வரைபடம் - இணையத்திலிருந்து...
என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின்
பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி பயணிப்பது
என்னவோ பிடித்துத் தான் இருக்கிறது. தலைநகர வாழ்க்கை ஒரு விதத்தில்
பிடித்திருக்கிறது என்றால் தமிழக வாழ்க்கை வேறு விதத்தில். பொங்கல் சமயத்தில்
வந்தது – அதன் பிறகு இப்போது தான் வர சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. எங்கேயாவது
செல்ல வேண்டும் என்றால் நிறைய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது –
அலுவலகத்தில் விடுமுறை சொல்ல வேண்டும், சொன்ன மாதிரி விடுமுறை கிடைக்க வேண்டும்,
பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ய வேண்டும், ஊருக்கு வரும்போது கொண்டு வரவேண்டியதை
எல்லாம் நினைவாக எடுத்து வைக்க வேண்டும் என நிறையவே வேலைகள்.
கொஞ்சம் முன்னரே பயணம் பற்றி
திட்டமிட்டால், விமான பயணச்சீட்டுகள் இரயில் II AC கட்டணத்திற்குள்ளேயே
கிடைத்துவிடும். இல்லை என்றால் இரயிலில் தான் வர வேண்டியிருக்கும். இரயிலில் பயணம்
செய்வது ஒரு தனி சுகம் என்றாலும், தில்லியிலிருந்து திருச்சி சென்று சேர்வதற்கு 40
மணி நேரத்திற்கு மேலே ஆகிவிடுகிறது. போக வர என்று பார்த்தால் மூன்று-நான்கு
நாட்கள் இரயிலிலேயே இருக்க வேண்டிய கட்டாயம். விமானம் என்றால் காலையில் தில்லியில்
புறப்பட்டால் மாலைக்குள் திருச்சி! இந்த முறையும் முன்னரே திட்டமிட்டபடியால்,
விமானத்திலேயே பயணம் – யாருங்க அது, ஃப்ளைட் டீடெய்ல்ஸ் கேட்கறது – எனக்கு இந்த
மாலை, மரியாதை எல்லாம் பிடிக்காது – சாரி – நான் சொல்ல மாட்டேன்!
அட மாலை மரியாதை செய்யவா
கேட்டாங்க, கருப்பு கொடி காட்டத்தான் கேட்டோம்னு சொன்னாலும், எப்ப வருவேன்னு
கண்டிப்பா சொல்லப் போறதில்ல! அரசியல் பிடிக்காதுன்னாலும், “எப்ப வருவேன், எப்படி
வருவேன்னு தெரியாது…. ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்!” அப்படின்னு
சொல்லிக்கலாம்! தமிழகத்திற்கு வரும்போது சில பதிவர்களையும் சந்திக்க விருப்பம்
உண்டு – குறிப்பாக தஞ்சை செல்லும் ஆர்வம் இருக்கிறது – பெரிய கோவிலுக்குச் சென்று
கொஞ்சம் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். அப்படி தஞ்சை
சென்றால் கரந்தை ஜெயக்குமார் ஐயா, முனைவர் ஜம்புலிங்கம் ஐயா ஆகியோரைச் சந்திக்கும்
விருப்பம் உண்டு.
சின்னச் சின்னதாய் சில பயணங்களும்
உண்டு – குடும்ப நிகழ்வுகள், வேறு சில காரணங்களுக்காக பயணங்கள். அதில் ஒரு பயணம்
பாண்டிச்சேரி நகருக்கு – அங்கே என் கல்லூரி நண்பர்கள் சிலரை அவரவர் குடும்பத்துடன்
சந்திக்க இருக்கிறேன். இரண்டு நாட்கள் பாண்டிச்சேரியில்! சில நண்பர்களை
கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து சந்திக்க இருக்கிறேன் – கல்லூரியில் மூன்று
ஆண்டுகள் மட்டுமே நட்பாக இருந்திருந்தாலும், கல்லூரி முடித்து 27 ஆண்டுகளுக்குப்
பிறகும் நட்பு தொடர்கிறது – சிலரிடம் மட்டும். மற்றவர்களைத் தேடிக்
கொண்டிருக்கிறோம் – சிலரை கண்டுபிடித்தாலும், தொடர்பில் இருக்க ஆவலில்லை
அவர்களுக்கு! நண்பர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்துடன் வருகிறார்கள் – தொடர்பில் இருக்கும்
அனைத்து நண்பர்களும் மிகவும் எதிர்பார்க்கும் சந்திப்பு இது. சந்திப்பு பற்றி
பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.
வேறு சில பயணங்களும் உண்டு –
சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி என சில இடங்களுக்குப் பயணம் செய்ய
வேண்டியிருக்கிறது. நடுவில் நெய்வேலிக்கும் பயணம் செய்ய எனக்கு ஆசை உண்டு.
இருக்கிற மூன்று வார விடுமுறையில் எங்கெங்கே பயணம் செய்யப் போகிறேனோ எனக்கே
புரியவில்லை! எல்லாப் பயணங்களுமே குடும்பத்துடன் தான் என்பதால் “வீட்டுக்குப்
போயும் ஊரைச் சுத்த கிளம்பியாச்சா?” என்று கேள்விக் கணைகளை வீச வேண்டாம் என
கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்! மூன்று வாரம் எவ்வளவு இடங்களுக்குச் சுற்ற முடியுமோ
அவ்வளவு சுற்ற வேண்டும்! பார்க்கலாம் எங்கங்கே செல்ல முடிகிறது என!
சென்னை, here I come!
சென்னையிலிருந்து உடனடியாக திருச்சி செல்லப் போவதில்லை. வேறு இடத்திற்கு பயணம்! பயணத்தில்
இருக்கும் போது மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதில் கொஞ்சம் தடங்கல்
ஏற்படலாம். எனது பக்கத்திலும் பதிவுகள் சிலவற்றை Schedule செய்து வைத்திருக்கிறேன்
– குறிப்பாக இரு மாநில பயணம் பயணத்தொடரின் பகுதிகள் மற்றும் இந்தப் பதிவு உட்பட! நடுவே
சில நாட்கள் பதிவுகள் வராமல் இருந்தால் – I assure you that I will be back with
loads of pictures and posts!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி