திங்கள், 6 ஆகஸ்ட், 2012

சுத்தி சுத்தி வந்தேங்க!


மனச் சுரங்கத்திலிருந்து தொடர் எழுதி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.  சில சமயங்களில் இப்படித்தான்…  மனச் சுரங்கத்திலிருப்பவற்றை அவ்வப்போது மாடு மாதிரி அசை போட்டாலும், எழுத முடிவதில்லை.  மாடு என்றதும் நினைவுக்கு வருவது எங்கள் ஊரில் கோவிலுக்காக நேர்ந்து விட்ட ஒரு காளை மாடு தான்! 




அதன் அழகைச் சொல்லி மாளாது.  அப்படியே திமில்கள் கொடியிடை மாதிரி அசைந்து அசைந்து நடந்தாலும், பார்வையிலும், ஆக்ரோஷத்திலும் அப்படி ஒரு வில்லத்தனம்!  ”எப்ப வேணா யார் வீட்டுத் தோட்டத்துக்கு வேணாலும் போவேன், என்னை யாரும் ஒண்ணும் அசைக்க முடியாது!” எனத் திரியும்.  கோவிலுக்கு நேர்ந்து விட்ட மாடுங்கறதால அதை யாரும் அடிக்கவும் மாட்டாங்க! சரி அது பாட்டு அது இருக்கு, நம்ம பாட்டு நாம இருப்போம்னா விட்டதா அது? 

நான் அப்ப நெய்வேலி பாய்ஸ் ஹைஸ் ஸ்கூல்ல +1 படிச்சுட்டு இருந்தேன்.  நீலக் கலர்ல பேண்டும், வெள்ளை கலர் சட்டையும் தான் யூனிஃபார்ம்.  எங்கிட்ட ஒரு செட் யூனிஃபார்ம் தான் இருந்தது. ”இவன் கிழிக்கிற கிழிப்புக்கு ஒரு பேண்ட்-சட்டை போதும் அதையே தோச்சுப் போட்டுக்கட்டும்”னு அப்பா நினைச்சுருப்பாருன்னு நினைப்பேன் அப்பல்லாம்.  அதுவே கஷ்டப்பட்டு தான் வாங்கிக் கொடுத்திருக்காருன்னு இப்பதான்  புரியுது!

காலை ஷிஃப்ட் தான் எனக்கு ஸ்கூல்.  அதுனால தினம் வீட்டுக்கு வந்தவுடனே சட்டையைக் கழட்டி தோய்த்துப் போட்டுடுவேன்.  இரண்டு நாளைக்கொரு முறை பேண்டையும் தோச்சுடுவேன்.  வீட்டு வாசல்ல இருக்கும் கல்யாண முருங்கை மரத்திலிருந்து தெருவில் இருக்கும் மின்கம்பத்துக்கு ஒரு கயிறு கட்டியிருப்பாங்க.  தோய்த்த  துணிகளை அதுல போட்டுட்டு, வீட்டுக்குள்ளே நல்ல புள்ளையா படிக்க போயிட்டேன். 

படிக்கப் போனவன் புஸ்தகத்தை தொறந்து வைச்சுக்கிட்டே தூங்கிட்டேன் போல! வாசல்ல ஒரே சத்தம். பசங்கல்லாம் ”டுர்ர்…னு சத்தம் போட்டுக்கிட்டு ஓடறாங்க!” கனவா நினைவான்னு  தெரியாம, இருக்கும்போது அம்மா வந்து ”ஏண்டா வாசல்ல இத்தனை சத்தம் உனக்கு ஒண்ணும் கேட்கலையா, சரியான டெல்லி எருமை…”ன்னு சொன்னப்புறம் தான் எழுந்தேன்.  வெளியே வந்து பார்த்தா…



எங்கூர் காளை மாடு ஓடுது.  பின்னாடியே பசங்களும் ஓடறாங்க!  என்னடா விஷயம்னு பார்த்தா, கொடியில போட்டிருந்த என் நீலக் கலர் பேண்ட்டைக் காணோம்.  கொடியை விட்டுட்டு மாட்டப் பார்த்தா, அது பேண்ட் போட்டுருக்கு…  ”அட நீங்க வேற பேண்டுக்கு இரண்டு காலு, மாட்டுக்கு நாலு காலாச்சே?”ன்னு கேள்வி எல்லாம் கேட்காதீங்க! மாடு பேண்ட் போட்டிருந்தது அது கொம்புக்கு!”

