வெள்ளி, 3 மே, 2019

ஜார்க்கண்ட் உலா – மும்தாஜுடன் ஒரு பயணம்


 மும்தாஜுடன் ஒரு பயணம்...

சில நாட்களுக்கு முன்னர் எழுதிய தோசா ப்ளாசா பதிவில் எங்களுக்கு அமைந்த ஓட்டுனர் குல்தீப் எனும் இளைஞர் பற்றி எழுதி இருந்தேன். ரொம்பவே விளையாட்டுப் பிள்ளை – ஓடி ஓடி செல்ஃபி எடுப்பதும், வண்டியை விட்டு எங்களுடன் எல்லா இடங்களுக்கும் வருவதும் என எங்களை விட அப்பயணத்தினை அதிகமாகவே ரசித்தார். அடுத்த நாள் காலையில் ஏழரை மணிக்கு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றார் – சரி வண்டி ஏற்பாடு செய்த நண்பரிடம் காலை பேசிக் கொள்ளலாம் என இருந்தோம்.
 
அடுத்த நாள் காலை விரைவாக காலை உணவினை தங்குமிடத்தில் முடித்துக் கொண்டு வண்டி எடுத்துக் கொண்டு குல்தீப் வருவார் காத்திருக்க, அவர் வரவே இல்லை. எட்டு மணி வரை காத்திருந்த பின்னர், அவருக்கு அழைத்தால் அலைபேசியை எடுக்கவே இல்லை. இரண்டாம் முறை அழைத்தபோது எடுத்து, ”நான் இன்னிக்கு வர மாட்டேன், நேற்று மட்டும் தான் என் வேலை! இன்னிக்கு வேற யாராவது வருவாங்க, நீங்க எங்க முதலாளி கிட்ட பேசுங்க” என்று சொல்லி வைத்து விட்டார். முதலாளியின் எண் எங்களிடம் இல்லை. நண்பருக்கு அழைத்து அவர் முதலாளியின் எண்ணைத் தர, அவரை அழைத்தோம். அடடா, இன்னும் நீங்க புறப்படலையா, இதோ இப்ப வண்டி வந்துடும் என்று சொல்லிய சில நிமிடங்களில் வண்டி வந்தது. அப்படி வந்தது தான் மும்தாஜ்!

பொதுவாக மும்தாஜ் என்ற பெயரில் பெண் தான் இருப்பார். வந்தது மும்தாஜ் எனும் ஆண்! நேற்று வந்த குல்தீப்-ஐ விட பெரியவர் – நாற்பத்தி ஐந்து வயது இருக்கலாம். பொறுப்பான ஓட்டுனர். திறமைசாலி மட்டுமல்லாது எல்லா வழிகளும் தெரிந்தவர் – பிரச்சனைகளைச் சமாளிக்கத் தெரிந்தவர் என்பதும் அவருடன் இருந்த இரண்டு நாட்களில் தெரிந்து கொண்டோம். அவருடன் புறப்பட்டு நாங்கள் சென்ற இடம் ஒரு பயிற்சிப் பள்ளி! என்னது ஊர் சுத்தப் போகிறேன் என்று சொல்லி பயிற்சிப் பள்ளிக்குச் சென்றீர்களா? அப்படி என்ன அந்தப் பள்ளியில் பயிற்சி தருவார்கள்? என்ற கேள்விக்கெல்லாம் விடை, இப்பதிவில் உங்களுக்குக் கிடைக்கும். அதற்கு முன்னர் சில விஷயங்களைப் பார்க்கலாம்.



பொருட்களை எடை போட இருக்கும் தராசு, எடைக் கற்கள், திரவப் பொருட்களை அளக்கப் பயன்படும் குவளைகள், பெட்ரோல் பங்குகளில் எண்ணெய் விநியோகம் செய்யப் பயன்படும் இயந்திரங்கள், துணிக் கடைகளில் துணி அளக்கப் பயன்படும் மீட்டர் ஸ்கேல், டிஜிட்டல் ஸ்கேல், தங்க விற்பனை செய்யும் கடைகளில் இருக்கும் துல்லியமான கருவிகள் என பல விஷயங்கள் நாம் அன்றாடம் பார்க்கிறோம். அவை எல்லாவற்றிற்கும் பொதுவான அளவுகள் இருக்குமல்லவா? அந்தக் கருவிகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா, சரியான அளவில் தான் பொருட்களை அளந்து தருகிறார்களா என்பதையெல்லாம் யார் சோதனை செய்வது? ஒவ்வொரு மாநில அரசிலும் இதற்கென ஒரு துறை உண்டு – அந்தத் துறை Department of Legal Metrology! இந்த அளவு/அளக்கும் பொருட்களை பரிசோதனை செய்யும் அதிகாரிகள் இந்தத் துறையில் தான் வேலை செய்வார்கள்.



