எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, January 2, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரு மாநில பயணம் – புதிய தொடர்


ஒட்டகத்த கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ!
ஒட்டகத்தின் வாய்ஸ்: எலேய், கை வைக்காத, கடிச்சுடுவேன்!

சென்ற ஞாயிறன்று குஜராத் மாடல் – அப்படி என்னதான் இருக்கு? என்ற தலைப்பில் குஜராத் மற்றும் தியு [Diu] சென்றபோது எடுத்த சில புகைப்படங்களை, அடுத்த பயணத்தொடருக்கான முன்னோட்டமாக பதிவு செய்திருந்தேன். என்னது, நீங்க இன்னும் அந்தப் பதிவையே, பார்க்கலையா, புகைப்படங்களை பார்த்து ரசிக்கலையா….  ரொம்ப தப்பு! முதல்ல அந்தப் பதிவை படிச்சிட்டு வந்துடுங்க ப்ளீஸ்! ஏற்கனவே ஒரு முறை நண்பர் குடும்பத்தினரோடு குஜராத் மாநிலத்திற்கு சென்று வந்திருக்கிறேன் – அப்போது கிடைத்த அனுபவங்களை பதிவுகளாக எழுதி இருக்கிறேன் – மின்புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. பதிவுகள், மின்புத்தகம் ஆகியவற்றை எனது வலைப்பூவின் வலப் பக்கத்தில் இருக்கும் சுட்டிகள்/Drop Down Menu வழியாக நீங்கள் படிக்கலாம்.


அடுத்து எதைப் படம் பிடிக்கலாம்னு யோசிக்கிறாரோ?..... 

ஏற்கனவே சென்று வந்த குஜராத் மாநிலத்திற்கு மீண்டும் ஒரு பயணம் தேவையா? தேவை – அப்போது பார்க்காத சில இடங்களைப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது என்றால் அதை விடக்கூடாது அல்லவா? கேரளத்திலிருந்து நண்பர்கள் குழாம் வருகை தர நினைத்தபோது என்னையும் அழைத்தார்கள். ஒரு மாதத்திற்கு மேலாக திட்டமிட்டு வாகன ஏற்பாடு, தங்குமிட ஏற்பாடு, விமான முன்பதிவு என தில்லிக்கும் திருவனந்தபுரத்திற்கும் மின்னஞ்சல்கள் பறந்த வண்ணம் இருந்தது. தில்லியிலிருந்து நான் விமானத்தில் ஆம்தாவாத் [அஹமதாபாத்] சென்று சேர, நண்பர்கள் திருவனந்தபுரத்திலிருந்து நேரடியாக அங்கே வருவதாகத் திட்டம்.


மூஞ்சிய காமிக்கச் சொன்னா, முதுகக் காமிச்சுட்டு இருக்கியே, அப்படி என்னத்த தான் பார்க்கற?

இதெல்லாம் எப்போ நடந்தது? சென்ற வருடத்தின் அக்டோபர் மாதத்தில்! அட 2016-அக்டோபரில்! ஒரு வருடத்திற்கு பிறகு தான் இந்தக் கட்டுரையை எழுத முடிந்திருக்கிறது! அதற்கு முன்னர் சென்று வந்த பயணங்கள் பற்றிய தொடர் இப்போது தானே முடிந்திருக்கிறது! நாங்கள் புறப்பட நினைத்திருந்த/முன்பதிவு செய்திருந்த தேதி 12 நவம்பர் 2016 – அதாவது 500-1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்ட 8 நவம்பர் 2016-க்கு நான்கு நாட்களுக்குப் பிறகு! நாங்கள் திட்டமிட்டபோது இந்த அறிவிப்பு வரும் என்பது எங்களுக்குத் தெரியாதே! என்ன நடந்தாலும் திட்டமிட்டபடி பயணத்தினைத் தொடர்வது என முடிவு செய்திருந்தோம்.


நான் செஞ்ச பொம்மை அழகா இருக்கா? இல்லை நான் அழகா இருக்கேனா?

