எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, December 29, 2014

ஏற்காடு – இயற்கை தரும் பகோடா!ஏழைகளின் ஊட்டி – பகுதி 4  

ஏழைகளின் ஊட்டி – பகுதி 1 2 3

சென்ற வாரத்தில் ஏற்காடு நகரின் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் இருக்கை பற்றிய தகவல்களை பார்த்தோம். இந்த வாரம் நான் உங்களுக்கு சுவை மிகுந்த பகோடா தரப் போகிறேன். ஆஹா, எங்கே எங்கே, நல்ல பசி நேரத்தில் சொல்லிவிட்டீர்களே, நல்லது என எதிர்பார்ப்புடன் ஆசைப்பட்டு விட்டீர்களா?

எதிர்பார்ப்புகள் இருந்து, அவை நடக்காவிட்டால் ஏமாற்றமே மிஞ்சும்.  ஆதலால், எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது! அதே வகையில் நான் இப்பதிவில் உங்களுக்கு தின்பண்டமான பகோடா தான் தரப்போகிறேன் என்ற எதிர்பார்ப்புடன் இங்கே வந்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்!


 மேகமூட்டத்துடன் அழகிய காட்சி.....

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது ஏற்காடு நகரில் இருக்கும் “PAGODA POINT” பற்றி தான்! ஏற்காடு நகரில் இருக்கும் தலைச்சோலை ஊராட்சியில் இருக்கும் ஒரு பகுதி தான் இது. ஆங்கிலத்தில் பகோடா என்றால் நான்கைந்து கூரை இறக்கங்கள் கொண்ட கோபுரம் என்று அர்த்தம். ஒரு காலத்தில் இவ்விடத்திலும் கற்களாலான ஒரு கோபுரம் இருந்திருக்கக்கூடும். ஆனால் இன்றைக்கு இருப்பதோ, சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் தான்.

 தற்போது இருக்கும் கட்டிடம்......

இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களை இங்கிருந்து பார்வையிட முடியும்.  இங்கே உயரமான இடத்திலிருந்து மலைகளையும் பள்ளத்தாக்கில் இருக்கும் சில கிராமங்களையும் கண்டுகளிக்க ஒரு பெரிய மேடையும் கட்டப்பட்டு இருக்கின்றது. அங்கிருந்து நின்று பார்த்தால், கீழே தெரியும் கிராமத்தினையும், தூரத்தில் இருக்கும் சேலம் நகரினையும் பார்க்க முடியும்.

 கீழே தெரியும் கிராமம் - ஒரு கழுகுப் பார்வை....

கிராமத்து மக்கள் ஒரு அழகிய இராமர் கோவிலையும் கட்டியுள்ளார்கள். அக்கோவிலையும் கிராமத்தினையும் கழுகுப் பார்வைகொண்டு நீங்கள் பார்க்கலாம்! நீங்கள் விரும்பினால் நேரிலும் அங்கே செல்லலாம். எனது முந்தைய ஏற்காடு பயணத்தில் நான் அங்கே சென்றதுண்டு. 


பூவே.... உந்தன் பெயர் தெரியாவிட்டாலும் நான் உன்னை காதலிக்கிறேன்!

 பூத்துக் குலுங்கும் சரகொன்னை.....

அழகிய சரகொன்னை மரங்களும், சிவப்பு வண்ணத்தில் பூ பூக்கும் மரங்களையும் பார்த்து நாங்கள் ரசித்தோம். அவற்றை நீங்களும் ரசிக்க சில படங்கள் இப்பதிவில்....எங்க இரண்டு பேரையும் உங்களுக்குப் பிடிச்சுருக்கா? கண்களால் கேட்கிறார்களோ?என்னை ஃபோட்டோ எடுக்காதீங்க என்று சொல்கிறதோ பின்னால் இருக்கும் குழந்தை!

அவ்விடத்திற்கு வந்திருந்த மற்றொரு குடும்பத்தின் குழந்தைகள் மிகவும் அழகாய் பாறைகளின் மேலமர்ந்து கொண்டிருக்க, அவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் அக்குழந்தைகளை எனது கேமராவிற்குள் சிறைபிடித்தேன். முன்னரே இக்குழந்தைகளின் படம் ஒன்றினை பகிர்ந்திருந்ததாய் நினைவு – இருந்தாலும், அழகை மீண்டும் ரசிப்பதில் தயக்கமென்ன! அதனால் இங்கே அக்குழந்தைகளை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்!இது போன்ற சுற்றுலாதலங்களுக்கு வருபவர்களுக்கான கழிப்பறை வசதிகள் செய்து தருவது நல்லது. இல்லையெனில் அசிங்கம் தான்! அதைத் தடுக்க, மேலே கண்ட ஒரு விளம்பரத்தினை பாறையொன்றில் வரைந்து வைத்திருந்தார்கள்.  அதிலும் சிலர் கிறுக்கிவைத்திருந்தார்கள் – நல்ல வேளை I love you” எழுதாது விட்டார்கள்!இயற்கையின் எழிலை ரசித்து அமர்ந்திருப்பதில் நேரம் போவதே தெரியாது என்பது உண்மை தான்.  இயற்கை எழில் கொஞ்சும் PAGODA POINT விட்டு அகல எங்களுக்கு மனமே இல்லை என்றாலும், பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கிறதே என்பதால் அங்கிருந்து அகன்றோம். அங்கிருந்து நாங்கள் சென்றது ஏற்காடு நகரின் பேருந்து நிலைத்திற்கு அருகே இருக்கும் ஒரு இடம்.

