செவ்வாய், 6 மார்ச், 2018

சில நினைவுகளின் முகவரிகள் – அனங்கன் கவிதைகள்
தில்லையகத்து கீதா அவர்களின் மூலமாக எனக்குக் கிடைத்தது ஒரு கவிதைத் தொகுப்பு – ”சில நினைவுகளின் முகவரிகள்” என்ற தலைப்புடன்.  சுகுமார் எனும் இயற்பெயர் கொண்டவர் ”அனங்கன்” என்ற புனைப்பெயரில் எழுதுகிறார். இது அவரது முதலாம் கவிதைத் தொகுப்பு. அனங்கன் என்றால் உருவமில்லாதவன் என்ற பொருள் – சிவபெருமானையும் மன்மதனையும் குறிக்கும் ஒரு சொல். இதே பெயரில் திரு சுகுமார் அவர்கள் கவிதை எழுதுகிறார். இவரது இந்தக் கவிதைத் தொகுப்பு WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் ஞாயிற்றுக் கிழமையன்று வெளிவந்திருக்கிறது. வாருங்கள் கவிதைத் தொகுப்பில் இருக்கும் சில கவிதைகளைப் பார்க்கலாம்….

என் அன்னை” எனும் தலைப்பிட்ட கவிதையில் “பைந்தமிழ் என்னை வளர்ப்பதனால், இருதாய்க்கு நானொரு பிள்ளை” என்று சொல்லும் இவர், ”இருளை மனதில் வைத்து, இறைவனைத் தேடாதே” என்ற தலைப்பிட்ட கவிதையில்,

”சகிப்புத்தன்மையைத்தான்
அனைத்து மதங்களும்
போதிக்கிறது.
வெற்றுமந்திரங்களில்
இல்லை மகிமை
அது அன்பில் இருக்கிறது.
முதலில் மனிதனாய்
இருக்க முயற்சிசெய்
பிறகு கடவுளைத் தேடலாம்.” என்று உரைக்கிறார்.

முகங்களைத் தேடி” என்ற கவிதையில் சொல்லும் கருத்தும் அன்பு மட்டுமே….

பொய்களை விற்று
பொய்களை வாங்கி
யாருக்கு லாபம்.
எல்லாம் முடிந்து
அடங்கிடும் போது
வந்திடும் ஞானம்.
வாழ்ந்திடும் போது
நேசம் மறப்பது
காலத்தின் சாபம்.
உனக்குப் பிறகும்
உன்னை நினைக்க அன்பாய்
வாழ்ந்திடு நாளும்.

கூழாங்கற்கள்” என்ற தலைப்பில் சில ஹைக்கூ கவிதைகளும் உண்டு. சன்னல் என்ற தலைப்பில் வந்திருக்கும் கவிதை எனக்குப் பிடித்தது!

சன்னல்

துண்டிக்கப்பட்ட
வானத்தை தைக்கிறது
நூலாம்படை….

யாருக்கும் வெட்கமில்லை” என்ற தலைப்பில் இன்றைய தமிழகத்தின் நிலையைச் சொல்கிறார் நூலாசிரியர். அக்கவிதையிலிருந்து சில வரிகள் மட்டும் இங்கே…

தன் திரைப்படம்
வெளியாகும் போது மட்டும்
தன் ரசிகனை உரசிப் பார்க்கத்
தோன்றுகிறது தன் வளர்ச்சிக்காக.
இனி தமிழெனச் சொல்ல
கொஞ்சம் வெட்கப்படத்தான்
வேண்டும்.
காலில் விழும் கலாச்சாரப்
பெருமையை தமிழனுக்கு
விட மனமில்லை போலும்.
பழம்பெருமை பேசியே
பெருமை கொள்ளும் தமிழன்
நடைமுறை வாழ்வியலில்
எப்போது சுயமரியாதை
கொள்ளப் போகிறான்.
நாளையத் தலைமுறைக்காவது
அவன் கொஞ்சம் தன்மானத்தை
விட்டு வைக்கட்டும்.

ஒரு கழுதையின் பிரகடனம்….” தலைப்புள்ள கவிதை – சாட்டையடி!

