சனி, 7 டிசம்பர், 2019

காஃபி வித் கிட்டு – ஐம்பது – உழைப்பு – கண்களாவது வாழட்டும் – என்கவுண்டர் – கல்லானாலும்…


காஃபி வித் கிட்டு – பகுதி 50


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். காஃபி வித் கிட்டு தொடரின் ஐம்பதாவது பகுதி! விளையாட்டாக ஆரம்பித்தது இன்றைக்கு ஐம்பதாவது பகுதி வரை தொட்டிருக்கிறது! தொடர்ந்து வாசித்து கருத்துகளைப் பகிர்ந்து வரும் நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. சரி, இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நாம் செய்யும் ஒரு விஷயத்தினைச் சிறந்ததாக்க, நம்மால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும், “முடிந்த அளவு”, அதைக் கடைசி வரை கொடுக்க வேண்டும் – ஆப்ரகாம் லிங்கன்.

இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்தி – கண்களாவது வாழட்டும்:


ஒரு மனிதனுக்கு அடுத்தடுத்து அளவில்லாத சோகம் ஏற்பட்ட போதும் அந்த சோகத்தையும் தாண்டி மனித நேயத்தை வெளிப்படுத்த முடியும் என்பதற்கான சாட்சிதான் செல்வராஜ்.

கோவை மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்படன் லே அவுட் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இறந்த 17 பேர்களின் பட்டியலில் கல்லுாரி மாணவி நிவேதிதாவும்,பள்ளி மாணவன் ரங்கநாதனும் உண்டு. இவர்கள் இருவரும் டீ கடை ஊழியர் செல்வராஜின் பிள்ளைகள்.செல்வராஜின் மனைவி சமீபத்தில்தான் இறந்தார் அவரது இறப்புக்கு பிறகு தந்தையாக மட்டுமின்றி தாயுமானவனாகவும் இருந்து இரண்டு பேரையும் வளர்த்து படிக்கவைத்து வந்தார். இந்த நிலையில்தான் இவரது பிள்ளைகள் சுவர் இடிபாடுகளில் சிக்கினர் இவர் டீகடையில் வேலையில் இருந்ததால் உயிர் பிழைத்தார், ஆனால் நான் போயிருந்தால் கூட பராவாயில்லை வாழவேண்டிய என் சிறு பிள்ளைகள் இறந்துவிட்டனரே என்றுதான் செல்வராஜ் அழுதார். ஆஸ்பத்திரியில் இரண்டு பிள்ளைகளும் உயிருக்கு போராடி தோல்வியை தழுவினர் இருவரும் இறந்த தகவல்களை கேட்ட தலையில் இடிவிழுந்தது போல செல்வராஜ் அதிர்ந்து போனார்.

அந்த சூழ்நிலையிலும் தன் பிள்ளைகளின் கண்களை தானம் செய்தால் இரண்டு பேர் பார்வை பெறுவர் என்பதை உணர்ந்து இருவரின் கண்கையும் தானம் செய்தார், அரசு மருத்துவமனை மூலம் கண்தானம் செய்யப்பட்டது. செல்வராஜ் போன்ற அதிகம் படிக்காதவர்களுக்கு கண்தானம் பற்றி புரியவைக்க சிரமப்பட வேண்டியிருக்கும் அதுவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில்,பெரும்பாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று எண்ணி தயங்கி தயங்கியே மருத்துவர்கள் செல்வராஜிடம் கேட்டனர் ஆனால் செல்வராஜோ கொஞ்சமும் தயங்காமல் என் பிள்ளைகளின் கண்களாவது வாழட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி எல்லோர் மனதிலும் உயர்ந்துவிட்டார். - எல்.முருகராஜ். – தினமலர் நாளிதழிலிருந்து…

தனது சோகத்திலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்த செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளும் பூங்கொத்துகளும்!

இந்த வாரத்தின் ஹாட் டாபிக் – என்கவுண்டர்:

ஹைதை பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தப்பித்து ஓட முயன்றதாக என்கவுண்டர் செய்யப்பட்டு இருக்கும் விஷயம் தான் ஹாட் டாபிக். காவல்துறை நண்பர்களை பல தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில், மனித உரிமை மீறல் என சிலர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு சில அரசியல்வாதிகளும் தங்களது “முத்தான” கருத்துகளை உதிர்த்து இருக்கிறார்கள்.  பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது! முன்னச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டாலும், இது போன்ற செயல்களைத் தடுக்கப் பட வேண்டும். அதற்கு விரைவான விசாரிப்பும், முறையான தண்டனையும் – அதுவும் இது போன்ற செயல்களைச் செய்யப் பயப்படும் அளவு தண்டனையும் இருந்தால் தான் நல்லது என்பது பலரின் கருத்து. ஆனால் இங்கே வழக்குகள் ஒவ்வொன்றும் பல வருடங்கள் இழுவையிலும், நிலுவையிலும் இருப்பது அனைவரும் அறிந்தது! நிர்பயா வழக்கில் இன்று வரை முறையான தண்டனை இல்லை – குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வெளியேயும் வந்து விட்டார் என்பது கொடுமை!

