எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 30, 2018

குஜராத் போகலாம் வாங்க – மாடு பிஸ்கட் சாப்பிடுமாஇரு மாநில பயணம் – பகுதி – 19

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


த்வாரகாதீஷ் கோவில் - ஒரு கிட்டப் பார்வை....

இதற்கு முந்தைய பகுதியில் சொன்னது போல, இரவு 08.45 மணிக்கு த்வாரகா வந்த நாங்கள் த்வாரகாநாதனை தரிசித்து, ஹோட்டல் ஸ்ரீஜி தர்ஷனில் இரவு தங்கினோம். நல்ல உறக்கம். காலையிலேயே புறப்பட்டால் நல்லது என முடிவு செய்ததால், 05.30 மணிக்கே எழுந்து விட்டேன். தங்குமிடத்தில் உணவகம் இல்லை என்பதால் கீழே சாலைக்குச் சென்று தேநீர் அருந்தலாம் என என்னுடன் தங்கியிருந்த பிரமோத்-ஐயும் அழைத்துக் கொண்டு கீழே சென்றேன். கீழே இருந்த கடையில் நல்ல கூட்டம்! அதிகாலையிலேயே கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் நிறைய பேரை பார்க்க முடிந்தது. தேநீர் கடையிலும் கூட்டம். ஒரு வழியாக எங்களுக்கும் தேநீர் கிடைத்தது. தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது பார்த்த காட்சி…ருக்மணி தேவி கோவில் வாசலில்.....

த்வாரகா, பிருந்தாவன், கோகுலம், மதுரா என கிருஷ்ணர் கோவில்கள் இருக்கும் எல்லா இடங்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் – பசுக்கள் – மாடுகள்! ஊரில் மனிதர்களைப் போலவே ஆநிரைகளும் நிறைந்து இருக்கும். த்வாரகாவிலும் நிறைய பசுக்கள் – தன்னிச்சையாக சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. யாரும் அவற்றை துன்புறுத்துவதில்லை. ஏதாவது உண்ணக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். பொதுவாக புல், வைக்கோல் போன்றவை தானே – நகரத்து மாடுகள் பிளாஸ்டிக், சுவரொட்டிகள் போன்றவற்றை உண்கின்றன என்பது வேறு விஷயம்! ஒரு பக்தர் டீக்கடையில் இரண்டு மூன்று பாக்கெட் பிஸ்கெட் வாங்கி பசுக்களுக்கு ஒவ்வொன்றாகக் கொடுக்க, நாக்கை நீட்டி நீட்டி சுழட்டி வாய்க்குள் பிஸ்கெட்டுகளைத் தள்ளி, ”கரக் முரக்” எனச் சாப்பிட்டன! பால் தரும் பசு சாப்பிட்ட பிஸ்கெட் – மில்க் பிக்கிஸ்!


ருக்மணிக்கான தனிக்கோவில்....

தேநீர் அருந்திய பிறகு மீண்டும் அறைக்குச் சென்று உடைமைகளை எடுத்துக் கொண்டு அறையைக் காலி செய்தோம். உடைமைகளை வாகனத்தில் வைத்து விட்டு, கோவிலுக்குச் சென்று தரிசனம் – இரவை விட அதிக பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், தரிசனம் முடித்து வெளியே வந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். ஐந்து பேரும் பிரிந்து விட, மூன்று பேர் மட்டும் வாகனத்திற்கு வந்து காத்திருக்க, இருவர் எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. அரை மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் அவர்கள் வந்தார்கள் – கோவிலின் பின்புறம் சென்று பார்த்து வந்தார்களாம். அந்த நாளும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே என்பதால் சீக்கிரம் எழுந்தும் திட்டமிட்டபடி த்வாரகா நகரிலிருந்து புறப்பட முடியவில்லை,


விற்பனை ஜோராக....

த்வாரகாவில் த்வாரகாநாதனை தரிசித்த பிறகு, தனிக் கோவில் கொண்டிருக்கும் ருக்மணியினை தரிசிக்கச் சென்றோம். த்வாரகாவில் ருக்மணிக்கு தனியே தான் கோவில். ஏன் என்பதற்கு ஒரு கதையுண்டு. சென்ற பயணத்தொடரிலும் இந்தக் கதையைச் சொல்லி இருக்கிறேன் – படிக்காதவர்கள் வசதிக்காக, மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்!

