வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வெள்ளி ரயிலில் வரும் பானங்கள்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறதுபகுதி 5]


இந்தப் பகுதியிலும் நாம் ஜெய்விலாஸ் அரண்மணையின் உள்ளேதான் பயணிக்கப் போகிறோம்.  அட ஆமா, எம்மாம்   பெரிய அரண்மணை, 300க்கும் மேற்பட்ட அறைகள்.  நல்ல வேளை முழுவதும் நாம் சுற்றிப் பார்க்கப் போவதில்லை.  வெறும் 35 அறைகள் தான்.  அதற்கே நிறைய நேரம் வேண்டும்.

சென்ற பகுதியில் பார்த்தது போல பிரம்மாண்டத்தின் மறுபெயர் தான் இந்த அரண்மணை.  அரண்மணை என்று இருக்கும்போது சாப்பாட்டு அறை என்று ஒன்று இல்லாமலா இருக்கும்.  [அட எங்க ஏரியாவுக்கு இப்பதான் வந்தீங்க என்று சொல்லும் என்னைப் போன்ற சாப்பாட்டு ராமன்களுக்கு, உணவு வகைகள் பற்றி இங்கே ஒன்றும் எழுதப் போவதில்லை.  இங்கே வரப்போவது வெறும் இங்கே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே!]

ராஜா, மகாராஜாக்கள் எல்லோரும் கீழே வரிசையாகப் போடப்பட்டுள்ள  மெத்தைகளில் அமர்ந்து இருக்க, எதிரே முழுவதும் வெள்ளியால் ஆன தட்டுகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன.  பார்க்கும்போதே ஆசையாகத் தான் இருந்தது அவற்றில் சாப்பிட.


இவர்களைத் தவிர வேறு நபர்கள் வந்தால் மேஜையிலும் பரிமாறுவார்களாம். அதற்கும் தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது


இதையெல்லாம் விட முக்கியமான ஒரு விஷயம் இந்த அறைகளில் இருக்கிறது.  ஒரு நீண்ட மேஜையில் அழகாய் மேஜை விரிப்புகள் போடப்பட்டு மேஜையின் இருபக்கங்களிலும் நாற்காலிகள் போடப்பட்டு இருக்கின்றன

மேஜையின் நடுவே அதன் முழு நீளத்திற்கும் ஒரு தண்டவாளம் இருபக்கத்திலும் செல்கிறது.  இந்த முனையில் ஆரம்பித்து, பயணித்து அடுத்த முனை சென்று திரும்ப இதே முனைக்கு வரும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது.  இதில் பயணிக்கப்போவது வெள்ளியால் ஆன ஒரு சிறிய ரயில்.


வெள்ளியால் ஆன இந்த ரயிலில் மொத்தம் 7 பெட்டிகள்.  அதன் முன்னே ரயில் எஞ்சின் மற்றும் இன்னுமொரு உபரிப் பெட்டி எஞ்சின் எரிபொருட்களைப் போட்டு வைக்க. இருக்கும் 7 பெட்டிகளிலும் பெட்டிக்கு ஒன்றாய் S C I N D I A என்று எழுதப்பட்டு இருக்கிறது.  இந்த ரயில் இப்பவும் வேலை செய்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்.


விருந்து நடக்கும்போது இந்த ரயில் மேஜையில் சுற்றிச் சுற்றி வரும்.  நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் நபர்கள் அந்த ரயிலில் இருக்கும் பானங்களையோ, ஐஸ்கட்டிகளையோ, வறுத்த டிரை ஃப்ரூட்ஸ் போன்றவற்றை எடுக்க விரும்பினால் அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு குப்பியை எடுக்க வேண்டியதுதான்எடுத்தால் வண்டி நின்று விடும்.  பிறகு அந்தக் குப்பியை வண்டியில் திரும்ப வைத்தால் தான் அது மீண்டும் ஓட ஆரம்பிக்கும்.   என்ன ஒரு  வசதி!  இப்போதும் விருந்து நடைபெற்றால் இந்த இடத்தில் நடத்துகிறார்கள்

