செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்



ஏப்ரல் 13 தேதியிட்ட “டைம்ஸ் ஆஃப் இந்தியா” நாளிதழில் வந்துள்ள செய்தியின் சுருக்கம் கீழே:

”ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தண்ணீர் திருடு போவதை தடுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 முதல் 200 வரை பணம் கொடுத்து தனியார் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களது முக்கிய வேலை நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் திருடுபோவதை தடுப்பதும், கிராமத்தில் உள்ள 8000 மக்களுக்கும் வீட்டில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கையை பொறுத்து தண்ணீர் உபயோகத்தை முறைப்படுத்துவதும் தான். மிருகங்கள் தண்ணீர் அருந்துவதை தடுப்பதும் இவர்களது கூடுதல் வேலை. கடுமையான உழைப்பினால் கிடைக்கும் கூலியில் பெரும்பகுதியை அவர்கள் தண்ணீர் திருட்டை தடுக்க உபயோகப்படுத்துகிறார்கள்.”


தண்ணீர் எல்லா உயிரினங்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை நாம் மறக்கக்கூடாது. இருக்கும் நீர்நிலைகளில் எல்லாம் தண்ணீர் வற்றியும், வறண்டும் போய்க்கொண்டிருக்கிறது. பல மாநகரங்களில் ஏரிகள், குளங்கள் இருந்த இடமெல்லாம் வீடுகளாகவும் அலுவலகங்களாகவும் உருமாறிக்கொண்டு இருப்பதை நினைத்தால் மனதில் கலக்கம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.

கங்கா, யமுனா, கிருஷ்ணா, காவிரி போன்ற ஆறுகள் வருடத்தின் பல நாட்களில் தண்ணீர் இல்லாமல் காட்சி அளிக்கிறது. தில்லி நகரில் யமுனை நதியைப் பார்த்தால் ஏதோ ஒரு சாக்கடையை பார்ப்பது போன்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. நகரின் கழிவுகள், தொழிற்ச்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் எல்லாவற்றையும் யமுனை நதியில் சேரும்படி வைத்திருக்கிறார்கள். இவர்களை கண்டிப்பதற்கு யாரும் எந்தவிதமான முயற்சியும் எடுக்க முன் வருவதில்லை.

நதிகளைச் சுத்தம் செய்யும் கணக்கிலே பல கோடிகள் செலவானதாக கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறோம். ”Crores and Crores of Rupees Going Down the drain” என்ற வாசகத்தினை உண்மையாக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம். அத்தனை பணமும் யாருடைய சட்டைப்பைக்குள் செல்கிறது என்பது அந்த இயற்கைக்கே வெளிச்சம்.

தில்லியில் பலபேர் தங்கள் வீடுகளில் இருக்கும் இரும்புக் கதவுகளை தண்ணீர் குழாய் கொண்டு சுத்தப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதற்கு எவ்வளவு தண்ணீர் விரயமாகிறது என்பதைச் சுட்டிக்காட்டினால் நம்மை ஏதோ புழு பூச்சியைப்போல பார்த்து அவர்களது தவறை தொடர்கிறார்கள்.

அரசையும் அடுத்தவர்களையும் குறைசொல்வதில் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீரை சிக்கனமாக உபயோகப்படுத்தினால் அதுவே நல்ல ஒரு தொடக்கமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்த தமிழ்ப்புத்தாண்டில் நாமெல்லோரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான சில தீர்மானங்களை எடுத்துக் கொள்வோமாக. இல்லையெனில் ராஜஸ்தான் மாநிலம் போலவே இந்தியா முழுவதும் தண்ணீருக்காக பாதுகாவலர்களை அமர்த்துவதும், கொலை, கொள்ளை போன்றவைகள் சர்வசாதாரணமாக நடப்பதையும் நாம் பார்க்க நேரிடலாம். ஆகவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோமாக!

குறிப்பு: இந்த பதிவு என்னுடைய ஐம்பதாவது பதிவு. பதிவுலகம் எனக்கும், எனது பதிவுகளுக்கும் அளித்த மேலான வரவேற்ப்புக்கும், பகிர்ந்த கருத்துகள் அனைவற்றிற்கும் இந்த பதிவின் மூலம் எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

9 கருத்துகள்:

  1. நல்ல விஷயம் 50-ஆவதாக எழுதி உள்ளீர்கள். 50-க்கும் , மேலும் பல ஆயிரம் பதிவுகள் எழுதவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல விஷயம்தான் ஆனால், மற்ற விலங்குகள் நீர் அருந்துவதை ஏன் தடுக்க வேண்டும்? நீரை வீணடிக்கும் மனிதனுக்கு நீர்மேல் உள்ள உரிமை, நீரை வீணடிக்காத மற்ற விலங்குகளுக்கு இல்லையா? ஏன் இந்தப் பாகுபாடு???

    பதிலளிநீக்கு
  3. ஆ.. மறந்துவிட்டேன்... ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  4. மிக நல்லதொரு பதிவு. நம்மிலிருந்து மூன்றாவது தலைமுறை ரேசன் முறையிலேயே தண்ணீரை பயன்படுத்தும். நீர்நிலைகள் மட்டுமல்லை நிலத்தடி நீரும் குறைந்து பெரும் ஆபத்தையே எதிர்நோக்கியுள்ளோம் எந்த நேரமும். யமுனையை பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் 100% சரியானதே.

    ஹூம்ம்ம் என்ன செய்ய

    ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. ஐம்பதாவது பதிவுக்கு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. கண்ணீர் அரும்புகிறது தண்ணீர் நிலை பார்த்து...

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..நல்ல பதிவு.. ஆமாங்க.. அதனால் தான் நான் எப்பவாச்சும் சுத்தம் செய்யரது அந்த கம்பி கதவை.. ;)))

    பதிலளிநீக்கு
  8. நல்ல சமூக சிந்தனையுடனும், அக்கறையுடனும் படைக்கப் பட்ட படைப்பு.

    ஐம்பது விரைவிலேயே ஐநூறாக வாழ்த்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  9. "ஐம்பது முத்தான பதிவுகளை குறுகிய கால அவகாசத்தில் படைத்து தந்தமைக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்ளும் இந்த நேரத்தில் தங்கள் மானுட சேவை இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். படித்தவர்கள், நாலு பேருக்கு, தான் படித்த , இதுபோன்ற நல்ல கருத்துக்களை எடுத்து இயம்பினால் எழுதியவருக்கு பெருமையாக இருக்கும் என நான் நினைக்கிறேன்."

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....