வியாழன், 3 அக்டோபர், 2019

வெட்கமா இருக்காதோ…



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இன்றைய நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்…

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும், முட்கள் அல்ல.




சென்ற வாரத்தின் ஒரு நாள் மதிய உணவு வேளை... நானும் பத்மநாபன் அண்ணாச்சியும் அலுவலகத்தின் உணவகத்தில் அமர்ந்து உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஒரே அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் தற்போது இருப்பதால் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி மதிய உணவு ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவது திரும்பவும் ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் சாப்பிடும் வேளையில் சில விஷயங்களை பேசிக் கொண்டே சாப்பிடுவது வழக்கம் – முன்பு பெரிய பட்டாளமே இருக்கும் எங்கள் மதிய உணவுக் குழுவில். ஆனால் இப்போது அந்தக் குழுவில் இருந்த பலரும் வேறு வேறு அலுவலகங்களுக்கு, வேறு கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டதால், இரண்டு பேர் மட்டுமே, சாப்பிடும் வேளையில் கூடுகிறோம்.  சென்ற வாரம் அப்படிச் சாப்பிட்ட வேளையில் எதிர் இருக்கைகளில் ஒரு இளைஞரும், அவரின் இருபுறமும் இரண்டு இளைஞிகளும்! அவர்கள் சம்பாஷணை எங்களுக்கும் கேட்டுக் கொண்டிருந்தது!

இரு பெண்களில் ஒரு பெண், “வெட்கமா இருக்காதோ?” என்று சப்தமாகக் கேட்ட பிறகு தான் கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன் – ராஜா காது கழுதைக் காது பகுதிக்கு ஏதாவது விஷயம் கிடைக்குமே என்ற எண்ணம் தான் – ஆனால் காஃபி வித் கிட்டு பதிவின் ஒரு பகுதியாக இல்லாமல், ஒரு பதிவாகவே எழுதும் அளவிற்கு விஷயம் கிடைத்தது! ஹாஹா… ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கையும் மற்றவர்களால் எப்படிப் பார்க்கப்படுகிறது என்ற சிந்தனை எனக்குள்! எதற்கு வெட்கப் பட வேண்டும்? அப்படி வெட்கப்படும் காரியம் என்ன என்று யோசித்தபடியே அவர்கள் சம்பாஷணைகளைக் கவனித்தேன் – உணவு சாப்பிட மறந்தேனா என்று குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது நீங்கள்! உணவு சாப்பிடுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது.   காதை மட்டும் தீட்டி வைத்திருந்தால் போதுமானது தானே! கையும் வாயும் அதன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கட்டும் – சாப்பாடு சாப்பிடுவது தொடர்ந்து கொண்டிருந்தது.

அவர்களில் பேச்சுகளில் புரிந்து கொண்டது தான் இன்றைய பதிவின் சாராம்சம்! ஒரு ஆண் எதற்கு வெட்கப் பட வேண்டும்?

அந்த மூவரும் வேலை செய்யும் பிரிவில் ஒரு 53 வயது மனிதர். திருமணம் ஆகி குழந்தைகளும் உண்டு – பள்ளியின் இறுதி ஆண்டில் இருக்கலாம்! சென்ற வருடத்தில் அவரது மனைவி, இறந்து விட்டாராம்.  மனைவி இறந்து ஒரு வருடம் ஆவதற்குள் அடுத்து ஒரு பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு விட்டாராம் அந்த 53 வயது மனிதர்! அதைப் பற்றி தான் இந்த இரண்டு பெண்களும் இளைஞரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த 53 வயது மனிதருக்கு, இந்த வயதில், அதுவும் மனைவி இறந்து ஒரு வருடத்திற்குள் மறுமணம் புரிந்து கொள்வது வெட்கமாக இல்லையா என்பது தான் அந்தப் பெண்ணின் கேள்வி! கேள்வி கேட்டதோடு விட்டிருந்தால் பரவாயில்லை – அந்த இளைஞரையும் மற்ற பெண்ணையும் பார்த்து, அவர்களையும் ஒரு கேள்வி கேட்டார் – ”உங்களுக்கும் வெட்கமாக இல்லையா? 53-வயது மனிதர் மறுமணம் புரிந்து கொள்கிறார் – நீங்கள் இன்னமும் திருமணமே செய்து கொள்ளவே இல்லையே?