அதுக்கு எத்தனை நாள் ஆசையோ! “இவனுங்க எல்லாம் வித விதமா சட்டையும், பேண்டும் போட்டுக்கறானுங்க, நானும் இவங்களை மாதிரி ஆம்பளை தானே, எனக்கு ஒரு உடுப்பு தைக்கணும்னு எவனுக்காவது தோணுச்சா, எத்தனை நாள் தான் இப்படி அசிங்கமா திரியறதுன்னு” நினைச்சுதோ என்னமோ தெரியல, கொடியில் தொங்கிக்கிட்டிருந்த என் பேண்ட்டில் லாவகமாக தன் கொம்பை நுழைத்து  போட்டுக்கிட்டு ஓடுது போல. 

அடடா இருக்கறதே ஒரு பேண்ட்டு, அதையும் இந்த காளை போட்டுட்டு ஓடுதே…  இதை விடக்கூடாதுன்னு நானும் ஒலிம்பிக்ல இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு தங்க மெடல் கிடைச்சே ஆகணும் என்கிற வெறியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடற மாதிரி மாட்டைத் துரத்திக்கிட்டு ஓடறேன்.  அது ஓட, நான் துரத்த, தெருத்தெருவா சுத்தி சுத்தி வந்தேங்க!   என்னைச் சுத்தி சுத்தி ஓட விட்டுட்டு ஒரு ஸ்டேஜ்-ல, “ ஏண்டா நான்  பேண்ட் போட்டது தப்பா… அதுக்காக என்னை இப்படியா  ஓட விடுவ...?” -ன்னு கேட்கற மாதிரி நின்னு முறைக்குது.  பின்னாடி பசங்க கூட்டமா நின்னு  “டேய் விடாத, கிட்டப் போய் கொம்புலேர்ந்து பேண்ட எடு”ன்னு சவுண்ட் விடறாங்க! 

பலமா மூச்சு விட்டுட்டு இருந்தது அது. நானும்தேன்… அப்படி அசந்து வேற பக்கம் பார்க்கும்போது பாய்ஞ்சு போய் கொம்புல சுத்தியிருந்த எனதருமை நீல பேண்டை  எடுத்துக்கிட்டு நான் முன்னாடி ஓட பின்னாடி அது என்னைத் துரத்திக்கிட்டு வருது!  அப்ப பென் ஜான்சன், உசைன் போல்ட் எல்லாம் எங்கிட்ட மோதியிருந்தா நிச்சயம் மண்ணைக் கவ்வியிருப்பாங்க!  நேரே ஓடிப் போய் வீட்டுக்குள்ள புகுந்துகிட்டு ஜன்னல் கதவை லேசா திறந்து வச்சுகிட்டு அது என்ன பண்ணுதுன்னு நோட்டம் விட்டேன். மாடு பாவமா ரொம்ப நேரம் வெளியே நின்னு பார்த்துட்டுப் போயிடுச்சு. 

அதுக்கப்புறம் அந்த மாடு எப்பப் பார்த்தாலும் என்னைத் துரத்த, நான் ஓட… இதே ஆட்டம் தான்.  ஆனாலும் பாவம் அதால கடைசி வரை  என்னைப் பிடிக்கவே முடியல!  சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு அந்த மாட்டுக்கு ஒரு நல்ல பேண்ட் சட்டை வாங்கிக்கொடுக்கணும்னு நினைச்சு ஊருக்குப் போனப்ப கேட்டேன், ”ஏம்மா அந்த காளை மாடு இப்பவும் வருதா?”

கண்ணீர் மல்க அம்மா சொன்னார் ”இல்லைடா அது செத்துப் போய் ஆறு மாசம் ஆச்சு...”

இப்பக்கூட எங்கேயாவது காளை மாட்டைப்  பார்த்தா  நினைவுக்கு வருவது இந்த மாடுதான்.