அதில் இன்னும் விசேஷம் அந்த ரயில் பெட்டி முழுவதும் வெள்ளியாம்.  இன்னிக்கு விற்கிற விலையில் வாங்கணும்னா எவ்வளவு ஆகும்னு யாராவது கணக்குப் புலிங்க கணக்குப் போட்டுச் சொன்னால் நல்லா இருக்கும்.  பயத்துல மொத்தம் எவ்வளவு கிலோ வெள்ளி இந்த ரயில் செய்யப் பயன்படுத்துனாங்கன்னு கேட்க மறந்துட்டேன்இருந்தாலும் இவ்வளவு பெரிய ரயில் செய்யணும்னா நிறைய வெள்ளி ஆகியிருக்கும்.

இந்தக் கணக்கப் போட்டுக்கிட்டு இருங்க.  பிரம்மாண்டத்தின் உண்மை அடுத்த பகுதியில் காத்திருக்கு உங்களுக்காக.

மீண்டும் சந்திப்போம்.

வெங்கட்.43 கருத்துகள்:

 1. வெள்ளி ரயில் ஹ்ம்.. ரொம்ப வித்தியாசமான விசயங்களை தெரிஞ்சுகிட்டோம்.. ராஜாக்கள் தான் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்காங்க.. இதே மாதிரி இப்ப இந்த அரசியல்வாதிங்க எதும் வீட்டில் செய்து வச்சிருக்காங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது..?

  பதிலளிநீக்கு
 2. இந்த ரயில் இப்பவும் வேலை செய்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்.//

  அருமையான ஆச்சரியமான பகிவுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. பொறந்தா ராஜாவாப் பொறந்திருக்கணுமய்யா! வெறுமனே நானும் ராஜாக்கமங்கலத்தில் பொறந்தேன்னு சொல்லி என்ன பயன்!

  (சூப்பரா ஒரு பதிவுப் போட்டு என்னைப் புலம்ப வைத்து விட்டீர்களே சாப்பாட்டு ராமன் அவர்களே! ஸாரி! வெங்கட ராமன் அவர்களே!. அற்புதமான பதிவு! அழகான படங்கள்! வாழ்க! வாழ்க!)

  (சிந்தியா ராசா சாப்பாட்டை சிந்தாம சாப்பிட்டாரான்னும் கேட்டுச் சொல்லுங்க.)

  பதிலளிநீக்கு
 4. கடந்த 4 பகுதிகளையும் படித்தேன்,களைப்பு தெரியாமலிருக்க இடையிடையே வரும் தங்களின் லேசான நகைச்சுவையும் ரசிக்க வைக்கிறது.தங்களின் பயணத்தை பகிர்ந்து வருவது நாங்களும் பயணித்த உணர்வைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 5. வெள்ளி இரயிலா ...?
  படிக்கும் போதே தலை சுற்றுது
  எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறாங்க
  அரசியல்வாதிகள் அதுவும் இப்ப
  இருக்கிறவங்க பார்த்தால் போதும் இரயில்
  தங்கத்திலேயே ஓடும்

  நம்ம வலைப் பக்கம் வாங்க!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. நன்கு அனுபவித்திருக்கிறார்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. ஆச்சரியமான விஷயங்கள்.. படங்கள் மிக அழகு.இந்த விஷயங்களை படிக்கும் பொழுதுதான் இந்தியா ஒரு காலத்தில் எவ்வளவு சுபீட்ஷமாக இருந்திருக்கு என தெரிகிறது.
  நல்ல பகிர்வு, நன்றி.

  பதிலளிநீக்கு
 8. ”வெள்ளி ரயில்”

  ஒரு வேளை சிந்தியா (மாதவ்ராவ்) இரயில்வே துறை அமைச்சராக இருந்த போது இதை அமத்திருப்பாரோ(?!!!)

