திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நாளொரு நூலும் பொழுதொரு குறும்படமும் - வெங்கட் நாகராஜ்

அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்..... 


**********



சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் இந்தப் பொழுதில், சொல்வதற்கென்று பெரிதாக ஒன்றும் இல்லை என்று சொல்லப் போவதில்லை. பல சமயங்களில் இப்படித்தான் ஒரு வித இடைவெளி வந்து தானாக விழுந்து விடுகிறது. தொடர்ந்து எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும், அந்த விஷயத்தின் மீது ஒரு வித வெறுப்பு - அப்படிச் சொல்லாமல் கொஞ்சம் நேர்மறையாகச் சொன்னால், ஒரு வித திருப்தி வந்து, அந்த விஷயம் போதும் என்று தோன்றிவிடுகிறது. எழுதுவது கூட அப்படித்தானோ? இங்கே எழுதாமல் இருப்பதற்கு ஒரு காரணம் - அலைபேசி வழி பதிவுகள் வெளியிடுவது கடினம் என்று இருந்தாலும் மற்ற காரணம் மேலே சொன்ன விஷயமாகவும் இருக்கிறது. எழுதுவதற்கென்று நிறைய விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் போதுமே, மேலும் மேலும் எழுதி என்ன ஆகப் போகிறது என்று மனது கொஞ்சம் சண்டித்தனம் செய்கிறது. மனதைக் கொஞ்சம் மாற்ற வேண்டும். அதனால் தொடர்ந்து எதையோ செய்து கொண்டு இருக்கிறேன். அப்படிச் செய்யும் வேலைகளில் இரண்டு - நிறைய புத்தகங்கள் வாசிப்பதும், குறும்படங்கள் - குறிப்பாக, மலையாள மொழியில் பார்ப்பதும் தான். 


வரிசையாக பல புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருக்கிறேன். விக்கிரமாதித்தன் கவிதைகள் (அவன் எப்போது தாத்தாவானான்), கமலா சடகோபன் சிறுகதைத் தொகுப்பு (கோடு), இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் (ஆகாயம் காணாத நட்சத்திரம்), வேதா கோபாலன் அவர்கள் எழுத்தில் ஒரு நூல் (இது மௌனமான நேரம்), சித்ரா ஜி என்பவர் எழுதிய என் நந்தவனத்து பூ, இப்படி என பல நூல்களையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் மின்னூல் கொஞ்சம் மனதைப் பிடித்து பேயாட்டம் போடுகிறது. நூல் அப்படி - தலைப்பு என்ன தெரியுமா? தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்....... எழுதியது ஜெயமோகன் அவர்கள். அவரது அனுபவமாக, அவர் கேட்டதாக நிறைய கதைகள்..... ஒவ்வொன்றும் படிக்கும்போதும் இப்படி எல்லாம் நடந்திருக்க முடியுமா என்ற எண்ணம் வராமல் இருக்காது. கழுவேற்றிய காலங்களில் நடந்த கதைகள், பாழடைந்த வீடுகள், வஞ்சிக்கப்பட்ட பெண்கள் மறைந்த பிறகு, பேய்களாக, யக்ஷியாக, பழி தீர்க்கும் கதைகள் என பல கதைகள் அந்த மின்னூல் வழி படித்துக் கொண்டிருக்கிறேன். சில கதைகள் நிறையவே யோசிக்க வைக்கின்றன. அதனால் விட்டு விட்டு தான் வாசிக்க முடிகிறது. கதையில் வரும் விஷயங்கள் நிறையவே சிந்திக்க வைக்கின்றன. நெய்வேலி நகரில் குண்டாங்குளம் அருகே பார்த்த பெரிய ஆல மரங்கள், அவைகள் குறித்த பேய் கதைகள் என மனதில் வந்து போகின்றன. வீட்டருகே இருந்த பள்ளிக் கூடத்தில் தூக்குமாட்டிக் கொண்ட பெண், பிறகு பேயாக உலவிய கதை - அப்போது கேட்டதில் வந்த பயம் குறித்து இப்போது யோசித்தால், கொஞ்சம் சிரிப்பும் வருகிறது. 