அந்த மாதிரி சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசாங்கத்தின் Department of Consumer Affairs கீழே ஒரு பயிற்சி நிலையம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் இருக்கிறது – பெயர் Indian Institute of Legal Metrology! இந்தியா முழுவதும் இருக்கும் Department of Legal Metrology அதிகாரிகள் இந்தப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வும் உண்டு! அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் தான் அதிகாரிகளால் கடைகளுக்குச் சென்று சோதனை செய்ய அதிகாரம் உண்டு. பெரும்பாலான மாநிலங்களில் இருக்கும் Department of Legal Metrology அதிகாரிகள் இந்த பயிற்சி நிலையத்திற்கு வந்து பயிற்சியும் பெற்றும் தேர்வும் எழுதி சான்றிதழ் பெறுகிறார்கள். நண்பர் ப்ரமோத் அவர்களுக்கு இந்த பயிற்சி நிலையத்தில் கொஞ்சம் வேலை இருந்தது என்பதால் அங்கே சென்றோம்.


பயிற்சி நிலையத்தில் இருந்த பயிற்சியாளர்கள் இருவர் நிலையம் முழுவதும் சுற்றிக் காண்பித்தார்கள். பல கருவிகளை எங்களுக்குக் காண்பித்ததோடு அதன் செயல்முறை, எப்படி அந்தக் கருவிகள் இயங்குகின்றன, கருவிகளை எப்படி சோதனை செய்வது, என்னென்ன விதமான பயிற்சிகள் அங்கே கொடுக்கப்படுகின்றன என பல விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்ல பிரமிப்பாக இருந்தது. எத்தனை விதமான உபகரணங்கள், அதனை சோதனை செய்யும் வழிகள். இப்படி எல்லாம் கருவிகளும் வழிமுறைகளும் இருந்தாலும், பல அங்காடிகள், கடைகள், வியாபார நிலையங்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்றாலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றால் இங்கே Free for all situation தான் அதிகரிக்கும்.  

பயிற்சி நிலையத்தினைச் சுற்றிப் பார்த்த பிறகு நிலையத்தின் முதன்மை அதிகாரியையும் சந்தித்தோம். அவர் தமிழகத்தில் இருந்து வந்த ஒரு அதிகாரியுடன் பேச வைத்தார்! தில்லி வரும்போது வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம். நண்பருடைய மாநிலத்திலிருந்தும் சில அதிகாரிகள் அங்கே வந்து பயிற்சி எடுத்துக் கொண்டார்கள் என்றும் அவர்களில் ஒருவர் ரொம்பவே திறமைசாலி என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்ற சமயத்திலும் இரண்டு கேரள மாநில அதிகாரிகள் பயிற்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களையும் சந்தித்தோம். அடுத்த நாள் தேர்வு இருக்கிறது என்று அவர்கள் சொல்ல, அவர்களது வெற்றிக்கு வாழ்த்து சொல்லி அங்கிருந்து புறப்பட்டோம்.

இந்த மாதிரி எவ்வளவோ பயிற்சி நிலையங்கள் இந்தியாவில் உண்டு. இந்த மாதிரி ஒரு பயிற்சி நிலையம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் இந்தப் பதிவில் நிலையம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டேன். இந்தப் பதிவினை வாசிக்கும் யாருக்காவது இந்த பயிற்சி நிலையம் பற்றி முன்னரே தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்…

நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி


பின் குறிப்பு: அதெல்லாம் சரி, மும்தாஜுடன் ஒரு பயணம் என்றதற்காக மும்தாஜ் படம் சேர்ப்பது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையான்னு நீங்க கேட்பதற்கு முன்னர் மீ எஸ்கேப்!

34 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    மும்தாஜ் முதலிலேயே வந்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது ஓட்டுநரையா இல்லை நடிகை படத்தையா? ஹாஹா.... ஏன் அந்த ஓட்டுநர் வரலைனு யோசிக்கிறேன்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. அனுஷ்காவாக இருந்திருந்தால் அவரைச் சொல்லி இருப்பார்! இது மும்தாஜ்! அதனால் ஓட்டுனரைத் தான் சொல்லி இருப்பார் என நம்பிக்கை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. 'பிரச்னைகளை சமாளிக்கத் தெரிந்தவர்' என்று சொல்லி இருப்பதால் ஏதோ பிரச்னை வந்து சமாளிக்கப் பட்டிருக்கிறது என்று தெரிகிறது. அதையும் சொல்வீர்கள்தானே?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அந்த விஷயமும் சொல்வேன்! விரைவில். பிரச்சனை எங்களுக்கு நேரடியாக இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இது மாதிரி பயிற்சி நிலையம் இருப்பது புதிய தகவல். தென் தமிழகத்தில் இது போல பப கிடையாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளத்தில் உண்டு. தமிழகத்திலும் இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் பெரிதாக விளம்பரப்படுத்துவதில்லை எனத் தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. மும்தாஜ் பெயருக்கு மும்தாஜ் படம் போடாமல் அனுஷ்கா படமா போடுவீர்கள் என்று எதிர்பார்க்க முடியும்?!!! ஹிஹிஹி... நானும் எஸ்கேப்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... அனுஷ்கா படம் உங்களுக்காகவே போட்டு ஒரு பதிவு போட்டுடலாம்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. @ ஸ்ரீராம்..

