வெள்ளி, 8 ஏப்ரல், 2011

BALD AND THE BEAUTIFUL




தலைப்பைப் பார்த்து வேறு எதையாவது யோசித்தால் கம்பெனி பொறுப்பல்ல. நான் சொல்ல வந்தது தலை வழுக்கை பற்றியே.

வழுக்கை என்பது நிறைய ஆண்களுக்கு பிரச்சனை தரும் விஷயம். இதனை மறைக்கத்தான் எத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது? இதைப் பற்றி எழுதக் காரணம் அலுவலகத்தில் நான் தினமும் பார்க்கும் ஒரு நபர். மொத்தமாய் 100-150 முடிதான் தலையில் [உட்கார்ந்து எண்ணியது யார்னு எசகு பிசகா கேள்வி கேட்டா விஜயகாந்த் பிரச்சார வேனில் அவர் பக்கத்தில் நிக்க வச்சுடுவேன்!] அதை வைத்து முழுத் தலையையும் மறைக்க அவர் படும் பாடு... அப்பப்பா! சொல்லி மாள ஒரு பதிவு போதாது.

இருக்கும் முடியை கொஞ்சமும் வெட்டாமல் நீளமாக வளர்த்து, நிறைய எண்ணை தடவி சுருள் சுருளாய் தலை மீது ஒட்ட வைத்து பின் பக்கத்திலிருந்து முன் பக்கம் வரை கொண்டு வந்து முழுத்தலையையும் மறைத்துவிடும் சாமர்த்தியத்தை அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் கீழேயுள்ள அவரின் அனுமதியுடன் எடுத்த புகைப்படத்தைப் பாருங்களேன். அலைபேசியில் எடுத்த புகைப்படம் என்பதால் சற்றே மங்கலாக இருக்கிறது.


 
சர்தார்ஜிகள் தங்களுடைய நீண்ட தாடியை முகத்துடன் ஒட்டியபடி அழகாய் வைத்துக்கொள்ள சிம்கோ ஹேர்ஃபிக்சர் என்ற பொருளைப் பயன்படுத்துவார்கள். தினமும் காலையில் தாடியை நன்கு சீவி அதில் ஹேர்ஃபிக்சரைத் தடவி, முகத்தில் படியவைத்து அதன் மேல் ஒரு துணி வைத்து பகடியுடன் கட்டி விடுவார்கள். ஒன்றிரண்டு மணி நேரம் பொறுத்து அந்த துணியை அகற்றிவிட்டால் அப்படியே படிந்து இருக்கும் அவர்களது தாடி – ”தாடி நீண்ட தாத்தா” என்று யாரும் கிண்டல் செய்ய முடியாது.

அது போலவே மேலே குறிப்பிட்ட நமது நண்பர் காலையிலேயே தலைமுடிக்கு ஹேர்ஃபிக்சர் போட்டு பின்னிருந்து முன்பக்கம் வரை செட் செய்து விடுவாராம். இப்படிச் செய்ய தினமும் எடுத்துக்கொள்வது ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம்!!! இதெல்லாம் எதற்கு என்று கேட்டால், சுற்றியுள்ள மக்களையே காரணம் காட்டுகிறார்.

சொந்தமாக மூன்றடி நிலம் கூட இல்லாத அவரைப் பார்த்து ”என்ன சார், நிறைய கிரவுண்ட் வாங்கிப் போட்டு இருக்கீங்களே?”, “தலைக்கு மேல ஒண்ணும் இல்ல, உள்ளேயும் அப்படித்தானா?”, “உங்க எதிர்ல வரணும்னா ஒரு கூலிங் கிளாஸ் போட வேண்டியிருக்கு, சூரிய ஒளி உங்க தலையில பட்டு ரிஃப்ளெக்ட் ஆகுது!” ”தலையைக் கொஞ்சம் மூடிவையுங்க, கண்ணு கூசுது” இப்படியெல்லாம் கிண்டல் செய்தால் பின்னே அவர் என்னதான் செய்வார் பாவம்.

இவர் இப்படி சுருள் முடி வைக்கக் கஷ்டப்படும் போது, இன்னொரு பக்கம் நிறைய முடி இருப்பவர்கள் பாடும் திண்டாட்டம் தான்! [வேற யாரையும் சொல்லல, என்னைத் தான்!] மண்டை கனம் கொஞ்சம் அதிகமாகிடுச்சே [அட முடி அதிகமானதாலதாங்க!] போய் முடி வெட்டிக்கலாம்னா, உடனே அம்மணியும், பொண்ணும் சேர்ந்து 144 தடை உத்தரவு போடறாங்க! ”அவனவன் முடி இல்லையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு என்னென்னமோ செய்யறான், நீங்க என்னடான்னா, இருக்கற நல்ல முடிய வெட்டிக்கணும்னு சொல்றீங்களேன்னு!” சொல்றாங்க!

