வியாழன், 17 மே, 2012

நர்மதை நதிக்கரையில்…


[மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 4]


சென்ற பகுதியில் சொன்னது போல, ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை பார்த்த பிறகு நாங்கள் சென்றது “[B]பேடா [G]காட்” என்று அழைக்கப்படும் சலவைக்கல் பாறைகள் இருக்கும் இடத்திற்கு. தங்கியிருந்த ”கல்சூரி ரெசிடென்சி” –யிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது இந்த இடம். நர்மதை நதிக்கரையில் நிறைய படகுகள் இருக்கின்றன. அனைத்துமே துடுப்புப் படகுகள் தான். இருபது பேர் மற்றும் நான்கைந்து பேர் அமரும் படகுகளும் இருக்கின்றன. 



நாங்கள் மொத்தமாக 37 பேர் என்பதால் இரண்டு படகுகளை ஏற்பாடு செய்திருந்தார் ரோஹித். இரு குழுக்களாகப் பிரிந்து இரண்டு படகுகளிலும் அமர, படகுகள் கிளம்பியது. ஒரு பக்கத்தில் ஒரு நபர் அமர்ந்து படகினை திருப்பும் வேலையினைப் பார்க்க மறுபக்கத்தில் இரண்டு நபர்கள் அமர்ந்து துடுப்பு போடுகிறார்கள். நர்மதை நதியின் அமைதியான நீரோட்டத்தினை எதிர்த்து படகு செல்கிறது. இரண்டு பக்கங்களிலும் சலவைக்கல் பாறைகள் அணையாக இருக்க, நர்மதை நதி குறுகி ஓடிக்கொண்டிருக்கிறது.

சில இடங்களில் மிகவும் குறுகலாக இருக்கிறது. ஓரிடத்தில் ஒரு பக்கப் பாறையிலிருந்து இன்னோர் பக்கப் பாறைக்கு குரங்கு தாவும் அளவுக்கே இருப்பதால் அந்த இடத்திற்குப் பெயரே ”பந்தர் கூத்னி". ”அமைதியான நதியினிலே ஓடம்” என்று பாடத் தோன்றியது. ஓடத்தினைச் செலுத்தும் நபர் தொடர்ந்து ஹிந்தியில், நகைச்சுவையோடு அழகிய வர்ணனை செய்ததை ரசிக்க முடிந்தது. 





நதியின் நடுவே இருக்கும் இரு பாறைகளில் சுயம்பு லிங்கங்களைக் காண முடிந்தது [ஒன்று கருப்பு வண்ணத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும்]. சில இடங்களில் பாறைகள் தண்ணீரால் அரிக்கப்பட்டு இயற்கையாக முனிவர், நந்தி, போன்ற வடிவங்களில் உருவான சில சிற்பங்களையும் காண முடிந்தது. ஒரு பாறையில் அழகிய வட்ட வடிவம் இருந்ததை இயற்கை மோதிரம் என அழைக்கிறார்கள். 



நதி மட்டத்திலிருந்து ஐம்பது-அறுபது அடி இருக்கும் ஒரு பாறை மேல் இரு சிறுவர்கள். படகுகள் அந்தப் பாறைகளுக்கு சற்று அருகில் செல்லும் போது வரும் பயணிகளைப் பார்த்து “பத்து ரூபாய் தாங்க, இங்கே இருந்து நதியில் குதிக்கிறேன்” என்று உச்சஸ்தாயியில் கூற, அதற்கு படகிலிருக்கும் சிலர் சம்மதிக்க, உடனே அங்கிருந்து குதிக்கின்றனர் இருவரும். பின் நர்மதையில் நீந்தி, படகின் அருகே வந்து பணம் வாங்கிக் கொள்கின்றனர். 

அதற்குள் படகுக்காரர் 'படகைப் பிடிக்காதே' என்று அவர்களை மிரட்டுகிறார். பணம் முழுவதும் நனைந்து போனாலும், அதை வாயில் கவ்வியவாறே மீண்டும் நீச்சலடித்து பாறைகளுக்கு அருகில் சென்று மேலே ஏறுகிறார்கள். முழுதும் நனைந்த ரூபாய்த் தாள்களைப் போலவே எங்கள் மனமும் நனைந்தது. படிக்க வேண்டிய வயதில் இப்படி உயிரைப் பணயம் வைத்து ஒரு  ஆபத்தான வித்தையை செய்து காண்பித்து அவர்களை சம்பாதிக்க அனுப்பியது யார் குற்றம்? இந்தக் கேள்விக்குத் தான் இன்னும்விடை கிடைத்தபாடில்லை. 

