எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, May 4, 2017

காதல் எக்ஸ்பிரஸ் – சத்திரம் - பெட்டவாய்த்தலை வழி முக்கொம்பு!


படம்: இணையத்திலிருந்து....


முக்கொம்பு – திருச்சியில் இருக்கும் மூன்று சுற்றுலாத் தலங்களில் [கோவில்கள் அல்லாத!] முதலாவது கல்லணை, இரண்டாவது முக்கொம்பு, இப்போது மூன்றாவதாக வண்ணத்துப் பூச்சி பூங்கா! இந்த இரண்டாவது இடத்திற்கு சில முறை சென்றதுண்டு. கல்லூரி சமயத்தில் நெய்வேலியிலிருந்து ஒரு நாள் சுற்றுலாவாக திருச்சி வந்தபோதும் இங்கே சென்றிருக்கிறேன் – கல்லூரி தோழர்கள்/தோழிகளோடு! அதன் பிறகு பல முறை குடும்பத்தினரோடு. ஒவ்வொரு முறை செல்லும்போதும், இனிமேல் இங்கே வரக்கூடாது என்று பேசியபடியே தான் திரும்புவோம்! சரியான பராமரிப்பு இல்லை, குரங்குகள் தொல்லை மற்றும் காதலர்கள் தொல்லை!


இந்த முக்கொம்பு செல்ல டவுன் பஸ் தான் நிறைய இருக்கிறது. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெட்டவாய்த்தலை செல்லும் 97-ஆம் நம்பர் பேருந்தும், நங்கவரம் செல்லும் 8-ஆம் நம்பர் பேருந்தும் மட்டுமே முக்கொம்பு செல்லும். வருடத்தின் எல்லா நாட்களிலுமே முக்கொம்பு செல்வதற்காகவே இந்தப் பேருந்துகளில் செல்வோர் உண்டு! விடுமுறை நாட்கள் என்றால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். எப்பொழுது இந்தப் பேருந்தில் சென்றாலும், முக்கொம்பு செல்லும் சில பல காதல் ஜோடிகளைப் பேருந்தில் பார்க்க முடியும்!

ஒவ்வொரு முறை திருச்சி வரும்போதும், இந்தப் பேருந்தில் பயணிக்க வேண்டியிருக்கிறது. முக்கொம்பு செல்வதற்காக இல்லை! அந்த இடம் தாண்டி இருக்கும் திருப்பராய்த்துறை செல்வதற்காக! இந்த முறையும் திருப்பராய்த்துறை செல்லும் போதும் இந்த காதல் எக்ஸ்பிரஸ் பேருந்தில் தான் பயணம். குறைந்தது ஐந்து காதல் ஜோடிகளாவது இருந்திருப்பார்கள். அவர்கள் பேருந்தில் அடித்த லூட்டி, மற்றவர்களை பாடாய் படுத்தியது! அவர்களுக்குள்ளும் போட்டி – பொது வெளியில், யார் அதிகமாக தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள் என!

ஒருவர் தலையை மற்றவர் கோதுவதும், காற்றில் அலையும் கேசத்தினை சரி செய்வதும், ஒருவருக்கு வியர்க்க, மற்றவர் தனது கைக்குட்டையால் ஒத்தி விடுவதும், ஒரே அலைபேசியில் இரண்டு பேரும் சேர்ந்து பாட்டு கேட்பதும் [ஒரு ஒயர் காதலன் காதில், மற்றது காதலியின் காதில்!], கைகளைப் பிடித்துக் கொள்வதும், கட்டி அணைப்பதும், ஏதோ அந்தப் பேருந்தில் அவர்களைத் தவிர யாருமே இல்லை என்ற உணர்வுடன் தான் பயணிக்கிறார்கள். என்னைச் சுற்றி இருந்த அத்தனை சீட்டுகளிலும் காதல் ஜோடிகள்!

