திங்கள், 20 மே, 2019

என்னைத் துரத்திய உருவம் – ரங்கராஜன்அன்பின் நண்பர்களுக்கு வணக்கம். நான் ரங்கராஜன். என்னில் பாதியை [நிர்மலா ரங்கராஜன்] இந்த வலைப்பூவில் வெளியிட்ட பதிவுகள் வழி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். எனது சிறுவயதில் கிடைத்த ஒரு அனுபவத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்.நான் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது (1979) எங்கள் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களை மூன்று பிரிவாக பேருந்துகளில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கோல்டன் ஜூப்ளி விழாவில் கலந்துகொள்ள  அழைத்துச் செல்லப் போகிறோம் என்ற அறிவிப்பு வந்தது. பள்ளி மூலம் சுற்றுலா செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்க, வீட்டில் ஒரே ஆர்ப்பாட்டம் செய்து செலவிற்கு பணம் வாங்கி கொண்டு பள்ளியில் கொடுத்தாயிற்று. நானும் முதன்முதலில் பள்ளிக்கூடம் மூலம் சுற்றுலா போகிறேன் என்ற சந்தோஷத்தில், சரியாகக்கூட சாப்பிடாமல் மிதப்பில் சென்று விட்டேன். போகும்போது வழியில் எதேச்சையாக  ஒரு சம்பவத்தை பார்க்க நேர்ந்தது. ஆனால் சுற்றுலா போகிற மகிழ்ச்சியில் பரபரப்பாக பார்த்துவிட்டுச் சென்றுவிட்டேன். ஆனால் அந்த சம்பவம் பின்னர் என்னை தொந்தரவு செய்யப் போகிறது என்பதை அறியாமல் பயணம் செய்து கொண்டிருந்தேன்.

பள்ளிக்குச் சென்று சக நண்பர்களோடு பயணித்து, சிதம்பரம் பல்கலை நகரில் அமைந்து இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று சேர்ந்தோம்.  நாள் முழுவதும் விழாவைப் பார்த்துவிட்டு, அங்கு விற்பனையான பொருட்களைக்  கைச் செலவிற்கு கொடுத்த பணத்தில் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டு திரும்பி வருவதற்கு எப்படியும் இரவு 12 மணி ஆகிவிடுமே என்று தோன்ற, மனதிற்குள் கொஞ்சம் பயமாக இருந்தது. என்னுடன் வந்தவர்களில் எங்கள் கிராமத்திற்கு அருகேயுள்ள ஊரிலிருந்து எனது நண்பனும் வந்திருந்ததால் அவனோடு சேர்ந்து பயமின்றி ஊருக்கு போய்விடலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு பயணம் செய்தேன். 

ஒருவழியாக விழாவைப் பார்த்து முடிந்ததும் பஸ் பயணமும் முடிந்து அவரவர் விடைபெற்று பிரிந்து சென்றுவிட்டார்கள். நள்ளிரவு நேரம் என்பதால் எங்கள் ஊருக்கு செல்ல பஸ் எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் நடைப்பயணமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து இருவரும் இருவேறு திசையில் பிரிந்து அவரவர் ஊர்களுக்குச் செல்ல வேண்டும்.  எங்கள் வீட்டிற்கு சுமார் இரண்டு கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். கப்பி ரோடுதான்.  சாலையின் இருபுறமும் மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். நன்பன் அவன் வழியில் வீட்டிற்குச் செல்ல, நானும் எங்கள் வீட்டிற்கு தனியாக இருட்டில் நடந்து போக நேர்ந்தது. போகும்போது காலையில் பார்த்துச் சென்ற சம்பவம் தேவையின்றி நினைவுக்கு வந்தது. போகும்போது மகிழ்ச்சியில் திளைத்துச் சென்றதால் அதைப் பற்றி அவ்வளவு கண்டுகொள்ளவில்லை! அந்தச் சம்பவம் கொஞ்சம் கொடூரமான சம்பவம் வேறு!  பெண்ணைக் காதலித்தவன், அவளைக்கொலை செய்துவிட்டு, பிணத்தை அடிமரத்தில் சாய்த்து வைத்து கழுத்தில் கயிறைக் கட்டி தூக்கிட்டமாதிரி பாவனை செய்து வைத்திருந்தான். அதைப் பார்த்துவிட்டுச் சென்றது, தனியாகச் சென்ற நள்ளிரவில் தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைத்தது.