ஆங்காங்கே பாறைகளில் சில பழைய துணிகள் மரங்களில் மாட்டிக்கொண்டு காற்றில் படபடக்கிறது. படகோட்டிகள் ஸ்வாரசியத்திற்காக, ஒரு சிவப்புத் துணியைக் காட்டி இது தான் கரிஷ்மா கபூரின் துப்பட்டா, இங்கே தான் ஹிந்திப் படமான ”அசோகா” எடுக்கப்பட்டது, இந்த இடத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது என ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே வருகிறார். 





பாறைகளுக்கு நடுவே இரண்டு வழிகள் தெரிகிறது. இடப்பக்கம் செல்வதா, வலப்பக்கம் செல்வதா என்ற குழப்பம் விளைவிக்கும் இடம். அதனால் இந்த இடத்தினை ‘[B]புல்[B]புலையா” பாறைகள் என்று அழைக்கிறார்கள். ஒரு பக்கம் சென்றால் திரும்பலாம்,  இன்னுமொரு பக்கம் சென்றால் “எள்ளும் தண்ணீரும் இறைக்கச் சொல்லி விடலாம்!”. நாங்கள் திரும்பினோம்.

45 நிமிடங்கள் போனதே தெரியாமல் இயற்கை அன்னையின் எழில் கோலத்தினைக் கண்டு ரசித்துவிட்டு படகுத் துறைக்குத் திரும்பினோம். எல்லாப் படகுகளையும் அந்த கிராமத்து நபர்களே இயக்குகிறார்கள். இருந்தாலும் லைஃப் ஜாக்கெட் போன்ற எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை என்பதை மாற்றம் செய்யவேண்டிய ஒன்று எனத் தோன்றியது.

படகு துறையிலிருந்து வெளிவந்தால் வரும் வழி முழுதும் நிறைய கடைகள். மார்பிள் கற்களில் பெயர் எழுதித் தருபவர்கள், ஊதுவத்தி ஸ்டாண்ட், சப்பாத்திக் கல், மாலைகள், தலையில் அணியும் க்ளிப் என பலவும் கிடைக்கிறது. எல்லாவற்றையும் பார்த்து, சிலவற்றை வாங்கிக் கொண்டு எங்கள் அடுத்த இலக்கினை நோக்கி பயணித்தோம்.

அடுத்தது எங்கே என வினவும் நண்பர்களுக்கு... சற்றே காத்திருந்தால் உங்களை ஒரு பழமையான இடத்திற்கு அழைத்துச் செல்வேன்!

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


குறிப்பு: 11.05.2012 அன்று வல்லமையில் வெளிவந்தது.

36 கருத்துகள்:

  1. ஒரு பக்கப் பாறையிலிருந்து இன்னோர் பக்கப் பாறைக்கு குரங்கு தாவும் அளவுக்கே இருப்பதால் அந்த இடத்திற்குப் பெயரே ”பந்தர் கூத்னி". ”அமைதியான நதியினிலே ஓடம்” என்று பாடத் தோன்றியது. ஓடத்தினைச் செலுத்தும் நபர் தொடர்ந்து ஹிந்தியில், நகைச்சுவையோடு அழகிய வர்ணனை செய்ததை ரசிக்க முடிந்தது.

    அனைத்து படங்களும் பகிர்வும் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      நீக்கு
  2. ஆமா வெங்கட் மிகவும் அருமையான இடம் நான் கூட பேடாகாட் பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தேன் பௌர்னமி இரவில் அந்தமார்பிள் மலைகள் பலகலர்களி காணக்கிடைக்குமற்புத காட்சி ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்மா. வெயில் ஒளிக்கற்றைகள் பட்டு அப்பாறைகளில் எதிரொளிக்கும்போது என்ன அழகு!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  3. நம்மூர்லயும் இப்படி குதிப்பாங்க இல்ல..
    ம்.. பாவம்.. குதிச்சப்பறம்
    ஒழுங்கா அந்தப்பணத்தைக்குடுக்காம ஏமாத்தாம இருந்தா சரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் முத்துலக்ஷ்மி. அதுதான் கொடுமை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமையான பகிர்வு. இயற்கை மோதிரமும் சுயம்பு லிங்கங்களும் நதியும் மலைகளும் அழகு.

    குதிக்கும் பையன் படம் முன்னரே பகிர்ந்திருந்தீர்கள். விவரங்கள் வருத்தம் தருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி. குதிக்கும் பையன் படம் முன்னர் முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தேன்.

      வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  6. நர்மதை நதிக்கரையில் மனத்துக்கு ரம்யமான அழகிய இடம். நாங்களும் பயணித்து வந்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் இந்த ரம்யமான இடத்தில் பயணித்தமைக்கு வாழ்த்துகள் :)

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  7. நர்மதை நதிக்கரையில் மளத்துக்கு ரம்யமான இடம்.

    நாங்களும் காட்சிகளைக் கண்டு பயணித்து வந்தோம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  8. அடுத்த விஸிட் மத்தியப்பிரதேசத்திற்குத்தான்.


    //ஓரிடத்தில் ஒரு பக்கப் பாறையிலிருந்து இன்னோர் பக்கப் பாறைக்கு குரங்கு தாவும் அளவுக்கே இருப்பதால் அந்த இடத்திற்குப் பெயரே ”பந்தர் கூத்னி".//

    அதாவது நம்ம ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு தாவின மாதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அடுத்தது அங்கே தானா.. நானும் வரத்தயார் தான் அண்ணாச்சி... :)

      //அதாவது நம்ம ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு தாவின மாதிரி// இது மினியேச்சர்....

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தமிழ் நாடு ஒகநேகளிலும் இதே மாதிரி தான்...பாத்து, பதினைந்து ரூபாய்க்கெல்லாம் சிறுவர்கள் உயிரை பணயம் வைத்து நீரில் குதிக்கும் அவலத்தை காணலாம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எனது ஓகேனக்கல் பயணத்தில் நானும் பார்த்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் இதே அவலம். என்று தான் தொலையும் வறுமை!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மூவார் முத்தே.

      நீக்கு
  10. நதிப பயணத்தை உங்களுடன் மேற்கொண்டது ரசிக்கும்படியே இருந்தது. அந்தச் சிறுவர்களின் நிலையை எண்ணினால் பரிதாபமே...! தொடர்கிறேன் உங்களுடன் மத்தியப்பிரேதச விசிட்டில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தச் சிறுவர்களின் நிலையை எண்ணினால் பரிதாபமே...!// உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  11. பயணக்கட்டுரையும் படங்களும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்று வை.கோ. சார்.

      நீக்கு
  12. அனைத்துப்படங்களும், பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  13. அழகான இடங்கள், அருமையான படங்கள். சீக்கிர்மா போய் பார்பக்கணம்னு, நினைக்க தூண்டுகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான இடங்கள் தான் சகோ வெற்றிமகள். நிச்சயம் போய்ப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. //ஓடத்தினைச் செலுத்தும் நபர் தொடர்ந்து ஹிந்தியில், நகைச்சுவையோடு அழகிய வர்ணனை செய்ததை ரசிக்க முடிந்தது.//

    இப்படி ஒருவருடன் சென்றால் பயணம் மிக அருமையாக இருக்கும்...எங்களுக்கு நீங்கள் கொடுத்த வர்ணனை போல. கொஞ்சம் களம் கடந்து வந்தததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு...

      நீக்கு
  15. அமைதியான நதியினிலே ஓடம்” என்று பாடத் தோன்றியது.//

    ஆஹா அருமை.

    படங்கள் எல்லாம் அருமை.படிக்கும் வயதில் மலையின் மேலிருந்து குதித்து வித்தை காட்டி பணம் பெறும் பையன்களை நினைத்தால் கவலையாக உள்ளது.

    இயற்கை இரண்டு வழி வைத்து இருப்பது மக்களுக்கு பாடம் சொல்ல என் நினைக்கிறேன் வெங்கட்.
    நல்லவழியில் போனால் நல்லபடியாக வாழலாம், தீய வழியில் போனால் அழிவு நிச்சயம் என்பதை உண்ர்த்துவதற்கு இறைவன் வகுத்த வழியோ!.

    பதிலளிநீக்கு
  16. //இயற்கை இரண்டு வழி வைத்து இருப்பது மக்களுக்கு பாடம் சொல்ல என நினைக்கிறேன் வெங்கட்.//

    இயற்கை என்ன சொல்லவருகிறது என்பதை புரிந்து கொள்ளும் நிலை நம்மில் பலருக்கு இல்லையேம்மா. நீங்கள் சொல்வது கூட இருக்கலாம்.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது முதல் வருகை?

      வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி நாடோடிப் பையன்.

      நீக்கு
  18. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாலா [நாடோடிப் பையன்]

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....