நான் ஒரு பெரியவர் பக்கத்தில் அமர்ந்திருக்க [அவர் ஜன்னலோரத்தில், நான் வெளிப்பக்கம்!] இடமே போதவில்லை... அப்படி இருக்க, காதல் ஜோடிகள் அமர்ந்திருந்த சீட்டுகளில் ஒரு சிறுவனை உட்கார வைத்துவிடலாம் – அவ்வளவு நெருக்கமாக, ஈருடல், ஓருயிராக அமர்ந்திருக்கிறார்கள்! எனக்கு முன்னே இருந்த இருக்கையில் இருந்த பெண், காதலன் தோளில் தலை சாய்க்க, காதலனோ, அவளைத் தடுத்து, “நீ தூங்கறதுக்கா உன்னை அழைத்து வந்தது, அங்க பாரு, அந்த ஜோடி என்னமா விளையாடுது, நீயும் இருக்கியே!என்று செல்லமாகக் கடிந்து கொள்ள, அங்கேயும் விளையாட்டு ஆரம்பம்!

பெரும்பாலான காதல் ஜோடிகளைப் பார்த்தபோது ஒரு விஷயம் மனதை நெருடியது – வந்திருந்த அனைத்து ஜோடிகளிலும் பெண்கள் அழகாய் இருக்கிறார்கள் அவர்களின் காதலனைப் பார்த்தால் இன்னுமொரு முறை பார்க்க முடியாத அளவுக்கு தான் இருக்கிறார்கள்! எதைப் பார்த்து இந்த காதல் வருகிறது என்று புரிவதில்லை. அழகு நிலையானது அல்ல என்று தெரிந்திருந்தாலும், இத்தனை அழகான பெண்ணுக்கு இவ்வளவு மோசமாக ஒரு காதலனா என்ற எண்ணம் தோன்றாமல் இருப்பதில்லை! புற அழகு முக்கியமல்ல, அக அழகே முக்கியம் என்று சொல்லுவார்களாக இருக்கும்!

சரி எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும், அவர்கள் காதல் செய்தால் உனக்கென்ன பிரச்சனை? உனக்கு வயதாகிவிட்டது, அதனால் தான் தப்பாகத் தோன்றுகிறது என்று சிலர் சொல்லலாம்! என் காதல், என் உரிமைஎன்று காதலர்களும் காதலிகளும் கொடி பிடிக்கலாம், கோஷம் போடலாம்! அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உண்டு!  நான் ஒத்துக் கொள்கிறேன். காதல் செய்வது அவர்களது தனி உரிமை! ஆனால் அந்தக் காதலை பொது இடத்தில் செய்வது ஏன் என்று தான் பலரும் கேட்கிறார்கள். எது பொது இடம், என் காதலியின் உதடு, எனக்கும் அவளுக்குமே சொந்தமானது என்று கவிதை எழுதும் காதலர்கள் உண்டு!

தலைநகர் தில்லியில் பார்த்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தலைநகரின் ஜன்பத் சாலை சந்திப்பு. வாகனங்களும், பாதசாரிகளும் நூற்றுக் கணக்கில். அந்தச் சந்திப்பின் அருகே நடைபாதையில் ஒரு வெளிநாட்டு ஜோடி – கைகளைப் பிடித்தபடி, கட்டி அணைத்தபடி காதல் மொழி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வெகு சாதாரணமாக முத்தம் – உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள் – Passionate Kiss! வைத்த வாயை, ஒன்றிரண்டு நிமிடங்கள் எடுக்கவே இல்லை! சுற்றிலும் பலர் பார்த்துக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியவே இல்லை! அவர்கள் நாட்டில் இது சாதாரண விஷயம் என்றாலும் இங்கே அப்படி அல்லவே! அவர்களைப் பார்த்தபடியே கார் ஓட்டிய வாகன ஓட்டி முன்னால் நின்ற பேருந்து மேல் இடித்து சத்தம் வந்த பிறகு தான் அவர்களுக்கு சூழல் புரிந்தது! சிரித்தபடியே அங்கிருந்து அவர்கள் நகர, பேருந்து ஓட்டுனருக்கும், கார் ஓட்டுனருக்கும் பயங்கர சண்டை!

