வெள்ளி, 5 மே, 2017

கேசரி, I am waiting.... – கொழுக்கட்டையான புட்டு


படம்: கேசரி...
படம் இணையத்திலிருந்து...

கேசரிக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம்! கேசரி பிடிக்கும் என்றாலும் ஒவ்வொரு முறை கேசரி கிடைக்கும்போதும், வைராக்கியம் கொள்வேன் – இனிமே சத்தியமா கேசரி சாப்பிடக் கூடாது என்ற வைராக்கியம் தான். ஆனாலும் ஏனோ என்னை இந்த கேசரி விடுவதே இல்லை!  ஏற்கனவே திருவரங்கம் வந்திருந்த ஒரு முறை, பக்கத்து வீட்டிலிருந்து பிறந்த நாள் ஸ்பெஷலாகக் கிடைத்த பச்சை கேசரி பற்றி வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். இந்த பயணத்திலும் கேசரி என்னை விடுவதாக இல்லை!


பக்கத்து வீட்டில் புதிதாய் திருமணம் ஆன தம்பதிகள் – கணவன் வேலைக்குச் சென்றுவிட, அந்தப் பெண் “அக்கா, அக்காஎன என்னவளை அழைத்துக் கொண்டு காலையிலேயே வந்து விடுகிறார். வேலையை செய்த படியே என்னவளும், மகளும் அப்பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் வழக்கம் போல, என்னவள் சொல்வது போல “லேப்டாப்பைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கிறேன்!”  என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் அந்தப் பெண் சென்ற பிறகு ரிப்போர்ட் கிடைத்து விடுகிறது – மனைவியிடமிருந்தும் பெண்ணிடமிருந்தும்!

சமீபத்தில் தில்லியிருந்து நண்பர்கள் வந்திருக்க, அந்தப் பெண்ணுக்கு பயங்கர கஷ்டம் – இங்கே வந்து பேசிக் கொண்டிருக்க முடியவில்லை என்ற வருத்தம் தான்! அந்த நாட்களில் அப்பெண்ணின் பிறந்த நாள் - காலையிலேயே காட்பரீஸ் சாக்லேட் பாக்கெட்டுடன் வந்து விட்டார். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் வந்ததால், சாக்லேட்டை எடுத்துக் கொண்டு வாழ்த்தி அனுப்பினோம். போகும் போது, “அக்கா, எங்கேயும் வெளியே போறீங்களா? கேசரி செஞ்சு எடுத்துட்டு வரேன்!என்று சொல்லிவிட்டுப் போக, நான் கொஞ்சம் டரியல் ஆனேன்! கேசரி வரவே இல்லை, வீட்டிற்குச் சென்றதும் ஜன்னல் கதவுகள் எல்லாம் சாத்தி விட்டார்! கேசரியை விடுங்கள், கேசரி செய்யும் வாசனை கூட வரவில்லை!

இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன, இன்னும் கேசரி வந்த பாடில்லை. வீட்டுக்குப் போனவர் கேசரி செய்தாரா, ஏன் இன்னும் கொண்டுவரவில்லை என்ற யோசனை வந்தது, என்றாலும் கேட்கவில்லை – “ஏண்டா உனக்கு இந்த வேண்டாத வேலைஎன்ற ஜாக்கிரதை உணர்வு தான்! ஏற்கனவே பச்சைக் கேசரி வந்த மாதிரி பிங்க் வண்ண கேசரி வந்தால்! எனிவே! வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருந்தேன்....

இன்று காலை உணவை முடித்துக் கொண்டு நல்ல உறக்கத்தில் இருந்தேன். என்னவளும் மகளும் வேலைகளை முடித்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருக்க பக்கத்து வீட்டுப் பெண் வந்திருக்கிறார். நான் கேட்க வேண்டிய கேள்வியை என்னவள் அவளிடம் கேட்டு விட்டாராம்! அதாங்க கேசரி எங்கே என்று தான்!