  [தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அவர் அமைச்சரான பிறகு தான் குவாலியரில் நிற்க ஆரம்பித்ததாகக் கூறுவர். அதற்கு முன் வரை (இப்பொழுதும் ம.பி. யை தவிர) மாநிலத்துக்கு ஒரு நிறுத்தம் தான் இருந்தது.]

  பதிலளிநீக்கு
 9. இது படிக்கும்போது எனக்கு பலவருஷங்கல் முன்பு
  நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.(சுமார் 40வர்டம்)
  பாம்பே சுத்திபாக்க புதுசா வந்திருந்தோம். நாங்க
  ரெண்டுபேர்மட்டும் கேட் வே ஆஃப் இண்டியா போய்ட்டு
  தாஜ் மஹால் ஹோட்டல் போயி ஒரு காப்பி மட்டும்
  ஆர்டர் செய்தோம் தனித்தனியா பால், டிகாக்‌ஷன்,ஜீனி
  கப் எல்லாம் ஒரு ட்ரேயில் அடுக்கி டிப் டாப்பா யூனி
  ஃபார்ம் போட்டிருந்த சர்வர் கொண்டு வைத்தான் நாங்களே கலந்துக்கனும். நல்லாவே இருந்தது.
  பில் கொண்டு வந்தான் 300- ரூபாக்கு. ரெண்டு காபி
  300 ரூவாவா ஏதோ தப்பாபில் போட்டுருப்பானொன்னு
  நினைச்சோம். பேரரிடம் கேட்டோம் இல்லெ சாப்
  சில்வர் பாத்திரங்கலில் சர்வ் பண்ணினோம் இல்லியா
  அதனால வில அதிகம் என்றான். வெள்ளியையா
  சாப்பிடபோர்ரொம். மண்கப்பில் குடிச்சாலும் காபி ரசித்திருக்கும். வெள்ளியாவது ஒன்னாவது.

  பதிலளிநீக்கு
 10. நம் ராஜாக்கள் தமது கடைசி காலங்களில்
  மக்களைப் பற்றிய கவலை என்பது துளியும்
  இல்லாமல் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதில்தான்
  இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பாக
  வட இந்தியாவில் என்பது சுற்றிப்பார்த்தால்
  தெளிவாகப் புரிந்துவிடும்
  நானும் ஜெய்ப்பூர் அரண்மனையையும்
  அங்கு ராஜாக்கள் பெண்களுடன் சந்தோஷமாக
  இருப்பதற்காக செய்துவைத்திருந்த
  ஏற்பாடுகளையும் பார்த்து வெலவெலத்துப்போனேன்
  படங்களும் பதிவும் அருமை
  உங்களுடன் கூட வருவதைபோன்ற எண்ணத்தை
  தங்கள் எழுத்தும் படங்களும் ஏற்படுத்திப்போகிறது
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. வெள்ளி ரயிலா!!!

  அஜய் தேவ்கன், கஜோல் நடிச்ச 'ராஜு சாச்சா' படத்துலயும் இதே மாதிரி ஒரு ரயில் சாப்பாட்டு மேசையில், சாப்பாட்டு அயிட்டங்களை சுமந்துக்கிட்டு ஓடும்.

  பதிலளிநீக்கு
 12. நன்கு அனுபவித்திருக்கிறார்கள்...ராஜ வாழ்க்கைன்னா இது தான் போல...

