புதன், 15 மே, 2019

போலீஸ்னா எனக்கு பயம் – போலீஸ் போலீஸ் - பகுதி இரண்டு - பத்மநாபன்


படம்: இணையத்திலிருந்து...


தம்பி ஓடாத நில்லு – போலீஸ் போலீஸ் – பகுதி 1 இங்கே படிக்கலாம்!

"டேய் தம்பி! நில்லுடா" என்று கூறிக்கொண்டே சைக்கிளின் முன்னால் சடன் பிரேக் போட்டு ஜீப்பை நிறுத்தினார். அவர் நிறுத்திய உடன் பையன் ஓடிய ஓட்டம் எங்களை கொஞ்சம் தடுமாறச் செய்தது.

இப்போ என்ன பிரச்சினைன்னா சைக்கிள் அம்போன்னு ரோட்டுல கிடக்கு. அதை அப்படியே விட்டுவிட்டு போலாமா இல்ல வேற என்ன செய்யலாம். இந்த பையன் போற வேகத்தைப் பார்த்தால் ஊருல போய் என்னத்தச் சொல்லி நம்மளை வம்புல இழுக்கப் போறானோ தெரியல்லையேன்னு யோசித்து ஒரு முடிவுக்கு வந்தோம். சைக்கிளைத் தூக்கி ஜீப்பின் பின்னால் போட்டோம். ஜீப்பை கிளப்பி பையன் ஓடிய திசையை நோக்கி வேகமாக விட்டோம். தூரத்தில் பையன் ஓடிக்கொண்டிருந்தான். நான் ஒலிபெருக்கியை ஆன் செய்து "தம்பி! ஓடாதே, நில்லு. தம்பி ஓடாதே, நில்லு" என்று கத்தினேன். பையன் இன்னும் அதிவேகமாக ஓடி ஊரை அடைந்து போலீஸ் ஜீப் என்னை துரத்துது. போலீஸ் ஜீப் என்னை துரத்துதுன்னு கத்தி ஊரைக் கூட்டி விட்டான்.

நாங்கள் பின்னாலேயே சைக்கிளோடு போய் சேர்ந்த போது ஊரில் வேலை வெட்டியில்லாமல் இருந்த பெரியவர்களும் கொஞ்சம் பெண்களுமாக ஒரு பத்து பதினைந்து பேர் அந்தப் பையனை சமாதானப்படுத்தி எங்களை சந்தேகக் கண்ணோடு எதிர் கொண்டனர். எங்களுடன் இருந்த அந்தப் பகுதி கேந்திரத்தொண்டர் ஏற்கனவே அந்த ஊரில் உள்ள சிலருக்கு பரிச்சயமானவர். அவர் நடந்ததை எடுத்துக் கூறி சைக்கிளை அந்தப் பையனிடம் ஒப்படைத்துவிட்டு "ஏன் தம்பி எங்களைப் பார்த்து இப்படி ஓடினே" என்று கேட்டால் அதற்கு அவன் "போலீஸ்காரங்கதானே ஜீப்பில வருவாங்க. போலீஸைப் பார்த்தால் எனக்கு பயம். அதனால்தான் சைக்கிளை போட்டுக்கிட்டு ஓடி வந்துட்டேன்" அப்படீன்னான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பையனின் அம்மா அவனது முதுகில் ஒன்று வைத்து "எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கான். மானத்தை வாங்கிப் போட்டியலேய்!" என்று சிரித்துக் கொண்டே சொல்லி அந்த அத்தியாயத்தை முடித்து வைத்தார். 

அடுத்தநாள் கண்முகாமிற்கு தன் பாட்டியை அழைத்துக் கொண்டு வந்து எங்களைப் பார்த்து ஒரு வெட்கச் சிரிப்பு சிரித்தான் பாருங்கள்! அவனுக்கு நயன்தாராவை கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்கள் என்று சொல்லி இருந்தால் கூட இப்படி வெட்கப்பட்டிருப்பானா என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் போலீஸைப் பார்த்து பயம் இருந்தது. அதே சமயம் மரியாதையும் இருந்தது. இப்போது பயம் மட்டும் இருக்கிறது.

