எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, May 1, 2017

ஹனிமூன் தேசம் – மணாலி சென்று வாருங்கள் – பயணம் செய்ய என்ன தேவை....


ஹனிமூன் தேசம்பகுதி 23

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!
உணவகத்தில் உணவு சாப்பிட்டு முடித்த பின்னர் எங்கள் பயணம் தொடர்ந்தது. தலைநகரிலிருந்து புறப்பட்டு குலூ, மணாலி மற்றும் மணிக்கரண் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்த அனுபவங்களை இது வரை எழுதிக் கொண்டிருந்தேன். இந்த பயணத்தில் பார்த்த இடங்களை பெரும்பாலும் பார்த்தது பார்த்தபடி எழுத முயற்சித்து இருக்கிறேன். பயணத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை வாசித்து மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்ப்பது போல வராது இல்லையா? நாங்கள் ஹிமாச்சலப் பிரதேசத்திலிருந்து தலைநகர் திரும்பி வந்து கொண்டிருக்கும் வேளையில் இங்கே பயணிக்க என்ன தேவை என்பதைப் பார்க்கலாமா?குலூ மணாலி செல்வதற்கு முதல் பகுதியில் சொன்னது போல தலைநகரிலிருந்து சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். குலூ பகுதியில் ராஃப்டிங் வசதிகள் இருக்கிறது என்றால், மணாலியில் பனிப்பொழிவு, பாரா க்ளைடிங், கேபிள் கார் என்று பல வசதிகள் உண்டு. ஒவ்வொரு இடமுமே பார்க்க வேண்டிய இடம் தான். தொடரின் தலைப்பில் சொன்னது போல, ஹனிமூன் செல்பவர்கள் மட்டுமே இங்கே செல்ல வேண்டும் என்பதல்ல, அனைவருமே சென்று வரலாம். தமிழகத்தில் இருந்து செல்வதென்றால், தலைநகர் வரையோ அல்லது சண்டிகர் வரையோ விமானத்தில் சென்று அங்கிருந்து பேருந்திலோ அல்லது தனியார் வாகனத்திலோ செல்லலாம். மணாலி அருகே புந்தர் என்ற இடத்தில் விமான நிலையம் இருந்தாலும் நிறைய விமானங்கள் இல்லை என்பதால் சண்டிகர் வரை வருவது நல்லது.  இரயிலில் பயணித்தாலோ, விமானத்தில் பயணித்தாலோ எப்படி இருந்தாலும் சாலை வழிப் பயணமும் நிச்சயம் உண்டு. மலைப்பிரதேசம் என்பதால் நிறைய பேருக்கு ஒத்துக் கொள்ளாது. தேவையான மருந்துகளை எடுத்துச் செல்வது சாலச் சிறந்தது.போலவே குளிர் பிரதேசம் என்பதால் பெரும்பாலான சமயங்களில் குளிர் இருக்கும். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு குளிர் பழக்கம் இருக்காது என்பதால் தகுந்த உடைகளையும் எடுத்துச் செல்வது அவசியம். அங்கேயே வாடகைக்குக் கிடைக்கும் என்றாலும், அது மட்டுமே போதாது. சரி பொருட்களைப் பற்றிச் சொல்லும் போது அம்மா சொல்லும் ஒரு பழைய குறிப்பு நினைவுக்கு வருகிறது. அம்மாவுக்கு அவருடைய அப்பா சொன்ன குறிப்பு இது! பயணம் செய்யும் போது இந்தப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் செல்லவேண்டும் என்பதை நினைவுபடுத்தும் விதமாக சொல்லிப் பார்த்துக் கொள்ளலாம்!சீப்பு, கண்ணாடி, சிறுகத்தி, கூந்தல் எண்ணை, சோப்பு, பேட்டரி விளக்கு, தூக்குக் கூஜா, தாள், பென்சில், கோவணம், படுக்கை, காப்பிட்ட பெட்டி, ரூபாய், கைகொள்க யாத்திரைக்கே!அப்பாடி எத்தனை விஷயம் சொல்லி இருக்காங்க பாருங்க! கோவணம் கூட சொல்லி இருக்காங்க என்று சிரிப்பாக இருந்தாலும் அந்தக் கால உள்ளாடை அது தானே! குலூ மணாலி செல்வதென்றால் இந்த லிஸ்டில் குளிர்கால உடைகள், மருந்துகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது. உணவு இங்கே அத்தனை பிரச்சனை இல்லை – பெரும்பாலும் சைவ உணவு கிடைக்கும் என்பதால் கவலை இல்லை. வடகிழக்கு மாநிலங்கள் என்றால் வேறு ஏதாவது பொடிகள் எடுத்துச் செல்லலாம்!அது சரி இங்கே பயணிப்பது என்றால் எத்தனை செலவாகும் என்ற கேள்வி உங்களிடத்தில் இருக்கலாம். செலவு கொஞ்சம் அதிகமாகத் தான் ஆகும் என்பதையும் சொல்லி விடுகிறேன். அதுவும் சீசனில் சென்றால் தங்குமிட வாடகை அதிகமாக இருக்கும். கூடவே ராஃப்டிங், பாரா க்ளைடிங், கேபிள் கார், Zorbing போன்ற விளையாட்டு வசதிகளுக்குண்டான கட்டணமும் இருக்கும். உணவு, உறைவிடம், மற்ற கட்டணங்கள், போக்குவரத்து என அனைத்தும் பார்த்தால் எத்தனை செலவாகும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். தலைநகர் தில்லியிலிருந்து சென்று வந்த எங்களுக்கே நான்கு நாட்கள் பயணத்திற்கு ஒருவருக்கு கிட்டத்தட்ட பத்தாயிரம் வரை [தோராயமாக] செலவானது. இது தவிர அங்கே ஏதாவது ஷாப்பிங்க் செய்வதென்றால் அதற்கும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்க!இந்தப் பயணத்தில் என்ன தேவை என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் எங்கள் பயணமும் தொடர்ந்தது. இடைவிடாது தலைநகர் நோக்கி வாகனத்தினைச் செலுத்திக் கொண்டிருந்தார் ஜோதி. இரவு உணவுக்காக வழியில் உள்ள ஒரு உணவகத்தில் நிறுத்தி, தேவையான உணவு சாப்பிட்டு தலைநகர் தில்லி வந்து சேர்ந்த போது பின்னிரவு ஆகிவிட்டது. குழுவினர் அனைவரையும் அவரவர் வீட்டிற்கு அருகே இறக்கி விட்ட பிறகு, ஓட்டுனருக்கும், வண்டிக்குமான வாடகையைக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தோம். நல்லதொரு பயணத்திற்கு உதவிய அவருக்கு நன்றி சொல்லவும் மறக்கவில்லை!இனிய பயணமாக அமைந்த குலூ-மணாலி பயணம் பற்றி “ஹனிமூன் தேசம்தலைப்பில் இதுவரை பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. இத்தொடரில் சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.  இந்தப் பயணம் சென்று வந்த சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு முறை ஹிமாச்சலப் பிரதேசம் செல்ல வேண்டியிருந்தது – அது வேறு ஒரு குழு – வேறு நண்பர்கள் – வேறு இடங்கள்..... அவையும் குளிர் பிரதேசங்கள் தான் என்றாலும் அங்கே கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. அது பற்றி பிறிதோர் சமயத்தில்!பயணம் செல்வது மிகவும் பிடித்தமான விஷயம் பயணத்தினைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் பிடித்திருக்கிறது.  உங்களுக்கும் பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசித்த, கருத்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. 

