வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஒரு கையெழுத்தின் மதிப்பு"இப்படியா ஒருத்தன் ஏமாத்துவான்? இந்த மனுஷன் மூர்த்தி நல்ல ஆள்னு நம்பித் தானே தனி நபர் கடன் வாங்க உத்திரவாத கையெழுத்து போட்டேன், இப்ப வங்கியிலிருந்து பணத்தை கட்டச் சொல்லி எனக்கு ஓலை அனுப்பிட்டானே!” தனக்குள் பொருமிக் கொண்டிருந்தான் ரகு.

அவன் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர் பிளாட்டில் இருப்பவர்தான் மூர்த்தி. பழக மிகவும் நல்ல மனிதராக, பல விஷயங்கள் தெரியாத சாதுவாக இருந்தார். அவசரமாக பணம் தேவை என்று கையை பிசைந்து கொண்டு சோகமாக அலைந்ததை பார்த்ததால் வங்கியிலிருந்து கடன் வாங்க ரகுதான் உத்திரவாத கையெழுத்து போட்டிருந்தான்.

அவரும் மூன்று வருடங்கள் வரை ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஒழுங்காக பணத்தை வங்கியில் கட்டிக்கொண்டுதான் இருந்தார். அவனும் அவ்வப்போது விசாரித்து வந்தான். எல்லாம் சுமுகமாகவே போய்க்கொண்டிருந்தது.

திடீரென்று வங்கியிலிருந்து இந்தக் கடிதம்! பதறிப் போனான். ஒன்பது மாதங்களாக மூர்த்தி மாதத்தவணை கட்டவில்லையென்றும் உத்திரவாதம் அளித்த ரகுவே வட்டியுடன் சேர்த்து கடனை பதினைந்து தினங்களுக்குள் கட்டத்தவறினால் மேற்க்கொண்டு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.

"போன மாதம் பேசிக் கொண்டிருந்தபோது கூட கடன் தவணைகளை ஒழுங்காக கட்டிக்கொண்டு இருப்பதாக கூறினாரே?". அலுவலகம் முடிந்து வந்ததும் சுடச்சுட அவரிடம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுள் வந்தது. கூடவே இனிமேல் யாருக்கும் உத்திரவாத கையெழுத்து போடவே கூடாது என்ற எண்ணமும் வலுத்தது.

நேற்று அவராகவே கூப்பிட்டு புதிதாக வாங்கிய டி.வி.டி ப்ளேயரைக் காட்டி அந்த சந்தோஷத்தில் அவனுக்கு பால்கோவா கொடுத்து சாப்பிடச் சொன்னது ஞாபகம் வந்தபோது இன்னும் அதிகமாக கோபம் வந்தது. "இதுக்கெல்லாம் காசு இருக்கு, ஆனா வாங்கின கடன திருப்பிக் கட்ட மட்டும் காசு இல்லையாமா இவருக்கு? வரட்டும், இன்னிக்கு நாக்க பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்கணும்" என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டான்.

மாலை மூர்த்தி வந்ததும் அவரிடம் ”என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? கடனை திருப்பிக் கட்டலையா? இப்ப பாருங்க பேங்கிலிருந்து எனக்கு கடிதம் வந்திருக்கு!” ரகு கோபமாக கேட்கவும்...

“அவ்வளவு தானே, அதுக்கு ஏன் சார் இப்படிப் பதட்டப்படறீங்க? கொஞ்ச நாளா பண முடை. என்னால கட்ட முடியலே. அதான் என்னால கட்ட முடியாது போனா நீங்க கட்டிடறதா எனக்காக உத்திரவாத கையெழுத்து போட்டிருக்கும்போது நீங்களே அந்தக் கடனை திருப்பிக் கட்டிட மாட்டீங்களான்னுதான் கட்டாம விட்டுட்டேன்! அத்தனை நம்பிக்கை வெச்சு எனக்காக உத்தரவாதக் கையெழுத்து போட்டிருக்கீங்க. இதைக்கூட செய்ய மாட்டீங்களா?''

சர்வ சாதாரணமாக மூர்த்தி சொல்லவும் ரகு வாயடைத்துப் போய் நின்றிருந்தான்.

7 கருத்துகள்:

 1. அடடே நல்லா இருக்கே நியாயம். இனிமே நான் எனக்கே கையெழுத்து போடனும்னாக்கூட பலமுறை யோசிக்கணும் போலிருக்கே!

  ரேகா ராகவன்

  பதிலளிநீக்கு
 2. //அவன் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் எதிர் பிளாட்டில் இருப்பவர்தான் மூர்த்தி. பழக மிகவும் நல்ல மனிதராக, பல விஷயங்கள் தெரியாத சாதுவாக இருந்தார்.//

  நாட்டுல பாதி பேரு இப்படித்தான் இருக்காங்க. நாம்தான் சுதாரிப்பா இருந்து, சிங்கமுத்துவா, இல்லை, அசிங்கமுத்துவா என்று தீர்மானிக்கணும். ஆனா கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.

  பதிலளிநீக்கு
 3. ராசிபலன்ல கையெழுத்து போட்டு மாட்டிக்காதீங்கன்னு இப்பதான் படிச்சேன்.. இப்படி ஒரு ஐடியா இருக்கா.. பேனாவைப் பார்த்தாலே உதறுது..

  பதிலளிநீக்கு
 4. இனிமே யாருக்கும் கியாரண்டி கையெழுத்து கிடையாதுப்பா..

  பதிலளிநீக்கு
 5. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை , ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். கலியுகத்தில், அப்பா பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு என்பதை நினைவில் இருத்திக்கொண்டு செயல் படவேண்டும்.

  மந்தவெளி நடராஜன்.

  பதிலளிநீக்கு
 6. இதுதாங்க உலகம். இதப்புரிஞ்சுக்கலீன்னா நீங்க வாழறதுக்கு லாயக்கில்லை.

  பதிலளிநீக்கு
 7. @@ Dr. KandaswamyPhD: உங்கள் கருத்திற்கு நன்றி. கையெழுத்து போட்டது நான் இல்லை : )))))))

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....