இங்கே இன்னுமொரு விஷயமும் சொல்ல வேண்டும்.  பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு சமையல் தெரியாது என்கிற மிக முக்கியமான விஷயம் தான் அது! டிஃபன் செய்துவிடுவேங்கா, ஆனா, சமையல் தான் செய்ய வரல! ஒரு நாள் சாதம் வைத்திருக்கிறார், இறக்கிய போது பார்த்தால், சாதம் மஞ்சள் நிறத்தில் இருந்ததாம்! ஏன் என்று தெரியலக்கா என்று சொல்ல, என்ன செய்தார் என்று கேட்டதில் கிடைத்த விவரம் – சாதத்திற்கு வைக்கும்போது குக்கரில் அரிசி போட்டு, தண்ணீர் விட்டு, ஒரு சிறிய பாத்திரத்தில் பருப்பும் மஞ்சளும் சேர்த்து வேக வைக்க, தண்ணீர் கொதித்து பாத்திரம் சாய, சாதம் முழுவதும் மஞ்சள் நிறத்தில்!

இப்படி சமையல் செய்பவர் கேசரி எங்கே செய்திருக்கப் போகிறார்! இன்றைக்கு கேட்ட போது கிடைத்த பதில் – இல்லைக்கா எனக்கு கேசரி செய்யத் தெரியாது! எப்படியாவது கேசரி செய்து உங்களுக்குத் தருகிறேன் என்று சொன்னதோடு, “ஏங்க்கா, கேசரி எப்படி செய்யறது?என்று கேட்டு இருக்கிறார்.  கூடவே தன்னுடைய புட்டு கதையையும் சொல்லி இருக்கிறார்.  அது என்ன புட்டு கதை என்ற ஆர்வத்துடன் என்னவளும்!


படம்: புட்டு...
படம் இணையத்திலிருந்து...

இங்கே வருவதற்கு முன்னர் அந்தப்பெண் தனது கணவனுடன் தங்கி இருந்தது ஈரோடு நகரத்தில். அங்கேயும் பக்கத்து வீட்டு அக்காக்களுடன் தான் அவரது பகல் பொழுது போகுமாம். ஒரு நாள் அங்கே பக்கத்து வீட்டில் இருப்பவரிடம், நாளைக்கு உங்களுக்கு புட்டு செஞ்சு தரேன்னு சொல்லி இருக்க, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் “புட்டு வரும், புட்டு வரும்னு வாசலையே பார்த்துக் கொண்டு காத்திருந்தார்களாம்.புட்டு வந்தபாடில்லை. அந்தப் பெண்ணும் வந்தபாடில்லை!

சரி வேற வழியில்லை, நாமே சென்று கேட்கலாம் என்று அந்தப் பெண் வீட்டிற்குச் செல்ல, புட்டு வாசமே வரவில்லை! சரி வெட்கத்தை விட்டு கேட்டுவிடலாம் என, “ஏம்மா, புட்டு தரேன்னு சொன்னியே, இன்னும் கொடுக்கலையே, நான் காலையிலிருந்து புட்டு வரும்னு காத்திருக்கிறேன் என்று சொல்ல, அப்போது தான் புட்டு செய்த கதை வண்டவாளம் தண்டவாளம் ஏறி இருக்கிறது! “எனக்கு புட்டு செய்யத் தெரியாதுக்கா, முயற்சி செய்து பார்க்க, புட்டு டைட்டா வராம, கொழகொழன்னு வந்துடுச்சு... என்ன பண்றதுன்னு தெரியல, அதுனால தான் தரல!என்று சொல்ல, பசியோடு காத்திருந்த பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு அதிர்ச்சி! அட இன்னிக்கு கொலை பட்டினிதான் போ! என்று நினைத்துக் கொண்டு, “புட்டு செய்யறேன்னு சொல்லி, என்னை வெச்சி செஞ்சிட்டீயே நீ!என்று சொன்னதோடு, நீ செஞ்சதைக் கொண்டு வா, ஏதாவது பண்ணலாம்! என்று சொல்லி, வெங்காயம் தக்காளி அதில் நறுக்கிப் போட்டு, புட்டு மாவை பிடித்துப் பிடித்து வைத்து வேக வைத்து கொழக்கட்டையாக மாற்றி சாப்பிட்டு விட்டார்களாம்!