இந்தப் பயணத்தில் நாங்கள் பார்த்த இடங்களில் நிறைய இடங்கள் என்னுடைய முதல் பயணத்தில் நான் பார்க்காதவை – சில இடங்கள் பார்த்தவை – என்றாலும் மீண்டும் சென்றதிலும் சில லாபங்கள் இருந்தன.  குஜராத் மட்டுமல்லாது, அதைத் தொட்டடுத்து இருக்கும் யூனியன் பிரதேசமான தியு [Daman and Diu]-விற்கும் பயணம் செய்வதாக எங்கள் திட்டமிருந்தது. கூடவே சிங்கங்களின் இருப்பிடமான கிர் வனத்திற்கும் செல்ல இருந்ததால், இந்தப் பயணத்தினைத் தவிர்க்க மனது வரவில்லை. திட்டமிட்டபடியே பயணம் சென்றோம். தலைநகர் தில்லியிலிருந்து ஆம்தாவாத் செல்லும் விமானம் 05.50 மணிக்கு. இரவு 02.00 மணிக்கு எழுந்து தயாராகி வீட்டிலிருந்து 03.30 மணிக்கு விமானநிலையம் நோக்கி பயணித்தேன்.


கேமராக்குள்ள பார்த்தியா, யாரு இருக்கா பார்த்தியா?

அதிகாலை நேரம் – நவம்பர் மாதம் – இதமான குளிர் – சாலைகளில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே இருக்க, வாகன ஓட்டி நல்ல வேகத்தில் வாகனத்தினை செலுத்தி, 20 நிமிடத்தில் என்னை விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தார்! அவருக்குரிய உழைப்பின் கட்டணத்தினைக் கொடுத்து பரிசோதனைகள் முடிந்த பிறகு விமானத்திற்காகக் காத்திருக்க, நல்ல உறக்கம் வந்தது! தூங்கினால் விமானத்தினை விட்டுவிடும் வாய்ப்புண்டு என்பதால் அப்படியே பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். விமானத்திற்கான அழைப்பு வர, உள்ளே சென்றேன். எனக்குக் கொடுத்த இருக்கையில் அமர்ந்த பிறகு, தலையைச் சொரிந்தபடியே ஒரு இளைஞர் எனக்கு முன்னால் வந்து நின்றார்! ”நானும் என் மனைவியும் ஒன்றாக அமர வேண்டும் – நீங்க வேற சீட்டுக்குப் போறீங்களா?


இன்னும் கொஞ்சம் இடம் இருக்கு.... 

தனியாகப் பயணிக்கும்போது இப்படித் தொல்லைகள் உண்டு! ”சரிப்பா, எஞ்சாய்!” என்று இருக்கை மாற்றி கண்ணை மூடியது தான் தாமதம், ஒரு கன்னியின் குரல்! “Excuse me! Can you please change your seat!”. ”இன்னும் எத்தனை பேரும்மா கிளம்பி இருக்கீங்க?” என மனதுக்குள் நினைத்தாலும், ”With pleasure!” என்று புன்னகையோடு இடம் மாறினேன்! நல்ல வேளை அதற்குப் பிறகு யாரும் எழுந்திருக்கச் சொல்லவில்லை! சீட் பெல்ட் போட்டுக்கோங்க! என்று இண்டிகோ காரிகை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் சொல்லிக் கொண்டிருக்க நான் உறக்கத்தில் ஆழ்ந்தேன். தலைநகரிலிருந்து ஆம்தாவாத் பயண நேரம் சுமார் 1 மணி 40 நிமிடம்! அந்த நேரத்தில் தூங்கலாம் என தூங்கி விட்டேன்!


என்னையெல்லாம் ஃபோட்டோ புடிக்க மாட்டீகளோ? என் மூக்குத்தி எவ்வளவு அழகு!

விமானம் தரையைத் தொட்டபோதுதான் விழிப்பு வந்தது. Safe landing! திருவனந்தபுரத்திலிருந்து வரும் நண்பர்களுக்கான விமானம் மதியம் 12.00 மணிக்கு மேல் தான் வரும்! நான் ஆம்தாவாத் சென்று சேர்ந்தது காலை 07.30 மணிக்கு! விமானத்திலிருந்து வெளியே வந்து சேர 08.00 மணி! சுமார் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டும்! அந்த நேரத்தில் என்ன செய்தேன், எங்கே சென்றேன் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்! நண்பர்களும் வந்து சேர்ந்தபிறகு பயணம் தொடரும்!

பயணம் நல்லது! நமக்கு பல பாடங்கள் தரக்கூடியது! ஆதலினால் பயணம் செய்வோம்!

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

18 comments:

 1. அட! அடுத்த பயணத் தொடரா?!!! முன்னரே குஜராத் பயணத் தொடர் வந்த நினைவு. என்றாலும் இது வேறு இடங்களாக இருக்கும் என்று தோன்றுகிறது...ஆர்வத்துடன் தொடர்கிறோம் ஜி. நேற்றுதான் விடுமுறையில் வீட்டில் இருந்து, முடிந்து பள்ளி இருக்கும் பாலக்காடு வந்தேன்...தொடர்கிறேன்..