கிருஷ்ணரும், ருக்மிணியும் துர்வாச முனிவரை சந்தித்து அவரை தங்களது இல்லத்திற்கு விருந்துக்கு அழைக்கிறார்கள். அவர்கள் இல்லத்துக்கு வர சம்மதிக்கும் துர்வாசர் அதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார். அவரை ஒரு தேரில் அமரவைத்து, அத்தேரினை விலங்குகள் கொண்டு செலுத்தாமல், கிருஷ்ணரும், ருக்மிணியும் இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அப்படிச் செய்தால்தான் வருவேன் என்றும் சொல்ல, கிருஷ்ணரும், ருக்மிணியும் தேரில் துர்வாசரை அமரச் செய்து தேரை இழுத்துச் செல்கிறார்கள்.

தேரை இழுத்துச் செல்வது கொஞ்சம் கடினமான வேலை தானே....  ருக்மிணி தேவிக்கு ஒரே தாகம்.  தண்ணீர் வேண்டுமே குடிக்க எனக் கேட்க, தாகத்தினை தீர்க்க கிருஷ்ணர் தனது கட்டை விரலை பூமியில் அழுத்த அங்கிருந்து கங்கை ஊற்றாக பெருக்கெடுத்தது. இருந்த தாகத்தில் ருக்மிணி தன்னை மறந்து தண்ணீரை குடித்து விட, துர்வாச முனிவருக்கு மூக்குக்கு மேல் கோபம்! அவருடைய கோபம் தான் பிரபலமான ஒன்றாயிற்றே...  தன்னை மதித்து தனக்கு முதலில் தண்ணீர் தராமல் ருக்மிணியே தண்ணீரை முதலில் குடித்துவிட்டதால், ருக்மிணி தேவி கிருஷ்ணரை விட்டு விலகியே இருக்க வேண்டும் என்று சாபம் கொடுத்துவிட்டாராம்.  கூடவே இப்பகுதியில் இனி நல்ல தண்ணீரே கிடைக்காது என்றும் சாபம் கொடுத்துவிட்டாராம்! நல்ல கோபம் – நல்ல சாபம்!


கரை/தரை தட்டிய படகுகள்....
ருக்மணி கோவில் அருகே.....

கோவில் வாசலில் நிறைய சாதுக்கள்! கையேந்தும் சாதுக்கள். கூடவே கடலிலிருந்து எடுத்த சங்கு, சிப்பி போன்றவற்றை விற்கும் கடைகளும். பக்தர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்திருந்தார்கள். சென்ற முறை மாலை நேரத்தில் சென்றோம் என்றால், இம்முறை காலை நேரத்தில். நல்ல தரிசனம் கிடைத்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாகச் சென்ற இடம் என்ன, அங்கே என்ன அனுபவம் கிடைத்தது என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…..

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

30 comments:

 1. காலைவணக்கம் ஜி...வாக்கிங்கா? நானும் போணும்... பதிவு பார்த்துட்டேன்....படங்கள் அழகா இருக்கு..நிதானமாக வாசித்துவிட்டு வருகிறேன் ஜி!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாக்கிங் செல்வதற்கு முன்னர் சுட்டி கொடுத்தேன். சற்று முன்னர் தான் திரும்பினேன்.... மெதுவாகப் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. //பால் தரும் பசு சாப்பிட்ட பிஸ்கெட் – மில்க் பிக்கிஸ்!//

  ஹா... ஹா... ஹா....

  துர்வாசர் பொல்லாத ரிஷி... (அவர் இதைப் படிக்க மாட்டாரில்லே??!!)

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. துர்வாசர் பொல்லாத ரிஷி - இதைப் படிக்க மாட்டாரில்லே! ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. ருக்மணிக்காக தனிக்கோயில் வித்தியாசமான செய்தி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 4. ”கரக் முரக்” எனச் சாப்பிட்டன! பால் தரும் பசு சாப்பிட்ட பிஸ்கெட் – மில்க் பிக்கிஸ்!//

  அருமை.