இருட்டில் தனியாக செல்லும்போது அந்த சம்பவம் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து பயத்தை இரட்டிப்பாக்கியது. மனதுக்குள் பயங்கரமாக பயம் இருந்தாலும், “சூனா பானா, உன்னை யாரும் பயமுறுத்தமுடியாதுடா.... அப்படியே பயந்தாலும் வெளில காமிச்சுக்காத.... என்று வடிவேலு மாதிரி நினைத்தபடியே,  தெய்வங்களை வேண்டிக்கொண்டு எப்படியோ வீட்டிற்கு போய்ச்சேர வேண்டுமேயென்று வேகவேகமாக நடந்தேன். அப்போது திடீரென்று சற்று தொலைவில் என் முன்னே ஏதோ ஒரு உருவம் என்னை நோக்கி ஓடி வருவது போலத் தோன்றியது. சும்மா வந்தாலும் பரவாயில்லை, அது ஏதோ ஒருவகையான சப்தம் வேறு எழுப்பிக் கொண்டு, வேகமாக என்னை நோக்கி வருகிறது. பேய், பேய்னு சொல்வாங்களே, அந்த பேய்தானோ இது, என்று உள்மனம் பயத்தில் நடுங்குகிறது.

ஆகா இன்னைக்கு நம்ம கதி, அதோகதிதான் என்று எண்ணும்போது, தீடீரென அந்த உருவம் எனது வலப்பக்கம் என்னை தொடர்ந்து பக்கத்தில் வருவது போலவும், எனக்குக் குறுக்கே ஓடுவது போலவும் தோன்ற, எனக்கு பயத்தில் உயிர்க்குலையே நடுங்க ஆரம்பித்தது. ஐயோ எப்படியாவது இங்கிருந்து தப்பித்து வேகமாக ஓடிவிட வேண்டும் என்று, கொஞ்சமும் தாமதிக்காமல் வேகமாக ஓடவும் ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம்வரை ஓடியிருப்பேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த அந்த உருவமும் என்னை தொடர்ந்து ஓடி வருகிறது. நானும் விடாமுயற்சியுடன் ஓடி வீடுகள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் வந்துவிட்டேன். சரியான இருட்டு நேரம், அந்த நேரத்தில், ஒரு வயதான பெரியவர் சாலையோரம் அமர்ந்திருப்பது போலத் தெரிந்தது.  ஆனால், அங்கு இருப்பது மனிதன் தானா, இல்லை நம்மை பின்தொடர்ந்த உருவம்தான் நமக்கு முன்னே வந்து அங்கே உட்கார்ந்திருகிறதா என்று குழப்பம்! ‘ஐய்யோ அம்மா அப்பா’ என்று அலறிக்கொண்டு மீண்டும் வேகமாக ஓடும்போது பள்ளத்தில் கால் இடறி கீழே விழுந்துவிட்டேன்.