இத்தனை வருட தலை நகர வாழ்க்கையில் நான் பார்த்த சில விஷயங்கள் – இரண்டாம் முறையாக மணம் புரிந்து கொள்வதில் இங்கே இருப்பவர்கள் தயக்கமே காட்டுவதில்லை. நான் முதன் முதலில் பணிபுரிந்த பிரிவில் இருவர் இப்படி மறுமணம் புரிந்தவர்கள். ஒரு சர்தார்ஜியின் மனைவி புற்றுநோய் காரணமாக நீண்ட வருடங்கள் கஷ்டப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. மனைவி இறந்து ஒரு வருடம் ஆன அடுத்த மாதமே ஹைதையில் இருந்து ஒரு சர்தார்ணியை – அவர் திருமணம் ஆகாதவர் – இரண்டு பேருக்கும் ஐந்து வயது வித்தியாசம் இருக்கலாம் – திருமணம் புரிந்து கொண்டார்.   இரண்டாவது திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை என்றாலும், அச்செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டு, சிறிய அளவில் – தேநீர், ஒரு இனிப்பு, ஒரு ப்ரெட் பகோடா – என்று பார்ட்டியும் கொடுத்தார். 

திருமணத்திற்குப் பிறகு என்னிடம் வந்து தெலுங்கில் சில வார்த்தைகளை அவ்வப்போது பேசுவார் – இரண்டாம் மனைவி ஹைதையில் இருந்ததால் நன்கு தெலுங்கில் பேசுவார் – அவரிடம் கற்றுக் கொண்டு என்னிடமும் தெலுங்கில் பேசுவார் – வட இந்தியர்களுக்கு, தெலுங்கர்கள், மலையாளி, தமிழர், கன்னடர் எல்லாமே மதராசி – எல்லோரும் ஒரே மொழி பேசுபவர்கள் என்ற அளவில் தான் அவர்களுடைய அறிவுத் திறன்.  இன்னுமொரு அலுவலக நண்பரும் திருமணம் ஆன இரண்டு வருடங்களுக்குள், அவர்களுக்குள் பிரச்சனைகள் தோன்ற, இருவரும் பிரிந்து விட்டார்கள். பிரிந்த ஒரு வருடத்திற்குள் இருவருமே மறுமணம் புரிந்து கொண்டார்கள்.  இப்படி நடப்பது இங்கே ரொம்பவே சகஜமானது! அந்த மாதிரி திருமணம் செய்து கொள்வதால் அவருடைய துணைக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை எனும் பட்சத்தில், இந்த மாதிரி இரண்டாம் திருமணம் புரிந்து கொள்வது தவறு என்று சொல்வதற்கில்லை. அவரவருடைய தனிப்பட்ட விருப்பம் அது!

இரண்டாம் திருமணத்திற்காக இப்போது வலைத்தளங்கள் கூட வந்து விட்டது – www.thesecondmarriage.com, www.divorceematrimony.com, www.secondshaadi.com என பல தளங்களை இப்போது இணையத்தில் பார்க்க முடிகிறது.  தனது மகன்/மகளுக்குத் திருமணமே அமையவில்லை என்ற கவலைகளுடன் பல பெற்றோர்கள் இருக்க, இப்படி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு மிகச் சுலபமாக இரண்டாம் வாழ்க்கை அமைந்து விடுவதையும் பார்க்க முடிகிறது.  அதுவும் தில்லி போன்ற பெருநகரங்களில் நிறைய இப்படியான இரண்டாம் திருமணங்களைப் பற்றி கேள்விப் பட முடிகிறது. மிகவும் சகஜமாக ஆகிவிட்ட விஷயம் இது.