என்ன செய்யறது தாடி, தலைமுடியெல்லாம் வைச்சுக்கிட்டா சாமியார்னு உள்ள புடிச்சுப் போட்டுடப் போறாங்கன்னு சமாளிச்சு வைக்கிறேன். அவரவர்க்கு அவரவர் கஷ்டம். ம்… என்னத்த சொல்ல!

மீண்டும் வேறு பதிவில் சந்திப்போம்!


வெங்கட்

23 கருத்துகள்:

  1. பொறுமை தான் .. அவருக்கு..

    இந்த லிங்க் பாருங்க .. நேத்து தான் இது படிச்சேன்
    http://lawlerthree.blogspot.com/2011/03/kids-will-say-darndest-things.html

    பதிலளிநீக்கு
  2. இதுல ஒரு வேடிக்கை என்னான்னா..
    வழுக்கை இருக்கறவங்க பாக்கெட்ல எப்பவுமே ஒரு சீப்பு இருக்கு. எதுக்கு தலையை வாரிக்கவா இல்லை சொரிஞ்சுக்கவான்னு கேக்கறதுக்கு பயமா இருக்கு! இதுக்கு என்ன சொல்றீங்க. ;-)
    மனுஷன் செய்யாததையா ம*று செய்யப்போவுதுன்னு ஒரு நண்பன் குரல் உடறான்... இத்தோட நிறுத்திப்போம். ;-)

    பதிலளிநீக்கு
  3. அவரின் துயரத்தை ஒரு சீப்பே அறியும். சீப்பின் துயரத்தை யாரறிவார்? முடிசூடாப் பதிவு வெங்கட்.

    பதிலளிநீக்கு
  4. தினம் ஒன்றரை மணிநேரமா?மிகவும் பொறுமைசாலி தான்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பதிவைப்படிக்கும் முன் தலை கனத்துடன் தங்களை மாதிரியே தான் இருந்தேன் என்ற ஞாபகம்.

    படித்து முடித்ததும் பின் மண்டையில் ஏதோ குறுகுறுவென்கிறதே என்று கையை வைத்தால் ஏதோ மிஸ்ஸிங் போல ஒரு உணர்வு.

    கண்ணாடியில் பார்த்தாலும் சரியாகத் தெரியவில்லை. முன்முடி மட்டுமே தெரிகிறது.

    பிறகு மனைவியைக்கூப்பிட்டுப்பார்க்கச் சொன்னேன். இதில் பார்ப்பதற்கு என்ன இருக்கு, ரொம்பநாளா இப்படித்தானே இருக்கு என்றாள்.

    நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை என்றேன்.

    போங்க, நீங்க என்னைப்பெண் பார்க்க வந்தபோது, தலைபூராவும் அடர்த்தியா முடியோட, பாலும்பழமும் சிவாஜி மாதிரி கும்முனு தூக்கிவாரி என்னமா இருந்தீங்க தெரியுமா? என்று சொல்லி என்னை ஒரு 38 வருடங்களுக்கு முன்னால் இழுத்துப்போனாள்.

    நான் சொன்னேன்: “நீ மட்டும் என்ன, அப்போ நோக்கு 18 வயதே ஆகவில்லை. கருநாகம் போல நீண்ட கூந்தலுடன், கிராமத்தின் உன் வீட்டுத்தரையை தரையை, விளக்கமாறு இல்லாமலேயே உன் நீண்ட கூந்தலால் பெருக்கிக் கொண்டிருந்தாய், என்று சொல்லி மலரும் நினைவுகளில் மூழ்கினேன்.

    ஏன்னா, நான் அர்ஜெண்ட்டா வெளியே போகணும், என் அட்டாச்மெண்ட்டை எங்கேயாவது பார்த்தேளா? என்றாள்.

    நானும் அவளுடன் சேர்ந்து வீடு பூராவும் தேடுவதற்குள் முன் பக்க முடிகளும் கொட்டிடுமோன்னு பயமாயிருக்கு.

    [அட்டாச்மெண்ட் = செளரி ]

    இதையே நான் ஒரு பதிவாகப்போட்டிருக்கலாமோ?

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  6. நல்ல வேளை,நினைவு படுத்தினீங்க, வெங்கட்!சலூனுக்குப் போகணும்!

    பதிலளிநீக்கு
  7. முடியில்லாதவர்கள் அதனை ஒரு
    தலையாய பிரச்சனையாக
    அவர்களாகவே எண்ணிக்கொண்டு
    அவதிபடுகிறார்கள்
    முடியிருப்பவர்களோ அதனை
    ஒரு மயி...க்கூட மதிப்பதில்லை
    இதனையும் ஒரு படத்துடன் கூடிய
    அழகான பதிவாக்கியது ஆச்சரியமே
    ரசிக்கக்கூடிய பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. கோபு சாரின் பின்னூட்டம் சபாஷ். சிரித்து மாளவில்லை.