அருமைமிகு தமிழக
வாக்காள பெருங்குடி மக்களே!
அரசியலில் காசுயிருந்தால்
ஒரு கழுதை கூட வெல்லலாமென
இத்தனை நாள் எம்மைப்
பெருமைப்படுத்தி வந்தீர்கள்....
மகிழ்ச்சி.
வெற்றிடத்தை நிரப்ப
யார் யாரோவெல்லாம் வருவது
இதுவரை நீங்கள் எனக்கு
வழங்கிவந்த பெருமைக்கு
இழுக்குத்தான்.....
என்ன செய்ய நான்
மானயிழப்புக்கேட்டு
மனு செய்ய முடியாதே.....
ஆயினும்-----
எல்லா இழிவையும் சுமக்கும்
உங்களையெல்லாம் பார்க்கும்போது
எம்மிலும் நீவிர் மேலென
ஆனந்தக் கண்ணீர் வருகிறது.
எம்மினம் போல் குணத்தில்
நீங்களும் இருப்பதால்.....
பொறுத்திருக்கிறேன்....
எம்மையும் நீங்கள் ஒருநாள்
முதல்வராக்கி மகிழ்வீர்களென்று.
அதற்கான தகுதி-----
நானும் ஒரு படத்தில்
நடித்திருக்கிறேன் அது போதாதா..?
என்பொருட்டு யாரேனும்
முதலீடு செய்தால்----
உங்களை துணைமுதல்வராக்குகிறேன்
அப்புறமென்ன....

இப்படி இன்னும் கவிதைகள் உண்டு. தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்தையும் படித்திட மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாமே. தரவிறக்கம் செய்ய இணைய முகவரி…..


புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

22 கருத்துகள்:

 1. ஓ!!!! மை காட்!! வெங்கட்ஜி!!! சத்தியமாக இதை நான் எதிர்பார்க்கவில்லை!! சந்தோஷமான எதிர்பாரா ஒன்று!!

  மிக்க நன்றி மிக்க நன்றி வெங்கட்ஜி இப்பதிவையும் அவருக்குச் சொல்லிவிடுகிறேன்...

  நண்பர்கள் எல்லோருக்கும் இது....அனங்கன் என்ற பெயரில் கவிதைகள் எழுதும் திரு சுகுமார் அவர்கள் என் மகனின் தோழி பாரதியின் தந்தை. பாண்டிச்சேரியில் வசிப்பவர். முகநூலில் கவிதைகள் எழுதிவந்தாலும், இணையம் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாதவர். தன் மகள்களின் மூலம் தான் தன் கணக்கையே நிர்வகிப்பவர். இவரது கவிதைகாள் ஜீ டிவியில் ஒரு நிகழ்வில் வெளிவர அதை அவர் வீடியோவாக வைத்திருந்தார் அதனை நான் எங்கள் அதாவது துளசியின் கணக்கில் இருக்கும் யூட்யூபில் வெளியிட்டேன். அப்போது திரு இராயசெல்லப்பா அவர்கள் என்னை அழைத்து கவிதைகள் மிக நன்றாக சமூக அக்கறை கொண்டதாக உள்ளது. இவர் அறியப்பட வேண்டும் என்று சொல்லி புத்தகமாக வெளியிடச் சொல்லுங்கள், இணையத்தில் தளம் தொடங்கி எழுதச் சொல்லுங்கள் என்றும் சொன்னார்.

  அப்போது அவரிடம் வாங்கி வந்த கவிதைத் தொகுப்பை நான் கணினியில் வேர்டில் அடித்துக் கொண்டிருக்கிறேன். மற்றும் அவர் வாட்சப் மூலம் எனக்கு அனுப்பிய கவிதைகள் இவற்றைத் தொகுத்து வேர்டில் போட்டு வெங்கட்ஜி அவர்கள் மின்நூல் வெளியிட்டு வருவதால் அவரைத் தொடர்பு கொள்ளவும் வெங்கட்ஜி அவர்கள் உடனே எனக்கு அதனை மின்நூல் வெளியீட்டிற்கான ஃபார்மாட் செய்து கொடுத்து வெளியிட்டும் விட்டார். மின்நூல் வெளியீட்டில் சில படிவங்கள் இருக்கிறது.

