எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, July 16, 2014

எங்கே தேடுவேன்....

பதிவின் தலைப்பு பார்த்த உடனே நான் எதையோ தொலைத்து விட்டேன் என்று பதட்டப் பட வேண்டாம். 2002-ஆம் வருடம் ஒன்றே ஒன்றைத் தான் தொலைத்தேன் – அதாவது என் இதயத்தினை.....  அது தற்போது பத்திரமாக என்னவளிடம் இருக்கிறது!

பிறகு எதைத் தானய்யா தேடுவீர்?

பெரிதாய் ஒன்றும் தொலைந்து போகவில்லை. ரொம்ப சின்னதாய் உள்ளங்கைக்குள் அடங்கி விடக் கூடிய ஒரு விஷயம் தான்.  தொலைத்ததும் நானில்லை!

விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.....

சென்ற வாரம் அலுவலக நண்பர் ஒருவர் தனது தந்தையை பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.  கடவாய்ப் பல்லில் சில மாதங்கள் முன்னர் பிரச்சனை இருக்க இரண்டு பல்களை எடுத்து விட்டு அங்கே செயற்கைப் பற்கள் பொருத்தி இருந்தார்கள்.  அந்தப் பற்கள் ஏதோ ஆடுவது போன்ற ஒரு உணர்வு நண்பரின் தந்தைக்கு.  எந்த மருத்துவர் முன்பு பற்களைப் பொருத்தினாரோ அவரிடமே இப்போது அழைத்துச் சென்றிருக்கிறார் நண்பர்.

பல் மருத்துவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் – பல்லைக் காண்பிக்கச் செல்லும் நபரை உடனே ஒரு இருக்கையில் அமர வைத்து பின்னர் சாய்வாக படுக்க வைத்துவிடுவார்கள்.  உலகத்தினை தனது வாய்க்குள் காண்பித்த கிருஷ்ணரைப் போல வாயையும் நன்கு திறந்து கொள்ளச் சொல்லி பேச ஆரம்பிப்பார் மருத்துவர்.  அவர் தனக்கு பொருத்திய செயற்கைப் பற்கள் ஆடுவது போல உள்ளது என்றதும் தனது உபகரணங்களை வாயினுள் செலுத்தி அங்கே இரண்டு தட்டு தட்ட, அந்த பற்கள் என்னையாடா அடிக்கிறே... என்று பயில்வான் ரங்கசாமி மாதிரி ஒரு ஆட்டம் ஆடி எகிறி குதித்தது.

குதித்த பற்கள் மருத்துவர் நோக்கி வந்திருந்தால் ரோஹித் ஷர்மா மாதிரி பாய்ந்து பிடித்திருப்பார் – மருத்துவரும் ஒரு ஷர்மா தான்! ஆனால் அது குதித்த இடம் பெரியவரின் வாய்க்குள்.....  அதுவும் நேராக உணவுக்குழாய்/மூச்சுக் குழாய் பகுதிகளில்.....  பெரியவருக்கு மூச்சு முட்ட ஆரம்பிக்க, பிடுங்கிய பல்லே அவருக்கு எமனாய் மாறும் சூழ்நிலை. நண்பரும் மருத்துவரும் அதிர்ச்சியில் தடுமாற, சற்றே பதட்டமடைந்த மருத்துவர் தன்னிடம் இருந்த உபகரணத்தால் விழுந்த பற்களை எடுக்க முயன்றாராம். ஆனால் அப்பற்களோ இன்னும் உள்ளே சென்று விட மூச்சுத் திணறல் அதிகமாகி விட்டது.

மருத்துவர் உடனே தனது வாகனத்தில் பெரியவரையும் நண்பரையும், அழைத்துக் கொண்டு காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துக் கொண்டு செல்ல, அவரும் சில முயற்சிகள் செய்து வேறு வழியில்லை, பெரிய மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள் எனத கைவிரித்து விட்டாராம்.  பல் மருத்துவர் மீண்டும் தனது வாகனத்திலேயே பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு விரைந்து சென்று விட்டார். போகும்போதே அங்கிருக்கும் தனது நண்பரான மற்றொரு மருத்துவருக்கும் தகவல் சொல்லி விட்டார்.

பெரிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்ய முதலில் எக்ஸ்ரே போன்ற சோதனைகளை செய்து கொண்டிருக்க, பெரியவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக மூச்சுத் திணறல் குறைந்து இருக்கிறது.  வாய்க்குள் விழுந்த பல் கொஞ்சம் கொஞ்சமாக பயணித்து, வயிற்றுக்குள் சென்றிருக்க வேண்டும்.  சில மணி நேரங்களுக்குள் வயிற்றுக்குள் சென்று சமர்த்தாக குடி புகுந்திருந்தது அந்த இரண்டு பற்களும்.

இதற்குள் பல் மருத்துவரிடம் சென்றவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று வீட்டிலுள்ளவர்கள் கவலைப்பட, அவர்களையும் பதட்டத்தில் வீழ்த்தவேண்டாம் என்று நண்பர் கும்பல் அதிகமாக இருப்பதாகச் சொல்லி சமாளித்து இருக்கிறார். எக்ஸ்ரேவிலும் வயிற்றுக்குள் இருந்த பற்கள் தெரிந்து விட, மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு அவசியமில்லை, நாளைக் காலைக்குள் பற்கள் தாமாகவே Stool மூலம் வெளியே வந்து விடும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

காலை வரை பதட்டத்துடனே இருந்த பெரியவர் கழிவறைக்குச் சென்று வந்த பின் வீட்டில் இருந்த அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு பற்கள் வந்து விட்டதா என்று விசாரிக்க, அவருக்கு ஒரே குழப்பம். வெளியே வந்த மாதிரி தெரியவில்லை – Stool மூலம் வெளியே வந்து விடும் என்று சொன்ன பற்கள் வயிற்றுக்குள் ஸ்டூல் போட்டு உட்கார்ந்து கொண்ட மாதிரி இவருக்கு ஒரு உணர்வு...  கூடவே வயிற்றை அந்தப் பற்கள் கடிப்பது போன்ற உணர்வும்.மனதில் குழப்பம் எதற்கு, மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிடலாம் என அனைவரும் அபிப்ராயம் சொல்ல மீண்டும் மருத்துவமனைக்கு படையெடுப்பு. அங்கே சென்று சோதனைகள் செய்து பார்த்தபோது வயிறு காலி – அந்த பற்கள் இல்லை.  நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி நண்பரும் அவருடைய தந்தையும் வீட்டிற்கு திரும்பினார்களாம்.....  ஆனாலும் பெரியவரின் மனதில் இந்த கேள்வி அகலவில்லை, அது எங்கே போயிருக்கும், அதை எங்கே தேடுவேன் என்று குழப்பம். 

வீட்டில் உள்ள அனைவரும் எல்லாம் நலமே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், இப்போது சிரித்து இவ்விஷயத்தினை பகிர்ந்து கொண்டாலும், பெரியவரின் அந்த சமயத் திண்டாட்டம், நண்பர்/வீட்டினரின் தவிப்பு இதையெல்லாம் பார்க்கும்போது, தனது வேலையில் அஜாக்கிரதையாக இருந்த அந்த மருத்துவரை என்ன செய்யலாம் என்று கோபம் வருகிறது. என்ன செய்யலாம் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

70 comments:

 1. மருத்துவர்களின் அலட்சியம் கண்டிக்கத் தக்கது.சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 2. மனிதர்களுக்கு எப்படியெல்லாம் பிரச்சினைகள் வந்து நிம்மதியைக் கெடுக்கிறது பாருங்கள்
  தம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. பல்வகை சோதனையா இருநதாலும் பல்லைக் கடிச்சுட்டு தாங்கிக்கிட்டாரு அந்தப் பெரியவரு. பாவம்... பல் மருத்துவர் இவரை வெச்சு புதுசா பாடம் கத்துக்கிட்டிருப்பாரு இந்நேரம். ஹா.. ஹா.. ஹா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 4. மருத்துவரின் அறியாமையா, அலட்சியமா? வேதனையான நிகழ்வு. எப்படியோ எல்லாம் நல்லபடி முடிஞ்சதில் சந்தோஷம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 5. மருத்துவரின் அஜாக்கிரதையாலோ அல்லது தவறுதலாகவோ இந்த நிகழ்வு நடந்திருக்கலாம். எல்லாம் நல்லபடியாக முடிந்தமை அறிந்து மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. கொஞ்சம் சீரியசான விஷயம் தான்... நல்லா நகைச்சுவையோடு சொல்லியிருக்கீங்க....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.