    பதிலளிநீக்கு
  9. சொந்தமாக மூன்றடி நிலம் கூட இல்லாத அவரைப் பார்த்து ”என்ன சார், நிறைய கிரவுண்ட் வாங்கிப் போட்டு இருக்கீங்களே?”, “தலைக்கு மேல ஒண்ணும் இல்ல, உள்ளேயும் அப்படித்தானா?”, “உங்க எதிர்ல வரணும்னா ஒரு கூலிங் கிளாஸ் போட வேண்டியிருக்கு, சூரிய ஒளி உங்க தலையில பட்டு ரிஃப்ளெக்ட் ஆகுது!” ”தலையைக் கொஞ்சம் மூடிவையுங்க, கண்ணு கூசுது” இப்படியெல்லாம் கிண்டல் செய்தால் பின்னே அவர் என்னதான் செய்வார் பாவம்.


    ......ஊர்க்காரங்க, இப்படி வம்பு பேசியே "மொட்டை" அடிச்சிடுவாங்க போல... அவ்வ்வ்.....

    பதிலளிநீக்கு
  10. வழுக்கைத் தலையுடைய பிரபலங்களைப் பார்த்து, என்னுடைய முன் வழுக்கைப் பற்றி நான் கவலைக் கொள்வதில்லை. மேலும், நானே மற்றவர்களுக்கு முன்பாக என்னுடைய வழுக்கைக் குறித்து கிண்டல் செய்து பிறருக்கு வேலையில்லாமல் செய்து விடுவேன். இதுவும் முடியை பின் பக்கத்திலிருந்து முன் பக்கம் வரை கொண்டு வந்து முழுத்தலையையும் மறைத்துவிடும் சாமர்த்தியத்திற்கு சமம்தான்:-))))!

    பதிலளிநீக்கு
  11. மேல்மாடி காலி ஆக ஆரம்பிச்சிடுச்சி

    பதிலளிநீக்கு
  12. இடுகைக்கு பாராட்டுகள். தேவையான செய்திகள் இடுகையை தொடர்க

    பதிலளிநீக்கு
  13. முடி இருந்தாலும் கஷ்டம்,
    இல்லையென்றாலும் கஷ்டமா?

    பதிலளிநீக்கு
  14. நான் உங்க கட்சி வெங்கட், மாதாமாதம் சலூனுக்கு ஒரு தொகை போகுதுன்னு சண்டை வரும் வீட்டுல.
    நீங்களும் கோபு சாரும் நல்லா சிரிக்க வச்சிட்டீங்க

    பதிலளிநீக்கு
  15. திருவாளர் வெங்கட் அவர்களுக்கு,
    வணக்கம் பலமுறை சொல்லவைக்கும் எழுத்தோவியம!! இது தலையாய பிரச்சினை இதை இவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டீரகளே. சிலருக்கு சுருள் முடி, சிலருக்கு வணங்கா முடி, மற்றும் பலருக்கு பரட்டை முடி, வேறு சிலருக்கோ கின்னஸ் ரெகார்டில் இடம்பெறும் அளவுக்கு நீள் முடி. இவை, , பரம்பரையின் தாக்கத்தினாலும், அழுக்கு, வைரஸ் போன்றவை தாக்குவதாலும் பராமரிப்பு செய்வதில் அசட்டையாக இருப்பதனாலும், காலப்போக்கில் மாற்றமடைந்து , வழுக்கை தனது கேலிக்குரிய முகத்தை காட்டுகிறது. சிலருக்கு சூர்யா பிரபை, மற்றும் சிலருக்கு சந்திரபிரபை, மேலும் சிலருக்கு முன் வழுக்கை, வேகுசிலருக்கு பின் வழுக்கை போன்றவை பயமுறுத்தத் தொடங்கி அவைகளை மறைத்து மற்றோர் முன்னிலையில் "என்றும் இருபது" எனக்காட்ட உங்கள் குறிப்பில் உள்ளது போல் மெனக்கட்டு எல்லோர் கேலிக்கும் ஆளாக வேண்டிஉள்ளது.நான் அறிவுறுத்த விரும்பவது "முடியை அதன் போக்கில் விட்டு விடுங்கள், நரை, திரை, மூப்பு இவை ஒன்றன் பின் ஒன்றாக தொடரவேண்டும் என்பது இயற்கையின் நியதி, அதை மாற்றிட மெனக்கடும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றிடல் நலன் பயக்கும்."

    மந்தவெளி நடராஜன்.