இந்த விஷயம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் போது நான் நல்ல உறக்கத்தில்! அதற்கடுத்த விஷயமாக பால்கோவா செய்தது பற்றி சொல்ல ஆரம்பிக்கும் நேரத்தில் மதிய உணவிற்கு அவர் கணவன் வந்து விட, “நான் அப்புறம் வந்து சொல்றேங்கா!என்று வீட்டிற்குச் சென்று விட்டார். என்னவளும், மகளும் சிரித்தபடியே வந்து உறங்கிக் கொண்டிருந்த என்ன எழுப்பி கேசரி கிடைக்காததன் காரணம் சொல்லச் சொல்ல, இதோ இங்கே உங்களுடன் பகிர்ந்து விட்டேன்!

பால்கோவா கதை இன்னுமொரு நாளைக்குச் சொல்கிறேன்!

நாளைக்கு வேறு பதிவில் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....


26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 2. ஹஹஹஹ...புட்டு கொழுக்கட்டை....அதை உப்புமாவாகக் கூட செய்திருக்கலாமோ....ஜி...

  கேசரி...பாயாசம் ஆகிருக்குமோ...அது கூட தேவலாம்தான். ரவா கஞ்சியாகாமல்.....

  பாவம் அந்தப் பெண்...யாரிடமாவது கருகி கொள்ளலாம்...ம்ம்ம்ம் ட்ரையல் அண்ட் இரர்....பிராசஸ்..போலும்...
  கீத்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உப்புமாவாகக் கூட செய்திருக்கலாம்! :) ஏற்கனவே உப்புமா என்றால் ஓடுபவர்கள் அதிகமாச்சே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 3. பால்கோவா திங்க மறுபடியும் வர்றேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பால்கோவா கதை - விரைவில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. ஹா ஹா ஹா சூப்பர் விடுப்ஸ்.... இருங்க மிகுதிக் கதை கேட்க கச்சான் வறுத்து எடுத்துக்கொண்டு வாறேன்ன்ன்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கச்சான் - கொஞ்சம் விம் போட்டு விளக்கினால் நல்லது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா....

   நீக்கு
  2. கச்சான் - வேர்க்கடலை/நிலக்கடலை.

   நீக்கு
  3. ஓ... கச்சான் என்றால் வேர்க்கடலையா? தகவலுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. ஆஹா! இப்போவே அந்தப் பெண் திப்பிசச் சமையலை ஆரம்பிச்சுட்டாங்களா? வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமையலே தெரியாத போது திப்பிச வேலை எப்படித் தெரியும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 6. கீதா மேடம்... அந்தப் பெண் இல்லை. புட்டு வரும்னு காத்திருந்த பெண், கடைசியில் கொழகொழ மாவை திப்பிசம் பண்ணிச் சாப்பிட்டிருக்கிறார்.

  வெங்கட்டுக்கு ஶ்ரீரங்கம் போயாச்சுனா, "ராஜா காது கழுதைக்காது"க்கு விஷயதானம் வீட்டில் உள்ளவர்களால் கிடைத்துவிடுகிறது.

  கோபு சாருக்கு கிடைத்த அடை கதைபோல் ஆகிவிட்டது. சரி.. வீட்டிலாவது செய்துதந்தார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே... திப்பிச வேலை செய்தது வேறொருவர்!

   வீட்டிலேயே விஷய தானம்! :)

   வீட்டிலாவது செய்து தந்தார்களா? :) இது வரை இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. கேசரி போலவே அது குறித்த பதிவும்
  நல்ல சுவை

  (நானும் கேசரி ரசிகன்தான்
  ஆனால் உடன் பஜ்ஜியும் காரச் சட்னியும்
  வேண்டும் )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடன் பஜ்ஜியும் காரச் சட்னியும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 10. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
  அனுபவத்தை ரசித்தேன். பால்கோவா கதைக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 11. சில பருப்பு வகைகளின் பெயர்கள் கூடத்தெரியாமல் பலர் இருக்கிறார்கள் துவரம்பருப்புக்குப் பதில் கடலைப் பருப்பு போட்டு சாம்பார் செய்தகதையை என் மருமகள் சொல்வதுகேட்க சுவாரசியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பெண்ணுக்கும் துவரம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாதாம் - ஒரே குழப்பம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 12. வணக்கம்
  ஐயா

  நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....