இங்கே அடுத்தவர்களின் வாழ்க்கையில் செய்யும் செயல்களை சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ விமர்சிப்பதற்கு தயாராக மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்! தன்னைப் பற்றியும் விமர்சிக்க யாராவது இருப்பார்கள் என்பதை அவர்கள் நினைப்பதே இல்லை!  அவரவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்யும் செயல்களை விமர்சிக்க நாம் யார் என்று தான் தோன்றியது.  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லலாமே!

நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    அருமையான வாசகம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நானே நினைத்தேன் என்னடா இது பப்பு அண்ணாச்சியைப் பற்றி ஒன்றுமே இல்லையே என்று அவர் எழுத்தும் இல்லையே என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்மநாபன் அண்ணாச்சியின் ஒரு பதிவு சமீபத்தில் வெளியிட்டேன். நீங்கள் வாசிக்கவில்லை என்று தோன்றுகிறது கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஆனால் காஃபி வித் கிட்டு பதிவின் ஒரு பகுதியாக இல்லாமல், ஒரு பதிவாகவே எழுதும் அளவிற்கு விஷயம் கிடைத்தது! ஹாஹா…//

    அதானே!

    திருமணம் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விஷயம். இரண்டாவது உட்பட. அவர்களின் மனதைப் பொறுத்தது இதெல்லாம். ஆம் இப்போது அதற்கு என்று வெப்சைட் வந்துவிட்டதுதான்.

    எங்கள் நெருங்கிய உறவினர்...மனைவி இழந்து இப்படி அடுத்து ஒரு துணை தேடினார். அவர் வயது 70 ஐ நெருங்கிவிட்டது....ஆனால் வம்பு நிறைய வளர்ந்தது குடும்பத்திற்குள்ளேயே....குழந்தைகள் உட்பட விரும்பவில்லை....எனவே இப்போது அவர் தேடுவதில்லை என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவர் விஷயம் என்றால் பலருக்கும் தலையிடப் பிடிக்கிறது! என்ன சொல்ல கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பாஸிட்டிவ் மனிதர்களுக்கு எந்தத் தடையும் பொருட்டல்ல...       குட்மார்னிங் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம். மனிதர்களுக்கு தடை பொருட்டல்ல..... உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. திருமணம் என்பது அவரவர் சொந்த விஷயம்.  எனக்கும் முதலில் 'முதல் திருமணத்துக்கே பெண்கள் கிடைக்காமல் திண்டாடுபவர்கள் இருக்க...' என்று தோன்றியதுதான்.    ஆனால் அது சுயநலத்தின்பாற்பட்டது!  அவரவர் நிலைமை அவரவர்க்கு..     எந்த ஜென்மத்தின் பந்தம், கடன் தீர்கிறதோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. //நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும், முட்கள் அல்ல.//

    நல்ல வாசகம்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. நம்ம ஊரில் ஆண்கள் மறுமணம் செய்துகொண்டால் பேசுவதைவிட, பெண்கள் மறுமணம் செய்துகொண்டால் அதிகம் பேசுவார்கள்.   ரைட்டா? "குச் தோ லோக் கஹேங்கே...    லோகோங் கா காம் ஹை கெஹனா...    சோடோ பேக்காருகி பாத்தோ மெயின்...."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சொல்லுவதில்லை. எங்க வீட்டிலேயே என் பிறந்தகத்து உறவிலேயே மறுமணம் செய்து கொண்ட பெண்கள் உண்டு. யாரும் எதுவும் சொன்னதில்லை/சொல்லுவதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சிலருக்கு நாங்களே சிபாரிசு செய்திருக்கோம்.

      நீக்கு
    2. ”குச் தோ லோஹ் கஹேங்கே” - இனிமையான பாடல் - ஆனந்த் திரைப்படம் தானே - ராஜேஷ் கன்னா நடிப்பில்!