   Delete
 7. தொலைந்த பல்லை தேடி எடுத்து மீண்டும் சரியாக பொறுத்த வேண்டுமென்று தண்டனை அளிக்கலாம் !
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. அந்தப் பற்கள் எங்கே போயின. அவர் பட்ட வேதனையையும் சுவையோடு சொன்னீர்கள். . செய்யும் தொழிலில் அலட்சியம் எதிர்பாரா விளைவுகளுக்குக் காரணம்

  ReplyDelete
  Replies
  1. பற்கள் எங்கே என்பது தான் தேடலே...... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 9. பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்க வேண்டியது தான்..!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா நல்லாருக்கே!

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 10. மருத்துவர்களின் அலட்சியத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது.

  அந்த நண்பரின் தந்தையே, இந்த பதிவை படித்தால், அந்த பார்கள் எங்கே போயிருக்கும் என்கிற கவலையை மறந்து சிரிப்பார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 12. வேதனையான விஷயம் என்றாலும் சொன்ன முறை மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்...

   Delete
 13. இது போல் எங்கள் உறவினர் ஒருவருக்கும் ஏற்பட்டது . ஒரு பல் கம்பி போட்டு கட்டி இருந்தார் அவர் மாத்திரை விழுங்கும் போது பல்கம்பியுடன் உள்ளே போய் பட்ட அவஸதை சொல்லி மாளாது. எத்தனை ஆஸ்பத்திரி , உணவு எல்லாம் டீயுப் மூலம் போய் என்று பட்ட துனபம் அதிகம். இப்போது
  அவர் எல்லோருக்கும் சொல்லும் அட்வைஸ் கம்பி வைத்து ஒரு பல் கட்டாதீர்கள் கட்டினால் அவ் அப்போது பல் வாயில் இருக்கா என்றுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது.

  பல் மருத்துவரும் இனி கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. பல் மருத்துவரும் நண்பரின் தந்தையும் பட்ட கஷ்டங்கள் மன உளைச்சல எவ்வளவு!
  விழிப்புணர்வு கட்டுரை .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 14. பதிவு நகைச்சுவையாக இருந்தாலும் பெரியவரின் அந்நேர மன நிலையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. மருத்துவரின் அலட்சியத்தை ......... என்ன சொல்வது . இங்கே என்றால் இந்நேரம் வழக்கே முடிந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 15. காணாமல் போன பல்லைப் பற்றி "பல்"சுவையோடு மிக அழகாக எழுதியிருக்கீங்க சார்!

  தங்கப் பல் தெறித்து விழுந்து அது ஒவ்வொருவர் கையிலும் சிக்கும்...ஒரு நகைச்சுவை, திரப்படம் நினைவில்லை, நினைவுக்கு வந்தது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி....

   Delete
 16. அடக் கொடுமையே.. நல்லவேளை எப்படியோ பிழைத்துக் கொண்டார்.. இல்லையேல் அந்த மருத்துவர் பாடு திண்டாட்டம் தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு......

   Delete
 17. நல்ல நகைச்சுவை! ஆனாலும் ஆபத்தான கட்டம்தான். அந்த பல் டாக்டர் இனிமேல் ஜென்மத்திற்கும் அந்த நாற்காலியை அதிகம் சாய்க்க மாட்டார்.
  த.ம.10

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி....

   Delete
 18. ஐயோ!.. என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் சகோதரரே!..

  பாவம் பெரியவர்! அவர் பட்ட துன்பத்தை நகைச்சுவை இழையோடக் கூறினாலும் உணரக்கூடியதாக உள்ளது.

  மருத்துவ உலகம் மகத்தானதுதான். அதுவும் ஒரு சிலருக்கே. ஒரு சில மருத்துவ முறைகளுக்கு மட்டுமே...
  நல்ல பதிவு!
  நீங்கள் தொலைத்தது பத்திரமாக இன்னொரு பெட்டிக்குள் போட்டு பூட்டப்பட்டிருக்குமே..
  அவ்வகையில் நீங்கள் பாக்கியசாலிதான் சகோ!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி......