மீண்டும் மனச்சுரங்கத்திலிருக்கும் நினைவுகளைப் பகிரும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


64 கருத்துகள்:

  1. அடடா...... உங்ககிட்டே இருந்து புது பேண்ட் வாங்கிக்க அதுக்குக் கொடுத்துவைக்கலை பாருங்க!

    என்னுடைய முதல் புடவையை (காஷ்மீர் சில்க் ப்ரிண்டட்) மாடு தின்னுருச்சு. துவைச்சு வெளியில் இருக்கும் கொடியில் காயப்போட்டுருந்தேன். கடைசித்துண்டு கண்ணுலே பட்டது. இல்லைனா அது முழுங்குனதே எனக்குத் தெரிஞ்சுருக்காது.

    யாரோ திருடிட்டாங்கன்னு இருந்திருப்பேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”என்னடா இது... ஆளில்லாத கடையில டீ ஆத்தறேனோ”ன்னு நினைச்சேன்... :)

      அடடா உங்க முதல் புடவையை மாடு தின்னுடுச்சா?... இப்ப இருக்கற மாடுகள் பாவம் - புல், வைக்கோல் கிடைக்காம பிளாஸ்டிக் பேப்பர்ல இருந்து எல்லாம் சாப்பிடுது... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  2. ஆஹா... பயங்கரமான அனுபவமா இருக்கே... இன்று நகைச்சுவையாய் சொல்லியிருந்தாலும் அன்றைக்கு எப்படியிருந்திருக்கும்? பொங்கல் சமயங்களில் ஜல்லிக்கட்டு மாடுகள் இப்படிதான் எங்க ஊர்ப்பக்கம் திரிந்துகொண்டிருக்கும். பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அதிலும் சாலை போட குவித்துவைத்திருக்கும் செம்மண் மேட்டில் முட்டி, கொம்பைத் தேய்த்து வெறியுடன் திரும்பிப் பார்க்கும்போது உயிரே போனதுபோல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு நினைத்தால் சிரிப்பாக இருந்தாலும் அன்று நிச்சயம் பயம் தான். பெரும்பாலும் கோபமாக இருந்தால், கொம்புகளால் மண்ணைக் குத்திக் கிளறி, பிறகு முன்னங்கால்களால் மண்ணை தள்ளி ஆக்ரோஷத்தோடு பார்க்கும்போது நடுக்கம்....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ கீதமஞ்சரி.

      நீக்கு
  3. வீட்டு விலங்குகளிடம் அக்கறை வைத்துவிட்டு அவைகள்
    இறந்துவிட்டால் மனம் நிலைகொள்ளாது சங்கடப்படும்...
    காளையின் அழகை நல்லா வர்ணனை செய்திருக்கீங்க நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  4. நகைச்சுவையாக எழுதி இருந்தாலும், எப்படி என்று நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது சார்... பழைய நினைவுகளை அழகாக பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...(T.M. 3)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
    2. துள்ளித் திரிந்த பள்ளிக்காலம் ....

      நீக்கு
    3. பள்ளிக்காலம் மீண்டு வருமா என்ற ஏக்கம் எல்லோருக்குமே உண்டே...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

      நீக்கு
  5. கோயில் மாடு பேண்ட் போட்ட‌து சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்தாலும், மாட்டினால் உங்க‌ நிலைமையின் ப‌ரிதாப‌ம் அனுதாப‌ம் ஏற்ப‌டுத்திய‌து ச‌கோ... கோவை மாப்பிள்ளையான‌பின் 'தேன்' எல்லாம் ஒட்டிக் கொண்ட‌து பேச்சில்! தின‌ச‌ரி மாறாத‌ சீருடை நிற‌ம் த‌ந்த‌ வெறுப்பில் ப‌டிப்பு முடிந்த‌ பின் நாமெல்லாம் அந்த‌ நிற‌ங்க‌ளையே சில‌ கால‌ம் ஒதுக்கி விடுவோம் ம‌ன‌த‌ள‌வில். சிர‌த்தையோடு தின‌ம் துவைத்த‌ உங்க‌ பொறுப்புண‌ர்வு மெச்ச‌த் த‌க்க‌தே.