சரி திருச்சிக்கு வருவோம்! அவர்கள் காதல் செய்யட்டும், என்னவேண்டுமானாலும் செய்யட்டும். அது அவர்கள் உரிமை! பேருந்தில் இருக்கும் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் பதில் சொல்ல முடியவில்லை அவர்களது பெற்றோர்களால்! எனக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன், அவனது அம்மாவிடம் “அந்த அண்ணா, அக்காவ என்ன பண்ணறாங்க?என்று கேட்க, அம்மாவிடம் பதில் இல்லை! ஜன்னல் வழியே வெளியே பாரு, எவ்வளவு மரம், செடி, கொடியெல்லாம் இருக்கு!என்று சமாளிக்க வேண்டியிருந்தது! காதல் எக்ஸ்பிரஸில் காதல் லீலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது!

இப்போது திருச்சியில் காதலர்களுக்கு இன்னுமொரு வசதி கிடைத்து விட்டது! Additional-ஆக வண்ணத்துப் பூச்சி பூங்காவும் கிடைத்துவிட, ஒவ்வொரு பூச்செடிக்குப் பின்னாலும் ஒரு ஜோடி! எஞ்சமாய் தான்! நடத்துங்க நடத்துங்க!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....


32 comments:

 1. பதிவினில் காதல் ரஸம் மிகவும் தூக்கலாக உள்ளது.

  நானும் திருச்சியில்தான் இருக்கிறேன். என்ன பிரயோசனம்?

  அடிக்கும் வெயிலில் வீட்டை விட்டு எங்கும் நகர விரும்பாததால், இதுபோன்ற இன்றைய இயல்பான இயற்கையான நிகழ்வுகள் பலவற்றைக் கோட்டை விட்டுள்ளேன் போலிருக்குது. :(

  பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள் ... ஜி.

  ReplyDelete
  Replies
  1. காதல் ரசம் மிகவும் தூக்கலாக உள்ளது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. பொற்ற்ற்ற்ற்ற்ற்ற்றாம

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கொஞ்சம் “ற்ற்” அதிகமா போடலாம் போல இருக்கே! :) நான் உங்களுக்குச் சொன்னேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 3. >>> குரங்குகள் தொல்லை..<<<

  குரங்குகளுக்குத் தான் தொல்லை!..

  அங்கே முக்கொம்பு காவிரியில் முதலைகள் கிடக்கின்றன என்றார்களே..

  கிடக்கின்றனவா.. இல்லை.. மண்ணோடு சேர்த்து கடத்திக் கொண்டு போய் விட்டார்களா?..

  ReplyDelete
  Replies
  1. முதலைகளை மணல் முதலைகள் அள்ளி இருப்பார்களோ! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. வணக்கம்.

  ஈராண்டுகள் நான் சென்ற புகைவண்டி வழித்தடத்தில் எலமனூர் நிறுத்தத்தில் உள்ளது இவ்வூர்.

  அங்குள்ள நண்பர்களையும், காதல் ஜோடிகளுக்கு முக்கொம்பில் நடக்கும் ஆபத்துகளையும் அறிவேன்.

  அங்கு வரும் காதல் ஜோடிகளில் ஆண்களை விரட்டிவிட்டு, பெண்களை அருகில் உள்ள தோப்பிற்குள் தூக்கிச் சென்று வேட்டையாடும் கூட்டம் இருக்கிறது.

  பெரும்பாலும் பெற்றோருக்குத் தெரியாமல் வருபவர்கள் என்பதால் இது குறித்துக் காவல்துறையில் புகார் எதுவும் அளிக்கப்படுவதில்லை.

