சனி, 6 மே, 2017

சில்க் தோடு – பிள்ளை பிடிக்கும் ஆசிரியர்கள் – ராஜா காது கழுதைக் காது!





திருவரங்கத்து வானம்....
நேற்று மாலை எடுத்த புகைப்படம்


திருவரங்கம் வந்ததிலிருந்து பார்த்த/கேட்ட சில விஷயங்களை இங்கே அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவும் ஒரு மாதிரி திருவரங்கம் டைரிக்குறிப்பு தான்! அதிகமான பணிச்சுமை இருந்த தலைநகர் நாட்களில் இருந்து வித்தியாசமாக நேரத்தினைப் பிடித்துத் தள்ள வேண்டியிருப்பதும் நன்றாகத் தான் இருக்கிறது! உண்பதும் உறங்குவதும், மாலை/காலை நேரத்தில் நடைப்பயணமாக வீதி உலா வருவதும் நன்றாக இருக்கிறது! இங்கே சமையல் வேலையும் இல்லை என்பதால் இன்னும் நிம்மதி! சின்னச் சின்ன வேலைகள் செய்யாமல் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்!  இன்று சின்னச் சின்ன செய்திகளாக சிலவற்றை பார்க்கலாம்!



மகள் செய்த பட்டு நூல் தோடு!

சில்க் தோடு: மகள் செய்யும் பட்டு நூல் தோடுகள், வளையல்கள் பற்றி முகப்புத்தகத்தில் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன். சமீபத்தில் தலைநகரிலிருந்து வந்திருந்த நண்பரின் மனைவிக்கு என் மகள் தன் கையால் செய்து பரிசளித்த தோடு – கொடுப்பதற்கு முன்னர் புகைப்படம் எடுத்து வைத்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மகளுக்கும் விடுமுறை என்பதால் இப்படி கைவேலைகள் எதையாவது செய்த வண்ணமே இருக்கிறார். கூடவே ஒன்றிரண்டு ஓவியங்களும் வரைந்து கொண்டு இருக்கிறார். இருக்கவே இருக்கிறது எங்களுக்கான நேரமும்!

பிள்ளை பிடிக்கும் ஆசிரியர்கள்: இன்று காலை வீட்டிலிருந்து நடைப்பயணமாக சென்ற போது ஒரு பள்ளியின் வாகனம் நின்று கொண்டிருந்தது. அதில் ஒலி பெருக்கி மூலம் பள்ளியிலுள்ள வசதிகள், அங்கே கிடைக்கப்போகும் கல்வியின் தரம் ஆகியவற்றை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கமாக வரும் அனைவருக்கும் பள்ளி பற்றிய விவரங்கள் அடங்கிய அறிவிப்புகளை விநியோகித்துக் கொண்டிருக்கிறார்கள். போதாதற்கு, ஒரு ஆசிரியை, ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு உதவியாளர் வீடு வீடாகச் சென்று பள்ளி பற்றிய தகவல்களைச் சொல்லி, குழந்தைகளை அவர்களது பள்ளியில் சேர்க்கச் சொல்லிக் கேட்கிறார்கள்.  ஒவ்வொரு ஆசிரியருக்கும் இப்படி Target கொடுத்திருக்கிறார்களாம்.

பள்ளிகள் குறிப்பாக தனியார் பள்ளிகள் அதிகரித்து விட்ட நிலையில் இப்படி தங்களது பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டி, ஆசிரியர்களை இந்தப் பணிக்கு பயன்படுத்திக் கொள்கிறது பள்ளி நிர்வாகம். முன்பெல்லாம், ஆசிரியர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டுமே முக்கியமான வேலை! இப்போதெல்லாம் அவர்களது பணியின் சுமை மிகவும் அதிகரித்து விட்டது! இப்படி பள்ளி விடுமுறை நாட்களிலும், இப்படி தெருத் தெருவாக அலைய விடுகிறார்கள் ஆசிரியர்களை! இது தனியார் பள்ளிகளில் மட்டும் நடக்கிறதா இல்லை அரசுப் பள்ளிகளிலும் நடக்கிறதா என்பது தெரியவில்லை! அரசு ஆசிரியர்கள் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

பள்ளிகள் மட்டுமல்ல, கல்லூரிகளிலும் இதே நிலை தான் என்று தெரிந்த ஒரு உதவிப் பேராசியர் – தனியார் கல்லூரி ஒன்றில் பணிபுரிபவர் சொன்னார்! ஒவ்வொரு பேராசிரியரும், பொறியியல் படிப்பிற்கு ஒரு  மாணவனையும், பட்டயப் படிப்பிற்கு ஒரு மாணவனையும் கண்டிப்பாக சேர்த்து விட வேண்டுமாம்! இல்லை என்றால் கல்லூரியில் வேலையை விட்டுத் தூக்கி விடுவார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

தனியார் பள்ளிகள் தங்களது வருவாய்க்காக, என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது! தலைநகரில் இப்படி வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை தங்கள் பள்ளியில் சேர்க்கச் சொல்வதை பார்த்ததில்லை. இங்கே தான் இத்தனையும் பார்க்கக் கிடைக்கிறது!

