வெள்ளி, 1 டிசம்பர், 2023

வயித்து பொழப்பு - சிறுகதை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


******



அக்கா! வீட்டுல வேலை எதுனா செய்யணும்னா சொல்லுங்க! நா வந்து சுத்தமா செஞ்சி தாரேன்.


ஒரு வீட்டின் வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள் முத்துமீனா!


அப்படியாம்மா! எங்க வீட்டுலயும் ஒரு ஆள் தேவைப்படுது தான்! ஆமா நீ எங்கேர்ந்து வரன்னு சொல்லு?


தோ! கொள்ளிடக்கரை பக்கத்துல தான் இருக்கேன்க்கா! எங்கிட்ட சைக்கிள் கூட இருக்கு! நிமிஷமா வந்து செஞ்சு குடுத்துடுவேன்!


உங்களுக்கு எந்த நேரம் வேணும்னு மட்டும் சொல்லுங்க!


சாயங்காலத்துல வந்து செஞ்சு  தருவியா??


அக்கா கோபிச்சுக்காதீங்க! 4 மணிக்கு புள்ளய பள்ளிக்கூடத்துல இருந்து கூப்புட்டுட்டு வரணும்! அதுக்குள்ள வந்து செஞ்சு குடுத்திடட்டுமா!


ஆமா உனக்கு எத்தன புள்ளைங்கம்மா??


ரெண்டு பொட்ட புள்ளைங்கக்கா! அதுகளுக்கு ஏதாவது சேக்கலாம்னு தான் வேலை கேட்டு வந்தேன்!


சரிம்மா! எவ்வளவு கேட்கிறன்னு சொல்லு??


எல்லாப் பக்கமும் கேட்டுப் பாருங்கக்கா! அவங்க கேட்கிறத விட 100ரூ கொறைச்சுக் குடுங்க! சந்தோசமா வாங்கிக்கிறேன்!


சரிம்மா! இன்னைக்கே வந்து வேலை செஞ்சு தந்துடறியா!


நிச்சயமா வந்துடறேன்க்கா! நீங்க கவலையே படாதீங்க! என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்!


சைக்கிளை ஓட்டிக் கொண்டு செல்லும் போது சைக்கிளின் வேகத்தைப் போலவே அவளின் மனதிற்குள்ளும் சில திட்டமிடல்கள்!


வர சம்பளத்த கொஞ்சம் கொஞ்சமா மிச்சம் பிடிச்சு சீட்டு போடணும்! வர தீவாளிக்கு இந்த புள்ளைங்களுக்கு துணிமணி, பட்டாசு, சுவீட், காரம்னு எல்லாத்தையும் வாங்கிக் கொடுக்கணும்!


என்று பலவாறு யோசித்தவாறே சைக்கிளை மிதித்து முன்னேறினாள்!


மாலை சரியான நேரத்திற்கும் வேலைக்குச் சென்று செய்து கொடுத்தாள்!


ஆமா! உன் வீட்டுக்காரரு என்ன வேலை செய்யறார்??


அந்த வீட்டுப் பெண்மணி இவளிடம் கேட்கவும் அவளின் முகமே மாறிப் போனது!


தயங்கியபடியே ‘அது வந்து’ என்று இழுத்தவாறே … கொத்தனார் க்கா! என்றாள்;


அதுக்கு ஏம்மா இவ்வளவு தயங்கிற! உழைச்சு சம்பாதிக்கிற எந்த வேலையும் கொறஞ்சது இல்லை! தெரியுமா!  


அத ஏன்க்கா கேட்கறீங்க! அது வேலைக்கே போவாதுக்கா! குடி குடின்னு எங்கேயாவது வுழுந்து கெடக்கும் ! கைல காசில்லன்னா தான் வேலைக்கு போகும்! என்னத்த சொல்ல… அப்படியே ஓடுதுக்கா வயித்து பொழப்பு! என்று புலம்பினாள்!


அடடா! குடிய நிறுத்த ஏதாவது முயற்சி பண்ணினியா??


அது எதுக்கும் ஒத்து வராதுக்கா! என் தலையெழுத்து! புள்ளைங்களுக்காக தான் எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போறேன்! தன் நிலையை எண்ணி வேதனை கொண்டாள்!


வேலையை சுத்தமாக செய்து கொடுத்து விட்டு ‘நாளைக்கு பார்க்கலாம்க்கா’! என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினாள்!


மகளை பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பி தன் வீட்டின் வேலைகளிலும் ஈடுபட்டாள்!


அவளின் மனதில் தன் வாழ்க்கை இப்படியே இருந்து விடப் போவதில்லை என்பதை மட்டும் உணர்ந்து கொண்டு செயல்பட்டாள்!


இதுவும் கடந்து போகும்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


பின் குறிப்பு:  எனது முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள், வலைப்பூவில் எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் வாசிக்காதவர்கள் வசதிக்காக இங்கே ஒரு பகிர்வாகவும்…

14 கருத்துகள்:

  1. முகநூலிலும் வாசித்தேன்.  நிறைய பேர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.  மக்கள் துன்பத்துக்குள்ளாக்கும் அந்தக் கடைகளை மூடப்போகும் நாள் எந்நாளோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கடின நிலை.

      குடியை அறவே விரட்டும் நாளுக்காக காத்திருப்போம்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. இவ்வகை வாழ்க்கை நிலையில் தமிழகத்தில் நிறைய பெண்மணிகள் இருக்கிறார்கள்.

    இந்நிலை மாற்ற அரசுதான் முயற்சி செய்யணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அடிதட்டு மக்கள் மட்டுமல்லாமல் எல்லோரிடத்திலுமே குடி குடிகொண்டு வாழ்வாதாரத்தை பாதிக்கிறது! அரசு தான் இதில் விரைவில் செயல்பட வேண்டும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. கதை அழகு..

    குடி அழிக்கும்
    குடி அழியும் நாள் எதுவோ..

    தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடி குடியை கெடுக்கும்! குடியில்லா வாழ்வு மேம்படும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      நீக்கு
  5. அவளின் விடிவுகால நம்பிக்கை நிறைவேறுமா?

    குடும்பத்தைக் கெடுக்கும் குடி அழியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை தானே வாழ்க்கை! அவளின் நம்பிக்கை பலிக்கணும் என்று பிரார்த்திப்போம்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  6. குடி குடியைக் கெடுக்கும்...இது மக்களுக்கும் உரைக்கல...அரசுக்கும் இல்ல...பல குடும்பங்கள் இதனால் சீரழிவதும் குடும்பப் பெண்கள் இப்படிக் கஷ்டப்படுவதும் என்ன சொல்ல....ஆனால் மேட்டு க்குடியிலும் கூட வேறு வகை குடிக்கு அடிமைகள் உண்டு பெண்களும் குழந்தைகளும் துன்பத்துக்கு ஆளாவதும் உண்டு...மொத்தத்தில் குடி குடியைக் கெடுக்கும்...யதார்த்தம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! எல்லா தரப்பு மக்களிடையேயும் குடி குடிகொண்டுள்ளது! பலரின் வாழ்வாதாரத்தையே குலைத்து விடுகிறது!அதை விரட்டும் நாளுக்காக காத்திருப்போம்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. //அது எதுக்கும் ஒத்து வராதுக்கா! என் தலையெழுத்து! புள்ளைங்களுக்காக தான் எல்லாத்தையும் பொறுத்துகிட்டு போறேன்! தன் நிலையை எண்ணி வேதனை கொண்டாள்!//

    நிறைய வீட்டுவேலை செய்யும் பெண்களின் நிலை இதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அம்மா.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....