   Delete
 19. நீதி : 'எது'வுமே 'அது' இருக்க வேண்டிய இடத்துல இருந்தாத்தான் நல்லது..

  ReplyDelete
  Replies
  1. அதே அதே..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்.

   Delete
 20. வேலையின் போது அரட்டைக்கு என்ன வேலை? அதுதான் இது மாதிரி நிலைமைகளுக்குக் காரணம். சீரியஸ் ஆகியிருந்தால் என்ன ஆவது? நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வேலையின் போது அரட்டைக்கு என்ன வேலை.... அதே தான்.... பார்க்கும் வேலையில் கவனம் செலுத்தாது மற்றவற்றில் கவனம் செலுத்தினால் இந்த நிலை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 21. பாவம் அந்தப் பெரியவர்:(.

  ReplyDelete
  Replies
  1. பாவம் தான். சில மணி நேரம் அவர் பட்ட அவஸ்தை.... அப்பப்பா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 22. பெரியவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்.. இருந்தாலும் அவரது மனோதைரியம் பாராட்டத்தக்கது!.. எதிர்பாராத விதமாக - இது நடந்திருக்கின்றது. கூட இருந்து ஒத்துழைத்தார் மருத்துவர். நல்ல மனிதர். நல்லபடியாக வீட்டுக்குத் திரும்பினார் பெரியவர்.. மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 23. பல் மருத்துவர் பெரியவரின் உயிரோடு விளையாடிவிட்டாரே! படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் அந்த நிமிடம் அந்த பெரியவரின் திண்டாட்டம் யோசிக்கவே கஷ்டமாக இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 24. பல் மருத்துவர் தொலைத்த
  பல்லால் எத்தனை தொல்லை..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 25. இவ்ளோ சீரியசான விஷயத்தை எவ்ளோ காமெடிய சொல்லுருறீங்க!!
  இப்போ தான் டென்டிஸ்ட் விசிட் ஒருவழியா ஓய்திந்திருக்கு.:))

  ReplyDelete
  Replies
  1. சீரியஸான விஷயம் தான்.... வேதனைக்குப் பிறகு பெரியவரும் சிரித்தபடியே தான் தனது நிலையைச் சொன்னார்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 26. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 27. வணக்கம்
  ஐயா
  தலைப்பை பார்த்தவுடன் பயந்து போனேன் படித்த பின்புதான் அறிந்தேன் சம்பவம் இப்படி என்று. நகைச்சுவை கலந்த கலவையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா
  த.ம 14வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 28. உண்மைதான்... நகைச்சுவையாக இருந்தாலும் மூச்சுத் திணறல் தோன்றிய அந்த நிமிடம் பெரியவரின் மனநிலை எப்படியிருந்திருக்கும்... பாவம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   Delete
 29. ஒன்றும் செய்ய இயலாது....
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவைக்கவி வேதா இலங்காதிலகம் அவர்களே.

   Delete
 30. தங்கள் பதிவு வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! //http://blogintamil.blogspot.in/2014/07/cocktail-fizzy-crissppy.html// நன்றி !

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி மைதிலி.

   இந்த எளியேனை அறிமுகம் செய்தமைக்கும்.....

   Delete
 31. அடப்பாவமே இப்படி ஒரு பிரச்சனையா. மறு நாள் எக்ஸ்ரே பார்க்கும் வரைக்கும் எவ்ளோ டென்ஷன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா ஜி!

   Delete
 32. ரா.ஈ. பத்மநாபன்July 17, 2014 at 5:46 PM

  உமது வலைப்பூ ஒரு பல்பொருள் அங்காடி. வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 33. படிச்சுப்படிச்சு பல்லே சுளுக்கிகிட்டது போங்க. வயசானவங்க கிட்டவாவது வைத்தியர்கள் கொஞ்சம் கவனமாக நடந்துஜிட்டா நல்லா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவத்சன்.

   Delete
 34. மருத்துவரின் அஜாக்கிரதை அந்தமனிதரை பாடுபடுத்திவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....