சனி, 31 மார்ச், 2018

மீண்டும் பள்ளிப் பருவத்திற்கு….

மகளிர் மட்டும் ரீமேக் சென்ற வாரம் தொலைக்காட்சியில் போட்ட போது பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். மருமகள் ஜோதிகாவின் முயற்சியால் ராணி, கோமு, சுப்பு மூவரும் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்டனர். இப்படி நமக்கும் நடக்குமா என்ற ஆசை மனதிலிருந்தது.


நான் படித்த பள்ளியில் படித்த மாணவர்களால், கடந்த வாரத்தில், ஒரு WhatsApp க்ரூப் உண்டாக்கப்பட்டது தெரிய, நானும் அதில் இணைந்து கொண்டேன். எங்கள் பள்ளி பற்றி ஒரு காணொளியும் பார்த்தேன். அங்கேயே சென்று வந்த உணர்வு.

யார் இந்த க்ரூப்பை உருவாக்கினார்களோ, இரண்டே நாளில் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள். என்னுடைய பெயரையும் பத்தாம் வகுப்பு முடித்த ஆண்டையும் பதிவு செய்தேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் என் தோழிகள் என் பெயரைப் பார்த்ததும், "ஏய் ஆதி! நான் ஆனந்தி டி, நான் கோமதி டி, நான் ராதாமணி டி, நான் அனிதா டி "என்னை நினைவிருக்கா??? என்று வரிசையாக கேட்டனர்.

இதற்கும் மேலே, என்னுடைய கணக்கு டீச்சர் செல்வி, "ஆதி!! எப்படி இருக்க?? நல்லா ஞாபகம் இருக்கு, charming girl!! நீளமான முடியை இன்னும் பராமரிக்கிறயா?? என்று கேட்டு என்னை வியப்பில் ஆழ்த்தினார். இடையில் இருபது வருடங்கள், ஒவ்வொரு வருடமும் எத்தனையோ பிள்ளைகள் அவரிடம் படித்திருப்பார்கள். நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்!!!

நானும் நிறைய ஆசிரியர்களின் பெயர்களை க்ருப்பில் நினைவு கூர்ந்தேன். அவர்களால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்று.

தோழி ஆனந்தி கூட டீச்சரிடம் "நான் தான் உங்கள்ட்ட அதிகமா அடி வாங்கியிருப்பேன் மிஸ்! ஆதி நல்லா படிப்பா!! என்று சொன்னாள். டீச்சர், சாரி டா!! நான் உங்கள் நலம் விரும்பி என்றார். அவளும் "தெரியும் மிஸ்" என்றாள்.

"நானும் தான் பெஞ்ச் மேலே நின்னு கைல பிரம்பால அடி வாங்கியிருக்கேன் டி" என்று சொன்னேன். அதெல்லாம் தான் இன்று நம்மை வழி நடத்துகிறது என்றும் சொன்னேன்.

ஒரு சில ஆசிரியர்கள் காலமாகி விட்டனராம். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

கல்லூரி நட்பில் நான்கைந்து தோழர்களை முகப்புத்தகம் மூலமாக நட்புவட்டத்தில் இணைத்துக் கொண்டேன். ஆனால் பள்ளிக்கால நட்புகளை கண்டுபிடித்திருப்பது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனக்கு அவர்களின் முகங்கள் ஏறக்குறைய மறந்தாலும், அவர்கள் என்னை நினைவில் வைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மே மாதம் முன்னாள் மாணாக்கர்கள் அனைவரும் கோவையில் சந்திக்கலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாட்களாய் நண்பர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வதும், மே மாதம் ஒன்றாம் தேதி எங்கள் பள்ளியிலேயே நடைப்பெறப் போகும் "RKS விழுதுகள் 2018" நிகழ்வில் அவரவர்களின் வருகையை உறுதி செய்வதுமாக சென்று கொண்டிருக்கிறது.

பள்ளிப்பருவ நட்புகளை பெற்ற சந்தோஷத்தை முகநூலில் பகிர்ந்தது போல், குழுமத்திலும் பகிர்ந்தேன். நட்புகள் பலரும் பாராட்டினர். இருந்தாலும் ஆசிரியரிடம் கருத்து பெறாதது முழுமையடைந்தது போல் இல்லை.

