செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

தில்லி பதிவர் சந்திப்பு

தமிழ் நாட்டில் உள்ள பதிவர்கள் நட்புடன் கூடி சந்தித்து அளவளாவுவதைப் பற்றிய செய்திகளை படிக்கும் போதெல்லாம் என் மனதில் ஒரு சிறிய ஆசை எட்டிப்பார்க்கும். கூடவே தில்லி மற்றும் NCR பகுதியில் உள்ள பதிவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய ஒருவரும் முன்வருவதில்லையே என்ற ஆதங்கமும் இருந்தது.

ஆசை நிராசை ஆகாமல் இருக்கக் காரணமாக இருந்தது சென்ற வாரம் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். ஒரே வாரத்தில் எல்லோருக்கும் மின்னஞ்சல் செய்து 31.01.2010 அன்று மதியம் இரண்டு மணி அளவில் வடக்கு வாசல் மாத இதழின் அலுவலகத்தில் பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து விட்டார் சிறுமுயற்சி என்ற வலைப்பூவை எழுதி வரும் பதிவர் திருமதி முத்துலெட்சுமி.

பதிவர்கள் திருமதிகள் M.A. சுசீலா, விக்னேஸ்வரி, லாவண்யா சுந்தரராஜன், திரு மோகன்குமார் மற்றும் அடியேனும் கலந்து கொண்டோம்.

இது தில்லி பதிவர்களின் முதல் சந்திப்பாகையால், அவரவர் சுய அறிமுகத்துடன் கூட்டம் தொடங்கியது. பதிவுலகம் பற்றிய தகவல்கள், இன்றைய இலக்கிய உலகம் குறித்து மிகவும் ஆர்வத்துடன் விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் "வடக்கு வாசல்" மாத இதழின் ஆசிரியர் திரு யதார்தா கே. பென்னேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு சக பதிவர்களுக்கு தனது அனுபவங்களை எடுத்துச் சொன்னார்.

பேராசிரியர் எம்.ஏ. சுசீலா அவர்கள் மதுரை பாத்திமாக் கல்லூரியில் முப்பத்தி ஆறு ஆண்டுகள் பணிபுரிந்து, ஒய்வு பெற்ற பின் தில்லியில் வாழும் பதிவர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கட்டுரை நூல்கள், மற்றும் ஒரு மொழி பெயர்ப்பு நூலும் வெளியிட்டு உள்ளார். இவரது வலைப்பூ படிக்க இங்கே செல்லவும்.

திருமதி லாவண்யா சுந்தரராஜன் உயிரோடை என்ற வலைப்பூவில் எழுதிவருபவர். சமீபத்தில் "நீர்க்கோல வாழ்வை நச்சி" என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு உள்ளார்.

திருமதி விக்னேஸ்வரி தனது பெயரிலேயே ஒரு வலைப்பூவை எழுதி வருகிறார். தோழர் திரு K. மோகன் குமார் புகைப்படங்களாலே கவிதை புனையும் "World of Photography" ஒரு வலைப்பூவை வைத்திருப்பவர். அவரது Camera வழிப்பார்வை மிகவும் அழகாக உள்ளது.

இந்த பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த திருமதி முத்துலெட்சுமி அவர்களுக்கும், சந்திப்பதற்கு ஏதுவாக வடக்கு வாசல் அலுவலகத்தில் இடம் அளித்த திரு யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறாமல் இந்த பதிவை முடிப்பது அழகல்ல. அவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சந்திப்பு, மேலும் பல நல்ல கருத்து பரிமாற்றத்துக்கும், இலக்கிய உரையாடல்களுக்கும் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்பதில் எல்லோருக்கும் சந்தோஷமே!

11 கருத்துகள்:

  1. பதிவர் சந்திப்பு நடந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி.

    நீங்கள் கூறிய பதிவர்கள் யாரையும் படித்ததில்லை. அறிமுகத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. \\சந்திப்பு, மேலும் பல நல்ல கருத்து பரிமாற்றத்துக்கும், இலக்கிய உரையாடல்களுக்கும் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்பதில் எல்லோருக்கும் சந்தோஷமே//

    உண்மை...

    எல்லாரும் நேரத்தை செலவழித்து தொலைவுகளைப் பார்க்காமல் வந்தது சிறப்பு. கலந்துரையாடியதும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  3. பதிவர் சந்திப்பு அங்கும் நடந்தது அறிந்து மகிழ்ச்சி. புகை படங்கள் ஏதும் எடுக்கலையா? என்ன விஷயங்கள் பேசீநீர்கள் என்றும் கொஞ்சம் எழுதி இருக்கலாம். என் பெயரில் இன்னொரு பதிவர் பற்றி அறிந்து ஆச்சரியம் !!

    பதிலளிநீக்கு
  4. திரு வெங்கட்அவர்களுக்கு,
    வணக்கம்.
    உங்கள் அனைவரையும் அறிமுகம் செய்து கொள்ளும் இனிய வாய்ப்பை உருவாக்கித் தந்த நம் சந்திப்பை செறிவாகவும் தெளிவாகவும் விவரித்திருக்கிறீர்கள்.அடுத்து என் வலையிலும் இச் சந்திப்பு பற்றிய பதிவு வெளிவரும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. உங்க‌ அனைவ‌ரையும் ச‌ந்தித்த‌தில் ம‌கிழ்ச்சி. ப‌ல‌ ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ள் இது ஒரு துவ‌க்க‌மாக‌ இருக்க‌ட்டும்

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொடக்கம். வாழ்த்துகள்.

    ரேகா ராகவன்.

    பதிலளிநீக்கு
  7. சந்திப்பின் நிகழ்வுகள் குறித்து எழுதவே இல்லையே. ஆயினும் சந்திப்பு "உலக வெப்பமயமாதல்" மாநாட்டின் முடிவுகளை விட பயனுள்ளதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  8. "கருத்து பரிமாற்றத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மற்றுமொரு வடிகால் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி நவில்கின்றேன்."

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....