எத்தனை குறும்படங்கள் பார்த்தேன் என்பதற்கு கணக்கில்லை. சில படங்கள் மிகவும் பிடித்த வகையில் இருந்தன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் "THE LAST ORPHAN" எனும் குறும்படம். ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருக்கும் மூதாட்டி மற்றும் அவரைக் கவனித்துக் கொள்ளும் ஒரு நர்ஸ் என இரண்டே கதாபாத்திரங்கள் கொண்டு ஒரு அற்புதமான கதையைச் சொல்லி இருக்கிறார் அந்தக் குறும்பட இயக்குனர். அதைப் போலவே மனதைக் கவர்ந்த இன்னும் ஒரு குறும்படம் "கருத்த பெண்ணின்டே கல்யாணம்" என்கிற குறும்படம். வீட்டில் இரண்டு பெண்கள் - மூத்த பெண் கருப்பு, இரண்டாம் பெண் வெளுப்பு. முதல் பெண்ணின் திருமணம் அவளது நிறம் காரணமாக தட்டிக் கொண்டே போக இளையவளுக்கு சம்பந்தம் பேசிக்கொண்டு உறவினர் வழியாக ஒரு சம்பந்தம் வருகிறது. கருத்த பெண்ணின் மன வேதனையை மட்டுமல்லாது வீட்டினர் உணர்வுகளையும் சொல்லிச் செல்லும் கதை. முடிவு என்ன என்பதை இங்கே சொல்வது சரியல்ல. நீங்களே பார்த்துக் கொள்ளலாம். YouTube இல் தொடர்ந்து பார்த்த குறும்படங்கள் பட்டியல் கீழே. அலைபேசி வழி தட்டச்சு செய்வதால் அவற்றுக்கான இணைப்பு தர கொஞ்சம் சோம்பல்..... 


Home Nurse Mary;

Where is my Friday;

Day After Marriage ;

Manam Pole Mangalyam;

Gulab Jamun;

Smruthi;

An Arranged Marriage ;

OTP 3570 - Hindi Short Film about a female bike taxi driver;

15 Minutes - Tamil Short Film;

ஆயுள் தண்டனை - Tamil Short Film.


நினைவில் இல்லாத சில குறும்படங்களின் பெயர்கள் இங்கே எழுத விட்டுப் போனது என்பதையும் சொல்லி விடுகிறேன். 


இப்படியாக எனது நேரத்தில் கொஞ்சம் போக, மீதி நேரம் வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், ஓய்வு, உறக்கம் என தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறேன். நண்பர்களின் பதிவுகள் கூட தினமும் படிக்க முடிவதில்லை. முடிந்த போது படிக்கிறேன் என்றாலும் பின்னூட்டம் இடுவதில்லை - எங்கள் பிளாக் பதிவுகள் ஏனோ Blogger தளத்தில் Update ஆவதில்லை. தினம் தினம் பதிவுகள் வெளியிடுவது அவர்கள் மட்டுமே என நினைக்கிறேன். பதிவுகளை முடிந்தவரை படிக்கிறேன். நான் தொடரும் பதிவர்களில் தொடர்ந்து எழுதுவது ஒரு சிலரே. ஏன் எல்லோரும் இங்கே எழுதுவதை கைவிட்டு விட்டார்கள் என்று எனக்குள்ளே ஒரு கேள்வியும் உண்டு. என்னைப் போன்று அவர்களுக்கும் தோன்றிவிட்டது போலும்...... 


முடிந்த போது இப்படி பதிவுகள் வழி உங்களுடன் சந்திக்க வருகிறேன் என்று சொல்லிக் கொண்டு, உங்களிடமிருந்து விடை பெறுவது...... 


உங்கள் அன்பிற்கினிய 


வெங்கட் நாகராஜ் 

திருவரங்கம்

03 ஆகஸ்ட் 2026.



10 கருத்துகள்:

  1. ஆர்வமில்லாமல் ஜெயிப்பதல்ல, அந்தச் செயலில் ஈடுபடவே முடியாது!!!

    பதிலளிநீக்கு
  2. உண்மையில் Blog வேலைகள் இல்லாவிட்டால் நிறைய மற்ற வேலைகள் செய்ய முடிகிறது. இது எனக்கும் வரவர நேரத்தைச் சாப்பிடுகிறது.

    பதிலளிநீக்கு
  3. ஜெயமோகனின் நீங்ககள் சொல்லும் நூல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. நான் கூட ஒரு சில அமானுஷ்ய விவரங்களை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். எழுதாமல் போகிறது..

    பதிலளிநீக்கு
  4. குறும்படங்கள் பார்ப்பதில் எனக்கு பெரிய ஈடுபாடு எதுவும் இல்லை.

