புதன், 2 அக்டோபர், 2019

கடைசி கிராமம் – காம்ரூ கோட்டை – குல்லா – காமாக்யா தேவி

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

என்னை யார் தோற்கடித்தது என, கோபத்துடன் பார்த்தேன். வேறு யாரும் இல்லை. கோபம் தான் என்னைத் தோற்கடித்தது – ஹிட்லர்.படம்-1: காம்ரூ கோட்டை - சாங்க்ளா

கடைசி கிராமம் என்ற தலைப்பில் இதுவரை வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள் கீழே:


படம்-2: காம்ரூ கோட்டை - சாங்க்ளா வருவதற்கு இது வழி!

சாங்க்ளாவின் பேருந்து நிலையத்திலிருந்து நீண்ட தூர நடை, பிறகு மலைப்பாதையில் மூச்சு வாங்கியபடியே நீண்ட நேர நடை எனக் கடந்து நாங்கள் அடைந்த இடம் பத்ரிநாதர் கோவில். இந்தப் பயணத்தில் நாங்கள் சென்ற பல கோவில்கள் போலவே பத்ரிநாதர் கோவிலும் மூடியே இருந்தது – எங்கேயும் இறைவனை தரிசிக்க முடியவில்லை என்பதில் ஒருவித வருத்தம் உண்டு! கம்பிக்கதவுகள் கொண்டு மூடியிருந்தாலும் தரிசனம் கிடைத்திருக்கும். நாங்கள் சென்ற கோவில்களில் கம்பிக் கதவுகள் தான் இருந்தது என்றாலும் தீரைச்சீலை கொண்டு மூடியே இருந்தன என்பதால் எங்களுக்கு தரிசனம் கிடைக்கவில்லை. பத்ரிநாதர் கோவிலைக் கடந்து மேலே சென்றால் கோட்டை – சாங்க்ளா நகரில் இருந்தாலும் இந்தக் கோட்டை இருக்கும் பகுதி ஒரு சிறு கிராமம் – பெயர் காம்ரூ! இந்தப் பகுதியில் இருக்கும் கோட்டையையும் காம்ரூ கோட்டை என்றே அழைக்கிறார்கள்.


படம்-3: காம்ரூ கோட்டை - சாங்க்ளா - கோவிலில் வாத்தியங்கள்

நின்று நிதானித்து வழியெங்கும் பார்க்கக் கிடைத்த இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடியே நாங்கள் கோட்டையின் அருகே வந்து சேர்ந்திருந்தோம். அங்கேயும் மரக் கதவுகள் தான் – அவை மூடி இருந்தன! கோட்டைக்கு அருகே உள்ள வீட்டின் வாசலில் இரண்டு மூதாட்டிகள் அமர்ந்து இருந்தார்கள். முகத்தில் இருந்த சுருக்கங்கள் அவர்களது நீண்ட அனுபவத்தின் குறியீடுகளைப் போலக் காட்சி அளித்தது. மூச்சு வாங்கியபடி அங்கே நின்ற எங்களைப் பார்த்து ஒரு சிறு புன்னகை – ”கோட்டை பார்க்க வந்தீர்களா? எங்கேயிருந்து வந்து இருக்கிறீர்கள்?” என்ற விசாரிப்பு. அவர் கேள்விகளுக்குப் பதில் சொன்ன பிறகு, அவராகவே சொன்னார் – “மரக் கதவு திறந்து தான் இருக்கும். அதைத் திறந்து கொண்டு உள்ளே போனால் அங்கே ஒரு சிப்பந்தி இருப்பார்”. அவரிடம் கோட்டை பார்க்க வந்ததைச் சொல்லுங்கள். உங்களுக்கு கோட்டைக்குள் போக அனுமதி கிடைக்கும் என்று.


படம்-4: காம்ரூ கோட்டை - சாங்க்ளா - 
காமாக்யா தேவி கோவில் வாசலில் அடியேன்! 

மூதாட்டி சொன்னபடியே மரக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, கதவு திறக்கும் ஓசை கேட்டு இன்னும் ஒரு கதவு திறந்தது! உள்ளிருந்து ஒரு சிப்பந்தி – ஹிமாச்சலத்தின் Trade Mark தொப்பி அணிந்திருந்தது மட்டுமல்லாது இடுப்பில் உடைக்கு மேல் ஒரு கயிறு கட்டியிருந்தார் – அரைஞாண் கயிறு போல! எங்களிடம் கோட்டை பார்க்க வந்த விபரங்களைக் கேட்டுக் கொண்டு – எங்கள் முதுகிலிருந்த பைகளைக் கழற்றி அங்கே தாழ்வாரத்தில் வைத்து விடுங்கள் என்று சொன்னார். கேமராக்களுக்கு அனுமதி உண்டா என்று கேட்க, அனுமதி உண்டு என்று சொன்னது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. முதுகுச் சுமைகளையும் காலணிகளையும் கழற்றி வைத்த பிறகு அவர் வெளியே வந்த கதவுக்கு அருகில் எங்களை வரச் சொன்னார். உள்ளேயிருந்து இரண்டு கயிறுகள் எடுத்து எங்களிடம் கொடுத்தார்!