    >>> மும்தாஜ் முதலிலேயே வந்திருக்கலாம்...<<<

    அதானே!... மும்தாஜ் ஏன் முதலிலேயே வரவில்லை?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் குல்தீப் சுழற்சி மாயம் துரை செல்வராஜூ ஸார்!

      நீக்கு
    2. மும்தாஜ் முதலில் வந்திருந்தால் குல்தீப் உடனான அனுபவம் இருந்திருக்காது! நான் ஓட்டுனர் மும்தாஜ் பற்றி தான் சொல்கிறேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
    3. குல்தீப் உடன் சில இடங்களுக்குச் சென்றதே போதும் என்றாகி விட்டது! அடுத்த நாள் வருவதாகச் சொல்லிச் சென்றாலும் வரவில்லை - அதுவும் நல்லதற்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. மும்தாஜ் படத்தை பார்த்ததும் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. ஓட்டுநர் மும்தாஜ் வயசிலேயே நடிகை மும்தாஜ் படத்தைத் தேடிக் கண்டுபிடித்துப் போட்டிருக்கிறீர்களே.... பாராட்டுகள்.

    எங்க ஊர்லயும் வருடத்துக்கு ஓரிரு முறை அரசாங்கத்திலிருந்து சோதனை செய்வார்கள். அதனால் வருடத்தில் நாங்கள் நாலுமுறை செக் பண்ணி, தகுந்த டெக்னீஷியன் மூலம் ரீ கேலிபர் செய்வோம்.

    ஆனா நம்ம ஊர்வ சோதனை செய்வதுபோல் தெரியவில்லை.. எல்லோரும் துருப்பிடித்த அரதப்பழசான எடைக்கல்லையே உபயோகிக்கிறார்கள். இப்போது எலெக்டிரானிக் ஸ்கேல் உபயோகம் அதிகரித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. சரி பார்க்க முன்பு வருவார்கள்... இப்போது இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. ஆஆஆஆ மீ த ஃபர்ஸ்ட் பெண். மும்தாஜ் என்னும் பெயரைப் பார்த்ததாலோ என்னவோ ஆண்கள் கும்மியாக இருக்கிறது போல.
    தகவல்கள் புதிது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா....

      நீக்கு
  10. ஓட்டுடர் மும்தாஜ் படம் போடாமல் நடிகை மும்தாஜ் படம் போட்டு !

    பயிற்சி பள்ளி விவரம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  11. காலையிலேயே மும்தாஜ் ஏமாத்திட்டாவே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  12. மும்தாஜ் என்னும் ஆண் ஓட்டுநரா? சஸ்பென்ஸ் வைத்து எங்களை வாசிக்கவைத்துவிட்டீர்கள், அதுவும் நடிகை படத்தைப் போட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. மும்தாஜ் என்பது ஆணின் பெயர்தான். இது அரபிக் வார்த்தை. இதையே பெண்களுக்கு மும்தஜா என்று வைப்பார்கள். நான் படித்த 'இமயமலையில் ஒரு இதய குரு' புத்தகம் எழுதிய துறவி 'ஸ்ரீ எம்." என்பவருடைய பிறந்தபோது வைத்த பெயர் 'மும்தாஜ்'. நம்ம ஊரில் ஷாஜஹானின் ஒரு மனைவியின் பெயர் மும்தாஜ் என்பதால் அதனை பெண் பெயர் என்றே நாம் நினைக்கிறோம். (ஒளி பொருந்திய அல்லது அருமையான என்ற அர்த்தம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. ஓ! படத்தில் இருப்பவர்தான் நடிகை மும்தாஜா! நல்லா இருக்கட்டும், நல்லா இருக்கட்டும்.

    குல்தீப் கதையை மறந்திட்டீங்களோன்னு நினைச்சேன்.

    IILM பற்றிய தகவல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அந்த ஓட்டுநர் குல்தீப்தான் மறுநாள் வரவில்லை எனும் போது அவர்தான் மும்தாஜுடன் பயணம் மேற்கொள்ளப் போவதால் இன்று வரவில்லை என்கிறாரோ என நினைத்தேன். கடைசியில் அன்றைய ஒட்டுனராக வந்தவர் பெயர் மும்தாஜா. சுவாரஷயம்..

    இன்றைய பதிவில் பல தகவல்கள் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....