    என் சின்ன‌ நாத்த‌னார் சிறுவ‌ய‌தில் புத்த‌ம்புதிய‌ பார்பிமாட‌ல் ச‌ட்டையை நாய்தின்ன‌க் கொடுத்து வ‌ந்த‌ க‌தையை நினைவு வ‌ரும் போதெல்லாம் சொல்லிச் சிரிப்ப‌ர் இங்கே. (எல்லா டீக்க‌டைக்கும் வாடிக்கை கிடைத்து விடுகிற‌தே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி சகோ நிலாமகள்.

      //எல்லா டீக்க‌டைக்கும் வாடிக்கை கிடைத்து விடுகிற‌தே!// அதானே..

      நீக்கு
  6. காளைமாடு.. சாந்தாரம்மன் கோவில் காளை வீதியில் வந்து வீட்டைவிட்டு யாரையும் இறங்க விடாமல் சுத்தி சுத்தி வந்தது ஞாபகத்துக்கு வருது.

    எனக்கு காளைமாடுன்னாலே எப்பவும் டெர்ரர் தான். அதோடு ஓடி பிடிச்செல்லாம் விளையாண்டிருக்கீங்களே சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதோடு ஓடி பிடிச்செல்லாம் விளையாண்டிருக்கீங்களே சகோ...//

      அந்த வயசு அப்படி சகோ... இப்பல்லாம் பசு மாட்டை பார்த்தா கூட ஒதுங்கி தான் போறேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத்தென்றல்.

      நீக்கு
  7. // சரியான டெல்லி எருமை…”ன்னு// பாஸ் அன்னிக்கு அம்மா சொன்னது இன்னிக்கு உண்மை ஆகிருச்சோ (ஹி ஹி ஹி)

    ருசிகரமான பதிவு சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா ஒரு தீர்க்கதரிசி! அதான் கரெக்டா முன்னாடியே சொல்லிட்டாங்க... இந்த எருமை தில்லிக்கு தான் போகப்போகுதுன்னு!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  8. அழகான அனுபவம்... வீட்டு விலங்குகள் இறந்தால் நம்முடன் இருந்த ஒருவர் இறந்து விட்டார் என்று மனதில் தோன்றும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சங்கவி.

      நீக்கு
  9. மாடு ஓட நீங்க துரத்த திரும்ப நீங்க ஓட மாடு துரத்த அடடே பார்க்க முடியளங்க ஜல்லிக்கட்டு வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓரமா நின்னு நாங்க பார்த்திருந்தா நல்லாதான் இருந்திருக்கும் சார் ஒரு சந்தேகம் இப்ப மாடு துரத்தினா என்ன பண்ணுவிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாடு ஓட நீங்க துரத்த திரும்ப நீங்க ஓட மாடு துரத்த அடடே பார்க்க முடியளங்க ஜல்லிக்கட்டு வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓரமா நின்னு நாங்க பார்த்திருந்தா நல்லாதான் இருந்திருக்கும்//

      ஆஹா.... இப்படி ஒரு ஆசையா உங்களுக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  10. 'இளம் கன்று பயமறியாது' ங்கற மாதிரி, நீங்க மாட்டுக்கு மாட்டை துரத்திட்டு odiyirukkiinga போல இருக்கு! என்ன ஒரு தைர்யம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தைர்யம் தான்... ஹிஹி...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

      நீக்கு
  11. மனச்சுரங்கத்தில் இருந்து வந்த நினைவலைகளை நீங்கள் நகைச்சுவையாக சொன்னாலும், அந்த காலத்தில் ஒரு பேண்ட் தான் இருக்கும் போது அதை காப்பாற்றிக் கொள்ளும் உந்துதல் தான் உங்களுக்கு இருந்து இருக்கும்.