    பதிலளிநீக்கு
  16. இந்த விஷயம் ஒரு தலையாய பிரச்சனையா இருக்கும் போலருக்கே

    பதிலளிநீக்கு
  17. @@ முத்துலெட்சுமி: பொறுமையின் சிகரம் :) கருத்திற்கு நன்றி முத்துலெட்சுமி.

    ## ஆர்.வி.எஸ்.: இப்ப நிறைய ஆஃபீஸ் கட்டடங்களில் லிஃப்டில் இருக்கும் பெரிய கண்ணாடியில் வழுக்கையில் வரட்டுவரட்டுன்னு சீப்பு வச்சி தலைவாரிப்பாங்க பாருங்க, அப்படியே பல் கூசற மாதிரி இருக்கும்! :) இப்படி சொன்னது சத்தியமா நான் இல்ல – என் நண்பர் ஒருவர் – அவருக்கும் வழுக்கை என்பது கூடுதல் தகவல் :) கருத்திற்கு நன்றி மைனரே.

    @@ சுந்தர்ஜி: அவரவர்க்கு அவர் சோகம் :( கருத்திற்கு நன்றி சுந்தர்ஜி.

    ## அமுதா கிருஷ்ணா: திங்கள் முதல் வெள்ளி வரை – ஒன்றரை மணி நேரம் – சனி – ஞாயிறு இன்னும் அதிகம் என சொன்னார்! வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா!

    @@ வை. கோபாலகிருஷ்ணன்: உங்கள் நீண்ட கருத்துரை எப்போதும் போல மனதை மகிழ்வித்தது. அட்டேச்மெண்ட் வைத்து அசத்திட்டீங்க! நீங்கள் நினைத்தது போல, இப்போது கூட இதை வைத்து ஒரு பதிவு போடுங்களேன்.. விரிவான கருத்திற்கு மிக்க நன்றி சார்.

    ## சென்னை பித்தன்: போயிட்டு வந்தாச்சா இல்லையா? :) வருகைக்கு மிக்க நன்றி.

    @@ ரமணி: எனது பகிர்வுகளில் உங்கள் கருத்துரை வந்ததும் மனதுக்கு இதமாய் இருக்கிறது ரமணி சார். தொடர்ந்து கருத்துரை இடுங்கள்….. நன்றி.
    ## சுந்தர்ஜி: திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் கருத்துரை எப்போதும் போலவே சிறப்பாய் அமைந்து இருக்கிறது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் சமர்த்தர் அவர். மிக்க நன்றி சுந்தர்ஜி!

    @@ சித்ரா: வம்பு பேசி இருக்கிற கொஞ்ச நஞ்ச முடியையும் போக்கினால் மொட்டைதானே! கருத்திற்கு மிக்க நன்றி சித்ரா!

    ## அமைதி அப்பா: ஆஹா முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா? நல்லது. கருத்துரைக்கு மிக்க நன்றி அமைதி அப்பா.

    @@ தென்றல் சரவணன்: தலையாய பிரச்சனை! வருகைக்கு நன்றி தென்றல்.

    ## எல்.கே.: அச்சச்சோ! சரி சரி.. :) மேலே ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை கார்த்திக்!

    @@ மாலதியின் சிந்தனைகள்: உங்கள் வருகைக்கு நன்றி!

    ## லக்ஷ்மி: ஏற்கனவே விட்டுட்டேன் அம்மா! கருத்திற்கு நன்றி.

    @@ கோமதி அரசு: உண்மைம்மா! கருத்திற்கு நன்றி.

    ## சிவகுமாரன்: அட நீங்களும் நம்ம கட்சிதானா? கருத்திற்கு நன்றி நண்பரே…

    @@ வி.கே. நடராஜன்: அதன் போக்கிலேயே விட்டுவிட்டால் தான் நல்லது. நீண்ட கருத்துரைக்கு நன்றி.

    ## ராஜி: தலையாய பிரச்சனை தான் தலைமீது! கருத்துரைக்கு நன்றி ராஜி.

    @@ சமுத்ரா: ஹூம்….. என்ன பண்ணலாம்னு யோசிக்கிறீங்களா? நன்றி.

    பதிலளிநீக்கு
  18. இந்த வழுக்கை பிரச்சனை எல்லோருக்கும் இருக்கு உண்டு போல

    பதிலளிநீக்கு
  19. இந்தளவுக்கு மத்தவங்க கமெண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து டைமை வேஸ்ட் பண்னனுமான்னு தோணுது. இருந்தாலும் அவரவர் சோகம் அவரவருக்கு.

    பதிலளிநீக்கு
  20. @@ ஜலீலா கமல்: நிறைய பேருக்கு இருக்கு! :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ## ஹுசைனம்மா: “அவரவர் சோகம் அவரவருக்கு!” - அதானே… வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....