பயணம் செல்வது மிக நல்ல விஷயம்.  ஆதலினால் பயணம் செய்வோம்....

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து....

29 comments:

 1. ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் ஐயா
  தங்களின் பயணங்கள் தொடரட்டும்
  அருமையான தொடர் ஐயா

  ReplyDelete
  Replies
  1. சென்று வாருங்கள்..... என் உதவி தேவை என்றால் நிச்சயமாக செய்யக் காத்திருக்கிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா....

   Delete
 2. அருமையான பயண விடயங்கள் ஜி தொடருங்கள்... அடுத்ததை.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பயணம் பற்றிய கட்டுரை சில நாட்களில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 3. அழகான பயணக்கதை முடிந்துவிட்டதே என்று வருந்துகிறேன். 'கோவணம் உட்பட' என்ற பட்டியலைப் பாரதிதாசனின் குடும்ப விளக்கிலும் பார்த்த ஞாபகம். ஆனால் அதில் கோவணம் இருந்ததா என்று தெரியாது.

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. பயணக் கதை முடிந்து விட்டதே என்ற வருத்தம் வேண்டாம். அடுத்த தொடர் விரைவில்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   Delete
 4. என் கனவு வீட்டுக்குண்டான இடம் ஐந்தாவது படத்தில் இருக்குண்ணே. பயணத்துக்கு தேவையான பொருட்களின் லிஸ்ட் பயனுள்ளது. அம்மாவும் அப்பாவும் ஜுன் மாசம் காசி, பத்ரிநாத், தாஜ்மகால், டெல்லின்னு வடநாட்டு டூருக்கு வர்றாக

  ReplyDelete
  Replies
  1. கனவு வீட்டுக்குண்டான இடம்! வாங்கிடலாம்! உங்க்ளவரிடம் சொல்லுங்க!