ராஜா காது கழுதைக் காது:

தலைநகரில் இருக்கும்போது, வீடு – அலுவலகம் – வீடு என்று தான் நாட்கள் அதிகமாகப் போகும். இப்போது வெளியே செல்வது அதிகமாய் இருப்பதால், “ராஜா காது கழுதைக் காது கேட்பதற்கு அதிக வாய்ப்புகள்!

நேற்று சாலை ரோடு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு அம்மாவும் மகனும் பேசியது காதில் விழுந்தது! மகன் வண்டி ஓட்டுகிறார். அம்மா பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். “மெதுவா போ, இவ்வளவு வேகமா போகாதஎன்று அம்மா சொல்ல, அதற்கு மகன் சொன்னது – “அம்மா! ஏற்கனவே 20-ல தாம்மா போறேன். இதை விட கம்மியா போக முடியாது, தள்ளிட்டுத் தான் போகணும்!”  அந்த மகனின் கஷ்டம் புரிகிறது!

தெற்கு சித்திரை வீதியில் வந்து கொண்டிருந்தபோது கிடைத்த “ராஜா காது கழுதைக் காதுதகவல்! பெரும்பாலும் காலை/மாலை நேரங்களில் இந்தப் பகுதிகளில் இருப்பவர்கள் இந்த வீதிகளில் நடைப் பயிற்சி செய்கிறார்கள். நடைப்பயிற்சி செய்யும் போதே சிலர் வீட்டுக்குத் தேவையான காய்கறியும் வாங்கிக் கொண்டு செல்வதைப் பார்க்க முடியும். நேற்று தெற்குச் சித்திரை வீதியில், கணவன் – மனைவி இருவருமாக நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு கடையைப் பார்த்து மனைவி கணவனைப் பார்த்து கேட்ட கேள்வி – “பணம் வச்சு இருக்கீங்களா? காய்கறி வாங்கிட்டுப் போகலாம்!”  கணவன் மனைவியிடம் – “நடக்கதானே வந்தோம், வெறும் 40 ரூபாய் தான் இருக்கு! அதுக்குள்ள ஏதாவது வாங்கிக்கோ! என்று சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டார்! அதையெல்லாம் இங்கே எழுத முடியாது!

திருவரங்க நாட்கள் ஸ்வாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது! அவ்வப்போது திருவரங்கம் டைரிக் குறிப்புகள் தொடரும்!

நாளை ஒரு புகைப்படப் பகிர்வில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....



32 கருத்துகள்:

  1. பதிவின் சாரம் மிகவும் சுவாரஸ்யம்!

    மகளின் கைவேலைத்திறன் பிரமிக்க வைக்கும் அழகுடன் இருக்கிறது! என் பாராட்டினைத்தெரிவியுங்கள் வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துகளை மகளுக்குத் தெரிவித்தேன். மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  2. கணவர் வாங்கி கட்டிக் கொண்டதையும் எழுதியிருக்கலாம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  4. நாமே செய்து சாப்பிட்டே பழகி, சமயத்தில் உட்கார்ந்த இடத்தில், மனைவி கொண்டுவரும் உணவு பெரிய ரிலீஃபாக இருக்குமல்லவா? அவர்களுக்கும் இன்று அடுக்களைக்குள் வராதே நானே செய்கிறேன் என்றால் அவர்களுக்கும் அக்கடான்னு இருக்கும்

    ஆசிரியர்களுக்கு பிள்ளைகள் சேரணும். இல்லைனா டிரான்ஸ்பர் வந்துடும். தனியார் நிறுவனங்கள்ல, அதிலும் பொறியியல் கல்லூரிகள்ல கிட்டத்தட்ட பிள்ளைபிடிக்கற மாதிரிதான். தங்கள் கல்லூரியில் சேர்ந்தால் கேம்பஸ் வேலை என்பதிலும் கல்லூரி ரேட்டிங்குகளிலும் ஏகப்பட்ட கோல்மால்கள். தொலைக்காட்சியில் விளம்பரம் தராவிட்டால் கல்லூரியைப் பற்றி நெகடிவ் பிம்பம் என அவர்களுக்கும் கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கும் ரிலீஃப் நிச்சயம் தேவை. எப்போதாவது அப்படிச் செய்வது உண்டு. இந்த முறையும் ஒரு நாள் என் சமையல் தான்.

      தனியார் க்ல்லூரிகள் - ரொபவே கோல்மால் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. ரோஷ்ணியின் கைவேலை அருமை.
    நடைப் பயிற்சி வந்தால் பணம் வைத்துக் கொள்ள கூடாதா ?
    நடைப் பறிற்சியின் போது கைவீசீ நடக்க வேண்டும் என்று கைவீசி வந்தார் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடைப் பயிற்சி வந்தால் பணம் வைத்துக் கொள்ளக் கூடாது போல! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  6. ரோஷிணியின் கை வண்ணமும்
    தங்கள் கை வண்ணமும் அருமை..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

      நீக்கு
  8. பட்டு நூல் தோடு கவர்ச்சியா இருக்கே !