நேற்று ஹிந்தி மொழியில் வந்த ஒரு வாசகம் இந்தச் சம்பவங்களின் கொடுமையைச் சொன்னது – அதன் தமிழாக்கம்… இறந்து போன ஹைதை பெண் சிதையை அவரது அப்பா எரியூட்டும்போது… ஒரு ஈனக்குரல்… “அப்பா, அவங்க என்னைக் கொளுத்தியதால் வந்த எரிச்சலும் வலியும் இன்னும் தீரவில்லையே… நீங்கள் வேறு என்னை எதற்கு எரியூட்டுகிறீர்கள்?”  

ராஜா காது கழுதைக் காது – கல்லானாலும் கணவன்…

திருச்சி மலைக்கோட்டையிலிருந்து திருவரங்கம் நோக்கிப் பயணித்த போது – ஃபுல் போதையில் தள்ளாடியபடி இருந்த ஒரு முதியவர் – தட்டுத் தடுமாறி பேருந்தில் ஏறிய வயது முதிர்ந்த தம்பதிகளில் மூதாட்டியிடம்…

”அவரை நல்லா புடிச்சுக்கோம்மா… கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்!”  புல்லானாலும் என்று சொன்னது எனக்கு மட்டும் “ஃபுல்”லானாலும் என்று கேட்டது!

இந்த வாரத்தின் விளம்பரம் – மகளிர் தினம்:

மகளிர் தினம் சமயத்தில் 2017-ல் வந்த விளம்பரம் ஒன்று! இப்போதும் பார்த்து ரசிக்கலாம் – தவறில்லையே! இதோ உங்கள் ரசனைக்கு ஒரு ரசனையான விளம்பரம்!இந்த வாரத்தின் கேள்வி:

தமிழ் Quora தளத்தில் பார்த்த ஒரு கேள்வி இந்தக் கேள்வியைக் கேட்க வைத்திருக்கிறது! 2019-ஆம் வருடம் இன்னும் சில நாட்களில் முடியப் போகிறது – இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தானே – அது எதற்கு இப்போது? என்று நீங்கள் கேட்பதற்குள் எனது கேள்வியை நான் கேட்டு விடுகிறேன் – இந்த வருடத்தில் நீங்கள் செய்த சிறப்பான விஷயம் என்று எதைக் கருதுகிறீர்கள்? பின்னூட்டம் வழி சொல்லுங்களேன்! ஸ்வாரஸ்யமான பதில்களுக்கு பரிசு கொடுத்தாலும் கொடுப்பேன் என்று சொல்லிக்கொண்டு அடுத்த பகுதிக்கு நகர்கிறேன்!

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:2013-ஆம் ஆண்டின் இதே நாளில் மேலே உள்ள படத்தினை பகிர்ந்து “கவிதை எழுத வாருங்கள்” என அழைத்து இருக்கிறேன். இந்தப் படத்திற்கு நிறைய கவிதைகள் எழுதி அனுப்பினார்கள் – வரிசையாக அவற்றை எனது வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன்! இனிமையான நாட்கள்.  கவிதை எழுதிய சில பதிவர்கள் இப்போது பதிவுலகம் பக்கமே வருவதில்லை என்பதில் வருத்தம் உண்டு! ஸ்வாரஸ்யமான கவிதைகள்! சுப்பு தாத்தா அவர்கள் பதிவுக்கான பின்னூட்டத்தில் எழுதிய கவிதை ஒன்று கீழே…

கட்டி அணைத்து வருவதெல்லாம்
வெட்டிப்பேச்சு பேசுவதெல்லாம்
எட்டி ஒரு கணம் வைத்துவிட்டு,
சட் புட்டெனு ஒரு காதல் கவிதை

கணினியிலே டைப் அடித்து
காசு பணம் இல்லாது
நேரத்துக்கு நாகராஜுக்கு
அனுப்பிவை.