பயத்தில் கை கால்கள் நடுங்குகிறது, எப்படியோ சமாளித்து எழுந்து சுற்றும்முற்றும் பார்கிறேன், என்னை தொடர்ந்துவந்த உருவம் கீச்சென்று கத்தியபடியே, பின்நோக்கி நகர்கிறது. உண்மையிலேயே, சாலையோரம் அமர்ந்து  இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் என்னையும் அந்த உருவத்தையும் பார்த்து  மிரண்டு விட்டார்.  அவருக்கும் பயத்தில் முதலில் வார்த்தைகள் வரவில்லை. ஆனால் பின்னர் யாரிடமோ அதட்டி பேசுகிறார், ஆனால் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரையும் காணவில்லை. ஒரு விதமாக இருவரும் சமாளித்துக் கொண்டு  யாரென்ற விவரங்களை ஒருவருக்கு ஒருவர் தெரிவித்துக் கொண்டோம். “ஏம்பா இந்த நேரம் கெட்ட நேரத்தில் வந்தாய்?” என்று கேட்டு சற்றே, ஆறுதலாக பேசவும்,  எனக்கு ஓரளவு தைரியம் வந்துவிட்டது, ஆனாலும் படபடப்பு அடங்கவில்லை. எப்படியோ நமக்கு துணைக்கு ஆள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், சிதம்பரம் சென்ற கதையை சொல்லி, அவரிடம் வெட்கத்தை விட்டு எனக்கு பயமாக உள்ளது, தயவுசெய்து எனது வீடுவரை வந்து விட்டுச் செல்லுங்கள் என்று கேட்டதும் சரியென்று சொல்லி வீட்டிற்கு வந்து விட்டுச் சென்றார்.

அவரோடு போகும்போது என்னை துரத்தி வந்த உருவத்தைப் பார்த்தீர்களா என்ற விவரம் கேட்டதற்கு, தானும் அதைப் பார்த்ததாகவும் நான் கீழே விழுந்ததும் அந்த உருவம் கத்திக்கொண்டே வேறுபக்கம் போனதையும் பார்த்ததாகச் சொல்லவும் பிரமிப்பாக இருந்தது. அந்த நேரத்தில் அவர் செய்த உதவிக்கு மறுநாள் அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தேன்.   அப்போது அங்குள்ளவர்கள் சிலரும் என்னைப் போல் அதற்கு முன்பு அவர்களும் மிரண்டு வந்த கதைகளை சொன்னார்கள். கிராமப்புறத்தில் பேய்களின் நடமாட்டம் பற்றி பெரியவர்கள் சொல்லக் கேட்டதுண்டு, ஆனால் நானும் இந்த சம்பவம் மூலம் பேயை நேரில் பார்த்தது பிரமிப்பாக உள்ளது.  இன்றைய நாட்களில் அந்த வழியாக நான் எப்போது சென்றாலும் எனக்கு அந்த நிகழ்ச்சி கண் முன் தோன்றும். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இது.  

என்னுடைய இந்த முதல் பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன். பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். தொடர்ந்து வேறு சில அனுபவங்களையும் முடிந்த போது பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் சந்திக்கும் வரை...

நட்புடன்


ரங்கராஜன்
புது தில்லி.


பின் குறிப்பு: இந்த வலைப்பதிவு மூலம் மேலும் ஒரு தில்லி நண்பரின் அனுபவத்தினை அவர் வார்த்தைகளில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நண்பர் ரங்கராஜன் அவர்களும் அவ்வப்போது இங்கே அவரது பதிவுகளை வெளியிடுவார் என நம்புவோம். தொடர்ந்து அவரை ஊக்குவித்து எழுத வைப்பது நம் கையில்! – வெங்கட், புது தில்லி.


30 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  வெல்கம் மிஸ்டர் ரங்கராஜன். அனுபவத்தைப் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. கடைசிவரை அதை பேயாகவே வைத்துவிட்டீர்களே... கடைசியில் பார்த்தால் அது நாய், பூனை அல்லது வேறு யாரோ என்று ஏதாவது வரும் என்று பார்த்தால்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... இருந்தது இருந்தபடியே சொல்லி இருக்கிறார்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  அட! இன்று நிர்மலா அவர்களின் கணவர் ரங்கராஜன் அவர்களின் பதிவா! நல்வரவு தங்களுக்கும்.

  தலைப்பு கதைக்கான தலைப்பு போல இருக்கு!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதாஜி.

   கதைக்கான தலைப்பு - :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 4. பேயா!!