    காய்கறி வாங்க அய்யாதான் காசு கொண்டு வரணுமா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  9. மகள் செய்த தூக்கணம்.. அழகோ அழகு... பாராட்டுக்கள் மகளுக்கு...
    நல்லாத்தான் ஒட்டுக் கேய்க்கிறீங்க:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  10. ஆசிரியர்களின் இன்றைய நிலையினைப் பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோசமான நிலை தான்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. ரோஷ்ணிக்குப் பாராட்டுகள்.

    ஆள் பிடிக்கும் ஆசிரியர் நிலை பரிதாபமானது!

    கையில் காசெதற்கு? பேடிஎம் அல்லது கார்ட் தேய்த்தால் போதுமே.. உள்ளூர்தான் என்றால் தெரிந்த கடைக்காரர்களாய்த்தான் இருப்பார்கள். "நாளை தருகிறேன்" என்று சொன்னால் போகிறது!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்டு! தரைக் கடையில் காசு தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. காது தோடும், காதோடு விழுந்ததும் அருமை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

      நீக்கு
  13. ரோஷினிக் குட்டிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள். அருமையாகச் செய்திருக்கிறார்!!

    (துளசி: பிள்ளை பிடிப்பு என்பது எங்கள் ஊட்ப்பகுதியிலும் நடக்கிறது. நான் வேலை பார்க்கும் பாலாக்காடு பள்ளியில் இப்போது இப்படி எல்லாம் இல்லை. எங்கள் ஊர் கிராமம். மனைவி ஆசிரியையாகப் பணிபுரியும் பள்ளியில் மனைவியும் மற்ற ஆசிரியர்களும் ஊரைச் சுற்றி வருவார்கள். எங்கள் ஊர் மலைப்பகுதி. பல வீடுகளில் பிள்ளைகளைப் பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். அவர்கள் வீட்டிற்கு எல்லாம் சென்று அவர்களது பெற்றோரிடம் பேசி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டு கோள் விடுப்பர். வீடுகள் ஆங்காங்கே இருக்கும். அடுத்தடுத்து இல்லாமல், ரப்பர் தோட்டங்களிடையே இருக்கும் என்பதால், பள்ளி வாகனங்கள் சில பகுதிகளுக்குச் செல்ல இயலாது. எனவே அவர்களிடம் வாகனம் அடுத்து வரும் பகுதி என்று சொல்லி வேண்டு கோள் விடுப்பர். வாகங்கம் விடப்படும் என்றெல்லாம் சொல்லி...அவர்கள் ஏன் அனுப்பவில்லை என்ற காரணங்களையும் குறித்துக் கொண்டு அதற்கான வழிகளையும் ஆராய்வர். பல கிராமங்கள் இன் நிலையில்தான் இருக்கின்றன.)

    கீதா: நான் நடைப்பயிற்சி செய்து வரும் போது அப்போதுதான் திடீரென்று ஞானோதயம் உதிக்கும் ஐயோ காய் இல்லையே என்று உடனே பர்சைப் பார்த்தால் அது என்னைப் பார்த்து இளிக்கும். ஆனால் தெரிந்த கடைகள் என்பதால் சென்று வாங்கிவிட்டு இதோ வந்து தருகிறேன் என்றோ அல்லது அப்பாவிடம் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி வாங்கி வந்துவிடுவது வழக்கம்.

    சுவாரஸ்யமான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசிரியர்களின் நிலை கொஞ்சம் கஷ்டமானதாகத் தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக பள்ளியின் வாகனத்தில் பயணித்து வீடு வீடாக அவர்கள் செல்வதைப் பார்க்கும்போது கஷ்டமாகத் தான் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  14. தங்கள் மகள் செய்திருக்கும் சில்க் தோடு அழகாக இருக்கிறது. வருக்கு எனது பாராட்டுகள்! தங்களின் திருவரங்க டயரிக் குறிப்பு வெள்ளிதோறும் வரும் பழக்கலவை இல்லாத குறையை போக்கிவிட்டது. பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழக்கலவை இல்லாத குறை - :) சில சமயங்களில் இப்படித்தான்! வேறு வடிவத்தில் துவங்க வேண்டும். பார்க்கலாம் நேரம் எடுத்துச் செய்ய வேண்டி இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  15. சில்க் தோடு சூப்பர். ரோஷ்ணிக்கு பாராட்டுக்கள்.

    பெயருக்கு ஏற்ற மாதிரி பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை பொறி வைத்துப் பிடிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. சில்க் தோடு? ஜிமிக்கி? அருமை! ரோஷிணியின் திறமைக்குக் கேட்கணுமா! ஶ்ரீரங்கத்துத் தகவல்களும் சுவையோ சுவை! முன்னெல்லாம் கிராமத்துப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை வீடு வீடாகச் சென்று அழைத்து வருவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கேன். இப்போதும் இப்படி என்பதே இன்றே அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....