  //இனி நல்ல தண்ணீரே கிடைக்காது என்றும் சாபம் கொடுத்துவிட்டாராம்! நல்ல கோபம் – நல்ல சாபம்!//

  சாபம் இப்படியா கொடுப்பது!

  படங்கள் அழகு.  ReplyDelete
  Replies
  1. பொல்லாத சாபம் தான் - இப்போதும் இங்கே உப்பு நீர் தான். பாட்டில் குடிநீர் விநியோகப்பவர்களுக்குக் கொண்டாட்டம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 5. எனக்கு இந்த கதைகளைக் கேட்பது ஒரு ரசனை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 6. பால் தரும் பசு சாப்பிட்ட பிஸ்கெட் – மில்க் பிக்கிஸ்!//

  ஹா ஹா ஹா ஹா...இயற்கை சுழற்சியோ?!! ஹா ஹா

  துர்வாசர் ருக்மணி கதை படித்த நினைவு இருக்கிறது...அது சரி ஈகோவினால் வரும் கோபமும் அந்தச் சாபமும் எப்படியோ பலித்து ஒரு புராணக் கதையாகிவிடுகிறது....!!

  கோவில் கலை ரொம்ப அழகாக இருக்கிறது அது போல சங்கும்...பார்க்க அழகு...

  அடுத்து எங்கு சென்றீர்கள் என்பதை அறிய தொடர்கிறோம் ஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   Delete
 7. செய்திகளும் படங்களும் மிகவும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
  2. திண்டுக்கல் தனபாலனை இப்போது வலைத்தளப் பக்கம் காணவில்லையே! காரணம் என்னவோ?

   Delete
  3. அது பற்றி அவரே, சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பதிவில் சொல்லி இருக்கிறார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   Delete
 8. மில்க் பிக்கிஸ் சாப்பிடும் பசு இரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள்.

  #2018/17/SigarambharathiLK
  Nokia 5 திறன்பேசிக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 மேம்படுத்தல்!
  https://newsigaram.blogspot.com/2018/03/nokia-5-8-1-surprise-update.html
  #techsigaram#sigaram #sigaramco
  #சிகரம் #தொழிநுட்பம் #நோக்கியா
  #nokia #Oreo8Point0 #SigarambharathiLK

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   Delete
 10. படங்களும் பதிவும் அருமை ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. ருக்மிணி என்ன பாவம் செய்தார். அம்பரீஷனை துன்புறுத்திய போது
  சுதர்சன சக்கரம் வந்த மாதிரி ரிஷியைத் துரத்தி இருக்க வேண்டூம்.
  நல்ல ரிஷி வாய்த்தார். கோபத்துக்கான சின்னம்.

  அப்பொழுது இந்த ஊர் முழுவதும் நல்ல தண்ணீர் இல்லையா வெங்கட்.
  அதிசயம் தான். மியக் அழகான சுற்றுலா.

  ReplyDelete
  Replies
  1. ரொம்பவே கோபம் தான் அவருக்கு.

   இப்பவும் அங்கே நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. கடற்பகுதி என்பதால் உப்புத் தண்ணீர் தான். இருக்கவே இருக்கிறது பாட்டில் குடிநீர் என்று தான் அனைவரும் இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 12. வணக்கம் சகோதரரே

  அருமையான படங்களுடன் நல்ல தெய்வீகமான பயணம். அற்புதமான செய்திகள்.

  /பால் தரும் பசு சாப்பிட்ட பிஸ்கெட் – மில்க் பிக்கிஸ்/ஹா.ஹா
  பசுமாட்டிற்கு நல்ல உணவு அது தரும் சக்தி மறுபடியும் அதற்கே/ நல்ல விஷயம்தான்.

  முனிவரின் சாபம் இப்போதுதான் அறிந்தேன். பாவம் ருக்மணி தேவியார்.

  சங்குகளின் படங்கள் அருமையாக உள்ளது.
  பயணம் தொடரட்டும் நானும் தொடர்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹன் ஜி!

   Delete
 13. துவாரகா! நான் போகனும்ன்னு ஆசைப்படும் இடம். பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் பிஸ்கட் சாப்பிடும் மாடு ஓக்கேதான்

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 14. துர்வாசர் நாரதர் போன்ற பாத்திரங்கள் கதையை நகர்த்த உதவுவதற்கான சிருஷ்டி என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....