  அந்த உருவம் வேறு ஏதாவதாக இருந்திருக்கும் கூடவே மனப்பிரமையும் சேர்ந்திருக்கும் நாம் பல கதைகளைக் கேட்டிருப்பதால இருக்குமோ?...ஆனால் இப்படியான அமானுஷ்யங்கள் பற்றி நிறைய அனுபவங்கள், கதைகள் நிறைய இருக்கின்றனதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னிடம் என் யோகா மாஸ்டர்... நான் அமரும்கோது மூன்று வெவ்வேறு குணமுடைய மூன்று பேர் (என்னைப் போன்ற) என் பின்னால் அமர்ந்ததைக் கண்டிருக்கிறேன்.. நீங்க பயப்படுவீங்கன்னு சொல்லலை என்றார்..(அவர் தியானம் கைவரப் பெற்றவர்)

   நீக்கு
  2. அமானுஷ்யங்கள் பற்றிய கதைகள் நிறையவே... நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
  3. உங்களுக்குப் பின்னால், உங்களைப் போலவே உருவமுடைய, வேறு வேறு குணங்களுடைய மூன்று உருவங்கள் - பிரமிப்பு. நமக்குள்ளே இருக்கும் பல குணங்கள்... வெளியே தெரியாத குணங்கள் அவருக்குத் தெரிந்திருக்கிறதோ...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. தில்லி நண்பரின் அனுபவம் படிக்கும் போது பயமாய் தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 6. நல்வரவு ரங்கராஜன்.
  இது போலக் கேள்விப்பட்டதே இல்லை. பள்ளி நாட்களில் ஒருவருக்கொருவர் சொல்லிகொண்டதுதான்.
  நிஜமாகவே நடந்ததா.
  கடவுளே. பயங்கரம். நீங்க நாவலே எழுதலாம் சார்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாவலே எழுதலாம்! - தொடர்ந்து இங்கே எழுதுவார் என நினைக்கிறேன். பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 7. திரு ரங்கராஜனின் பதிவினைப் படித்தேன். இதுபோன்று எழுதும் நண்பர்களை ஊக்குவிக்கும் பணி பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சிறு முயற்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 8. ரகளையான அனுபவம்... பேய் துரத்திக்கொண்டு வந்ததா?

  ஆமாம்... பேய்க்கு கால்கள் கிடையாதுன்னு சொல்றாங்களே... அதைக் கேள்விப்பட்டது உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேய்க்குக் கால்கள் கிடையாது! :) பேயைப் பார்த்தால் முதலில் காலை பார்க்க வேண்டும்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. என்பது பேயா...!

  தங்களது ஊக்குவிப்பு தொடரட்டும்... பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. வணக்கம்
  புதிய முயற்சி தொடர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரிரெங்கன்.

   நீக்கு
 11. பேய் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. ஆனால் உங்கள் அனுபவம் பற்றி படித்தவர்களுக்கு நிச்சயம் பேய் பயம் ஏற்பட்டிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 12. பேயைப்பார்தால் விசில் அடித்து தைரியம் வரவைத்துக் கொள்ளக்கூடாதோ பயமே பேய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 13. பேய்த்தனமான அனுபவமால்ல இருக்கு.
  செத்தாலும் உயிர்ப்போடு இருப்பது இந்த பேய்கள்தாம்ப்பா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செத்தாலும் உயிர்ப்போடு இருப்பது பேய்கள்! ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 14. அநேகமா இன்னிக்கு ராத்திரி கத்த மாட்டேன்னு நினைக்கிறேன். எல்லோரும் பயங்கரக் கதைகள், திரைப்படங்கள் பார்த்தால் பயத்திலே அலறுவே நீ என்று சொல்வார்கள். ஆனால் இதெல்லாம் எதுவும் இல்லாமல் இருந்தால் தான் கத்தறேன். இன்னிக்கு இதை நினைச்சு நினைச்சுச் சிரிக்கலாம். :))))

  பதிலளிநீக்கு
 15. ஹாஹா...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....