    எங்கள் பிளாக் என்றில்லை, எந்த பிளாக்குமே பிளாக்கரில் உடனடியாக அப்டேட் ஆவதில்லை. நீங்கள் பதிவு போடாத அத்தனை நாட்களிலும் அதாவது தினமும் அதிகாலை ஐந்தரை ஆறு மணி சுமாருக்கு உங்கள் பக்கம் வந்து பதிவு வெளியாகி இருக்கிறதா என்று பார்த்துச் செல்கிறேன். அதேபோலத்தான் மற்ற தளங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  5. எழுதுவது என்பது நாம் அனுபவித்த, படித்த, பார்த்த விஷயங்களைப் பிறரிடம் பகிர்வது. பலருக்கு அதற்கு மோட்டிவேஷன் வேணும், தமிழ்மண ராங்க் போன்று. அதனால்தான் பலர் பிளாகை விட்டுவிட்டார்கள். படிப்பதற்கும் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பார்ப்பது மனதில் தங்காது. படிப்பது நினைவில் இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பழைய பதிவு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அப்போது உற்சாகமாக்க் கருத்திட்டவர்கள் இப்போது எங்கே என்ற கேள்வி எழுந்தது.

    பதிலளிநீக்கு
  7. எழுதுவது கூட அப்படித்தானோ? - ஹைஃபவி ஜி மீக்கும். கொஞ்ச மாதங்களாகவே. மனதில் நிறைய இருக்கு எழுத. ட்ராஃப்டிலும் இருக்கின்றன. ஆனால் தட்டச்சணுமே எனும் போது அயற்சி வந்துவிடுகிறது. வந்து வாசித்து கமென்ட் போடுவதென்றாலும் டக்கென்று போட்டுவிட்டுப் போக மனமில்லை. பதிவு பற்றிக் கொஞ்சமேனும் சொல்லிவிட்டுப் போகத்தான் மனம் சொல்கிறது. இல்லைனா ஏதோ குறை போன்று மனதில்!!!!

    நிறைய புத்தகங்கள் வாசிப்பதும், குறும்படங்கள் - குறிப்பாக, மலையாள மொழியில் பார்ப்பதும் தான். // இதற்கும் ஹைஃபைவ் ஜி.

    நானும் இணையத்தில் வாசிக்கிறேன், காணொளிகள் பார்க்கிறேன். குறும்படங்களில் சிலது நன்றாக இருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது ஆர்வம்....ஆனால் பகிரலாமே என்று தோன்றினாலும் தட்டச்சணுமே...அயற்சி. இன்று நடைப்பயிற்சி சென்ற போதும் கூட மனதில் இதைஎல்லாமெ ழுதணும் என்று தோன்றினாலும் வீடு வந்ததும் அயற்சி. மூளையில் ஓடுவதை அப்படியே கணினியில் கொண்டுவந்துவிட ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்குமே இல்ல?

    The last orphan - பார்த்திருக்கிறே



    பதிலளிநீக்கு
  8. பாதில் கருத்தில் கருத்து டக்கென்று ஜம்ப் ஆகி அங்கு வந்துவிட்டது.

    ப்ளாக் பதிவுகள் இல்லை என்றால் பல வேலைகள் நமக்குப் பிடித்தமானவை வாசிப்பு, பார்ப்பது என்றும் நம் உடல் ஆரோக்கியய்த்தைக் கவனிக்கவும் முடிகிறது தனிப்பட்ட வேலைகள் என்று பல செய்ய முடிகின்றன என்பது இந்த இடைவெளியில் தெரிந்தது. ஆனால் ஹையோ எழுதாமல் பாதியில் நிறைய இருக்கின்றனவே என்றும் தோன்றுகின்றது.

    3, 4 வருடங்களுக்கு முன் கூட இப்படித் தோன்றியதில்லை நிறைய எழுத முடிந்தது. பதிவுகள் வாசிகக்வும் முடிந்தது. ஒருவேளை தற்போதைய நம் விருப்பங்கள் மாறியதால் இருக்கலாம் என்றும். ஆனால் கதைகள் எழுத பாதியில் இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு


  9. பதிவுகளுக்கென நேரம் செலவழிப்பது தேவைதானா எனும் கேள்வி எனக்கும் மட்டுமல்ல, பலருக்கும் இருப்பது தெரிய வந்தேன்:). "தொடர்ந்து எதையோ செய்து கொண்டு.." இருப்பதே முக்கியம். அது எதுவானாலும்.

    பதிலளிநீக்கு
  10. வாசகம் அருமை.
    உங்களை போலவே நானும் குறும்படங்கள் பார்க்கிறேன்,

    "Nurse Jothi," "குடை" போன்ற குறும்பட்ங்கள் நன்றாக இருந்தது, கதையும் படிக்கிறேன்,

    இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் "ராஜ ரகசியம்" கேட்டேன்.

    மனம் ஒத்துழைக்கும் போது (முடிந்தபோது) எழுதி கொண்டு இருங்கள்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....