    காளை இப்போது இல்லை என்பது வருத்தமாய் தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  12. உங்களுக்கு உண்மையிலேயே செம தைர்யம்தான்... (த.ம.7)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மணம் ஏழாம் வாக்கிற்கும் மிக்க நன்றி VajraSoft Inc

      நீக்கு
  13. சுத்தி சுத்தி வந்தேங்க சூப்பர் அய்யா.தங்களின் வர்ணனை அந்த காலத்தில் ரேடியோவில் கேட்ட திரு கூத்தபிரானின் நேர் முக வர்ணனனை போல இருந்தது.
    ஆனால் அம்மா சொன்ன வரிகள்

    கண்களில் கண்ணீர் மல்க அம்மா சொன்னார் ”இல்லைடா அது செத்துப் போய் ஆறு மாசம் ஆச்சு...”

    எங்களின் கண்களிலும் கண்ணீரை கொண்டு வந்தது.

    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் சுவையான கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  14. மாடு துரத்தல் அவஸ்தையை ரசிக்கும்படியான வார்த்தைகளில் பகிர்ந்திருக்கீங்க. மனச்சுரங்கத்தில் சுற்றி வந்தது நல்ல அனுபவம் ஆக இருந்தது. சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி கணேஷ்....

      நீக்கு
  15. செம ரகளை..

    போகட்டும். அதோட ஞாபகமா அந்த மாட்டுக்கு ஒண்ணு விட்ட சகோதரன் யாராச்சும் இருக்காங்களான்னு விசாரிச்சு, அதுக்கு ஒரு டவுசராச்சும் வாங்கிக்கொடுங்க :-)))

    எங்க மாமியார் வளர்த்த மாடு ஆசை ஆசையா சோப்பெல்லாம் திங்கும். குளிக்கற, துணி துவைக்கிற வகைகள்ன்னு அதுக்கு வித்தியாசமே கிடையாது :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்க மாமியார் வளர்த்த மாடு ஆசை ஆசையா சோப்பெல்லாம் திங்கும். குளிக்கற, துணி துவைக்கிற வகைகள்ன்னு அதுக்கு வித்தியாசமே கிடையாது :-)//

      ஒரு வேளை தின்ன துணியெல்லாம் அழுக்காச்சுன்னு சோப்பு தின்னு தோச்சுருக்குமோ... :)

      தங்களது வருகைக்கும் சுவையான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  16. மனச்சுரங்கங்களில் இன்னும் என்னல்லாம் சுவாரசியம் வச்சிருக்கீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் ஸ்வாரசியங்கள் தானேம்மா... நல்ல விஷயங்களை நினைவில் கொள்வோம். கெட்டவற்றை மறந்துவிடுவோம்...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

      நீக்கு
  17. எங்கூட்டு மாடு துணியெல்லாம் திங்காது. ஒரு வேளை வெள்ளை வெளேர்ன்னு நுரைக்க நுரைக்கப் பால் தர்றதன் ரகசியம் இதானோன்னு நாங்கள் கிண்டலடிப்போம். உண்மையும் அதானோ என்னவோ :-)))))))

    பதிலளிநீக்கு
  18. //எங்கூட்டு மாடு துணியெல்லாம் திங்காது.//

    நல்ல வேளை.

    //ஒரு வேளை வெள்ளை வெளேர்ன்னு நுரைக்க நுரைக்கப் பால் தர்றதன் ரகசியம் இதானோன்னு நாங்கள் கிண்டலடிப்போம்.//

    ஆஹா பால் வெள்ளையா இருக்கறதுக்குக் காரணம் இது தானா... :)))

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  19. அனுபவப் பகிர்வு அருமை..

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தாலும்... ஏனோ பின்னூட்டம் இடுவதில்லை.. சாரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்.

      நீக்கு
  20. ஒரு பேன்ட் போனா என்னவாம்? பாவம் மாட்டை ஏமாத்திடீங்க

    உங்க அம்மா நீங்க டில்லி போக போறீங்கன்னு அப்பவே கண்டு பிடிச்சிட்டாங்க போல :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

      நீக்கு
  21. என்ன ஒரு அனுபவம்? பேன்ட்டை அதன் கொம்பிலிருந்து எடுக்கத்தான் எவ்வளவு தைரியம் வேண்டும், அப்புறம் அது துரத்தினால் ஓடுவதும் திகிலான அனுபவமாக இருந்திருக்கும்.

    கட்டாய மஞ்சு விரட்டு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கட்டாய மஞ்சு விரட்டு!!//

      ஆமாம்... கட்டாயம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. பாவம் தான்.... மாட்டைத் தானே சொன்னீங்க! :))

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஜி!

