ஞாயிறு, 17 டிசம்பர், 2023

கதம்பம் - ரங்கனின் கவனிப்பில்… - கண்ணனும் ராதையும் - சூர்யவம்ச நினைவலைகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கரங்கள் கோர்த்து - சிறுகதை பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


DOING GOOD FOR OTHERS IS NOT A DUTY.... IT'S A JOY. IT INCREASES YOUR OWN HEALTH AND HAPPINESS.


*******


ரங்கனின் கவனிப்பில்… - 2 டிசம்பர் 2023:



ராதா ராதா நீ எங்கே!

கண்ணன் எங்கே நான் அங்கே!


இன்று ராஜகோபுரமருகே சென்றிருந்த போது கடை ஒன்றில் இந்தப் பாடல் ஒலித்தது! நின்று முழுவதும் கேட்க ஆசை தான்..🙂 பாட்டு கேட்கவா இங்க நிக்கற! நகரும்மா! என்று சொல்ல மாட்டார்களா! என்ன!...🙂 


மனதிலோ அந்தப் பாடல் ஓடிக் கொண்டே இருந்தது..🙂 ராதா... ராதா...நீ.. எங்கே!! வீட்டுக்கு போனதும் முதல்ல கேட்டுட்டு தான்  மறுவேலை...🙂 சிறுவயதிலிருந்தே பேருந்துகளில் பாடல்களை கேட்பதற்காகவே காத்திருந்து போவேன்..🙂


திருவரங்கத்தில் இப்போது எங்கு நோக்கினும் ஐயப்ப பக்தர்கள் தான்!  டூரிஸ்ட் பஸ்களிலும் வேன்களிலும் வந்திறங்கி குழுவாக கோவிலுக்குச் செல்கின்றனர்! அடுத்து வைகுண்ட ஏகாதசி வேறு வரப் போவதால் இதையொட்டி புதிதாக முளைத்திருக்கும் சாலையோரக் கடைகள் பலவற்றை பார்க்க முடிந்தது!


இங்கு வருடம் முழுவதுமே டூரிஸ்ட்கள் தான்! வடக்கிலிருந்து தலைப்பாகையுடன் வருபவர்கள், வெளிநாட்டினர், சபரிமலை பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்கள் என்று எப்போதுமே கும்பலாக தான் இருக்கும்! இதனால் ஏற்படும் வாகன நெரிசல் ஒருபுறம்!


ரங்கன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு புன்னகைக்கிறார்!


&^&^&^&^&^&


கண்ணனும் ராதையும் - ரோஷ்ணி கார்னர்:


மகள் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு…



&^&^&^&^&^&


சூர்யவம்ச நினைவலைகள்!  (பாகம் 1&2) - 15 டிசம்பர் 2023:



Kindleல் நான் வாசித்த இரு நூல்களின் வாசிப்பனுபவங்களைப் பற்றி தான் இன்றைய பதிவு!


எழுத்தாளர் சிவசங்கரி மேடம் தன் வாழ்க்கை வரலாற்றை நினைவலைகளாக இந்த இரு நூல்களில் சுவாரசியமாக பகிர்ந்து கொண்டுள்ளார்! சிறுவயது முதல் தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், கிடைத்த அனுபவங்கள், பள்ளிநாட்கள், கல்லூரிநாட்கள் என்று பயணித்து ஒவ்வொரு நிகழ்வையும் தொய்வு ஏற்படா வண்ணம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


கணவர் சந்திரா உடனான வாழ்க்கைப் பயணமும், மாமனாரின் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து இருவருமே அவரவரின் வேலையை விட்டுவிட்டு விழுப்புரத்தில் வந்து செட்டில் ஆனது! அங்கு கிடைத்த அனுபவங்களும் சந்தித்த மனிதர்களும் தான் தன்னை சமூகக் கதைகளை எழுதத் தூண்டியதாக சொல்கிறார்!


ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்று கணவர் சந்திராவிடம் சொன்ன போது ஒரு குழந்தையை தத்தெடுத்து அதற்காக முழுமையாக செலவிடுவதை விட ஒரு சமூகத்தையே தத்தெடுத்தால் நிறைய நல்ல விஷயங்களை செய்யலாமே! என்று தனக்கு உணர வைத்தார் என்று சொல்லும் இவர்…


உற்ற துணையாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த கணவரின் மறைவுக்குப் பின் தான் இந்த சமூகத்தில் எதிர்கொண்ட சவால்களும் அதை கடந்து வந்த பாதைகளும் என வாசித்த போது ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உதாரணப் பெண்மணியாக திகழ்கிறார்!


இந்திய இலக்கிய இணைப்பிற்காக தான் மேற்கொண்ட பயணங்கள்! தன் வாழ்வின் 16 வருடங்களை வேறு சிந்தனையின்றி அதற்காக செலவிட்டது! அதன் மூலம் பெற்ற அனுபவங்கள்! குடிப்பழக்கத்திற்கு எதிராகவும், போதைக்கு எதிராகவும் தான் எழுதிய தொடர்கள், கதைகள், ஏற்படுத்திய அமைப்புகள்! அதற்கான உழைப்பு என அவர்  பகிர்ந்து கொண்ட அனுபவங்களை வாசித்த போது பிரமிப்பைத் தந்தது!