  பதிலளிநீக்கு
 13. @ முத்துலெட்சுமி: நிஜமாகவே அனுபவிச்சு வாழ்ந்திருக்கிறார்கள். இக்கால அரசியல்வாதிகள் இது போல ரயில் எல்லாம் செய்து அனுபவிப்பது இல்லை... எல்லா பணமும் தான் கறுப்புப் பணமாக ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டு விட்டதே... :(

  தங்களது இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 14. # புதுகைத் தென்றல்: ஆமாங்க வெள்ளி ரயில்தான்... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 15. @ இராஜராஜேஸ்வரி: இப்பவும் வேலை செய்யும் நிலையில் தான் இருக்கிறது இந்த ரயில்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 16. வெள்ளி ரயில்.. பிரமிக்க வைத்த தகவல்கள்.. படங்கள்..
  வாழ்க்கையை சுவாரசியமாய் வாழ்ந்திருக்கிறார்கள் போல!

  பதிலளிநீக்கு
 17. # ஈஸ்வரன்: சிந்தியா ராஜா சிந்தாம சாப்பிட்டாரா... கேட்பது யாரு ராஜாக்கள்மங்கலம் ராஜாவா.....

  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி...

  பதிலளிநீக்கு
 18. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: நான்கு பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டீர்களா? மிக்க நன்றி சகோ....

  என்னுடைய எழுத்தினை ரசித்தமைக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி...

  தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 19. # புலவர் சா. இராமாநுசம்: தங்களது முதல் வருகைக்கு நன்றி புலவர் ஐயா அவர்களே... உங்களது வலைப்பக்கமும் வருகிறேன்....

  நிச்சயம் தங்க ரயில் ஓடிக் கொண்டு இருக்கும்....

  தங்களது முத்தான முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. @ ரத்னவேல்: ஆமாம் ஐயா... வாழ்க்கையை நிறையவே அனுபவித்து இருக்கிறார்கள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. # ராம்வி: அப்போது மட்டுமல்ல, இப்போதும் சுபீட்சமாகத் தான் இருக்கிறது இந்தியா.... நிறைய பணம் வெளியே சேமிக்கப்பட்டு இருக்கிறதே... நம் அரசியல்வாதிகள், பண முதலைகள் என எல்லோரிடமும் நிறைய பணம் இருக்கிறது சகோ....

  தங்களது இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 22. @ சென்னை பித்தன்: தமிழ்மணம் 5-க்கு நன்றி :)

  வாழ்க்கையை அனுபவித்து இருக்கிறார்கள்.... அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: மாதவ் ராவ் சிந்தியா காலத்தில் தான் தமிழ்நாடு விரைவு வண்டி குவாலியரில் நிற்க ஆரம்பித்தது என்பது உண்மை....

  இந்த வண்டி ஆந்திராவிலும் இரண்டு இடத்தில் [வாரங்கல், விஜயவாடா] நிற்கிறதே பல வருடங்களாய்....

  உனது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு...

  பதிலளிநீக்கு
 24. # லக்ஷ்மி: உங்கள் நாற்பது ஆண்டு கால நினைவினை தூண்டியது போல எனது பகிர்வு.... நீங்கள் சொல்வது உண்மைதான். கலத்தில் இருக்கும் சாப்பிடும் பொருளின் சுவை வைத்திருக்கும் பாத்திரத்தைப் பொறுத்து அல்லவே.... மண்கலத்தில் வைத்திருக்கும் பழைய சாதம் தான் எவ்வளவு சுவை....

  தங்களது இனிய வருகைக்கும் நல்ல கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 25. அருமையான படங்களுடன் வெள்ளிரயில் செய்தி பார்க்கவும் படிக்கவும் இனிக்கிறது...

  பதிலளிநீக்கு
 26. @ ரமணி: இங்கே ராஜாக்கள் வாழ்க்கையை நன்கு அனுபவித்து இருக்கிறார்கள் என்பது உண்மை தான்... இந்த குவாலியர் அரண்மணையிலும் சரி, ஜெய்ப்பூர் அரண்மணையிலும் சரி எத்தனை எத்தனை விஷயங்கள்.....