      நீக்கு
  23. //சரியான டெல்லி எருமை//

    என்ன ஒரு தொலைநோக்குப் பார்வை!! :-))))

    //அதுக்கப்புறம் அந்த மாடு எப்பப் பார்த்தாலும் என்னைத் துரத்த//

    ரெண்டு மூணு நாள் முன்னாடிதான் வடநாட்டில் ஒருத்தரைக் காளைமாடு பழிவாங்கின செய்தி படிச்சேன். திகிலா இருந்துச்சு.

    ஆமா, வீட்டம்மா எப்படி இருக்காங்க. பதிவே காணோமே? நீங்க மட்டும் வரிசையாப் பதிவு போட்டுகிட்டிருக்கீங்களே? :-)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமா, வீட்டம்மா எப்படி இருக்காங்க. பதிவே காணோமே? நீங்க மட்டும் வரிசையாப் பதிவு போட்டுகிட்டிருக்கீங்களே? :-)))))))//

      நல்லா இருக்காங்க! அவங்க பதிவுகள் விரைவில் வரும் ....

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

      நீக்கு
  24. கோவில் காளையைத் துரத்திய டெல்லி எருமைன்னு தலைப்பு கொடுத்திருக்கலாமோ! எங்களுக்கு நேரில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவில் காளையைத் துரத்திய டெல்லி எருமைன்னு தலைப்பு கொடுத்திருக்கலாமோ! எங்களுக்கு நேரில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை.//

      என்னா ஒரு வில்லத்தனம்! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  25. மாட்டுக்கு நல்ல பேண்ட் சர்ட் போடக் கொடுத்து வைக்கவில்லையே!
    நல்ல நகைச்சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாட்டுக்கு நல்ல பேண்ட் சர்ட் போடக் கொடுத்து வைக்கவில்லையே! //

      அதானே...

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!

      நீக்கு
  26. நல்ல ரசனையாக எழுதப்பட்டுள்ளது.
    வாசிக்க சுவையாக உள்ளது.
    படமும் கம்பீரமாக உள்ளது.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  28. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.

      நீக்கு
  29. ரசனையான பகிர்வு.

    முதலில் சிரித்துக்கொண்டே படித்தேன். சட்டையை துணிந்து எடுக்கச் செல்ல முற்பட்டதும் பயமே வந்தது. துணிநத வீரர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  30. அட இன்னொரு காளை மாட்டுக்கு ஒரு பேண்ட் வாங்கி கொடுங்க :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

      நீக்கு
  31. ம்ம்ம்ம்ம்... சாதாரணமா எருமை மாடு தான் புடைவை எல்லாம் தின்னும். என்னோட ஒன்பது கஜப் புடைவை ஒண்ணைப் பக்கத்து வீட்டு மாமிக்கு நோன்புக்குக் கட்டிக்கக் கொடுத்திருந்தேன். மறுநாள் அவங்க துவைச்சு உலர்த்தி இருந்ததை எருமை மாடு சாப்பிட்டுடுச்சு; அவங்க ஒரே அழுகை. புடைவை என்னமோ என்னோடது. அவங்களை நான் தேத்த வேண்டியதாப் போச்சு. இது ஒரு முப்பது வருஷம் முன்னாடி நடந்தது. அதுக்கப்புறமா மாடுங்க கண்களிலே துணியைக் காட்டறதே இல்லை. ஆனால் உங்க செல்லம் பான்ட் கேட்டிருக்கு. பாவம்! கொடுத்திருக்கலாம். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ ஒன்பது கஜம் புடவையா? பாவம் மாடு....

      கொடுத்திருக்கலாம்... என் கிட்டயே ஒண்ணுதானே இருந்தது! :)

      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  32. ஆமா, வீட்டம்மா எப்படி இருக்காங்க. பதிவே காணோமே? நீங்க மட்டும் வரிசையாப் பதிவு போட்டுகிட்டிருக்கீங்களே? :-)))))))//

    ஆமா இல்ல, எங்கே அவங்களைக் காணோம்? :))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))))

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....