செவ்வாய், 24 டிசம்பர், 2019

கதம்பம் – கண்ணும் காதும் – விடுமுறை – செல்லமுடியா விழாக்கள் – பீங்கான் ஜாடி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


கண்ணாடி பார்த்து புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதைச் செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்யோகோ ஓனோ.
 
கண்ணும் காதும் – 25 நவம்பர் 2019:



சனியன்று மகளுக்கு விடுமுறை கிடைத்ததால் அவளையும் அழைத்துக் கொண்டு கண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். சோதனை செய்ய கண்களில் மருந்து விட்டால் மருத்துவமனையிலிருந்து வெளியே வரும் போது வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் திண்டாட்டமாகி விடுகிறது. வீட்டுக்குத் திரும்புவதில் தடுமாற்றம். ஆதலால் மகளின் துணை தேவை :)

அன்று நல்ல கும்பல் இருந்ததால் இரண்டு மணிநேரமாகி விட்டது. போய் அமர்ந்து முக்கால் மணிநேரம் கழித்தே ஒவ்வொன்றாக பரிசோதித்து, வாசித்து காண்பித்து என்று நேரம் கடந்தது. முதலிலேயே மருந்து விட்டிருந்தால் அரைமணி கடந்திருக்கும்.

ஏறக்குறைய ஒன்றரை மணிநேரத்துக்குப் பின்பு தான் மருத்துவர் பார்த்து விட்டு மருந்தும் விட்டுப் பார்க்கலாம் எனச் சொல்லவே அதன் பின்பு மருந்து விட்டுக் கொண்டு அரைமணி என எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு ஒருவழியாய் வெளியே வந்தோம்.

அங்கு அமர்ந்திருந்த இரண்டு மணிநேரங்களில் பலவிதமான மனிதர்களைக் காண முடிந்தது.

கண்களில் பிரச்சனையுள்ள சின்னஞ்சிறு சிறுவனும் அவனை சமாளிக்க முடியாமல் திண்டாடும் அம்மாவும். அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதிலே சொல்ல முடியவில்லை : ) மருந்து விட்டுக் கொள்ள அழுகை.

நடுத்தர வயது தம்பதிகள் . இருவருக்கும் பரிசோதனை. மனைவியைப் பற்றி அக்கறையாய் மருத்துவரிடம் விசாரித்த கணவர். ஆனால் ஏனோ, இவங்க கம்ப்யூட்டர் பார்ப்பாங்களா? என்ற மருத்துவரின் கேள்விக்கு. அவ ஹவுஸ்வொய்ஃப்!!! என்று சொன்னது எனக்கு நெருடலாக இருந்தது :)

அடுத்து வயதானவர் ஒருவர் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரின் காதுகளைப் பார்த்ததும் எனக்குள் பிரமிப்பு!!! இதுவரை யாருக்கும் இவ்வளவு பெரிய காது இருந்து பார்த்ததில்லை. காதுமடலும் பெரிது. கடுக்கண் போடும் பகுதியும் மிகப்பெரிதாக இருந்தது :)

இருவரும் எங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டோம். மகளோ, சே! நம்ம அப்பாவுக்கு இப்படி இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் இல்லம்மா! என்கிறாள் :) அப்பாவின் காதுகளை தொட்டுத் தொட்டுப் பார்ப்பதில் அவளுக்கு மகிழ்ச்சி :) அதை அப்பாவே தடுத்தாலும் :)

என்ன நண்பர்களே! கண்மருத்துவமனையில் பார்த்த விஷயங்களை எங்களோடு நீங்களும் ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ரோஷ்ணி கார்னர்  – 29 நவம்பர் 2019:

திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் கனமழைக் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!

பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்த மகள் துள்ளிக் குதித்தாள் :)

ஏறக்குறைய சமையலை முடித்த நிலையில் நான் :)

ஹை!!! ஜாலி!!! என்று குஷியுடன் சன் ம்யூசிக் பார்த்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

திருச்சிக்குத் தான் கண்ணா லீவு! ஸ்ரீரங்கம் இந்தியா மேப்பிலேயே இல்ல:) உனக்குத் தெரியாதா! என்றேன் :)

என்னைப் பார்த்து முறைத்தாள் :)

லஞ்ச் கூட பேக் பண்ணிட்டேன் :)

அதுக்கு!

கிளம்பு! கிளம்பு!! உங்க மிஸ்ஸெல்லாம் கூட ரோஷ்ணி வரலையேன்னு தேடுவாங்க!!!

இப்ப உனக்கு என்ன பிரச்சனை???

இல்ல! இங்க தூறல் தானே இருக்கு!!! நான் வேணா உன்னைக் கொண்டு விடவா?

முறைத்துக் கொண்டே, போம்மா! போம்மா! எப்படா லீவு விடுவாங்கனு இருக்கு!! உன்ன நான் என்ன இம்சை பண்றேன்!!! என்கிறாள்.

முகநூலில் ஐந்து வருடம் – 30 நவம்பர் 2019

முகப்புத்தக சமுத்திரத்தில் குதித்து ஐந்து வருடங்கள் ஆச்சாம். மார்க் தம்பி நினைவூட்டறார் :) உருப்படியா ஏதாவது எழுதியிருக்கிறேனா என்று நீங்க எல்லாரும் தான் சொல்லணும்?