போலீஸ் என்றதும் இன்னொரு நிகழ்ச்சியும் ஞாபகத்திற்கு வந்தது.  இப்படித்தான் ஒருமுறை அரசாங்கம் பொங்கலை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை அறிவித்திருந்தது. இந்த மாதிரி சமயத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் பணி கடுமையானது. நேர்மையான அலுவலர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகவே உழைக்க வேண்டும். அப்போது எங்கள் ஊர் வில்லேஜ் ஆபீஸ், அதான் கிராம நிர்வாக அலுவலகம் இருந்த இடத்தின் எதிரே தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி நிலையம் அதான் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்   இருந்தது. காலையில் ஏழு மணியில் இருந்து மாலை ஐந்து மணிவரை அந்த இடமே மாணவ மாணவிகளின் புண்ணியத்தில் கலகலவென ஜெகஜோதியா இருக்கும். அந்த இன்ஸ்டிட்யூட் ஓனருக்கு எனது தந்தையாரைப் பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்.

பின்னே, ஒரே வீட்டில் இருந்து அதிக மாணவ மாணவிகளை அங்கு படிக்க வைத்தால் மகிழ்ச்சி அடைய மாட்டாரா என்ன! ஆமாம்! எப்போதும் எங்கள் வீட்டில் இருந்து யாராவது ஒருவர் தட்டச்சோ சுருக்கெழுத்தோ அங்கு கற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். அதிலும் எனது தங்கை அங்கேயே தட்டச்சு சுருக்கெழுத்து பயின்று அங்கேயே பயிற்றுவிப்பாளராகவும் இருந்தார். அவர் இப்போது தலைமைச் செயலகத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார் என்றால் அவர் இங்கு பெற்ற பயிற்சி முக்கிய காரணம். நல்லவேளை, எனக்கு அவளிடம் தட்டச்சோ சுருக்கெழுத்தோ பயிலும் நிலை வரவில்லை. பின்னே, சரியாக தட்டச்சோ சுருக்கெழுத்தோ செய்ய வில்லையென்று தலையில் குட்டி விட்டால் வெளியே சொல்ல முடியுமா.

அந்த இன்ஸ்டிட்யூட்டிற்கு எங்கள் வீட்டில் உள்ள நான்கு பேர் நிச்சயம் நன்றிக்கடன் பட்டவர்கள். ஆமாம். எங்கள் வீட்டில் நாங்கள் நான்குபேர் வங்கியிலும் அரசு வேலையிலும் இருக்கிறோம் என்றால் நாங்கள் இங்கு கற்ற தட்டச்சும் சுருக்கெழுத்தும் முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல. இந்த இன்ஸ்டிட்யூட்டுல நாங்க அடிச்ச கூத்த எழுதினா இன்னும் நாலு பக்கம் தேறுமே.