படம்-5: chசில்gகோசா பழங்கள்


படம்-6: காய வைக்கப்பட்டிருக்கும் பழங்கள்

இந்தக் கோட்டைக்குள்ளும் ஒரு கோவில் இருக்கிறது! அந்தக் கோவில் இருப்பதால், உள்ளே நுழைவதற்கு என்று சில விதிகள் உண்டு என்று சொல்லி, அந்தக் கயிற்றை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். நானும் நண்பரும் அந்தக் கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டோம். சரி உள்ளே போகலாம் என்று பார்த்தால் – உள்ளேயிருந்து ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய தொப்பிகளை எடுத்து எனக்கும் நண்பருக்கும் தலையில் அணிவித்தார் – சிப்பந்தி எங்களுக்குக் குல்லா அணிவித்தார்! – ஹாஹா. தலையில் குல்லா, இடுப்பில் கயிறு சகிதம் நாங்கள் தயார் ஆனதும் கதவு திறந்தது.  சில படிகள் ஏறிச் சென்றால் வெட்ட வெளி. இடது பக்கத்தில் ஒரு சிறு கோவில். கோவிலில் குடி கொண்டிருப்பது காமாக்யா தேவி! அசாமிலிருந்து இங்கேயும் வந்து காமாக்யா தேவி குடிகொண்டிருக்கிறாளாம்! காம்ரூ கிராமத்தினருக்கு கண்கண்ட தெய்வம் இந்த காமாக்யா தேவி!


படம்-7: காம்ரூ கோட்டை - சாங்க்ளா - இன்னும் ஒரு பார்வை...

எதிர்புறம் பார்த்தால் மிகவும் பழமையான ஒரு கோட்டை – ஐந்து அடுக்குகள் கொண்ட கோட்டை – கோட்டை என்று சொன்னாலும் ஐந்து அடுக்கு குடியிருப்பு போலவே தெரிந்தது.  முழுவதும் மரத்தினால் ஆன கோட்டை!  இந்தக் கோட்டை புஷர் என்று அழைக்கப்படும் ராஜவம்சத்தினரின் கோட்டையாக ஒரு காலத்தில் இருந்தது. சாங்க்ளா அப்போது தலைநகராக இருந்தது – பிறகு புஷர் வம்சத்தினர் ராம்பூரை தலைநகராக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் – அதனால் தான் இப்போது கூட ராம்பூர் என்று சொல்லாமல் ராம்பூர் புஷர் என்று சொல்கிறார்கள்.   கடல் மட்டத்திலிருந்து 2600 மீட்டர் உயரத்தில், 55 சதுர அடி கொண்ட கல் தளத்தின் மீது ஐந்து அடுக்குகள் கொண்ட கோட்டையை அமைத்து இருக்கிறார்களாம். இந்தத் தகவல்கள் அனைத்தும் கோட்டையில் இருந்த சிப்பந்தியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவை. 


படம்-8: காம்ரூ கோட்டை - சாங்க்ளா வாயிலில் நண்பர் ப்ரமோத்... இடுப்புக் கயிறும் தொப்பியும் தெரியும் படம்!

கோட்டைக்குள் மிக அழகான மர வேலைப்பாடுகள் அமைந்திருக்கிறது என்றும் கிராமவாசிகள் தவிர வேறு எவருக்கும் இந்தக் கோட்டைக்குள் செல்ல அனுமதி இல்லை என்று அந்த சிப்பந்தி சொன்னபோது, இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வந்து உள்ளே செல்ல முடியவில்லையே என்று தோன்றியது – சிப்பந்தியிடம் யாருக்கும் அனுமதி இல்லையா என்று கேட்டபோது – பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் சரியான பராமரிப்பு இல்லை – ஏதாவது சேதம் வந்து விடும் என்பதால் உள்ளூர் வாசிகள் தவிர வேறு யாருக்குமே அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார். சரி வெளியிலிருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று நிறைய படங்களை எடுத்துக் கொண்டோம்.  இத்தனை கோவில்களுக்குப் பிறகு கோட்டை அருகில் இருந்த காமாக்யா தேவி எங்களுக்கு அருள் புரிந்தாள்.  கோவில் அமைந்திருந்த மேடையின் அருகே சென்று சில நிமிடங்கள் தனிமையில் தரிசித்து அனைவருடைய நலத்திற்கும் வேண்டிக் கொண்டோம். காமாக்யா தேவி என்றும் காமாக்ஷி தேவி என்றும் இந்த தேவியை அழைக்கிறார்கள்.