  உங்கள் பதிவு மீண்டும் நினைவூட்டியது.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற இடங்களில் ஆபத்தும் உண்டு என்பதை இந்த ஜோடிகள் புரிந்து கொண்டால் நல்லது.....

   எலமனூர் ரயில் நிலையம் மூடிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோசப் ஜி!

   Delete
 5. அது சரி திருப்பராய்த்துறைக்கு எதுக்கு போக காரணம்.?

  இராமகிருஷ்ண மடத்துக்கா? கரூர் பேருந்தில் ஏறி பெட்டவாய்த்தலை டிக்கட் எடுத்து திருப்பராய்துறை டோல்கேட்டில் குதித்திருந்தால் காதல் கன்றாவிகளை கண்டிருக்க வேண்டாம் தலைவா.

  துரை.தியாகராஜ்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகை போலிருக்கிறது. மகிழ்ச்சி.

   மடத்திற்கு அல்ல! என் பதிவுகளை படித்திருந்தால் தெரிந்திருக்கும். அங்கே என் உறவினர் உண்டு! பெரும்பாலான தனியார் பேருந்துகள் ரொம்பவே கிராக்கி செய்து கொள்கிறார்கள். திருப்பராய்த்துறை எல்லாம் நிக்காது என்று!

   தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை தியாகராஜ் ஜி!

   Delete
 6. மும்பை 90ல் போனபோதுதான் இதுமாதிரி, ஒவ்வொரு செடிக்குப் பின்னாலும் ஜோடி ஜோடியாக எல்லா இடங்களிலும் இருப்பதைப் பார்த்தேன். அதற்கு, அங்கு பிரைவசி வீட்டில் கிடைக்காது என்று காரணம் சொன்னார்கள் (பலர் ஒரு அறையிலேயே சேர்ந்து படுக்கும் வழக்கம் உண்டு, இடக்குறைவால் என்றனர். நிஜமாவே கணவன் மனைவியாவும் இருக்கலாம்).

  Passionate scenes மேற்குலகில் (லண்டன், பாரிஸ்) நிறைய பார்க்கலாம். முதலில், அந்தப் பக்கம் பார்க்காமல் இருக்க சிரமப்பட்டேன். ரொம்ப இன்டிமேட் படங்களும் சுவர்களில் விளம்பரமாகப் பார்க்கலாம். ஹீத்ரூ ஏர்போர்ட்ல ரெண்டு பசங்க (18-20 வயது?) பயங்கரமா கிஸ் பண்ணுவதைப் பார்க்க ரொம்பவும் ஒருமாதிரியாக இருந்தது.

  ஏதோ... நம்ம மக்களும் மேற்குலகை ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கு. கொஞ்ச வருஷம் இந்த கலாச்சார வித்தியாசம் டைஜஸ்ட் பண்ண கஷ்டமாத்தான் இருக்கும்.

  @கோபு சார் - நான் நிஜமாகவே உடற்பயிற்சிக்காகத்தான் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் தினமும் நடக்கிறீர்கள் என்று நினைத்தேன். அல்லது ஒருவேளை மலைக்கோட்டை தரிசனத்துக்காகவும் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் இயற்கை நிகழ்வுகளைப் பார்க்கத்தான் முயற்சி செய்கிறீர்கள் என்று தெரியாமல் போய்விட்டது :). (மலைக்கோட்டையில் ஏறும்போது அங்கேயும் இத்தகைய ஜோடிகள் பலவற்றை நான் பார்த்தேன்)

  ReplyDelete
  Replies
  1. வெளி நாட்டில் இப்படி Passionate Scenes சகஜம் தான். இங்கே இன்னும் அந்த அளவிற்கு இல்லை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மொஹம்மத்....