      பெண்கள் மறுமணம் செய்து கொண்டால் அதிகம் பேசுவார்கள் - இங்கே எல்லாமே விமர்சனம் செய்யப்படுகிற விஷயம் தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. பொதுவாக குடும்பத்தினர் எதுவும் சொல்வதில்லை - அட்லீஸ்ட் அவர்களிடம் நேரிடையாக! வெளி ஆட்களுக்கு எல்லாமே விமர்சனம் தான் கீதாம்மா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    4. //ஆனந்த் திரைப்படம் தானே - ராஜேஷ் கன்னா நடிப்பில்!//

      ராஜேஷ் கன்னாதான்...   ஆனால் 'அமர் பிரேம்' படம்.   ஆர் டி பர்மன் இசையில் கிஷோர் குரலில்!

      நீக்கு
    5. ஆமாம். அமர் ப்ரேம் தான். நம்ம சினிமா அறிவு இப்படித்தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. இது அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானிப்பது, இல்லை வேறு வழியில்லாமல் நடந்துவிடுவது. அதில் மூன்றாம் மனிதரின் கருத்துக்கு என்ன வேலை? ஆனாலும் சமயத்தில் காசிப் செய்வதைத் தவில்க்க முடியலை, ஸ்மால் டாக்குகளில். ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தவர்கள் விஷயம் இங்கே பல சமயத்தில் வெல்லக் கட்டி! அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டியது அவரவர்களே தவிர அடுத்தவர்கள் அல்ல என்பது தான் உண்மை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இதெல்லாம் அவரவர் சொந்த விருப்பம். ஆகவே நாம் தலையிட்டு ஏதும் சொல்லக் கூடாது. தில்லி போன்ற நகரங்களிலேயே இதைக் கேலி செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேலி செய்தவர்கள் திருமணம் ஆகாதவர்கள் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும் கீதாம்மா! அதுவும் இளைஞிகள்! அவரவர் விருப்பம் தான் - அதில் அடுத்தவர் - அதிலும் சம்பந்தமே இல்லாதவர்கள் - தலையிட எந்த உரிமையும் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. இரண்டாம் திருமணத்திற்காக இப்போது வலைத்தளங்கள் கூட வந்து விட்டது – www.thesecondmarriage.com, www.divorceematrimony.com, www.secondshaadi.com என பல தளங்களை இப்போது இணையத்தில் பார்க்க முடிகிறது.

    இது எனக்கு புதிய செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் இப்படி பல விஷயங்களுக்கு இணையதளம், App போன்றவை வந்து விட்டன ஜோதிஜி! குப்பை/தேவையில்லாத பொருட்களை வாங்கிக் கொள்பவர்கள் கூட இப்போது App மூலம் வாங்கும்/விற்கும் வசதிகள் கொண்டு வந்துவிட்டார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. இரண்டாம் திருமணம் என்பது அவரவர் சொந்தவிருப்பம். இதில் தவறு ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் சொந்த விருப்பம் தான் மாதேவி. தவறு என்று சொல்ல அடுத்தவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. குழந்தைகள் துன்பப் படாத வரை , இரண்டாவது திருமணம் நடப்பதில் தவறே இல்லை.
    எங்கள் வீட்டிலும் நிறைய நடந்திருக்கிறது.
    இளம்வயதில் கணவனை இழப்பது கொடுமை இல்லையா.
    இன்னோருவர் வாழ்வில் நாம் பிரவேசிக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /குழந்தைகள் துன்பப் படாத வரை, இரண்டாவது திருமணம் நடப்பதில் தவறே இல்லை/ உண்மை தான் வல்லிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. எனது சொந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன் ஜி

    அவர் திருமணம் செய்ததில் துளியளவும் தவறில்லை, வெட்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

    அவரை விமர்சிப்பவர்கள் அவரது வாழ்நாள்வரை அவரது சாப்பாட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பார்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சாப்பாட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பார்களா// நல்ல கேள்வி கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....