  தனது வேலைப்பளுவிற்கிடையில் இதனைச் செய்து கொடுத்த வெங்கட்ஜி அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி எத்தனி சொன்னாலும் மாளாது. வெளியிட்டது மட்டுமல்லாமல் இங்கும் அறிமுகப்படுத்தியத எனக்கு வியப்பு கலந்த சந்தோஷம். மிக்க மிக்க நன்றி.

  திரு சுகுமார் அவர்களின் மகள் பாரதி மகனின் நண்பன் கலைஞன் இருவருக்கும் வரும் மார்ச் 31 ஆம் தேதி பாண்டிச்சேரியில் திருமணம். வாழ்த்துவோம்.

  மிக்க மிக்க நன்றி வெங்கட்ஜி மீண்டும்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... உங்கள் நண்பரா கீதா...? சூப்பர். வாழ்த்துகளும், பாராட்டுகளும். புனைப்பெயர் அருமை.

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி! புத்தகம் வெளிவர நான் பெரிதாய் எதுவும் செய்யவில்லை. இங்கே பகிர்ந்து கொள்வதால் கொஞ்சம் பேருக்குத் தெரியவருமே என்பதாலும் இங்கே பகிர்ந்து கொண்டேன். அவ்வளவு தான்.

   நீக்கு
  3. பதிவிலேயே குறிப்பிட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. மற்ற கவிதைகளும் படித்து திரு அனங்கன் அவர்களின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை அனுப்பி வைக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. // பொய்களை விற்று பொய்களை வாங்கி //

  இது படித்தல் மட்டும் போதுமா படப்பாடலான "ஓஹோஹோ மனிதர்களே... ஓடுவதெங்கே சொல்லுங்கள்... பொய்களை விற்று உண்மையை வாங்கி உருப்பட வாருங்கள்.." ஐ நினைவு படுத்துகிறது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்தால் மட்டும் போதுமா பாடல் நினைவுக்கு வந்ததா? நீங்கள் சொன்ன பிறகு தான் எனக்கும் நினைவுக்கு வருகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. என் இணையம் ராத்திரி அதுரும் அர்த்த ராத்திரியில் வேலை செய்து காலை 6.30க்கு போய்விடும் பின்னர் சில சமயம் வரும் .....வராது...இப்படி இருப்பதால் பதிவுகல் வெளியிடுவதும் சிரமமாகி வருகிறது. இணையம் சரிசெய்ய முயற்சிகளும் நடந்துவருகிறது...

  உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகல் இல்லை ஜி...

  அப்படியே ..நேற்று நீங்கள் எபியில் கொடுத்திருந்த ஆதியின் கறிவேப்பிலை குழம்பு லிங்கையும் பார்த்துவிட்டேன். வித்தியாசமான செய்முறை குறித்தும் கொண்டுவிட்டேன் ஜி....மிக்க நன்றி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு இருக்கும் இணையப் பிரச்சனை விரைவில் சரியாகட்டும். பதிவுகள் அப்போது தானே வரும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. கவிதைகள் எல்லாம் அருமை.
  கவிதைகளை படைத்தவருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவில் குறிப்பிட்டுள்ள கவிதைகளை வாசித்தேன். அத்தனையும் வெகு அருமை. கவிதைகளை அறிமுகபபடுத்திய தங்களுக்கும் கவிதையை எழுதியவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 9. Freetamilebooks தளத்திலேயே வாசித்தேன். சிறப்பான அறிமுகம். என்னுடைய முதல் மின்னூலை "கொங்கு மண்ணின் சாமிகள்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்கள். நேரமிருப்பின் படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்கிறேன். விரைவில் படித்து பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

   நீக்கு
 10. திரு அனங்கன் ஐயா அவர்களின் கவிதைகளை அவ்வப்போது புலனத்தில் வாசித்திருக்கிறேன்... அருமை... சிறப்பான சிந்தனை வளம்.. வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வெ. செந்தில்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....