படம்-9: காமாக்யா கோவில் - காம்ரூ கோட்டை - சாங்க்ளா

அந்தச் சிப்பந்தியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததில் நிறைய விஷயங்களைச் சொன்னார் – அவர் அந்த கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் கிராமத்தின் தட்பவெப்பம், மூன்று மாதம் இருக்கும் கடுமையான பனிப்பொழிவு, அங்கே கிடைக்கும் பழங்கள், அதிலிருந்து எடுக்கப்படும் ஒரு வித எண்ணெய், எனப் பலப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. chசில்gகோசா என்று அங்கே அழைக்கப்படும் பழங்களைக் காய வைத்து அதிலிருந்து ”Gகுட்லி கா தேல்” என்ற ஒரு வித எண்ணெயை எடுப்பார்கள் என்றும் அந்த எண்ணெய் உள்ளூர் வாசிகள் மூட்டு வலி போன்றவற்றிற்கு பயன்படுத்துவார்கள் என்றும் தெரிவித்தார். குழந்தைகள் வளர்ப்பின் போதும் இந்த எண்ணெய் தடவி குழந்தைகளைக் குளிப்பாட்டுவார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.


படம்-10: அக்ரூட் காயாக... 

மலைப்பகுதி முழுவதுமாக, ஆப்பிள், chசில்gகோசா, பைன் மரங்கள் தவிர அக்ரூட் மரங்களும் நிறைய இருக்கின்றன.  சில பதிவுகளுக்கு முன்னர் ஒரு மரத்தின் காய்கள் இருந்த படம் பகிர்ந்து கொண்டது நினைவிலிருக்கலாம்! அந்தக் காய்கள் பச்சை அக்ரூட் காய்கள்! மேலிருக்கும் பச்சைத் தோல் காய்ந்து தானாக விழுந்து விடும் என்றும் அதன் பிறகு காயும் கீழே விழும் என்றும் விவரங்கள் சொன்னார். இப்படி பல விஷயங்களை அந்தச் சிப்பந்தியிடம் தெரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு நன்றி கூறி, அவர் எங்களுக்கு அணிவித்த குல்லாவையும், இடுப்புக் கயிற்றையும் திருப்பிக் கொடுத்த பிறகு அங்கே இருந்த வருகைப் பதிவேட்டில் எங்கள் விவரங்களையும் எழுதி வைத்தோம் – சிப்பந்தி கேட்டுக் கொண்ட படி! இந்தக் கோட்டைக்கு நாங்களும் வந்து சென்றோம் என்ற வரலாறு அங்கே பதிந்து இருக்கிறது – வரலாறு முக்கியம் அமைச்சரே! என்ற வசனம் அசரீரியாக கேட்கிறது! ஹாஹா…

கோட்டையைப் பார்த்த பிறகு நாங்கள் என்ன செய்தோம், மற்ற அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். இன்றைக்கு பதிவில் சொன்ன விஷயங்களைப் பற்றிய உங்கள் சிந்தனைகளையும் எண்ணங்களையும் பின்னூட்டம் வழியாக பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. நாளை வேறு ஒரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

 1. ஹிட்லரின் காலம் கடந்த ஞானோதயம் நமக்கு உதவட்டும்!   குட்மார்னிங்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடந்த கால ஞானோதயம்! யாருக்காவது உதவினால் நல்லது ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. கோசா பழங்கள் அழகாக இருக்கிறது ஜி

  நீங்கள் சொல்லியிருக்கும் பழம், காய், எண்ணை பெயர்கள் வாய்க்குள் நுழைய மறுக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாயில் நுழைய மறுக்கும் பயர்கள் - அத்தனை கஷ்டமில்லை கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. அவ்வளவு தூரம் சென்று கோட்டை பார்க்க முடியாதது ஏமாற்றம்தான்.  என்றாலும் அந்தக் கோட்டையின் அமைப்பைப் பார்த்தால் அபாயகரமானதாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோட்டை உள்ளே பார்க்க எங்களுக்கும் ஆசை தான் ஸ்ரீராம். ஆனால் கட்டுப்பாடு எனும்போது அதை எதிர்க்க மனம் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!!