இதுதான் எங்கிட்ட உள்ள கோளாறே. இலவச வேட்டி சேலையையும் வில்லேஜ் ஆபீஸையும் த்ராட்டில விட்டுட்டு சொந்த புராணம், சுயபுராணம்னு ஆரம்பிச்சிட்டேன் பார்த்தேளா! என்னத்தச் செய்ய, பீத்த சாக்கை தைக்கதில ஒரு அல்ப சந்தோஷம். அவ்வளவுதான். சரி விஷயத்திற்கு வருவோம். பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைன்னதும் காலையில் பத்து மணிக்கே வில்லேஜ் ஆபீஸ் முன்னால ஏகப்பட்ட கூட்டம். ஒரு நூறு நூத்தம்பது பெண்களாவது இருப்பார்கள். ஆம்பிளைங்க குறைவுதான். ஒரு பத்துபேர் இருந்திருப்பார்கள். வில்லேஜ் ஆபீஸர் அவரது தலையெழுத்தை நொந்து கொண்டே கூட்டத்தை பார்த்து சொன்னார் "இன்னும் சரக்கு வரல்ல. அதுக்குள்ள இப்படி கூட்டம் போட்டா எப்படி?" ன்னு சொல்ல மணி பதிணொண்ணாச்சு, பன்னிரெண்டாச்சு, ஒண்ணுமாச்சு. லோடு வந்தபாடில்லை. கூட்டத்தில ஒரு ஆளு கொளுத்திப் போட்டாரு, "எடே! பொங்கலுக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. குடுக்கத இப்ப குடுக்காம பின்ன எப்ப குடுக்க போறாவளாம். சரக்கு வரல்ல முறுக்கு வரல்லன்னுக்கிட்டு. என்ன, விளையாடுகாவளா. ஏய் பொம்பளைகளா! அப்படியே ரோட்டுல இருந்துக்கிடுங்க. ஒரு காரு பஸ்ஸு போவக்கூடாது. அப்பதான் நம்மள வகை வைப்பாவ." அப்படின்னு பொம்பளைகள இளக்கிவிட்டுக்கிட்டு ஒதுங்கி நின்னுக்கிட்டாரு.

எல்லாப் பொம்பளைகளும் என்னா ஏதுன்னு யோசிக்காம ரோட்ட மறிச்சு உட்கார்ந்தாச்சு. பாவம். அவங்களுந்தா என்ன செய்வாங்க. காலையிலேயிருந்தே காவல் கிடந்தா கடுப்பாயிருக்காதா! கொஞ்ச நேரத்தில இரண்டு பக்கமும் நாலைஞ்சு காரும் ரண்டு மூணு பஸ்ஸும் நின்னாச்சு. இந்தக் கூத்தையெல்லாம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாணவிகளுக்கு ஒரே கொண்டாட்டம். பின்னே இப்படி ஒரு போராட்டத்தை பக்கத்தில் இருந்து பாதுகாப்பாய் பார்க்கும் வாய்ப்பு இனி எங்கே கிடைக்கும். பதினொரு மணி ஷிப்ட் க்ளாஸ் முடிஞ்ச பொம்பளப் புள்ளைகளும் வீட்டுக்கு போகாம இன்ட்ரஸ்டிங்கா வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருக்கு.

வில்லேஜ் ஆபீஸரு டென்ஷனாயிட்டாரு. பாவம். அவருந்தான் என்ன செய்வாரு. சொன்னால் மக்கள் கேட்கிற மாதிரி தெரியலை. சரி, போலிஸைக் கூப்பிட்டருவோம்னு போனைப் போட்டாரு. போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலதான் இருந்தது. அங்கேயிருந்து பைக்கில டப டப டபன்னு சப் இன்ஸ்பெக்டரும் ஒரு ஏட்டும் வந்தாங்க. தூரத்தில போலீஸைப் பார்த்ததுமே ரோட்டுல இருந்ததில பாதி எழுந்து காணாமப் போயிருச்சு. சப் இன்ஸ்பெக்டர் பைக்கை விட்டு இறங்கி கூட்டத்தை நோக்கி வந்தார். சப் இன்ஸ்பெக்டர் சின்ன வயசு. அட மனுஷன் பார்க்கதுக்கு சினிமா நடிகரு மாதிரில்லா இருக்காரு. அவரோட முதல் போஸ்டிங்கே இங்கதான் போல இருக்கு. அவரு சர்வீஸில் சந்திக்கும் முதல் போராட்டமும் இதுதான் போல இருக்கு. சினிமா நடிகரை மாதிரி சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் நம்ம இன்ஸ்டிட்யூட் பொம்பளைப் புள்ளைகளுக்கு பயங்கர குஷியாகி விட்டது.