  கீதா: ஆஹா ! ஜி தியு தாமன் பற்றி இன்னும் எழுதவில்லை அல்லவா...படங்கள் மட்டும் ஒரு ஞாயிறு நீங்கள் ஷேர் செய்து கொண்டீர்கள் நினைவு இருக்கு...குஜராத் இரண்டாவது பயணத் தொடர் இல்லையா...அந்த நான்கு மணி நேரத்தில் என்ன செய்தீர்கள் அறிய ஆவலுடன் தொடர்கிறோம்..

  //பயணம் நல்லது! நமக்கு பல பாடங்கள் தரக்கூடியது! ஆதலினால் பயணம் செய்வோம்!// யெஸ் யெஸ்...நிச்சயமாக பல பாடங்கள் தரும் ஜி...குறிப்பாக எந்தச் சூழலையும் சமாளிக்கும் பாடம்...எனக்கும் பயணம் என்றாலே களிப்புதான்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் துளசி ஜி! இது இரண்டாவது குஜராத் பயணம்! முதல் முறை சென்ற சில இடங்களுக்கு இம்முறையும் பயணம் செய்தோம் என்றாலும், முதல் பயணத்தில் செல்லாத நிறைய இடங்களும் இப்பயணத்தில் உண்டு!

   இப்பயணத்தில் எடுத்த சில பல படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 2. வணக்கம் சகோதரரே!

  இந்தப் பயணக் கட்டுரையையாவது தவறாமல் படித்துப் பினூட்டமிட எனக்கு அருள்தா இறைவான்னு முதலில் வேண்டிக்கொண்டு எழுதுகிறேன். இப்படித்தான் முன்பும் ஆவலுடன் வந்து படித்துப் பின்னூட்டம் இட்டுவந்தபோதில் ஏற்பட்ட சில பல சம்பவங்களால் எதையுமே முழுமையாகப் படித்திட முடிந்ததில்லை...:(
  பார்க்கலாம் இந்நத்தடவையாவது உங்களுடன் எனது குஜராத் பயணம் எப்படி அமையும் என்று...:)

  இப்படிப் பயணம் செய்ய எனது இந்த வாழும் காலத்தில் கிடைக்காது. அதனை இப்படி உங்களின் தயவால் நிறைவேற்றிக் கொள்கிறேன்.

  சகோ.. உங்களின் அசத்தலான எழுதும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. வர்ணைனைப் படுத்தும்போது நானும் கூடவே பயணிப்பதாய்க் காண்பதாய் அந்நிகழ்வுகளில் உடனிருப்பதாய் என்னுளத் திரையில் காட்சிகளாகின்றன.

  சிகரம் வைத்தாற்போல் மனத்தைக் கொள்ளையிடும் நிழற்படங்கள் தருகிறீர்கள்! அரிய காட்சிகள்!

  இதோ.. விமானத்திலிருந்தே சுவாரஸ்யம் ஆரம்பித்துவிட்டதே...
  நீங்கள் ஸீட் மாறிக்கொண்டே இருந்த காட்சியை மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓடவிட்டுச் சிரித்து மகிழ்கின்றேன்..:))

  போய்க்கொண்டிருங்கள் சகோ!
  தொடருகிறேன்!...
  நன்றியுடன் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நேரமும் காலமும் நமக்கு ஒத்துப் போவதில்லை - பல சமயங்களில். நீங்கள் படிக்க நினைக்கும் பயணக் கட்டுரைகளில் சில மின்புத்தகமாக வெளி வந்திருக்கலாம் எனது வலைப்பூவின் வலது ஓரத்தில் அதற்கான சுட்டி உண்டு. மற்ற கட்டுரைகளும் விரைவில் மின்புத்தகமாக வெளிக்கொணர வேண்டும்.

   உங்களுக்கும் பயணம் அமையட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
  2. ஓ..! ஆமாம் சகோதரரே. நீங்க சொன்னபின்புதான் அருகில் சைட்பாரில் மின்நூல்களைக் கண்டேன்.
   கரட் கட்டிய குதிரையாக நேரே பதிவுக்கு வந்து போனால் இப்படித்தான்...:)

   நன்றி சகோ! தரவிறக்கி வைத்து ஆறுதலாகப் படிக்கின்றேன்.

   வாழ்க வழமுடன்!

   Delete
  3. முடிந்த போது தரவிறக்கம் செய்து படியுங்கள் - அலைபேசியிலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 3. ஆஆவ்வ்வ் முதலாவது படத்திலே ரெண்டு ஒட்டகங்கள்:)).. ஹா ஹா ஹா நகைச்சுவைக்கு சொன்னேன் , தப்பா எடுத்திடாதீங்க...