சிலேட்டையோ, நோட்டையோ கையில் வைத்துக் கொண்டு ஆசிரியர் தரும் மதிப்பெண்களுக்காக காத்திருந்த சிறுமியைப் போன்ற மனநிலையுடன் இருந்தேன். இறுதியாக கணக்கு டீச்சரான செல்வி மிஸ்ஸும் வாசித்து விட்டு, "U r always there in my heart dear " என்று கருத்து சொன்னதும் 100/100 வாங்கிய மகிழ்ச்சி கிட்டியது.
அடுத்த மகிழ்வாக அறிவியல் ஆசிரியரான சாந்த சுந்தரி அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் எங்களுக்கு இவரின் வகுப்புகள் மிகவும் பிடிக்கும். மாணாக்கர்களிடம் கடிந்து கொண்டதேயில்லை. நீண்ட நெடிய பின்னலும், முகமும் , அவரின் நடையும் இன்றும் நினைவில்.. அவரும் சாட்டிங்கில் வரிசையாக அறிமுகம் செய்து கொண்ட மாணவர்களிடம் பொறுமையாக விசாரித்தார்.

தோழிகள் "நீதான் எங்களை நினைவு வெச்சுக்கல, ஆனா உன்னை நாங்க மறக்கவே இல்ல, ஏன்னா நீ தான் கிளாஸ்லயே உயரம்" என்று கலாய்த்தனர். "மாணவ மணிகளின் சிறுசேமிப்பு திட்டமான "சஞ்சய்கா"வை கிளாஸ்லயே நீ தான் உபயோகிப்ப" என்றும் சொன்னார்கள். ஆமாம் சேமிப்பது மட்டுமின்றி, மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் கவுண்ட்டரிலும் உட்கார்ந்து கணக்குகளை பார்ப்பேன். இதற்காக என்னை நியமனம் செய்தவர் திருஞானசம்பந்தம் சார். அவரின் தமிழ் வகுப்புகள் சுவாரசியமாக இருக்கும்.

இப்படியாக மலரும் நினைவுகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. இப்படிப் பட்ட அன்புள்ளங்களைப் பெற்றுத் தந்த இறைவனுக்கு நன்றி.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்

26 கருத்துகள்:

 1. மகளிர் மட்டும் ரீமேக் இல்லையே அது... இரண்டாம் பாகம் என்று சொல்லலாம்.. வெவ்வேறு கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளிர் மட்டும் - இரண்டாம் பாகம்! சினிமா விஷயத்துல நான் ரொம்பவே வீக்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. முகநூலிலும் படித்து ரசித்தேன். 2014 ஆம் ஆண்டு கல்யாணமாகாதேவி சென்றபோது தஞ்சாவூர் சென்று நான் படித்த பள்ளிக்குச் சென்றபோது மனதில் இருந்த உணர்வுகள் சொல்ல முடியாதவை. என்னுடைய ஆசிரியர்கள் யாருமே இன்றில்லை என்று தெரிந்துகொண்டபோது வருத்தமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பள்ளி ஆசிரியர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாது. கல்லூரி ஆசிரியர்களில் சிலர் மட்டும் தொடர்பில் இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. அட ஆதி!! உங்களின் பள்ளி நினைவுகள் அருமை! வாட்ஸப் இதற்கு உதவுகிறது என்றும் தோன்றுகிறது. ஆம் பள்ளி நினைவுகள், கல்லூரி நினைவுகள் நம் மனதை விட்டு நீங்காதவை. பசுமையானவை.

  கிட்டத்தட்ட உங்கள் பள்ளி அனுபவங்கள் தான் எனக்கும்..உண்டியல் சேமிப்பு எட்ஸட்ரா...ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்...மீ லாஸ்ட் பெஞ்ச் ஹா ஹா ஹா ஹா.கணக்கும், அறிவியலில் ஃபிஸிக்ஸ் பயமுறுத்தியதால்.....படிப்பை விடக் கலைகளில் ஆர்வம்...ஆனால் அப்போதெல்லாம் அதை வளர்க்க நமக்கு சூழல் இல்லாததால் அப்படியே போய்விட்டது..

  என் பள்ளித் தோழிகளும் வாட்சப் க்ரூப் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிறது. நான் இணையவில்லை. அவர்கள் அவ்வப்போது சந்தித்தும் வருகிறார்கள். ஒரே ஒரு தோழியிடம் மட்டும் ஒன் டு ஒன் தொடர்பில் இருக்கிறேன் அதுவும் அவ்வப்போது.