அவங்க கூட்டத்தை வேடிக்கைப் பார்பபதை விட்டு விட்டு இவரை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.   இப்போது போராட்டக் கூட்டம் பாதியாக குறைந்து விட்டது. முதல்ல இளக்கி விட்ட ஆளோட தலையை பக்கத்திலேயே காணவில்லை. இந்த சப் இன்ஸ்பெக்டருக்கு இந்தச் சின்னக் கூட்டத்தை எப்படிக் கலைப்பது என்று குழம்பி கடைசியில் ஆடு மாடுகளை விரட்டுவது போல கையால் சூ! சூ! என விரட்ட, ஏட்டைய்யா கையில் இருந்த லத்தியால் தரையில் இரண்டு தட்டு தட்ட மீதி இருந்த கூட்டமும் காணாமப் போச்சு.  இந்தக் கூத்தையும் சப் இன்ஸ்பெக்டர் சூ! சூ! ன்னு விரட்டுன லட்சணத்தையும் பார்த்துக்கிட்டிருந்த மாணவிகள் சப் இன்ஸ்பெக்டரைப் பார்த்து கெக்கே பிக்கேன்னு சிரிக்க அவருக்கு ஒரே வெட்கமாப் போச்சு.

என்னதான் சப் இன்ஸ்பெக்டரா இருந்தாலும் அவரும் வயசுக்கு வந்த இளைஞர்தானே! அவசர அவசரமாக பைக்கை எடுத்துக் கொண்டு ஏட்டையாவை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வண்டியை விட்டார். கூட்டத்தை கலைக்க வந்த போலீஸையே கலைச்சு விட்டது இந்த புள்ளைகளாத்தான் இருக்கும்.

அப்பறம் அடுத்தநாள் அடிதடி ஏதுமில்லாமல், வந்தவர்களின் கட்டிக் கொண்டு வந்த வேஷ்டி சேலை ஏதும் கிழிபடாமல் இலவச வேஷ்டி சேலை வினியோகிக்கப்பட்டது.

வாழ்க ஜனநாயகம்!

நட்புடன்

பத்மநாபன்
புது தில்லி

18 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  அண்ணாச்சி மீக்கும் போலீஸ்னா ரொம்ப பயமாக்கும்..ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. அவனுக்கு நயன்தாராவை கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறார்கள் என்று சொல்லி இருந்தால் கூட இப்படி வெட்கப்பட்டிருப்பானா என்று தெரியவில்லை. //

  ஹா ஹா ஹா ஹா அப்பவே நயன் வந்துட்டாங்களா?!!!ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... அதானே? அப்போ யாரு கனவுக்கன்னியாம்?

   நீக்கு
  2. பத்மநாபன் அண்ணாச்சி இதுவரைல எழுதுனதுலேர்ந்து நீங்க யாரும் கண்டுபிடிக்கலையா? நயனதாரா, பத்மனாபன் அண்ணாச்சியின் கனவுக் கன்னி போலிருக்கு..ஹாஹா

   நீக்கு
  3. என்னத்த சொல்ல! முதல்ல கே ஆர் விஜயா தான். அப்புறம் கே ஆர் விஜயா போய் மஞ்சுளா வந்தாங்க. அப்புறம் ஸ்ரீதேவி. இடையில கொஞ்ச நாள் திரிஷா. இப்போ கொஞ்ச நாளா நயன்தாரா இருக்கட்டும்னு விட்டுட்டேன். இனிமேலும் வேற யாரும் வராமலா போயிடப் போறாங்க.

   நீக்கு
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
  5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  6. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  7. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 3. குட்மார்னிங்.

  போலீஸுடனான சந்திப்பு என்றாலே உதறல்தானே? சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

   நீக்கு
 5. ரசித்துப் படித்தேன். கிராமம் என்பதால், டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் கதைகளை இன்னும் அவுத்துவிடலையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. டைப்ரைடிங் இன்ஸ்டிட்யூட் இருந்ததுன்னா சுமார் 30 வருஷங்கள் முன்னாடி நடந்த கதையா? அப்போ! பத்மநாபன் அண்ணாச்சிக்கு இப்போ சுமார் 50 வயசுக்கும் மேலே இருக்குமோ? நல்ல ஞாபக சக்தி தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆண்களிடமும் வயது கேட்கப்படாது. அவர் என்றும் பதினெட்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....