  தங்களது இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 27. # அமைதிச்சாரல்: வெள்ளி ரயில்தான் சகோ.... ராஜு சாச்சா பார்த்த நினைவில்லை....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 28. @ ரெவெரி: ராஜ வாழ்க்கைதான் நண்பரே....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. # ரிஷபன்: சுவாரசியம் மட்டுமல்ல... மிகவும் வித்தியாசமாகவும் வாழ்ந்து இருக்கிறார்கள்.... நிறைய விஷயங்கள் அந்த அரண்மணையில் கொட்டிக் கிடக்கிறது.....

  தங்களது இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 30. @ பத்மநாபன்: வெள்ளி ரயில் சுவாரசியம் தான்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி....

  பதிலளிநீக்கு
 31. ஆகா... சுவையான வெள்ளி ரயில் சாப்பாடு கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 32. # மாதேவி: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 33. வெள்ளி ரயில் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுதே!!!!!!

  கற்பனை எப்படி எல்லாம் வடிவம் எடுத்துருக்கு பாருங்க!

  இங்கே நம்மூர்லே ஒரு சூஷி பார்லே ஒரு (ப்ளாஸ்டிக் பொம்மை) ரயில் நாலைஞ்சு பெட்டிகளோடு ஓடிக்கிட்டே இருக்கும். நமக்கு வேணுங்கற வகையை வண்டியில் இருந்து இறக்கிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 34. @ துளசி கோபால்: கற்பனை ஊற்றுக்கு முடிவு ஏது! ஒரு மனிதனிடம் முடிந்தால் இன்னொரு மனிதனிடம் தொடங்கி விடும்....

  அள்ளிக்கொண்டு தான் போனது - என் மனதை அந்த வெள்ளி ரயில்....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 35. மேஜையின் நடுவே அதன் முழு நீளத்திற்கும் ஒரு தண்டவாளம் இருபக்கத்திலும் செல்கிறது. இந்த முனையில் ஆரம்பித்து, பயணித்து அடுத்த முனை சென்று திரும்ப இதே முனைக்கு வரும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் பயணிக்கப்போவது வெள்ளியால் ஆன ஒரு சிறிய ரயில்//

  இந்த வெள்ளி ரயில் பற்றி முதன்முதலில் ஜான் மாஸ்டர்ஸ் எழுதின இந்திய மஹாராஜாக்கள் பற்றிய ஒரு புத்தகத்தில் (கல்யாணம் ஆன புதுசுலே) படித்தேன். அதன் பின்னர் பலமுறை இது குறித்துப் படிக்க நேர்ந்தது. நீங்கள் நேரிலேயே பார்த்திருக்கிறீர்கள். கொடுத்து வைச்சிருக்கீங்க.

  திபெத் குறித்தும் ஜான் மாஸ்டர்ஸ் எழுதி இருப்பது சுவாரசியமாக இருக்கும்.

  மிச்சம் நாளைக்கு. :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜான் மாஸ்டர்ஸ் எழுதிய இந்திய மஹாராஜாக்கள் பற்றிய புத்தகம் - தேடிப் பார்க்கணும்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 36. http://en.wikipedia.org/wiki/John_Masters

  உங்களுக்காக ஒரு சின்ன அறிமுகம். இவர் எழுதியவற்றில் எனக்குப் பிடித்தது Far, Far the Mountain Peak, Bhowani Junction. பொவானி ஜங்ஷன் படிக்கையிலே மனம் பதறும். :(((((

  வெளியே விலைக்குக் கிடைக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. நான் ராணுவ நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்தேன். :)))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவலுக்கு நன்றி கீதாம்மா....

   எங்களது அலுவலக நூலகத்தில் பார்க்கிறேன். படிக்கும் ஆவல் அதிகரித்து விட்டது.....

   நீக்கு
 37. அடேங்கப்பா...    என்ன ஆடம்பரம்!  நான் இப்போதுதான் படிக்கிறேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்போது தான் படிக்கிறேன்// - ஆஹா... சுட்டி கொடுத்ததும் நல்லதாப் போச்சே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....