  ஹிட்லரா இந்த வாசகம்?!!!! டூஊஊஊஊஊஒ லேட்டல்லோ?!!! அதை அவர் உணரும் போது எல்லாமே முடிந்து போயிற்றே....பரவால்ல மற்றவர்களின் அனுபவங்களும் நமக்குப் பாடம் தானே...

  போன பதிவை வாசித்த போதே தோன்றியது அடடா கோட்டையைப் பார்க்க முடியுமா முடியாமப் போயிடுமோன்னு...பதிவு வாசித்துவிட்டு வருகிறேன் பார்த்திருக்கீங்க போல கோட்டையின் படம் இருக்கிறதே

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக் கீதாஜி.

   ஹிட்லர் காலம் கடந்த ஞானோதயம் தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. கயிறு கொடுத்தார் என்றதைப் பார்த்ததும் ஆஹா கோட்டைக்குக் கயிறு போட்டு ஏற வேண்டியிருக்குமோ என்று பார்த்துக் கொண்டே வந்தால் நல்லகாலம் அது கோயிலுக்கான விதிமுறை என்று தெரிந்து கொள்ள முடிந்தது. படங்கள் அழகு. கோட்டை என்பது அவர்களது பெரிய அரண்மனை வீடு போல இருக்கிறது. கேரளத்தில் கூடப் பல தரவாடுகள் அரண்மனை போலவே இருக்கும் முன்பு.

  ஓ இறுதியில் அரண்மனைக்குள் போக முடியாமல் போனதே...என்றாலும் காமாஷி தேவியை தரிசிக்க முடிந்ததே..படங்கள் எடுக்க அனுமதி!!

  விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். //chசில்gகோசா என்று அங்கே அழைக்கப்படும் பழங்களைக் காய வைத்து அதிலிருந்து ”Gகுட்லி கா தேல்” // இதன் பயன்கள் என்று...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோட்டை தரிசிக்க முடியவில்லை என்றாலும் காமாக்யா/காமாக்ஷி தேவியை தரிசிக்க முடிந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி தான் கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. ரசித்துப் படித்தேன். தொடர்கிறேன். கடவுள் படம் இல்லையே என்பதில் வருத்தம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடவுள் படம் எடுக்க அனுமதி இல்லை.. இணையத்தில் இருந்து எடுக்கத் தோன்றவில்லை நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. படங்கள் அழகு. எங்களால் போக முடியாத இடம். நீங்கள் சென்று
  படங்களையும் பதிவிட்டு விளக்கமும் தருகிறீர்கள் மிக நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 8. புதிது புதிதாக பல இடங்களுக்குப் போய்.வருகிறீர்கள். படிப்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. நீங்கள் இங்கே குறிப்பிட்டு இருக்கும் பத்ரிநாதர் கோவில் வேறா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே உங்கள் வருகை ரஞ்சனிம்மா... மகிழ்ச்சி.

   ஆமாம் இந்த பத்ரிநாதர் வேறு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அழகான இடங்கள் வெங்கட்ஜி.

  கோட்டையைப் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருந்தீர்கள் உள்ளே சென்றும் கோட்டையைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே. எங்கள் ஊர் தரவாடுகளும் அரண்மனை போலத்தான் இருக்கும். சிற்றரசர்களின் அரண்மனையாக இருந்திருக்குமோ முன்னர் என்றும் தோன்றும்.

  படங்களும் விவரங்களும் அருமை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 10. காம்ரூ கோட்டை - பார்க்கவே அழகு.
  கோட்டைக்குள்ளும் விடவில்லையா? பழமை வாய்ந்த இடம் என்பதால் போலும்.

  பார்க்க முடியாத இடம். உங்கள் வாயிலாக பார்த்து மகிழ்ந்தேன்.

  காமாக்யா தேவி எல்லோருக்கும் எல்லா நலங்களை தர வேண்டிக் கொண்டேன் நானும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 11. மரத்தாலான கோட்டை,காமாக்யா தேவி கோவில்,பழத்திலிருந்து எண்ணெய்எடுப்பது,அக்ரூட்பழம் என எல்லாம் புதுமையே. கண்டு களித்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. முடிந்த போது படிக்கலாம் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. காம்ரூ கோட்டை...வெளியிலிருந்து அழகு ...

  கிராமவாசிகள் தவிர வேறு எவருக்கும் இந்தக் கோட்டைக்குள் செல்ல அனுமதி இல்லை என்று அந்த சிப்பந்தி சொன்னபோது,........அடடா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உள்ளே சென்று பார்க்க முடியவில்லை என்பதில் வருத்தம் தான் அனுப்ரேம் ஜி. ஆனாலும் அப்படி ஒரு விதி இருக்கும்போது என்ன செய்ய முடியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....