பரிசு வந்தால்
பார் என்னை

வராவிடின்
வாங்கியவனை
வரச்சொல்

செல்
வெல்

நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

 1. செல்வராஜூ உயர்ந்து இருக்கிறார்.
  என்கவுண்டர் தவறு என்று சொல்பவர்கள் பிரியங்காவுக்கு ஏற்பட்ட கதி நாளை அவர்களது மகளுக்கு நேர்ந்தால் இதையே சொல்வார்களா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கேள்வி கில்லர்ஜி. அப்போது பதில் வேறு மாதிரி இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஆஹா மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. காஃபி வித் கிட்டு தொடரின் ஐம்பதாவது பகுதிக்கு வாழ்த்துக்கள்.
  இன்றைய ப்திவு மிக அருமை.

  ரசித்த வாசகம் அருமை.

  பாசிட்டிவ் செய்தி – செல்வராஜூ மனது நல்ல மனது, உயர்ந்த மனிதருக்கு வாழ்த்துக்கள்.

  //ஒரு சில அரசியல்வாதிகளும் தங்களது “முத்தான” கருத்துகளை உதிர்த்து இருக்கிறார்கள்//
  அவர்கள் பிள்ளைகள் தப்பு செய்தாலும் இதே முறையில் நடந்து கொள்ள வேண்டும். (என்கவுண்டர்)
  ஈனக்குரல் மனதை கனக்க வைக்கிறது.
  மகளிர் தின காணொளி மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐம்பதாவது காஃபி வித் குட்டு பதிவுக்கான வாழ்த்துகள் மகிழ்ச்சி அளித்தன கோமதிம்மா...

   முத்தான கருத்துகள் - பிள்ளைகளும் இப்படிச் செய்தால் - அதே தான் கோமதிம்மா.

   காணொளி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. கண் தானத்தின் முக்கியத்துவத்தை செல்வராஜ் போன்றவர்களும் உணரும் வகையில் எடுத்துரைத்து சம்மதிக்க வைக்க பாடுபட்ட மருத்துவ ர்களையும் பாராட்ட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜோசப் ஜி. மருத்துவர்களும் பாராட்டுக்குரியவர்களே - என்றாலும் செல்வராஜ் அவர்கள் அதிக பாராட்டுகளுக்கு உரித்தானவர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. ஒவ்வொரு பகுதியும் அழகாக செதுக்கி உள்ளீர்கள்... 50-வது பகுதிக்கு வாழ்த்துகள்...

  மனம் முழுக்க செல்வராஜ் நிறைந்து விட்டார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு பகுதியும்... - மிக்க மகிழ்ச்சி தனபாலன். வாழ்த்தியமைக்கு நன்றி.

   செல்வராஜ் நினைவில் நிற்கக் கூடியவர் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. ஐம்பதாவது காபி பதிவுக்கு வாழ்த்துகள்.  செல்வராஜின் செயல் பாராட்டுக்குரியது.மற்ற செய்திகளையும், கவிதையையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்திய உங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   செல்வராஜின் செயல் உங்களையும் கவர்ந்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. இந்த வருடத்தில் நீங்கள் செய்த சிறப்பான விஷயம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

  1, கடந்த ஒரு மாதமாக பில்டர் காபி பைத்தியம் பிடித்து விட்டது. காலையில் நடைப் பயிற்சியின் போது எப்படியாவது ஒரு காபி குடித்து விடுகிறேன். அந்த உணவகத்தில் எப்போதும் வெளியே நின்று கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணி அல்லது வயதான பெரியவருக்கும் 30 நாட்களில் குறைந்தபட்சம் 20 நாட்களாவது பத்து ருபாய் கொடுத்து விட்டு வருகிறேன்.

  2. மூன்று முறை இந்த மாதம் ரயில் பயணம் செல்ல நேரிட்டது. அங்கு இருக்கும் வயதான பெண்மணி ஒருவருக்கு மூன்று முறையும் காலை உணவு உணவகத்தில் வாங்கிக் கொள் என்று சொல்லி உணவகத்தில் காசு கொடுத்து (வேறு எதற்கும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக)விட்டு வந்தேன்.