  நல்ல நினைவுகள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. முதலில் முதல் "டி" யைப் பார்த்ததும் இனிஷியல் என்று நினைத்தேன்...ஹா ஹ் ஆ ஹா ஹா ஹா...அப்புறம் தெரிந்தது தோழிகள் வட்டத்தில் உலவும் நெருக்கமான எழுத்து என்று!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோருக்கும் ஒரே இனிஷியல்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. பள்ளிக் கால நினைவலைகள் என்றுமே இனிமையானவை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. இதே போல் இனிமையை மூன்று மாதத்திற்கு முன், எனது பள்ளி நண்பர்களின் குழுமத்தில் நானும் பெற்றேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... நீங்களும் உங்கள் பள்ளி நண்பர்களைச் சந்தித்தீர்களா? மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. பல ஆண்டுகளுக்கு முன் கூனூரில் நான்படித்த பள்ளிக்குச் செனு அன்கிருந்த தலைமை ஆசிரியரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன் நான் படித்த ஆண்டு பற்றிக் கேட்டார் நான் 1954 ல் பள்ளி இறுதி என்றேன் அப்போது நான் பிறந்தே இருக்க வில்லை என்றார் கோவையிலும் இதே மாதிரியான அனுபவம் உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 8. நான் இரண்டு அல்லது மூணு வருசத்துக்கு ஒருமுறை போய் வருவது வழக்கம். அந்த ஊர்களை விட்டு வந்து பல வருசமாகியும் நல்லது கெட்டதுக்கு அங்கிருந்து அழைப்பு வரும். குடும்ப சூழல் காரணமா நான் அதிகம் போறதில்ல, அப்பா அம்மா மட்டும் அடிக்கடி போவாங்க. நான் ரெண்டு மூணு வருசத்த்துக்கொருமுறை போய் வருவேன். அப்ப பழைய நண்பர்கள், ஆசிரியர்கள், ஸ்கூல்ன்னு ஒரு விசிட் அடிச்சுட்டு வருவேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கல்லூரி வரை ஒரே இடம் தான் என்றாலும் பள்ளிப்பருவ ஆசிரியர்களிடம் தொடர்பு இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 9. ஊர் ஊராக அப்பாவுக்கு மாற்றல் ஆகும். அதனால் பல ஊர்களில் பள்ளி படிப்பு.
  கோவைதான் கொஞ்சம் நெருக்கமாய் இருந்தது. வெகு காலம் கடித போக்குவரத்து இருந்தது.

  பின் எல்லாம் காணாமல் போய் விட்டது.

  உங்கள் நட்புகளுடன் இணைந்தது மகிழ்ச்சி.

  நாங்கள் படிக்கும் போது டி கிடையாது.

  தோழிகளை அழைக்கும் போது என்னப்பா, வாப்பா, போப்பா தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 10. நானும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அப்பாவின் மாற்றல் காரணமாக பள்ளிகள் பல மாறியவன். திருவாடானை, பரமக்குடி, பூலான்குறிச்சி (பொன்னமராவதி அருகில்), தாளவாடி (சத்தியமங்கலம் அருகில்), பாளையங்கோட்டை என்று பல ஊர்கள்.

  தாளவாடியில் என் நண்பியை "டி" என்றுதான் 7ம் வகுப்பில் அழைப்பேன். ஆசிரியர் தயாநிதி, அந்தப் பெண்ணை "டி" என்று சொன்னபோது, "டீ போடற வேலை வச்சுக்காதீங்க சார்"னு அந்தப் பெண் தைரியமாகச் சொல்லியது. எனக்குமட்டுமான அந்த உரிமை அப்போது பெருமிதம் கொள்ள வைத்தது (7ம் வகுப்பு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. I did not have this good fortune and to this day, that is one of my big regrets.
  Nice read.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமன் ஜி!

   நீக்கு
 12. மலரும் நினைவுகள் மகிழ்ச்சியைத் தருபவை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 13. ஒவ்வொரு முறை மதுரை செல்லும்போதும் நான் படித்த ஓசிபிஎம் பள்ளி வழியாகச் செல்லும்போதெல்லாம் நினைவுகள் மலரும். யார் யார் எங்கெங்கேயோ எப்படி எப்படியோ இருப்பார்கள்! நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்களா, சந்தேகமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....