  //நான் செஞ்ச பொம்மை அழகா இருக்கா? இல்லை நான் அழகா இருக்கேனா?//

  இரண்டுமே அழகுதான் ..

  அதுசரி அந்தக் குட்டிக்கு அழகா முகம் தெரியுதா பாரு எனச் சொல்லி படம் எடுத்தீங்களே.. அந்த ஆயாக்கு கிட்டக்கூடப் போகல்லியே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது நியாயமாப் படுதோ உங்களுக்கு:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவது ஒட்டகம் [பின்னாடி நிக்கற ஒட்டகத்தைச் சொன்னேன்!] கொஞ்சம் ஓவர் ஹைட்டோ! :) இதுல தப்பா எடுக்க என்ன இருக்கு! கல்லூரி சமயத்திலேயே எனக்கு ஓரியண்ட் லாங்மேன் எனும் பெயர் உண்டு!

   ஆயா பக்கத்துல அவரோட புருஷன் இருந்தாரு - மொறைச்சுட்டு - permission வாங்கி தான் புகைப்படமே எடுத்தோம்! அடி வாங்க நான் தயார் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 4. நல்லவேளை சீட்டு மாற்றும் தொல்லையில் இருந்து விடுபட்டிர்கள் தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அத் தொல்லையை பல முறை அனுபவித்து இருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   Delete
 5. குஜராத்துக்கு ஒரு முறை பணி நிமித்தம் சென்றதுண்டு பரோடாவில் தங்கி அங்கிருந்து wanakbori அங்குதான் அனல் மின் நிலையம் இருக்கிறது பரோடாவில் சாலைகள் எங்கும் ஒரே ஜனக் கூட்டமும் வெஹிகிளும் தான் ஒழுங்கு என்றால் விலை என்ன என்று கேட்பார்கள் போலும்

  ReplyDelete
  Replies
  1. பரோடா இது வரை சென்றதில்லை. மற்ற நகரங்கள் சிலவற்றிற்கு சென்றதுண்டு. வாகனப் போக்குவரத்து பெரும்பாலான நகரங்களில் ஒழுங்கில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 6. சிறுமியின் அழகிய படமும், பாட்டியின் முதிர்ந்த அழகிய முகமுமே பல சேதிகளைச் சொல்கிறது.

  ஆரம்பமே நன்றாக இருக்கிறது. தொடர்கிறேன். (அக்டோபர் 2016ல பயணம், இப்போ ஆரம்பிக்கிறது, இப்போ பயணம் செய்வது எப்போது வரும்?)

  ReplyDelete
  Replies
  1. சிறுமியின் முகமும் பாட்டியின் முகமும் - இது போன்ற பல முகங்களை குஜராத்தின் ஒரு கிராமத்தில் பார்த்து படம் எடுத்தோம்.

   அக்டோபர் 2016-ல் திட்டமிட்டு, நவம்பர்-2016-இல் பயணம் செய்தது. இப்போது கட்டுரையாக! அதன் பிறகு இரண்டு பயணங்கள் வாய்த்தது! விரைவில் எழுதி முடிக்க முயல்கிறேன் - வேறு பயணங்கள் இப்போதைக்கு செல்லக் கூடாது என முடிவு எடுத்திருக்கிறேன் - பார்க்கலாம் எவ்வளவு தூரம் என்னை நான் கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. பயணம் நல்லது! நமக்கு பல பாடங்கள் தரக்கூடியது! ஆதலினால் பயணம் செய்வோம்!
  /////////////
  அடுத்து தமிநாட்டுக்கு வரும்போது ஆரணிக்கு வந்து உங்க மாப்ளைக்கிட்ட சொல்லுங்க. லீவ் கிடைச்சா தூங்குவாரே தவிர எங்கயும் கூட்டி போக மாட்டாரு.

  ReplyDelete
  Replies
  1. ஆரணிக்கு வரணும்! பார்க்கலாம் எப்ப வர முடியுதுன்னு! வேலூர், ஆரணி பக்கமெல்லாம் வந்ததில்லை - நினைவு தெரிந்து!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 8. அந்தப் பெண்ணின் காதில் அதற்குமேல் வேலைப்பாடு செய்ய இடமேயில்லை போல!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். எத்தனை துளைகள்! விட்டால் இன்னும் கூட துளை செய்து, எதையாவது மாட்டிக்கொள்வாள் போலும்! பெரும்பாலான பெண்களுக்கு சிறு வயதிலேயே இப்படி மாட்டி விடுவதால் அவர்களுக்கு பழகிவிடுகிறது போலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....