரித்த நாட்டின் முதல் கிராமம்!- மைக்கேல்பட்டினம் டு வாஷிங்டன்: எளிய பெண்ணின் சாதனைப் பயணம்...



பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலை. பச்சையைப் பார்க்க முடியவில்லை. சாலையின் இருபுறமும் பொட்டல்காடு. கிட்டத்தட்ட விவசாயம் செத்துவிட்டது. உழுது கிடக்கும் நிலங்களில் உப்பு பூத்து வெளறிப்போயிருக்கின்றன. மினி பேருந்து நிற்கிறது. இறங்கும்போது “அப்படியே மேக்கால போனீங்கன்னா பத்து நிமிஷத்துல ஊர் வந்துடும்” என்கிறார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். மேற்கில் சென்றுக்கொண்டேயிருக்கிறேன். முட்காடுகள், கள்ளிச் செடிகள் என பாலைபோல நீள்கிறது பொட்டல்வெளி. கிராமத்துப் பாஷையில் பத்து நிமிடம் எனில் அரை மணி நேரம் என்று கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்போல. பிழை அவர்கள் மீது இல்லை. அவர்களின் நடை அப்படி. விறுவிறுவென நடந்துவிடுவார்கள். நகரங்களைப் போல பக்கத்து வீதிக்குச் செல்ல பைக்கை உதைப்பதில்லை. சட்டென உள்வாங்குகிறது கிராமத்து இணைப்புச் சாலை ஒன்று. நுழைந்தோம். வயல் வரப்புகள் சூழ பாலைவனச் சோலை ஒன்று வரவேற்கிறது. அது மைக்கேல்பட்டினம் கிராமப் பஞ்சாயத்து!

ஊருக்குள் நுழைகிறோம். மையமாக அவ்வளவு பெரிய ஊருணி. ஒரு பெரிய கால்பந்து மைதானம்போல விரிந்திருக்கிறது அது. நடுவே இரண்டு குளங்கள். வறட்சியால் ஊருணி நிரம்பாதபோதும் குளங்களில் தண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அருகே ஒரு தேவாலயம். வரிசையாக ஏழெட்டுத் தெருக்கள். இதென்ன ஆச்சர்யம், ஒவ்வொரு வீட்டில் இருந்து சொல்லி வைத்ததுபோல பிளாஸ்டிக் குழாய்கள் கூரையில் இருந்து கீழ் இறங்குகின்றன. இப்படி எங்கேயும் பார்த்ததில்லை. எங்கே செல்கின்றன அவை?

சேலை தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டே வரவேற்கிறார் ஜேசுமேரி. மைக்கேல்பட்டினம் பஞ்சாயத் துத் தலைவர். எளிமையான தோற்றம்.

“பொறுத்துக்கிடுங்க தம்பி! சமையல் முடிக்க நேரமாயிட்டு. என்கிட்ட வண்டி எதுவும் கெடையாது. ஊருக்குள்ள எல்லாரும் வெவசாயத்துக்குப் போயிட்டாங்க. ரொம்ப தூரம் நடந்துட்டிங்களா..?” வாஞ்சையான வார்த்தைகளால் பறந்தோடியது களைப்பு.

என் கண்கள் வீடுகளில் இருந்து இறங்கும் குழாய்களை மேய்ந்துக்கொண்டிருந்தன. “என்ன தம்பி அப்பிடி பாக்குறீங்க? மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பம் தம்பி. நம்ம கவர்மெண்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச ஊராக்கும் இது. சொல்லப்போனா வீடுகள் மூலம் மழை நீர் சேகரிச்சதுல இந்தியாவுக்கே எங்க கிராமம்தான் முன்னோடி” என்கிறார். ஆம், நினைவு வருகிறது. முதன்முதலில் அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதா மழை நீர் சேகரிப்பு குறித்து விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மழை நீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிட்டிருந்தவர், ‘‘ஏன் நமது மாநிலத்திலேயே முதன்முறையாக ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவி இதனை சிறப்பாக செய்திருக்கிறார்’’ என்று பெயர் சொல்லாமல் குறிப்பிட்டார். அந்தப் பஞ்சாயத்துதான் மைக்கேல்பட்டினம்!

முழு செய்தியும் படிக்க இங்கே செல்லலாம்…. பஞ்சாயத்து மக்களுக்கும் அதன் தலைவிக்கும் இந்த வாரப் பூங்கொத்து…..