முதன்முதலாக தான் வளர்த்த மான்குட்டி மணி முதலாக தன் வீட்டில் வளர்ந்த செல்லங்கள் ராணா, ராணி, சியாமா 1,2,3 இவற்றின் விஷமங்கள், விளையாட்டுகள், ஏற்பட்ட பிணைப்பு, நெகிழ்வான தருணங்கள், பிரிவு என்று சொல்லிச் சென்ற கதைகள் நமக்குள்ளும் நிச்சயம் ஒரு தாக்கத்தை எற்படுத்தத் தான் செய்கிறது!


முதல் பாகத்தில் பசுமையான நினைவுகளாகவும் இரண்டாம் பாகத்தில் சமுதாயத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்களாகவும் செல்கிறது! முதல் பாகத்திற்கு கிடைத்த நேரம் இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லையோ  என்று தோன்றும் விதமாக ஆங்காங்கே தென்பட்ட எழுத்து பிழைகளும் எழுத்தில் ஒரு வேகமும் தெரிந்தது!


எனக்கு பிடித்த இந்த இரு நூல்களையும் வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் வாசித்து மகிழலாம்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்… 

11 கருத்துகள்:

  1. நல்லதொரு ஸ்பீக்கரில் கேட்டால் சிலருக்கு வைக்கும் இளையராஜா பாடல்களில் ஒன்று.  எனக்கும் மிகவும் பிடிக்கும்.  அதுவும் அந்த ஆரம்ப ஹம்மிங்...

    ரோஷ்ணியின் ஓவியங்கள் மேம்பட்டுக் கொண்டே வருகின்றன..  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    சிவசங்கரியின் இந்த நூல் வாசித்ததில்லை.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சிலருக்கு வைக்கும் //

      சிலிர்க்க வைக்கும்

      நீக்கு
    2. ஆமாம் சார். எனக்கும் அந்த ஆரம்ப ஹம்மிங் மிகவும் பிடிக்கும்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. ரோஷ்ணியின் ஓவியம் அழகு. சித்திரமும் கைப்பழக்கம்.

    நீங்கள் சொல்லியருப்பது போல ஐந்து வருடங்களுக்கு முன்பு ஶ்ரீரங்கவாசி என்னிடம் சொன்னார், எந்த எந்த சீசனில் யார் யார் வர்றாங்க, அதனால் கோவிலில் கூட்டம் ரொம்பவே அதிகமாகிவிட்டது என்றெல்லாம். எப்போப் போனாலும் கூட்டம் என்றார். வைகுண்ட ஏகாதசி (ராப்பத்து) சமயத்தில் அரை நாள் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு வந்திருக்கிறது. பார்ப்போம் அரங்கனின் தரிசனம் கிடைக்கிறதா என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதுமே இங்கு கும்பல் தான் சார். அதனால் வாகன நெரிசலும் கூடிவிட்டது.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. ரோஷ்ணி வரைந்த படம் அருமை, வாழ்த்துக்கள்.
    சிவசங்கரி அவர்கள் பேட்டிகளில் கேட்டு இருக்கிறேன், அதை தான் அவர் புத்தகமாக போட்டு இருக்கிறார் போலும். நிறைய வார பத்திரிக்கையில் சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. பேட்டிகளில் நானும் கேட்டிருக்கிறேன். புத்தகத்தில் இன்னும் நிறைய செய்திகள் உள்ளன.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. இந்தப்பாடல் மிகவும் சிறப்பாக இருக்கும்.

    ரோஷ்ணியின் ஓவியம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. ரோஷ்ணியின் ஓவியம் மிக அழகு. மெருகு கூடியிருக்கிறது.

    பொதுவாகவே ஐயப்பன் சீசன் காலங்களில் பக்தர்கள் கூட்டம் பொதுவாக எல்லாக் கோயில்களிலும் காணப்படும்.

    எங்கள் ஊர்க் கோயிலில் வந்து தினமும் கோயில் எதிரே உள்ள குளத்தில் குளித்துவிட்டுக் கோயிலுக்குள் வந்து சரணம் சொல்லிவிட்டுச் செல்வது வழக்கம் நான் ஊரில் இருந்தவரை கவனித்ததுண்டு. அப்போது மற்ற சீசன் பக்தர்கள் வந்து பார்த்ததில்லை.

    ஆனால் ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி கோயில்களில் பார்க்கலாம். இப்போதெல்லாம் கூட்டம் கூடி வருகிறதுதான்..

    சிவசங்கரி புத்தகம் வாசித்ததில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு எப்போதுமே கும்பல் தான். வருடம் முழுவதுமே எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....