என்ன இடம் அது எந்த இடம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 comments:

 1. இன்னும் போனதில்லை.. போகணும்

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது போயிட்டு வாங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   Delete
 2. பெயர் தெரியாத அந்தப்பூ குல்மொஹரோ...

  சென்னை இரண்டு நாட்களாக ஊட்டி, கொடைக்கானல் போலத்தான் இருக்கிறது.

  :))))))

  ReplyDelete
  Replies
  1. தில்லியில் நேற்றைய இரவு நேரத்தில் 2.6 டிகிரி! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அருமையான லென்ஸ் மேன் நீங்க...

  ReplyDelete
  Replies
  1. கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறையவே மது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி......

   Delete
 4. வணக்கம்
  ஐயா
  தங்களின் தொகுப்பு அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. முதல் புத்தாண்டு வாழ்த்து..... மகிழ்ச்சி ரூபன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி..

   Delete
 5. ஏற்காடு போக வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது அண்ணா உங்கள் பதிவு...
  படங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள் குமார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி..

   Delete
 6. அந்த குழந்தைகள் கொள்ளை அழகு.
  தொடருங்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி..சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 7. ரசனை மிக்கவர் நீங்கள் படங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. இப்போதுதான் வலைசரத்தில் கருத்திட்டு விட்டு வந்தேன்.எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரைப் பற்றி நீங்கள் எழுதி இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு செல்வது வழக்கம்

  ReplyDelete
  Replies
  1. உங்களது கருத்து, இன்னும் பயணிக்க வேண்டும் எனும் எண்ணத்தை தருகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்....

   Delete
 8. அருமை ஐயா
  படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
  நன்றிஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. படங்களும் விளக்கங்களும் அருமை. பகோடா முனை பற்றிய ஒரு செய்தி. அங்குள்ள மலைவாழ் பழங்குடியினர் கருங்கற்களை வைத்து பிரமிட் போல் கட்டியிருக்கிறார்கள். பக்கோடாவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் தமிழில் Pagodaவை சொல்லும்போது அது பக்கோடா ஆகிவிட்டது! இந்த இடத்தில் தான் ‘ஆலயமணி’ திரைப்படத்தில் S.S.இராஜேந்திரனும் சரோஜா தேவியும் பாடும் பாடலான ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா?’ என்ற பாடல் படமாக்கப்பட்டது. அதை இந்த இணைப்பில் பார்க்கலாம். (https://www.youtube.com/watch?v=vDkfPkiMVGs)

  நான் கூட எங்களது வகுப்புத்தோழர்கள் ஏற்காட்டில் சந்தித்தது பற்றி எழுதிய ‘மீண்டும் சந்தித்தோம்! 10 என்ற பதிவில் பகோடா முனை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி. உங்கள் பதிவினையும் படித்து கருத்துரை இட்டது நினைவில் வந்தது ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. படங்களும் விளக்கங்களும் அருமை... குழந்தைகள் படங்கள் அதிகம் கவர்ந்தது...

  ReplyDelete
  Replies
  1. படங்கள் உங்களுக்குப் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. படங்கள் எல்லாம் அழகு. பெயர் தெரியாத பூ உள்ள மரம் வாதநாராண மரம் என்பார்கள் .கோவை முழுவதும் அந்த மரம் தான் இருக்கும். பூவின் மொட்டு சுவைக்க நன்றாக இருக்கும். பெரியவர்கள் திட்டுவார்கள் அதை சாப்பிட்டால் காது மந்தமாகி விடும் என்று. வசந்தகாலம் வந்து விட்டால் இலை தெரியாமல் பூத்து நம்மை மகிழ்ச்சி படுத்தும்.
  குழந்தைகள் படம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. வாதநாரண மரம் - இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 13. ஏற்காடு மலையில் சுற்றாத இடமில்லை. 80களில். இப்போது மரங்களையெல்லாம் வெட்டிவிட்டதாகக் கேள்விப் பட்டேன். இந்தப் பகோடா பாயிண்ட் ஆலயமணி படத்தில் கூட வரும். ஆசாகான படங்கள் வெங்கட் மலரும் நினைவுகளுக்கு அழைத்துக் சென்று விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் அந்த ஊரில் இருந்தவர்கள் ஆயிற்றே! அதனால் பல இடங்களை பார்த்திருக்கலாம்.... அந்த நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு வழிகோலியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 14. பல முறை பகோடாக்கள் பற்றி படித்துள்ளேன். இருப்பினும் பகோடா என்ற சொல்லுக்கான பொருளை தற்போதுதான் தெரிந்துகொண்டேன். குழந்தைகளின் புகைப்படங்கள் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 15. படங்களுடன் பகிர்வு சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 16. வணக்கம் சகோதரரே!

  ஏற்காடு பயணத்தை சென்ற பதிவில் தவற விட்டாலும், சிறப்பான படங்களுடன் சென்றவிடங்களை பகிர்ந்து கொண்டு எங்களையும் உடனழைத்துச் செல்லும் பாங்கிற்காக, அங்கிருந்து பயணம் செய்து இந்த பதிவுடன் பயணிக்கிறேன். இனியும் தொடர்கிறேன். நன்றி!

  குழந்தைகள் மிகவும் அழகு! முந்தைய ஒரு பதிவிலும் இவர்களின் புகைப்படத்தை
  ரசித்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 17. ஏற்காடு சென்றிருக்கின்றோம்!! உங்கள் பார்வையில் மிக அருமை வெங்கட் ஜி! காமெரா கண்களின் ஃப்ளாஷ்கள் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....