இந்த வார முகப்புத்தக இற்றை:

முயன்றால் முடியாதது இல்லை…..  இதுவும் ஒரு வெற்றியாளர் பற்றிய காணொளி தான்…..  பாருங்களேன்!


இந்த வார மீம்!:

பேரம் பேச வேண்டாமே.....



இந்த வார காணொளி:

முத்துநிலவன் ஐயாவின் ஒரு புத்தகம் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே”….  இங்கே சிங்கப்பூர் வாழ் பள்ளி முதல்வர் ஒருவர் தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சொன்ன ஒரு செய்தி – காணொளியாக…  அருமையான கருத்தைச் சொல்லி இருக்கிறார் – பாருங்களேன்…..


இந்த வார ஓவியம்:

எனது மகள் சமீபத்தில் வரைந்த ஒரு ஓவியம்….. 




இந்த வார இசை:

தளபதி படத்திலிருந்து…..  சின்னத் தாயவள் தந்த ராசாவே பாடல் இந்த வார இசையாக…..


இந்த வார குறுஞ்செய்தி:

காதைத் தொட்டால் பள்ளியில் சேர்த்தது அந்தக் காலம்…. தவழ ஆரம்பித்தாலே பள்ளியில் சேர்ப்பது இந்தக் காலம்!

படித்ததில் சிரித்தது:

எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்கும் மதுரைத் தமிழனுக்கு போட்டியா ஒரு ஆளு இங்கே!

மனைவி கத்த ஆரம்பித்ததும்.....

கதவு மூடுறவன் மனிதன்....
டி.வி. வால்யூமைக் கூட்டுறவன் பெரிய மனிதன்.....
சட்டையை போட்டு வெளியே போறவன் ஞானி.....
காதுல எதுவுமே விழாத மாதிரி உட்கார்ந்திருப்பவன் – வாழும் கடவுள்!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 20 அக்டோபர், 2016

சந்தித்ததும் சிந்தித்ததும் – 1200:பதிவர்கள் பார்வையில் எனது வலைப்பூ




2009-ஆம் ஆண்டு துவங்கிய வலைப்பூ பயணம்.  ஏழு ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்ததை சில நாட்கள் முன்னர் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அப்பதிவிலேயே விரைவில் எனது 1200-வது பதிவு என்றும் சொல்லி இருந்தேன்.  வலையுலகில் இருக்கும் பிரபல பதிவர்கள் போல எனக்கு கதை எழுதவோ, கவிதை எழுதவோ தெரியாது. தமிழில் அத்தனை புலமையும் கிடையாது. கல்லூரி வரை படித்ததில் ஏதோ தமிழ் கொஞ்சமாக தெரிந்திருக்கிறது. எந்த திறமையும் இல்லாத, தமிழ் எழுத, படிக்கத் தெரியும் என்ற ஒரே காரணத்தினை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த தைரியத்தில் வலைப்பூ எழுத ஆரம்பித்தேன் என்பது எனக்கே புரியாத புதிர்…… 

பதிவுலகில் ஆயிரக்கணக்கில் பதிவுகள் எழுதி இருப்பவர்கள் மத்தியில் 1200-வது பதிவு எழுதி விட்டேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது அழகா என்றும் என் மனசுக்குப் படுகிறது. இருந்தாலும் பயணங்கள் செல்வதை எழுதி, எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டும் இத்தனை நாட்கள் பதிவுலகில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இதுவே எனது கடைசி பதிவாக இருக்கலாம் என்ற எண்ணம் வந்தபடியே இருக்கிறது! இப்போதும் அதே எண்ணம் தான் – இந்த 1200-வது பதிவே கூட எனது கடைசி பதிவாக இருக்கலாம்……

என் வலைப்பூ பற்றியும், அதில் இருக்கும் நிறை குறைகள் பற்றியும் சில பதிவர்களிடம் கேட்டு அவர்களின் கருத்தினையே எனது பக்கத்தில், 1200-வது வலைப்பதிவாக வெளியிட நினைத்தேன். அதை செயல்படுத்தவும் செய்திருக்கிறேன்.  நான் கேட்டது நான்கு பதிவர்களிடம்….. இனி, எனது வலைப்பூ பற்றி அவர்கள் வார்த்தைகளில்…..