திங்கள், 22 பிப்ரவரி, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 3:

கடந்த இரு பதிவுகளில் [பகுதி 1 & பகுதி 2] தில்லியில் கிடைக்கும் சில உணவு வகைகள் பற்றி எழுதி இருந்தேன். இந்த வாரம் தில்லியில் குழந்தைகள் பார்க்க வேண்டிய இரு இடங்களைப் பற்றி எழுதி உள்ளேன்.



Shankar’s International Doll Museum: திரு கே. ஷங்கர் பிள்ளை [1902-1989] என்ற புகழ்பெற்ற அரசியல் கருத்துச்சித்திரம் வரைபவரால் உருவாக்கப்பட்ட இந்த அருட்பொருட்காட்சியகத்தில் “Costume Dolls” என்று சொல்லப்படும் அழகான பொம்மைகள் உள்ளன. உலகின் பல மூலைகளிலும் இருந்து ஷங்கர் அவர்களுக்கு பரிசளிக்கப்பட்ட பொம்மைகளை தில்லியில் உள்ள Children’s Book Trust-ன் கட்டிடத்தில் ஒரு மாடியில் 5200 சதுர அடி அரங்கில், 160 கண்ணாடி அறைகளில் அடுக்கி வைத்துள்ளார்கள். ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா, அரேபியா, ஆப்பிரிக்கா, சைனா, ஜப்பான், க்யூபா, ஸ்ரீலங்கா, ஹங்கேரி போன்ற பல நாடுகளில் இருந்து பெறப்பட்ட பொம்மைகள் இங்கு அழகாக வைக்கப்பட்டுள்ளன. இங்கே இருக்கும் பொம்மைகளில் முக்கியமான சில - ஜப்பானின் ”காபுகி மற்றும் சாமுராய்” பொம்மைகள், ஸ்பெயின் நாட்டின் ”ஃப்லேமென்கோ டான்சர்ஸ்” பொம்மைகள், இந்தியாவின் ”கதகளி” நாட்டிய பொம்மைகள் மற்றும் ”தஞ்சாவூர் தலையாட்டி” பொம்மைகள். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் இருக்கும் கண்னாடிக் கூண்டின் உள்ளே மேல்புறம் தெரியாத வகையில் ஒரு மின்சார விசிறி இருப்பதால் இந்த பொம்மைகள் எப்போதும் தலையாட்டிக்கொண்டு இருக்கும் அழகே அழகு. திங்கள் தவிர வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் காலை 10.00 மணியிலிருந்து மாலை 06.00 மணி வரை இந்த அரும்பொருட்காட்சியகம் திறந்திருக்கும். ஆனால் ஒரே ஒரு குறை – இங்கே புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை. நுழைவு கட்டணம்: சிறுவர்களுக்கு ஐந்து ரூபாய், பெரியவர்களுக்கு 15 ரூபாய்.

National Bal Bhavan: இந்த இனிய இடத்தில் 16 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எல்லா கலைகளிலும் அவரவர் திறமை, வயது ஆகியவற்றுக்கு தகுந்தவாறு பயிற்சிகள் தரப்படுகின்றன. குழந்தைகளின் கலைத்திறனை வளர்த்துக்கொள்ள நல்ல ஒரு வாய்ப்பினை மத்திய அரசாங்கத்தின் Human Resources Development அமைச்சகத்தின் கீழே இயங்கும் இந்த மையம் தருகிறது. இந்த இடம் மேலே குறிப்பிட்ட Doll Museum அருகிலேயே கோட்லா ரோடில் உள்ளது. ஞாயிறு, திங்கள் தவிர வாரத்தின் மற்ற ஐந்து நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.30 வரை திறந்திருக்கும். இங்கே சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருள்கள், முயல்கள், புறா, வாத்து போன்ற பறவைகள், மீன் காட்சியகம், மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகள், அருங்காட்சியகம் போன்றவையும் உள்ளன. 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். பெரியவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூபாய் ஐந்து மட்டுமே.

இந்த இரண்டு இடங்களுமே குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களாலும் ரசிக்கப்படும் விதத்தில் அமைந்துள்ளன. என்ன அடுத்த தில்லி பயணத்தின் போது உங்களின் அருமை கண்மணிகளை இங்கெல்லாம் அழைத்துச் செல்வீர்கள் தானே?

இன்னும் வரும்…

5 கருத்துகள்:

  1. டில்லிக்கு வந்தா எதைத்தான் பார்க்கப் போறேனோ?!

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல் நாங்களும் போய் பார்த்துவிட்டு வர பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  3. வெங்கட் அவர்களே, " நாமும் உடனே ஒரு குழந்தையாக மாறி தில்லி சென்று பார்கமாட்டோமா என்ற என் ஏக்கத்தினை மனைவியிடம் தெரிவிக்க" , அவள், "அறுபதை தாண்டிய நீங்களும் ஒரு குழந்தைதானே என்று சமயம் பார்த்து போட்டாளே ஒரு போடு,". நன்றி வாழ்க, வளர்க.

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....