  3. வீட்டுக்கு எப்போதும் வரும் ஒரு வயதான பாட்டி அம்மா, நடுத்தர வயது பெண்மணி, நடுத்தர வயது பாய் அய்யா, மற்றொருவர் இவர்கள் நால்வரிடம் காய்கறி, சோளக்கதிர், பனங்கிழங்கு, மற்ற காய்கறிகள், பப்பாளி என்று அவர்களிடம் தினமும் கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என்று வீட்டில் கட்டளையிட்டு கடந்த ஆறு மாதமாக வாங்கிக் கொண்டிருக்கிறேன்.
  4. நண்பர் வீட்டு கிரகப் பிரவேசத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வந்து இருந்தார். அவர் மனைவியிடம் இன்னும் பத்து வீடுகள் கட்ட வாழ்த்துகள் என்ற போது அவர் அழுதே விட்டார். கூடப் பிறந்தவர்களே பொறாமைப்படுகின்றார்கள். நீங்கள் எப்படி அண்ணா நீங்களும் சந்தோஷமாக இருந்து கொண்டு அனைவரையும் சந்தோஷப்பட வைக்குறீங்க. எங்கள் மொத்த கஷ்டமும் உங்களைப் பார்த்தாலே தீர்ந்து விடுகின்றது என்றார்கள்.
  இன்னும் பல உண்டு. பதிவில் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... இந்தக் கேள்விக்கான பதில் உங்களிடமிருந்து வந்ததில் மகிழ்ச்சி. சொல்லி இருக்கும் அனைத்தும் சிறப்பான விஷயம் தான் ஜோதிஜி. இன்னும் பல விஷயங்கள் - உங்கள் பதிவில் - படிக்கக் காத்திருக்கிறேன் ஜோதிஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. விளம்பரப்படத்தை என் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளேன். நெகிழ்ந்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி சில விளம்பரப் படங்கள் ரொம்பவே கவர்ந்து விடுகின்றன. இன்றைக்கு பகிர்ந்த விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. உங்கள் முகநூலில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜோதிஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. சுவையான பதிவு. சிந்திக்க சில வரிகளும் இருந்தன. வறுமையில் தான் நல்ல மனங்கள் வாழுகின்றன. கண்தானம். இரண்டு தடவை அநாதை இல்லங்களுக்கு உதவினேன். ஒரு எழுத்தாளருக்கு நூல் அறிமுகம் செய்து வைத்தேன். சிறிது சிறிதாக பலருக்கு உதவியிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுடைய முதல் வருகையோ கௌசி ஜி. நீங்கள் இந்த வருடத்தில் செய்த நல்ல விஷயங்கள் மகிழ்ச்சி தந்தது. தொடரட்டும் உங்கள் சீரான பணி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. 50 ஆவது பகுதிக்கு வாழ்த்துகள். குழந்தைகளின் கண்களை தானம் செய்த தந்தை பற்றி நானும் படித்தேன். பாராட்டுக்கு உரியவர். வாழவேண்டிய குழந்தைகள் இறந்து விட்டனர். எல்லாவற்றையும் விடக் கொடுமை மிருகங்களுக்கான வைத்தியரைச் சீரழித்துக் கொன்றவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது தான். ஆனால் என்கவுன்டரில் இவர்களைக் கொல்லாமல் உறுப்புக்களை வெட்டிக் கண்களைச் சிதைத்து வாழ விட்டிருக்கணும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி கீதாம்மா...

   தானம் செய்த தந்தை பாராட்டுக்குரியவரே. வாழ வேண்டிய வயதில் இறப்பு - கொடுமை.

   மிருகங்கள் - வேறு எந்த வார்த்தையும் பொருந்தாத வார்த்தை. தினம் தினம் அவர்கள் கொடுமை அனுபவித்துச் சாக வேண்டும் என நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரி. ஆனால் இங்கே தண்டனைகள் விதிக்கப்பட்டாலும் அவை நடைமுறையில் கிடைக்க பல வருடங்கள் ஆகும். அதற்குள் இன்னும் பல குற்றங்களை அந்த மிருகங்கள் செய்து விடுவார்கள் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. விளம்பரத்தைப் பின்னர் பார்க்கிறேன். ஏற்கெனவே பார்த்துட்டேனோனு சந்தேகமாவும் இருக்கு! :) ஓவியமும் சுப்புத்தாத்தாவின் கவிதையும் அருமை! சிறப்பான விஷயம் என எனக்குத் தெரிந்திருக்கும். எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் இல்லையா? :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரம் முடிந்த போது பாருங்கள். இது இரண்டு வருடம் முன்னர் வந்த விளம்பரம். பார்த்திருக்கலாம்!

   உங்களுக்கு சிறப்பாகத் தோன்றுவது மற்றவர்களுக்கு சரியாகப் படவில்லை என்றால் என்ன, உங்களுக்குத் தோன்றுவதைச் சொல்லுங்களேன் கீதாம்மா... எல்லோருடைய சிந்தனையும் ஒரே மாதிரி இருப்பதில்லையே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. உண்மை தான் போற்றுதலுக்குரியவரே அவர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....