வலைப்பூவில் இரண்டு பக்கத்துக்கும் மிகாமல் எழுதிய காலங்களை அடுத்து இங்கு தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் எல்லாம் போகணும் என்ற எண்ணமே வரலை :) இங்கு என் நட்புவட்டத்தில் பிளாகர் நட்புகளும், இங்கே கிடைத்த நட்புகளும் என்னைப் பின்தொடர்ந்து ஊக்கப்படுத்தும் விதமான பின்னூட்டங்களைத் தந்து மகிழ்விக்கின்றனர். உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

செல்ல முடியாத விழாக்கள்  – 4 டிசம்பர் 2019:

உங்கள் எல்லோராலும் உறவினர் அல்லது நட்புவட்டத்தின் வீட்டு விழாக்களில் கட்டாயமாக கலந்து கொள்ள முடிகிறதா?

அலுவலகம், பள்ளி, கல்லூரி, உடல்நலம் போன்ற காரணங்கள் இருப்பினும்?

வெளியூராக இருந்தாலும்?

எங்களால் பல விழாக்களில் கலந்து கொள்ள முடிவதில்லை. நெருங்கிய உறவாக இருப்பினும் ஏதாவது ஒரு சில நிகழ்வுகளில் தான் கலந்து கொண்டிருக்கிறோம். உள்ளூரிலேயே என்றாலும் இரவு வெகுநேரம் கழித்து எப்படி வீடு திரும்புவது என்று யோசிக்கிறேன் :)

நீங்க எல்லாரும் எப்படி? சொன்னால் தெரிந்து கொள்கிறேன்.

புது வரவு - பீங்கான் ஜாடிகள் – 12 November 2019:



சமையலில் தாளிக்க எண்ணெய் விட்டுக் கொள்ளவும், நெய் விட்டுக் கொள்ளவும் இன்று வாசலில் வாங்கினேன். அழகா இருக்கா!!

பெரிய ஜாடிகள் உப்பு, புளி, ஊறுகாய்க்கு என இருக்க நம்ம வீட்டில் ஜாடிகள் கலெக்‌ஷன் நிறையவே இருக்கு :)

அதே மாதிரி கடந்த ஏழு வருடமாகவே மண்பானைச் சமையல் தான். அதில் குழம்பு வைக்கும் பாத்திரத்தில் விரிசல் விட்டு கசியத் துவங்கவே வருத்தத்தோடு அதை தூக்கிப் போட்டு விட்டேன். இப்போதைக்கு வேறு வாங்கி பழக்கும் வரை மண் வாணலியிலேயே குழம்பு வைத்துக் கொள்கிறேன்.

நேற்று கடைத்தெருவில் உயரம் குறைவாகவும், அகலமாக இருக்கும் குழம்பு சட்டி கேட்டேன்.

மீன்குழம்பு வெக்கறதுக்காம்மா!!!???? என்ற கடைக்காரம்மாவின் கேள்வியில் ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி பின்பு சிரித்துக் கொண்டே, ”இதுவரை செஞ்சு பழக்கமில்லம்மா” என்றேன் :)

'நீங்க கேட்ட மாதிரி இப்போ ஸ்டாக் இல்லம்மா. வந்தா எடுத்து வெக்கிறேன்' என்றார்.

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

20 கருத்துகள்:

  1. அனைத்தையும் ரசித்தேன்.  சிலவற்றை முகநூலிலேயே படித்த நினைவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து பகுதிகளையும் ரசித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      முகநூலில் வெளியிட்டவையே இங்கே ஒரு தொகுப்பாக!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. முடிந்தளவு உறவினர் வீட்டு விழாக்களில் கலந்து கொள்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்தினை விட்டு விலகி இருப்பதால் பெரும்பாலும் உறவினர் வீட்டு விழாக்களில் கலந்து கொள்வது முடியாததாகி விடுகிறது தனபாலன். உங்கள் கருத்துகளை பகிர்து கொண்டதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. முகநூலில் படித்தது. இங்கும் படித்தேன்.
    கதம்பம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் பகிர்ந்தவையே இங்கே ஒரு தொகுப்பாக. இங்கேயும் படித்து கருத்துரைத்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. நீங்களும் பதிவினை ரசித்ததில் மகிழ்ச்சி ஜோதிஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கண் மருத்துவமனைக்கு சென்ற அனுபவம் எனக்கு இருப்பதால் மிகவும் ரசித்தேன். மருத்துவமனைக்கு செல்லும்போது கண் தெரியும் வரும்போது கண் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண் மருத்துவமனைக்குப் போகும்போது கண் தெரியும் - வரும்போது தெரியாது! ஹாஹா... அதே தான். பதிவினை ரசித்தமைக்கு நன்றி இராமசாமி ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அனைத்தும் படிக்க மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பகிர்வில் அனைத்தையும் நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  7. No. We can't attend everything. If the event is a once in a life time, type of event, then we try to rearrange our schedule to go, if not we make apologies and visit another time.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடிவதில்லை கயல் இராமசாமி மேடம். ஆனால் கலந்து கொள்ள முடியாது என்பதைச் சொன்னாலும் சிலர் புரிந்து கொள்வதில்லை என்பது தான் வருத்தமானது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. புது டில்லியில் இருந்த நான்கு ஆண்டுகளிலும் ,கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்த 14 ஆண்டுகளிலும் உறவு மட்டும் நட்பு வட்டாரத்தின் இல்ல நிகழ்சிகளில் கலந்து கொள்ள இயல்வில்லை. தற்போது பணி நியறைவுக்குப்பின் அனைத்து நியக்ழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறேன்.

    வழக்கம்போல் கதம்பம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி மாநிலங்களில், வெளி நாட்டில் இருக்கும் நபர்களால் இப்படி குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள முடிவதில்லை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
    2. கண் மருத்துவமனை எப்போதும் சுவாரசியம் . மண்சட்டி சமையல் நானும் செய்கிறேன்.
      இனிய கதம்பம்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....