   அட அம்மா-அப்பா வடக்கே வருகிறார்களா? நல்லது. வரும்போது சொல்லுங்கள் [மின்னஞ்சல் முகவரி இருக்கு இல்லையா?] முடிந்தால் சந்திக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 5. Replies
  1. தமிழ் மணம் முதலாம் வாக்கிற்கு மிக்க நன்றி ராஜி!

   Delete
 6. உங்களுடன் பயணித்தது போலவே இருந்தது. இந்த இடங்களுக்குச் சென்றுவர ப்ராப்தம் இருக்கிறதா... பார்க்கலாம்

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது இங்கே சென்று வாருங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. நல்ல குறிப்புகள், நல்ல யோசனைகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. #ஹனிமூன் செல்பவர்கள் மட்டுமே இங்கே செல்ல வேண்டும் என்பதல்ல, அனைவருமே சென்று வரலாம்#
  பனி மூன் தேசம் என்றால் பொறுத்தமாயிருக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. பனிமூன் தேசம்! :) இப்படியும் சொல்லலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 9. நீங்கள் போகுமிடங்களை நன்கு புரிந்து அனுபவிக்கிறீர்கள் என் இளைய மகன் தன் மாமியார் மாமனார் குழந்தைகள் சகிதம் குலூ மணாலி சென்று வந்தனர் அவர்கள் தங்கி இருந்த இடமும் அதன் சுற்றுப்புறங்களுமே புகை ப்படங்களில் இருந்தது நானெல்லாம் உங்களனுபவங்களை வாசித்து திருப்தி கொள்ளத்தான் முடியும்

  ReplyDelete
  Replies
  1. சில இடங்களுக்குப் பயணிப்பது கொஞ்சம் சிரமம் தான். மணாலி செல்வதில் அத்தனை சிரமம் இல்லை. ஆகவே முடிந்த போது சென்று வாருங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 10. குலூ - மணாலி செல்ல விரும்புவோருக்கு தாங்கள் கொடுத்திருக்கும் குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும். செலவில்லாமல் எங்களை குலூ – மணாலிக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. ஒருமுறை செல்லும் ஆசை இருக்கிறது
  அதற்கு இந்தப் பதிவு மிகவும் பயன்படுவதாக
  உள்ளது. நிச்சயமாக செல்லும் முன்
  மீண்டும் ஒருமுறை இந்த்ப் பதிவுகளையெல்லாம்
  வாசித்துச் சென்றால் நிச்சயம் பயனுள்ளதாக
  இருக்கும்.

  படங்களுடன் இந்தப் பகிர்வு மிக மிக அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்களுடன்,...

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள்.... நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 12. மிக நல்லதொரு பயணம், எங்கும் ஸ்னோவாகவே இருக்கிறதே.. நிங்க போயிருந்தபோது ஸ்னோ விழுந்ததா? மழை இருக்கவில்லையா? மழை இருந்தால் நடக்கவே பயமாக இருக்கும். ஒரே வழுக்கலாகிடும்.

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் சென்ற போது மழை இல்லை. புறப்படும் நாள் அன்று கொஞ்சம் மழை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 13. அருமையான பயணத் தொடர்...மிகவும் ரசித்து..வாசித்தோம்...இனியும் உங்கள் பயணங்கள் தொடரும் பதிவுகளும் தொடரும்..அடுத் த தொடருக்குக் காத்திருக்கிறோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. நாங்கள் இந்த பயணத்தில் அடைந்த மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் அளவே இல்லை. அடுத்த பயணத்திற்கான ஏக்கம் எப்போதோ ஆரம்பித்து விட்டது. பயணக்குறிப்புகளை முத்துகோத்தாற் போல் வரிசையாக எதுவும் விடாமல் மிக திறமையாகவும் அருமையாகவும் தொகுத்து படிப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும்படி தந்தமைக்கு மிக்க நன்றி.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பயணம்.... எனக்கும் அதே உணர்வு தான். நல்ல இடமாக யோசித்து சொல்லுங்க... ஒரு ட்ரிப் அடிக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா ஜி.

   Delete
 15. என்ன ஒரு குறிப்பு மணாலியை நேரில் கண்டது போன்ற அனுபவம் உருவாகுறது....தொடர்ந்து எழுதுங்கள் நன்றி!

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....