   Delete
 8. என்ன சார் ஆச்சு உங்களுக்கு. வெளியே வெயில் தகிக்கிறது. உங்கள் பதிவிலும் தகிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வெயில் கொஞ்சம் அதிகம் தான்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 9. பல இடங்களில் இந்தக் காதல் அட்ராசிட்டிஸ் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது...அவர்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் நமக்குக் கூச்சமாக இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. நமக்குத் தான் கூச்சமாக இருக்கிறது. உண்மை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. நீங்கள் சொல்லிப்போன
  அழகான பெண்கள்
  கொஞ்சம் அது குறைவான ஆண்கள்
  குழப்படி எனக்கும் கொஞ்ச நாள் இருந்தது

  அப்புறம் அதிகம் விசாரித்ததில்
  இந்த அழகியப் பெண்கள் செலவழிக்கும்
  தகுதியை மிக முக்கியமானத் தகுதியாய்
  அழகாய் கொள்கிறார்கள் என்பதுப் புரிந்தது

  நியாமான ஆதங்கத்தைப்
  பதிவு செய்த விதம் அருமை

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
  Replies
  1. செலவழிக்கும் தகுதியே மிக முக்கியமான தகுதி! இருக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. நாட்டில் ஒழுக்கம் கெட்டுவிட்டது! எதுவுமே சரியில்லை. என்ன பேருந்து சொன்னீர்கள்? நானும் போய்ப்பார்க்கிறேன் அவர்கள் கொட்டத்தை!

  ReplyDelete
  Replies
  1. திருச்சி வந்தால் சொல்லுங்கள்! நீங்க அங்க பிக்னிக் சென்று வந்த பிறகு நாமும் சந்திப்போம்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. ஹாஹா, நானும் வெளிநாட்டில் இருந்தாலும், இங்கே பல முறை வந்திருந்தாலும் எங்கேயும் இது போல் காணக் கிடைத்தது இல்லை! :))) நல்லவேளை! நம் நாடு இந்த விஷயத்தில் வெளிநாடுகளை விட முன்னேறி விட்டது.

  ஞானசம்பந்தரும், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"னார். ஆனால் அவர் காலத்துக் "காதல்" வேறே! இப்போதைய காதல் வேறே! அர்த்தமே மாறிப் போச்சே! "நாற்றம்" மாறின மாதிரி!:(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 13. பொது இடங்களில் இப்படி நடந்து கொள்பவர்களை காணும் பொழுது எனக்கு பிடறியில் இரண்டு வைக்க வேண்டும் போலிருக்கும்.

  சத்தியமாக எனக்கு பொறாமை கிடையாது ஜி நானும் பெண் குழந்தை பெற்றவன்தான்

  ReplyDelete
  Replies
  1. நமக்கு பொறாமை இல்லை ஜி. வருத்தம் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 14. இன்னும் யுவ வாஹினிகள் திருச்சி பக்கம் வரவில்லை போல் இருக்கிறது எல்லோருக்கும் எதையும் செய்ய நேரம் வசதி கிடைப்பதில்லை. ஆகவே சிலர் பொது இடங்களில் செய்கிறார்கள் காண்பவைகள் நமக்கு வித்தியாசமாய்த் தெர்ரிகிறது இங்கு ஒரு பார்க்கில் ஒரு ஜோடி தனியே பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு கண்டிக்கப் போன ஒரு பெண்மணி நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டார்

  ReplyDelete
  Replies
  1. யுவ வாஹினி! :)

   நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்! பாவம் அந்தப் பெண்மணி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 15. இதுபோன்று காதலர்கள் (!) பொது இடங்களில் நடந்துகொள்வதற்கு காரணம் இந்த ஊடகங்கள் தான். இலை மறைவு காயாக இருந்தவைகளை வெளிச்சம் போட்டு காட்டிய காரணத்தால் தான் இதெல்லாம் நடைபெறுகிறது என எண்ணுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஊடகங்களின் பங்கும் இருக்கத்தான் செய்கிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. டீன்பெண்களை பொறுத்தவரை உணர்வுகள் போதும் ... அதுதான் என்று நினைக்கேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....